22 February 2012

சொதப்பாமல் படமெடுப்பது எப்படி...?


அன்புள்ள வலைப்பூவிற்கு,

அறிவிப்பில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். அதுவும் கட்டாயம் எதிர்கால தங்க்ஸை அழைத்துச்செல்ல வேண்டும் என்பது திட்டம்.

ஏற்கனவே குறும்படத்தில் பார்த்த அதே கதைதான். சித்தார்த்தும், அமலா பாலும் காதலிக்கிறார்கள், தவறான புரிதல்களால் பிரிகிறார்கள். மறுபடியும் இணைகிறார்களா என்பதே மீதிக்கதை. கிளைக்கதைகளாக அமலா பாலின் பெற்றோர், சித்தார்த்தின் நண்பர், நண்பரின் நண்பர் ஆகியோரது காதல்களும் இருக்கின்றன.

சித்தார்த் ஜாலியான கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்துபவர். இவருடைய வரலாற்றை திரும்பிப்பார்த்தால் இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் ஒன்றுபோலவே இருக்கும். இதிலும் அப்படியொரு ஜாலியான கேரக்டரை அசால்ட்டாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழி நாயகனாக வலம்வந்தவர் இந்தப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து முதல் பந்திலேயே சிக்சர் அடித்திருக்கிறார். 

அமலா பால் (இந்தமுறை கன்னுக்குட்டி, ஆட்டுக்குட்டின்னு எழுதினா தங்க்ஸ் வருத்தப்படுவார்) 2012 ஆரம்பிச்சதுல இருந்து வதவதன்னு அம்மணி நடிச்ச படமா வந்துட்டு இருக்கு. எதை பாக்குறது எதை விடுறதுன்னு தெரியல. ஆனா இந்த படத்துல எதையும் பார்க்க விடாம இழுத்து போர்த்திட்டு நடிச்சிருக்கார். அம்மணியின் சிகையலங்காரமும், உடையலங்காரமும் அட்டகாசம்ன்னு தங்க்ஸ் சொல்லிக்கொண்டே இருந்தார்.

குறும்படத்தில் நடித்த அதே நண்பர்கள். இருவருமே பெஸ்ட் செலக்ஷன். குறிப்பாக குண்டு கம் குறும்பு நண்பர் சொல்லும் வசனங்களும் செய்யும் முகபாவனைகளும் ஒரிஜினல் நண்பர்களை பார்த்த அனுபவம் கிடைத்தது.

சித்தார்த்தின் அப்பா அம்மாவாக ரவி ராகவேந்திரா – ஸ்ரீரஞ்சனி. தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் பெற்றோர்கள். நிஜத்துல இந்தமாதிரி அப்பா அம்மா எங்கேயாவது இருந்தா கூரியர்ல அனுப்பி வையுங்கப்பா. அமலா பாலின் பெற்றோராக சுரேஷ் – சுரேகா வாணி. உண்மையிலே சித்தார்த் – அமலா பாலை விட இந்த இணைதான் செம ரொமாண்டிக். அந்த லவ் லெட்டர் பிரமாதம்.

எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நண்பன் படத்தில் சில நொடிகள் வந்ததற்கே சிலிர்த்தது. இந்தப்படத்தில் நிறைய காட்சிகளில் வந்து நிமிர வைத்துவிட்டார். (நோ டபுள் மீனிங்). 

தமன் இசையில் பாடல்கள் அனைத்துமே வழவழ கொழகொழ. எதுவுமே மனதில் ஒட்டவில்லை. “அழைப்பாயா... அழைப்பாயா...” பாடல் மட்டும் ஓகே ரகம். 

வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. “பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்டுற அளவுக்கு பசங்களால என்னிக்குமே காட்ட முடியாது” என்று ஆரம்பமே அமர்க்களம். “ஒரு பொண்ணு கேள்வி கேட்கும்போது உண்மையை தான் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. அவங்க என்ன பதில் எதிர்பார்க்குறாங்களோ அதை சொன்னாலே போதும்” என்பது போன்ற வசனங்கள் வாழ்க்கைக்கல்வி.

முதல் பாதி முழுவதுமே கிண்டலும் சிரிப்புமுமாக ஜாலியாக நகர்ந்தது. இரண்டாம் பாதியில் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று யோசித்தபோது நண்பனின் திருமணம், வெளியூர் பயணம் என்று சற்றே போரடித்தாலும் அவ்வப்போது சில நல்ல காட்சிகள் வந்து அந்த குறையை போக்கிவிட்டன. திரையுலகமே பார்க்காத அதிசயம், இதுவரை யாருமே தொடாத சப்ஜெக்ட், ஹாலிவுட்டையே மிரட்டும் தொழில்நுட்பம் இப்படியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் முப்பத்தி ஆறே நாட்களில் சொதப்பாமல் எளிமையாகவும் அழகாகவும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரத்தை தந்திருக்கிறார்கள். சுரேஷ் – சுரேகா வாணி காதலோடு சேர்த்து, திருமணத்திற்கு முன் காதலிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் திருமணத்திற்கு பின் காதலிப்பவர்களுக்கும் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இது படமல்ல பாடம்...!

டைட்டில் உதவி: ஜேம்ஸ் கேமராமேன்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

21 February 2012

மனதை 3Dய அம்புலி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

அட்டகாசமான விளம்பர யுக்தி, அமானுஷ்ய கதையமைப்பு, 3D தொழில்நுட்பம் இவையனைத்தும் இணைந்து என்னை திரையரங்கிற்கு இழுத்துச்சென்றன. நேர விரயத்தை தவிர்க்க உள்ளூர் திரையரங்குகளே சிறந்தவை. இருப்பினும் நிச்சயம் 3D கண்ணாடி தரமாட்டார்கள் என்று தயங்கினேன். ஆனால் கவுன்ட்டரில் டிக்கெட்டோடு சேர்த்து கண்ணாடியும் தந்தது முதல் இன்ப அதிர்ச்சி. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இடப்பக்கம் இருந்து ஒரு நாய் குறைக்கும் சப்தம் கேட்டது. சரி, தியேட்டருக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் நாய் என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது அது DTS என்று – இரண்டாவது இன்ப அதிர்ச்சி. திருவொற்றியூர் டெவலப் ஆயிடுச்சு டோய்...!

ங்கொய்யால என்னங்கடா 3D படம் என்ற எண்ணம் உள்மனதில் இருந்தது. ஆனால் அந்த கண்ணாடியை மாட்டியதும் நான் ஒரு கேபிள் சங்கராகவே மாறிவிட்டேன். (அட, குழந்தையாவே மாறிட்டேன்னு சொல்ல வந்தேன்). கொஞ்ச நேரத்திற்கு கண்ணாடியை கழட்டியும், இடது கண்ணையும் வலது கண்ணையும் மாற்றி மாற்றி மூடி படத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்.

கதைக்கு வருவோம். ஒரு கிராமத்து கல்லூரியில் இரண்டு மாத செமஸ்டர் விடுமுறை விடுகிறார்கள். 60 நாட்கள் காதலியை பிரிந்து இருக்க முடியாத ஹீரோ, தனது நண்பன் வாட்ச்மேன் மகன் தயவில் ஹாஸ்டலிலேயே தங்குகிறான். காதலியின் வீடோ கல்லூரியின் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில். சோளக்காடு வழியாக போனால் சீக்கிரம் போகலாம். ஆனால் அங்கே அம்புலி என்ற கொடிய மனித உடல் மிருகம் இருப்பதாகவும், இரவில் அந்தவழியாக செல்பவர்களை அம்புலி வேட்டையாடிவிடும் என்றும் சொல்கிறார்கள். அதையும் மீறி சோளக்காடு வழியாக போன ஹீரோவும் அவரது நண்பரும் என்ன ஆனார்கள் என்பது ஒரு கிளைக்கதையே...! முழுக்கதையும் தெரிந்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் நம்பர் 1 பதிவரின் வலைப்பூவையோ, அண்ணாச்சியின் வலைப்பூவையோ படித்துக்கொள்ளுங்கள்.

முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்களே. ஹீரோவாக நடித்தவருக்கு லொள்ளு சபா “ஜீவா” சாயல். கதை எழுபதுகளின் இறுதியில் நடப்பதாலோ என்னவோ இயக்குனர் கதாநாயகிகளையும் ரொம்ப அவுட்டேட்டடாக தேர்வு செய்திருக்கிறார். படம் முழுக்க கறுப்பு சட்டை வெள்ளை வேட்டியோடு வரும் நண்டு ஜெகனின் கதாப்பாத்திரம் என்னவென்பதை அவரது உடையே சொல்கிறது. தம்பி ராமையா, கலைராணி போன்றவர்கள் திகில் படத்திற்கு சரியான தேர்வுகள். உமா ரியாஸ், பாஸ்கி, பாலா சிங், அப்புறம் மேதை படத்துல நடிச்ச மொக்கை வில்லன் இன்னும் நிறைய பேர் இருக்காங்க. ஆங், சொல்ல மறந்துட்டேன். பார்த்திபனும் நடித்திருக்கிறார். அந்த மேஜைக்கு கீழே நல்லபாம்பு இருக்குது என்ற வசனத்தோடு அறிமுகமாவது பார்த்திபன் டச். ஆனால் அதற்குப்பிறகு அவருடைய டச் ஒரு இடத்தில் கூட இல்லாதது ஏமாற்றமே.

ஐவர் குழுவின் இசையில் நெஞ்சுக்குள்ளே யாரு பாடல் கேட்கக் கேட்க பிடிக்கக்கூடிய ரகம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் “விடைகொடு எங்கள் நாடே...” பாடலை இசையிலும் காட்சியமைப்பிலும் உல்டா செய்து “மழைக்காடே... மணல்வீடே...” என்று பாட்டு போட்டதெல்லாம் தாங்கிக்க முடியல. மற்ற பாடல்கள் வெறும் வேகத்தடையே...!

வெங்காயம் படத்திற்கு சத்யராஜை வைத்து மார்கெட்டிங் செய்தது போல, அம்புலிக்கு பார்த்திபன் ஈட்டியை விட கூர்மையாய் பாயும்... என்றெல்லாம் சொல்லி மார்கெட்டிங் செய்திருக்கிறார்கள். 3D தொழில்நுட்பம் ஆடியன்ஸை திரையரங்கிற்கு வரவழைக்கும் யுக்தி தானே தவிர படத்தில் ஒருசில காட்சிகள் தவிர்த்து 3D என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை.

இந்தமாதிரி சிற்சில குறைகள் இருந்தாலும், படம் முழுக்க அடுத்து என்ன நடக்கும், குறிப்பாக அம்புலியை எப்ப காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தியது இயக்குனர் இணைக்கு மிகப்பெரிய வெற்றி. ஹாரர் படங்களில் இம்மி பிசகினாலும் செம காமெடி ஆகிவிடும். அதாகப்பட்ட Paranormal Activityக்கே விழுந்து விழுந்து சிரித்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அப்பேர்ப்பட்டவர்களை இரண்டாம் பாதி முழுக்க கப்சிப் என்று அமர வைத்திருக்கிறார்கள். டெம்ப்ளேட்தனமான சினிமாக்களுக்கு மத்தியில் அவ்வப்போது புதிய முயற்சிகளை எடுக்கும் இதுபோன்ற இளம் இயக்குனர்களுக்கு ராயல் சல்யூட்...!

ஆங்கிலப்படங்களின் பாணியில் இரண்டாம் பாதிக்காக அச்சாரம் போட்டாச்சு... விரைவில் எதிர்பார்க்கலாம் அம்புலி பாகம் 2... 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment