28 July 2012

பொல்லாங்கு


அன்புள்ள வலைப்பூவிற்கு,

வசீகரமான ட்ரைலரை நம்பி நிறைய படத்திற்கு போயிருக்கிறேன், சில சமயங்களில் க்ரியேடிவான நாளிதழ் விளம்பரங்கள் கூட படம் பார்க்க வைத்திருக்கிறது, ஏன் வித்தியாசமான தலைப்பை நம்பி மட்டுமே கூட சிற்சில படங்களை பார்த்திருக்கிறேன், ஆனால் முதல்முறையாக ஒரு இயக்குனரின் பெயர்...! காந்தி மார்க்ஸ்...! என்னவொரு முரண்...!

ஹனிமூன் கொண்டாடுவதற்காக மலை பங்களாவிற்கு செல்லும் தம்பதியின் அமானுஷ்ய அனுபவங்கள். 

விறுவிறுப்பான கார் சேசிங் காட்சியோடு படம் ஆரம்பமாகிறது. ஹனிமூன் ஜோடியை நால்வர் குழு ஒன்று ஜீப்பில் துரத்திக்கொண்டு வருகிறது. அவர்கள் ஏன் துரத்திக்கொண்டு வருகிறார்கள்...? ஹீரோ ஏன் டூமாங்கோலி மாதிரி நடந்துக்கொள்கிறார்...? ஹீரோயின் மறைத்து வைக்கும் பொருள் என்ன...? துரத்தி வந்த வில்லன் குழு இறுதியில் என்ன ஆனது...? சாமியார் ஏவிவிட்ட ஆத்மா யாருடையது...? மேலும் பற்பல உப கேள்விகளுள் பலவற்றிற்கு இரண்டாம் பாதியில் விடை சொல்லியும், சிலவற்றிற்கு படம் முடிந்தபின்னரும் கூட விடையே சொல்லாமல் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் காந்தி மார்க்ஸ்.

ஹீரோ ஒரு மொக்க ப்ளேடு. டிவி சீரியல்களுக்கும், கவர்ச்சி நடிகைகளை மோந்து பார்ப்பதற்கும் பொருத்தமான முகம். நல்ல வசனங்களை கூட சுரத்தே இல்லாமல் பேசி சாகடிக்கிறார். படத்திலும் ஹீரோவினுடைய கதாபாத்திரம் அவ்வாறே சித்தரிக்கப்பட்டுள்ளது, இரண்டாம் பாதி ட்விஸ்டை தவிர்த்து பார்த்தால். கூடல் முடிந்த தருணத்தில் படுக்கையில் கட்டிப்பிடித்தபடி ஹீரோயின் ஃபீல் பண்ணி ஒரு ரொமாண்டிக் கவிதை சொல்கிறார். அதற்கு நம்மவர், “ஙே... புரியலையே...” என்கிறார். இதெல்லாம் எதுக்கு ஹனிமூன் போகுதோ...!

ஹீரோயின் நிஷா லால்வாணி அரைக்கிழவி. அண்ணி கேரக்டரில் நடித்தால் கூட சைட்டடிக்க தோன்றாது. சொற்ப காட்சிகளில் அழகாக தெரிகிறார். இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் வரும் ரொமாண்டிக் காட்சிகள் ஓகே. ஆனால் முதல் பாதிக்காக நிறையவே உழைத்திருக்கிறார் நிஷா. காடு, மலை பகுதிகளில் உருண்டு புரளுகிறார், மரம் ஏறுகிறார், நீச்சல் அடிக்கிறார். அவற்றில் பாதி கிராபிக்ஸ், டூப்பாக இருந்தாலும் கூட மற்ற ஷோகேஸ் பொம்மை நடிகைகளைவிட நிஷாவிற்கு ஒரு மதிப்பெண் அதிகமாக கொடுக்கலாம், அழகில் அல்ல.

ஹீரோ, ஹீரோயினை தவிர நான்கு வில்லன்கள் இருக்கிறார்கள், அவ்வளவுதான் படத்தின் மொத்த ஜனத்தொகை. (ஓரிரு காட்சிகளில் தோன்றுபவர்களை சேர்க்கவில்லை). Dude, Yo, Wazzup man போன்ற அதிநவீன சொற்களை பயன்படுத்தினால் அவர் பணக்கார வீட்டு பையனாமாம்...! நால்வருமே மிகையான நடிப்பை வெளிப்படுத்தி வெறியேற்றுகிறார்கள். 

கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டு ஐட்டம் சாங்குகள் வருகின்றன. அவற்றிற்கு ஆட்டம் போடும் அம்மணிகள் அனைத்தும் தினத்தந்தி அழகிகள் ரகம்...!

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் வரும் காதல் ரசம் சொட்டும் காட்சிகளும் வசனங்களும் ரசிக்க வைக்கின்றன. நிறைய காட்சிகளில் இயக்குனரின் ரசிப்புத்தன்மை வெளிப்படுகிறது ஒரு காட்சியில் ஹீரோயின் ஒளியூடுருவும் குளியறையில் குளிக்க, ஹீரோ அதனை வெளியில் அமர்ந்து தம்மடித்துக்கொண்டே ரசிக்கிறார். என்ன, ஹீரோயின் துண்டு கட்டிக்கொண்டு குளிப்பதில் தான் தர்க்க ரீதியான தவறு இருக்கிறது. 

என்னவோ இருக்கு, ஏதோ பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று கிட்டத்தட்ட கடைசி வரைக்குமே சஸ்பென்ஸ் வைத்திருப்பது சபாஷ்...! அந்த பில்டப்புகளுக்கு தகுந்தபடி அழுத்தமான காட்சிகள் இல்லாததற்கு இயக்குனர் மட்டுமில்லாமல் நம்முடைய சென்சார் விதிமுறைகளும் கூட காரணமாக இருக்கலாம்.

பிற்பாதியில் ஒரு பாழடைந்த அறையில் பாடாவதி நாற்காலியில் கதாநாயகி உட்கார வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார். தேகம் நாவலின் அட்டைப்படத்தை நினைவூட்டும் காட்சி. அதன்பிறகு வரும் சில காட்சிகளில் கூட சாரு ஞாபகம் வருகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய அதிகபட்ச சாடிஸ திரைப்படமெனச் சொல்லலாம்.

தமிழ் சைக்கோ படங்கள் பெரும்பாலானவற்றில் வரும் இறந்தவர்களை இருப்பதாக நினைப்பது இங்கேயும் தொடருகிறது. வானத்திலிருந்து ஒரு டியூப் லைட் வெளிச்சம் காட்டி ஆத்மான்னு சொன்னா நம்புறதுக்கு பாக்குறவங்க ஒன்னும் டியூப் லைட்ஸ் கிடையாது.

சாமியார் கேரக்டரை கிண்டலடிப்பது மாதிரி இரண்டு வசனங்கள் வைத்துவிட்டு அப்புறம் அவரையே ஆபத்பாந்தவர், அப்பாட்டாக்கர் மாதிரி காட்டுவது என்ன எழவென்று புரியவில்லை. நிறைவே இல்லாமல் தொபுக்கடீர்’ன்னு படத்தை முடித்துவிடுகிறார்கள். அதுவும் படுமொக்கையான க்ளைமாக்ஸ்.

தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் குப்பைகளுக்கு மத்தியில் வித்தியாசமான குப்பை ஒன்றை கொட்டியிருப்பதற்க்காக மட்டும் இயக்குனரை பாராட்டலாம்...! மற்றபடி “எனக்கு பிடிச்சிருக்கு ஆனா படம் நல்லாயில்லை” வகையறாவில் இதையும் சேர்க்கலாம். ஆரோகணம், 18 வயசு வருகிற வரைக்கும் பொல்லாங்கு தந்த பாதிப்பு போதும் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 July 2012

பில்லா 2


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மாஸ் ஹீரோக்களின் படங்களைப் பொறுத்தவரையில் அடுத்தடுத்த படங்களில் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே தான் போகிறது, தொடர் தோல்விகள் கொடுத்தாலும் கூட. பில்லாவின் முன்பதிவுகளே அதன் சாட்சி. Ticket New தளமே இரண்டு நாட்கள் தொங்கிவிட்டது. இதோ மூன்றே நாட்களில் பணம் போட்டவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள், ஆனால் ரசிகர்கள் தேவையை பூர்த்தி செய்திருக்கிறதா பில்லா...?

Scarface கதையில் கொஞ்சம் நாயகன் பிராண்ட் மசாலாவை தூவி ஒரு சர்வதேச டானின் பயோக்ராபியாக கொடுத்திருக்கிறார்கள்.

அஜீத் எப்பவும் போல ஸ்மார்ட் அண்ட் ஸ்டைலிஷ். தனுஷுக்கு சைக்கோ படங்கள் போல அஜித்துக்கு டான் படங்கள் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொள்வார் போல. சூட், கூலிங் க்ளாஸ், அளவெடுத்து வைத்த பேச்சு, ஸ்லோ மோஷன் நடை என அத்தனையும் அதே அதே. “தல” புராணம் பாடும் தொண்டர்களும், கார் / பைக் சேசிங் காட்சியும் இல்லாதது தலவலி நிவாரணம்.

பார்வதி ஓமனக்குட்டன் ஸ்டார் வேல்யூவிற்கான சேர்க்கை. என்ன ஒரு கூர்மை...! நான் அவங்க மூக்கை சொன்னேன். பா.ஓ’க்கு மொத்தமே நான்கைந்து காட்சிகள்தான். ஆனால் திடீர் திடீரென்று வந்து ஹீரோவிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு பார்வையாளர்களுக்கு ஹீரோவின் பொடனியை மட்டும் காட்டியபடி கிஸ்ஸடித்துவிட்டு டூயட் பாடும் லூசுப்பெண்ணாக காட்டாதது மிகப்பெரிய ஆறுதல். 

ப்ரூனா அப்துல்லா - டான் படங்களில் வழக்கமாக ஒரு ரிவால்வர் ரீட்டா கேரக்டர் வருமே, அதேதான். பார்வதியுடன் ஒப்பிடும்போது அதிகம் கவர்கிறார். அவ்வப்போது பிகினியில் தோன்றி கிறங்கடிக்கிறார். பார்வதி, ப்ரூனா இணைக்கு முன் நயன்தாராவும் நமீதாவும் அறுபது ரூபாய் சரக்காக தெரிவது ஆச்சர்யமில்லை.

சுபான்ஷு, வித்யுத் போன்ற வட இந்திய வில்லன்கள் படத்திற்கு சர்வதேச பாலிஷ் போட்டிருக்கிறார்கள். பின்னவரை துப்பாக்கியிலும் பார்க்கக்கடவது. ரஹ்மான், ரஞ்சித் போன்றவர்கள் முதல் பாகத்தில் நடித்தமைக்காக கடனே என்று சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ரஞ்சித்துக்கு பிரதான பாத்திரம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். இளவரசு, ஹீரோயினின் அம்மா தவிர்த்து தமிழ் நடிகர்கள் சொற்பமே.

பாடல்கள் மூன்று பப் ரகம். மதுரை பொண்ணு பாடலில் ஆடும் அத்தனை அழகிகளும் அல்வாத்துண்டுஸ். மீனாட்சி டிக்ஸிட் ஊறுகாயாக தோன்றி தொட்டுக்கொள்ளவா... என்னை தொட்டுக்கொள்ள வா... என்று அழைக்கிறார். இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் வரும் காமிக்ஸ் ஸ்டைல் பாடல் புதுமை. படத்தின் போக்கு கருதி வெளிநாட்டு தெருக்களில் நடனமாடும் டூயட் பாடல்களை தவிர்த்திருப்பது நலம். எண்ட் கார்ட் பாடலில் யுவன் தோன்றுகிறார்.

அஜீத் பேசும் வசனங்கள் ஆங்காங்கே ஷார்ப். “தீவிரவாதி வெற்றி கண்டால் போராளி” என்ற கருத்தை வலியுறுத்தும் வசனத்தில் என்னையே அறியாமல் என் கரங்கள் தட்டிக்கொண்டன. 

படத்தின் பட்ஜெட்டில் பாதியை தக்காளி ஜூஸுக்காகவே செலவு செய்திருப்பார்கள் போல. படம் பார்ப்பவர்கள் ஒரு கணம் ஜெர்க் ஆகும்படி கன்னாபின்னாவென்று ‘சதக் சதக்’ செய்கிறார்கள். 

அண்ணாச்சி – அப்பாசி – டிமிட்ரி என்று கதை பயணிக்கும் விதம் அருமை. நாயகன், புதுப்பேட்டை போல அற்புதமாக சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும்கூட அவற்றை முழுமையாக பயன்படுத்த தவரியிருக்கிறார் சக்ரி. விக்கியில் படித்தவரைக்கும் பில்லா Scarface உருவல் என்பது “தல”குனிவு.

படத்தில் அஜித்தை ஏன் இலங்கை அகதியாக காட்டவேண்டும்...? அஜீத் ஏன் இலங்கைத்தமிழ் பேசவில்லை....? நல்லவேளையாக அஜீத் ஈழபாஷை பேசவில்லை. (அட்டகாசம் தூத்துக்குடி பாசை நினைவிருக்கிறதா...? தமிழ் தப்பித்தது...!) அந்த மனிதர்களை தமிழ் சினிமா இயக்குனர்கள் இதற்கு மேலும் சித்திரவதை செய்யாமல் இருக்கலாம். 

கடைசியில் இதுதான் நடக்கும் என்று முன்பே தெரிந்துவிடுவதால் படத்தினூடே சுவாரஸ்யம் குறைந்துக்கொண்டே போகிறது. நீளம் குறைத்திருப்பது சலிப்பை தவிர்க்கிறது. படத்தின் இறுதியில் காட்டப்படும் சர்வதேச டான் பில்லாவை முதல் பாக பில்லாவோடு பொருத்த முடியவில்லை.

மொத்தத்தில் கண்களுக்கு கவர்ச்சியாக, அதிக பொருட்செலவு செய்து ஹாலிவுட் ஸ்டைலில் (பழைய டயலாக்தான்... பொறுத்துக்கோங்க, இப்ப முடிஞ்சிடும்...!) படம் காட்டியதற்காக பில்லாவை பாராட்டலாம்.

பில்லா – டாஸ்மாக்கில் ஒரு ஹாப்சன்ஸ்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment