30 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 30102017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திரையரங்குகளில் சமீபத்திய கட்டண உயர்விற்குப் பிறகு டிக்கட் எடுக்கவே ஒருமாதிரி குற்ற உணர்வாக இருக்கிறது. மெர்சலுக்கு தேவியில் மொத்தமாக பதினெட்டு டிக்கட்டுகளுக்கு நான்காயிரத்து முன்னூற்றி சொச்சம் ஆனபோது அது என் பணம் இல்லை என்றாலும் கூட சங்கடமாக இருந்தது. கட்டண உயர்விற்குப் பிறகு ஆதர்ஸ திரையரங்கான தேவியிலிருந்து எனது திட்டங்களை சத்யம் / எஸ்கேப்பிற்கு மாற்றிக் கொள்ள முடிவெடுத்துவிட்டேன். சில காரணங்கள். ஒன்று, தேவியில் அது பத்து ரூபாய் டிக்கெட்டாக இருந்த சமயத்திலாவது அதன் புக்கிங்கை திடீரென அகாலவேளையில் திறந்து துரிதமாக மூடிக்கொள்வார்கள். இப்போது குறைந்தபட்ச டிக்கட் விலை ஐம்பது. வரிகள், இணையக் கட்டணம், லொட்டு, லொசுக்கு எல்லாம் சேர்த்து நூறு ரூபாய்க்கு கொஞ்சம் அதிகம் வருகிறது. ஆனாலும் ஏனோ தேவியில் அதன் புக்கிங்கை திறப்பதே கிடையாது. அதே சமயம், முன்பு மலிவுவிலை டிக்கட்டுகளை ரகசியமாக வைத்திருந்த சத்யம் / எஸ்கேப் தற்போது அதனை இணையத்திலும் / நேரிலும் விற்பனை செய்யத் துவங்கியிருக்கிறார்கள். விலை: இணையத்தில் 94, நேரில் 64.

தேவியோடு ஒப்பிடும்போது சத்யத்தில் சில தொந்தரவுகளும் இருக்கின்றன (இவ்வகை டிக்கெட்டில் சத்யத்தில் மேயாத மானும், எஸ்கேப்பில் சோலோவும் பார்த்தேன்). 

1. இருக்கை: சத்யத்தில் தரமும், அளவும் மோசம். உங்கள் அருகில் சற்று வாட்ட சாட்டமான ஆள் வந்தால் உங்களை ஈஷிக்கொண்டு தான் அமர வேண்டும். எஸ்கேப்பில் வேறொரு பிரச்சனை. சீட்டில் தலை சாய்க்குமிடத்தில் புடைப்பாக ஒரு குஷன் வைத்திருக்கிறார்கள். அது நமக்கு வசதி செய்வதற்கு பதிலாக பெரும் கழுத்து வலியை உண்டு பண்ணுகிறது. நிச்சயமாக இது முதல் வரிசையில் அமர்ந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி அல்ல என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். 

2. திரை: தேவி மற்றும் தேவி பாரடைஸின் பிரம்மாண்ட திரை, தேவி கலா மற்றும் தேவி பாலாவின் மனதிற்கு நெருக்கமான குட்டி திரை இரண்டையும் மிஸ் செய்கிறேன். சத்யம், எஸ்கேப் இரண்டிலும் திரையின் அளவு நடுத்தர அளவில் இருக்கின்றன.

3. அரங்கின் வாயில்: தேவியின் எல்லா அரங்குகளிலும் வாசல் பின்புறம் அமைந்திருக்கும். அதனால் மற்ற பார்வையாளர்களின் வருகையால் நமக்கு அதிகம் தொந்தரவு ஏற்படாது. சத்யம் / எஸ்கேப்பில் உல்டாவாக முன்னாலிருந்து ஆட்கள் வருகிறார்கள். அதுவும் படம் துவங்கி சுமார் இருபது நிமிடங்கள் வரை எருமை மாடுகள் போல வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.

4. பார்வையாளர்கள்: தேவியின் பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கம். அவர்கள் தரும் தொந்தரவுகள் என்றால் சப்தம் எழுப்புவது, மொபைலில் உரக்கப் பேசுவது, ஆபாசமாக கத்துவது போன்றவை. சத்யம் / எஸ்கேப்பில் பெரும்பான்மை மேட்டுக்குடி. இவர்களுடைய உருட்டு வேறு தினுசாக இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஜோடியாக வந்து ஒரு வாளி நிறைய பாப் கார்ன் வாங்குகிறார்கள். பெண் அதற்குள் ஏதோ ஒரு மசாலாத்தூளை போங்கெடுத்துப்போய் மொத்தமாக சாய்த்துக்கொள்கிறார். பின்பு ஆண் அந்த வாளியை வாங்கி பத்து நிமிடத்திற்கு குலுக்கிக்கொண்டே நிற்கிறார். படம் முடியும் வரை அதனை வதக் வதக்கென சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். 

சத்யத்தில் DND ஷோ என்று ஒன்று இருக்கிறது. அதில் மொபைல் பயன்படுத்தக்கூடாது. பேசக்கூடாது, தாமதமாக வரக்கூடாது என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதிலாவது இந்த பாப்கார்னுக்கும் தடை விதிக்கும்படி நிர்வாகத்திடம் கோர வேண்டும்.

குறிப்பாக இந்த மசாலாத்தூளை மொத்தமாக பாப்-கார்ன் வாளியில் கொட்டிக்கொள்ளும் காட்சியைப் பார்த்து எலைட் ஆட்களிலும் எச்சைகள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துக்கொண்டேன். இன்னொரு காட்சி. ஸ்டார்பக்ஸ் எனும் காபி கடையில் பயங்கரக் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று விசாரித்தால் ஆண்டுவிழாவை முன்னிட்டு சலுகை விலையில் காபி தருகிறார்களாம். சலுகை விலை எவ்வளவு தெரியுமா ? நூறு ரூபாய். ஒரு காபியின் விலை நூறு ரூபாய் என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஸ்டார்பக்ஸின் வழக்கமான காபி விலையை நான் தெரிந்துக்கொள்ள விரும்பவில்லை. இவ்வளவு இளவயதில் மாரடைப்பு வந்தால் கஷ்டம்.

இனி பார்த்த படங்களைப் பற்றி -

மேயாத மான். PBS-ன் வெள்ளித்திரை அறிமுகம், வடசென்னை கதை போன்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு சென்றேன். காதல் கதைதான். ஆனால் ஏனோ மனதிற்கு நெருக்கமான படமாக அமைந்திருந்தது. நிறைய காட்சிகளில் மெய்மறந்து சிரித்துக்கொண்டும், சில காட்சிகளில் ரகசியமாக கண்களை துடைத்துக்கொண்டும் ரசித்தேன். மேயாத மானின் மூலமாக கோலிவுட்டிற்கு நடிப்பில் நான்கு புதிய வரவுகள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக இந்துஜா ! 

PBS, PBS என்று திரையரங்கிற்கு சென்றால் அங்கே இந்துஜா சுடர் எனும் கதாபாத்திரம் மூலம் தன் இயல்பான அழகாலும், பாவனைகளாலும் நம்மை காலி செய்துவிடுகிறார். வினோத் துவக்கத்தில் சுடரை தங்கையாக நினைக்கிறான். அதிலிருந்து தன் மனதை மாற்றிக்கொள்ள அவனுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. நமக்கோ ஆரம்பத்திலிருந்தே சுடரை தங்கையாக நினைக்க முடியவில்லை. என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் இந்துஜா ராஜூமுருகன் வகையறாக்களின் டார்லிங்காக சிலகாலம் வலம் வருவார். எங்க வீட்டு குத்துவிளக்கு கானா, தங்கச்சி பாட்டு, எஸ்.மது பாட்டு மூன்றும் அதகளம். புதிய இயக்குநர் ரத்னகுமார் கம்பீரமாக வருகை புரிந்திருக்கிறார். இப்படம் மெர்சலுடன் மோதியது துரதிர்ஷ்டம். தப்பான சமயத்தில் வந்திருக்கிற நல்ல படம். மேயாத மானை பார்த்துவிட்டு மெர்சல், விவேகம் போன்ற படங்களை நினைத்தாலே உவ்வேக் என்று வருகிறது.

மார்க் மை வேர்ட்ஸ் இன்னொரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவை திரும்பிப் பார்த்தால் அதில் கார்த்திக் சுப்பராஜின் பங்கு கணிசமாக இருக்கும்.

சோலோ. வாகான ஷோ நேரம் அமையாமல் இரண்டு வாரங்களாக போக்கு காட்டிக்கொண்டிருந்தது. நான்கு தனித்தனி கதைகளை உள்ளடக்கிய படம். தட்டையாக சொல்வதென்றால் நான்கு சிறுகதைகளை படித்த உணர்வு ஏற்படுகிறது. பொறுமையை நிறைய சோதிக்கிறார்கள். ஆனால் இதில் சிவனின் நான்கு முகங்கள், நிலம், நீர், காற்று, நெருப்பு என்று ஏதேதோ சொல்கிறார்கள். சோலோவிற்கு யாரேனும் கோனார் நோட்ஸ் எழுதியிருக்கிறார்களா என்று தேட வேண்டும். டைட்டிலில் துல்கர் சல்மான் பெயரைக் கண்டபோதும், அவருடைய அறிமுகக் காட்சியிலும் பின்வரிசையிலிருந்து சில யுவதிகள் கோரஸாக கத்தினார்கள். அதன்பிறகு அவர்களுடைய குரலை நான் படம் முடியும் வரை கேட்கவே இல்லை. நான்காவது கதையில் ருத்ரா தோன்றும் போதெல்லாம் ஒரேயொரு பெண் மட்டும் வீல், வீலெனே கத்திக்கொண்டிருந்தார். அவருடைய காலுக்கடியில் கரப்பான் அல்லது பெருச்சாளி ஓடியிருக்கும் என்று யூகிக்கிறேன். மற்றபடி பெண்களுக்கு துல்கர் மீதிருக்கும் பற்றைக் கண்டு எனக்கு பொறாமையெல்லாம் கிடையாது. 

ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு அழகான நடிகையை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். முதல் கதையில் – தன்ஷிகா ஒரு கவிதையைப் போல அறிமுகமாகிறார். ஆனால் இருப்பதிலேயே அதிகம் பொறுமையை சோதிக்கும் கதை அதுதான். இரண்டாவது கதையில் ஆர்த்தி வெங்கடேஷை பார்த்து ஜொள்ளிவிட்டு வாயை மூடுவதற்குள்ளாகவே மறைந்துவிடுகிறார். நான்காவது கதையில் வருபவர் ஹ்யுமா குரேஷி என்று நினைத்திருந்தேன். பின்பு ஏஸ்தெட்டிக்ஸ் பார்த்துவிட்டு இது ஹ்யுமா கிடையாதே என்று விக்கி செய்தால் அவரது பெயர் நேஹா ஷர்மாவாம். 

என்னுடைய ரசனையில் கதைகளை வரிசைப்படுத்தினால் – 4, 2, 3, 1. புத்திசாலித்தனமாக தன்ஷிகா கதையை முதலில் வைத்துவிட்டார்கள். அதனால் படம் முடியும்போது மற்ற மூன்று கதைகளை நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள முடிகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

23 October 2017

பிரபா ஒயின்ஷாப் – 23102017

அன்புள்ள வலைப்பூவிற்கு, 

கண்ணடிக்கல... கை பிடிக்கல...
உள்ளவந்து ஓட்டிக்கிட்ட காதல்...
தாலாட்ட... மெல்ல வாலாட்ட... 

என்று பின்னணிப் பாடகி கிசுகிசுப்பான குரலில் கவிதை வாசிக்க, விஷ்ணு விஷாலும், ஸ்ரீதிவ்யாவும் ஒரு மரத்தின் இருவேறு புறங்களில் நின்றுக்கொண்டு காதல் பார்வை பார்த்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி திரையின் மேற்பகுதியில் ‘மாவீரன் கிட்டு’ என்று படத்தின் பெயர் ஒளிர்கிறது. எப்படிப்பட்ட போராளியின் பெயரை வைத்துக்கொண்டு டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று அப்பா வருத்தப்பட்டார். 

யார் இந்த மாவீரன் கிட்டு ? 

1979. தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அடித்தளமிட்ட காலகட்டம். அச்சமயத்தில் கிட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளுள் ஒருவர். அப்போது அவருக்கு பத்தொன்பது வயது. இயற்பெயர் சதாசிவம் கிருஷ்ணகுமார். இயக்கப்பெயர் வெங்கிட்டு. பின்னாளில் கேணல் கிட்டு என்று ஈழ மக்களால் செல்லமாக அழைப்பட்டவர். கிட்டு வேகமும் விவேகமும் கொண்ட துடிப்பான இளைஞர். தேசியத்தலைவர் பிரபாகரனிடம் நேரடியாக போர்ப்பயிற்சி பெற்றவர்.  

1983ம் ஆண்டு புலிகள் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்து தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகிறார். ராணுவப் பயிற்சிக்காக இந்தியாவிற்கு வந்து சென்றவர்களில் ஒருவர். அதன்பிறகு அப்போதைய யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கேப்டன் பண்டிதர் வீரமரணம் அடைகிறார். அப்பொறுப்பு கிட்டுவிடம் வந்து சேர்கிறது. தொடர்ச்சியாக பல தாக்குதல்களில் பங்கெடுத்துக்கொண்ட கிட்டு 1987ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற்ற கைக்குண்டு தாக்குதலில் தனது இடதுகாலை இழந்தார். மன உறுதியை இழக்காத கிட்டு மருத்துவத்திற்காக இந்தியா வந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தப் போதாமைகளை இந்தியாவிலிருந்தபடியே எழுதி வெளியிட்டார். அதனால் இந்திய அரசு அவரை முதலில் வீட்டுக்காவலிலும், பின்னர் சிறையிலும் அடைத்தது. சிறையிலிருந்து போராட்டம் தொடர்பான கட்டுரைகளை எழுதினார். தம்மை விடுவிக்குமாறு சிறைக்குள் பல அறப்போராட்டங்களை நிகழ்த்தினார். இறுதியில் இந்திய அரசு அவரை விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்தது.  

தாயகம் திரும்பிய கிட்டு இலங்கை உடனான பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றார். பின்னர் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளாராக அறிவிக்கப்பட்டு லண்டனுக்கு பயணமானார். புலம்பெயர் தமிழர்களுக்கு போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு உள்ளே மாணவர் அமைப்பு, கலைப் பண்பாட்டு கழகம் போன்றவற்றை அமைத்துச் செயல்பட்டார்.  

1993 ஜனவரி 7. கிட்டு மற்றும் சில விடுதலைப்புலிகள் இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு கப்பலில் பயணிக்கின்றனர். ஜனவரி பதிமூன்றாம் தேதி, இந்தியக் கடல் எல்லையை அவர்களது கப்பல் நெருங்குகிறது. இதனை முன்கூட்டியே அறிந்த இந்திய கடற்படை பதினாறாம் தேதி காலை ஆறு மணிக்குள் சரணடையுமாறு அவர்களுக்கு கெடு விதிக்கிறது. கிட்டுவும் மற்றவர்களும் சரணடையவில்லை. பதினாறாம் தேதி சரியாக காலை ஆறு மணிக்கு இரண்டு ஹெலிகாப்டர்களும், மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலை சுற்றி வளைக்கின்றன. கிட்டு சரணடையாததால் இந்திய கடற்படை கப்பலை தாக்குகிறது. கிட்டு உட்பட பத்து விடுதலைப்புலிகள் வீரமரணம் அடைகின்றனர். கிட்டுவிற்கு அப்போது வயது 33. 

இப்போது நாம் சுசீந்திரனின் மாவீரன் கிட்டுவிற்கு வருவோம். 

சாதிய ஒடுக்குமுறைகள் கொண்ட ஒரு கிராமம்தான் கதைக்களம். அக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தால் அவர்களின் பிணங்களைக் கூட உயர்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்ல முடியாது. கிராமத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய காளிமுத்து என்கிற எழுத்தாளர் மரணமடைகிறார். காளிமுத்து ஐயாவுக்கு தோள் கொடுத்து போராடிய சின்ராசு காளிமுத்துவின் உடலை பொதுவழியில் எடுத்துச் செல்ல வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெறுகிறார். இருப்பினும் உயர்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காவல்துறையும் இணக்கமாக இல்லை. இறுதியில் உடலைக் கொண்டு செல்ல மட்டும்தான் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதனை தாழ்த்தப்பட்ட மக்கள் எடுத்துச் செல்ல வேண்டுமென குறிப்பிடப்படவில்லை என்று காவல்துறையே காளிமுத்துவின் உடலை கொண்டு சென்று தகனம் செய்கின்றனர். பொதுவழியில் உயிருள்ள தாழ்த்தப்பட்டவர்களும் நடமாட வேண்டும் என்பது சின்ராசுவின் லட்சியங்களில் ஒன்று. 

அச்சமயத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த கிட்டு (எ) கிருஷ்ணகுமார் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். கிட்டு கலெக்டராக வேண்டுமென சின்ராசு விருப்பப்படுகிறார். கிட்டுவும் அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். இப்படியாக படம் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்களின் முயற்சிகள் அதற்கு உயர்த்தப்பட்ட மக்கள் ஏற்படுத்தும் இடர்பாடுகள் என்று போகிறது. குறிப்பாக கிட்டுவின் கலெக்டராக முயற்சிக்கு தொடர்ந்து இடர்களை ஏற்படுத்துகிறார் உயர்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஹரிஷ் உத்தமன். இறுதியில் தான் கலெக்டராகி செய்ய வேண்டியதை எல்லாம் உயிர்த்தியாகத்தால் நடக்க வைக்கிறார் கிட்டு. 

கிட்டுவாக விஷ்ணு விஷால், சின்ராசுவாக பார்த்திபன். மாவீரன் கிட்டுவின் உண்மையான ஹீரோ பார்த்திபன் தான். பார்த்திபன் படம் முழுக்க கருப்புச்சட்டை அணிந்து வருகிறார். அச்சகம் வைத்திருக்கிறார். தன் பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையம் வரை சென்று தோள் கொடுக்கிறார். க்ளோஸ் எனஃப் ! ஒருவேளை அப்பா மாவீரன் கிட்டு பார்த்திருந்தால் அவருக்கு நிச்சயமாக பிடித்திருக்கும்.  

மாவீரன் கிட்டுவின் இரண்டாம் பாதி மெதுவாக அமைந்ததாலும், ஏதோ பெருசாக செய்யப்போகிறார்கள் என்று நினைக்கையில் சப்பையாக முடித்ததாலும் வசூலில் வெற்றி பெறவில்லை. இல்லையென்றாலும் வெற்றி பெற்றிருக்காது என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரையில் மாவீரன் கிட்டு போன்ற படங்கள் ஒரேயொரு சாதிப் பற்றாளரை மனம் மாற்றினால் கூட அது வெற்றிதான் ! அந்த வகையில் அது ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என நம்புகிறேன். மற்றபடி உயிர்த்தியாகம் என்பது ஒரு நீண்ட விவாதத்திற்குரிய டாபிக். பொதுவாக தற்கொலை தப்பு என்று இதனை அணுக முடியாது. அதனை யார் செய்துகொள்கிறார், எதற்காக செய்துகொள்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதைப் பொறுத்தே அது சரியா தவறா என்று சொல்லமுடியும். 

என்னுடைய கவலையெல்லாம் படத்தின் தலைப்பைப் பற்றித்தான். வேறு தலைப்பா அய்யா இல்லை. ஒருவேளை இயக்குநர் சுசீந்தரன் கிட்டுவிற்கு ட்ரிப்யூட் கொடுப்பதற்காகக் கூட இப்படி பெயர் வைத்திருக்கலாம். (இவரது இன்னொரு படத்தின் பெயர் ஜீவா !). ஆனால் கேணல் கிட்டுவுக்கும் இப்படத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. பழனி பக்கமுள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச்சம்பவம் என்கிறார் இயக்குநர். இப்போது என்ன பிரச்சனை என்றால் நாளை கேணல் கிட்டுவைப் பற்றி யாராவது தெரிந்துக்கொள்ள வேண்டி கூகுள் செய்தால் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா முகங்கள் தான் வந்து நிற்கும். ஒருவகையில் இது கேணல் கிட்டுவின் வரலாற்றை சிதைக்கிறது. 

போலவே தற்போது பழைய படங்களின் பெயர்களை எல்லாம் புதிய குப்பைகளுக்கு வைக்கும் பழக்கம் பரவலாகி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் குப்பத்து ராஜா என்றொரு போஸ்டர் பார்த்தேன். கண்றாவி ! எது எதையோ தடை செய்பவர்கள் முதலில் இதைத் தடை செய்ய வேண்டும். 

பதினெட்டு பேர் கொண்ட ஒரு பெரிய குழுவுடன் தேவி பாரடைஸில் மெர்சல் பார்த்தேன். கடந்த மூன்று நாட்களாக தினசரியை புரட்டினால் குறைந்தது ஏழெட்டு செய்திகளாவது மெர்சலைப் பற்றி வருகிறது. மெர்சல் படமும், அதையொட்டிய சர்ச்சைகளும் பெரிய டாபிக் ! எழுதத் துவங்கினால் நீண்டுவிடும் என்பதால் கொஞ்சம் சூடு தணிந்ததும் அதைப்பற்றி பேசிக் கொள்ளலாம். 

இப்போதைக்கு மெர்சலைப் பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் ரொம்ப சுமாரான பொழுதுபோக்கு படம். ஒரு பத்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment