9 May 2010

அம்மா... (அன்னையர் தின கவிதை)

எனக்கு
ஆட்டோ வரும் முன்பே
உனக்கு
பேருந்து வந்துவிடுகிறதே
அம்மா...
ஒவ்வொரு நாளும்...!

பள்ளியிலிருந்து
வீடு திரும்புகையில்
யாருமே இல்லாத வீட்டை
பார்க்கையில்
எதுவுமே இல்லாததுபோல்
தோன்றுகிறது
எனக்கு.

இரவு ஒன்பது மணிக்குள்
எப்படியும் வந்துவிடும்
உன்னையும்
பதினோரு மணிக்குள்
வந்துவிட முயற்சிக்கும்
அப்பாவையும்
பள்ளிக்கூடத்தில்
நினைக்கையில்
மங்கலாய்த்தான்
ஞாபகம் வருகிறது.

இப்போதெல்லாம்
டாம் அண்ட் ஜெர்ரியும்,
போகோ டிவியும்
புளித்துவிட்டது.
ப்ரிஜ்ஜில் ஸ்நாக்சும்,
செல்போனில் உன் குரலும்,
அலுத்துவிட்டது.

வரவேற்பறையினை
அலங்கரிக்கத் தெரிந்த 
உனக்கு,
உன் ஸ்பரிசங்களுக்கு
ஏங்கும் என்னை
ஏனம்மா
புரிந்துக்கொள்ள
இயலவில்லை...?

வீட்டுவேலைகளை 
ஞாயிற்றுக்கிழமைகளுக்கு
தள்ளிப்போடும்
உன்னைப்போலவே,
ஏக்கங்களை 
தள்ளிப்போட
எனக்கும் தெரிந்துவிட்டது...

அன்பான 
வார்த்தைகளால்
தற்காலிக தாயாகிவிடுகிறாள்
வேலைக்கார ஆயா...
அப்போதெல்லாம் 
தோன்றுகிறது எனக்கு...
"அவளுக்கே - நான் 
பிள்ளையாகியிருக்கலாம்..."

உன் பிள்ளையென 
உணர்த்த - நான்
நன்றாக படிப்பதாய்
மார்தட்டுகிறாய்...
என் அம்மாவென
உணர்த்த
என்ன செய்யப்போகிறாய் 
நீ...?
- சூர்யா சுரேஷ்

Post Comment

6 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல kavithai...ஆனால் எங்கேயோ படித்த ஞாபகம்...

jillthanni said...

நல்லாயிருக்கு பா...

sweetprabha said...

வீட்டுவேலைகளை
ஞாயிற்றுக்கிழமைகளுக்கு
தள்ளிப்போடும்
உன்னைப்போலவே,
ஏக்கங்களை
தள்ளிப்போட
எனக்கும் தெரிந்துவிட்டது...

wow all r supperrrrrrr.....

gayu said...

fine da,.,m.mmm......good keepit up.........

ஜெய்லானி said...

வேலைக்கு போகும் பெற்றோர்க்கு மகனின் உணர்வு புரியுமா?

Ponmahes said...

Thambi soooper da.....keep it up....but try to write your own..........