Showing posts with label பர்சனல் பக்கம். Show all posts
Showing posts with label பர்சனல் பக்கம். Show all posts

18 January 2016

நிலாவின் டைரியிலிருந்து

அன்புள்ள நிலாவுக்கு,

01/01/2015
உன் அம்மா நீ கருவில் இருக்கும்போதே உனக்காக எழுதத் துவங்கிவிட்டாள். நான் இன்றிலிருந்து துவங்குகிறேன். வருடங்கள் பல கழித்து நீ இதை படிக்கும்போது மனம் மகிழ்வாய் என்று நம்புகிறேன்.

04/01/2015
இன்று மாலை முதன்முறையாக நீ குப்புற திரும்பி படுத்தாய். உன் அம்மாதான் முதலில் பார்த்து குதூகலித்தாள். துரிதமாக கேமராவை எடுத்து உன்னை சில புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்.

01/03//2015
நீ, நான், அம்மா மூவரும் வடிவுடையம்மன் கோவிலுக்கு சென்றோம். உன் அம்மா உன்னை கடவுள் நம்பிக்கையுள்ளவளாக வளர்க்க அவளாலான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறாள். எனக்கு உன் மீது நம்பிக்கை இருக்கிறது.

06/04/2015
விடுமுறை நாட்களில் நீயும் அப்பாவும் நெருக்கமாகி விட்டோம். நீ அப்பாவைக் கண்டாலே உற்சாகமாக சிரிக்கிறாய். நாளை அலுவலகத்தில் அப்பா உன்னை மிஸ் பண்ணப் போகிறேன்.

நீ வளர்ந்தபிறகு நாமிருவரும் சத்யதேவையும் ஈஷாவையும் போல ஒரு நீண்ட பயணம் போக வேண்டும்.

15/04/2015
இன்று நாமெல்லாம் குயின்ஸ்லேண்ட் சென்றோம். உன்னை மோஷன் ஸ்டிமுலேட்டரில் அழைத்துச் சென்றோம். இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை மட்டும்தான் அனுமதிப்போம் என்றார் ஆபரேட்டர். அதையும் மீறி உன்னை தூக்கிக் கொண்டு போனோம். நல்லவேளையாக ரைட் மொக்கையாக இருந்தது. நீ தூங்கிவிட்டாய்.

25/04/2015
நீ இப்பொழுதெல்லாம் அதிகம் அடம் பிடிக்கிறாய். குறிப்பாக உன் கையில் உள்ள பொருட்களை வாங்கினால். இன்றைய தேதியில் உனக்கு பிடித்த பொருட்கள்: பிளாஸ்டிக் கவர், நியூஸ் பேப்பர், டிவி / ஏசி ரிமோட்.

06/05/2015
அப்பா கார் வாங்கியிருக்கிறேன். செகண்ட் ஹேன்ட் தான். அப்பா இன்னும் முழுமையாக காரோட்ட கற்றுக்கொள்ளவில்லை என்பதால் அசோக் மாமாதான் வீடு வரைக்கும் காரோட்டி வந்தார். நாமெல்லாம் காரில் ஒரு சுற்று போய்விட்டு வந்தோம்.

24/05/2015
நீயும், நானும், அம்மாவும் இன்று ஷாப்பிங் போனோம். அங்கே பதின்ம வயது பெண்ணொருத்தி உன்னையே சுற்றிச்சுற்றி வந்தாள். அழகாக இருந்தாள். அவளையும் அவளுடைய அப்பாவையும் பார்க்கும்போது உன்னையும் என்னையும் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு பார்ப்பது போல இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம். அவளுடைய அப்பா ஸ்கூட்டர் ஓட்டினார்.

01/07/2015
இன்று அப்பா வீட்டில் இல்லாதபோது நீ அம்மாவை கன்னம் கிள்ளி கொஞ்சினாயாம். உன் அம்மா அதனை ஒரு பெரிய விஷயமாக சொல்லி மகிழ்வுற்றாள். பாவம், நீயும் நானும் செய்துகொள்ளும் ரகசிய கொஞ்சல்கள் உன் அம்மாவுக்கு தெரியாது.

14/07/2015
சமீப நாட்களாக நீ ரைம்ஸ் பார்க்கத் துவங்கியிருக்கிறாய். தற்போது உனக்கு விருப்பமான ரைம்ஸ் சில :- Baa Baa Black Sheep, Machli Jal Ki Rani, குள்ள குள்ள வாத்து.

25/07/2015
உன்னை முதன்முறையாக திரையரங்கிற்கு அழைத்துச் சென்றோம். படம்: பாகுபலி. படம் துவங்கியதும் DTS ஒலியமைப்பின் காரணமாக நீ பயப்பட துவங்கிவிட்டாய். அம்மா உன் காதுகளை மூடி உன்னை அணைத்துக்கொண்டாள். இடைவேளை வரை நீ நன்றாக தூங்கிவிட்டாய். அதன்பிறகு நீ பழகிவிட்டாய் என்று நினைக்கிறேன். பயப்படாமல் படம் பார்க்கத் துவங்கிவிட்டாய்.

21/08/2015
அப்பா உனக்காக ஜப்பானிலிருந்து திரும்பிய நண்பன் மூலமாக ஜப்பானிய பாரம்பரிய உடையான Yukata Set வாங்கியிருக்கிறேன். மூன்று வயதுக்கான உடை என்பதால் இப்போதைக்கு நீ அணிய முடியாது. பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறோம்.

நீ சோபாவையோ கட்டிலையோ அல்லது சுவரையோ பிடித்து எழுந்து நிற்க முயல்கிறாய், விரும்புகிறாய். நிற்கவும், நடக்கவும் துவங்கிவிட்டால் உன் சேட்டைகள் அதிகமாகும் என்று பயமாகவும் ஆசையாகவும் இருக்கிறது.

22/08/2015
உன்னுடைய பாட்டிம்மா (அப்பாவின் அய்யம்மா) இன்று மாலை 3:30 மணியளவில் இறந்துவிட்டார்.

உனக்கு பாட்டிம்மாவை ஞாபகம் இருப்பது கஷ்டம்தான். பாட்டிம்மாவுக்கு கடைசி காலத்தில் சாப்பாடு ஊட்டி விடும்போது நீ ஆச்சரியமாகவும் ஆசையாகவும் பார்ப்பாய். உன்னை பார்க்கும்போதெல்லாம் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்துக் கொள்வார் பாட்டிம்மா.

07/10/2015
உன்னுடைய பிறந்தநாள் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அப்பா உன்னுடைய நூற்றுக்கணக்கான புகைப்படங்களை வைத்து இரண்டு Collage உருவாக்கியிருக்கிறேன். அவற்றை உன் பிறந்தநாள் விழா அரங்கில் டிஸ்ப்ளே செய்வதாக திட்டம்.

24/10/2015
நாமெல்லாம் ஜெயா பெரியம்மாவின் திருமணத்திற்காக மதுரை வந்திருக்கிறோம். 

மாலையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றோம். நீ கோவிலில் உள்ள விளக்குகளுக்கு அருகிலேயே நிற்க வேண்டுமென அடம் பிடித்தாய். அம்மா உனக்கு குங்குமம் வைத்து விட்டதை அப்சர்வ் செய்து நீயும் எங்களுக்கு அதே போல வைத்துவிட்டாய்.

14/11/2015
ஊரில் இருந்து கிச்சு பெரியம்மா குடும்பத்துடன் வந்திருக்கிறார். நாமெல்லாம் சேர்ந்து சினிமாவுக்கு போனோம். படம்: தூங்காவனம், தேவி திரையரங்கம். திரையரங்கிற்குள் சென்றதும் நீ கொஞ்சம் மிரண்டு போய்விட்டாய். அப்பா கூட முதன்முறையாக தேவி திரையரங்கம் சென்றபோது அதன் பரந்துவிரிந்த திரையைப் பார்த்து மிரண்டேன்.

17/12/2015
நீயும் நானும் அம்மாவும் இன்று மெரீனா கடற்கரைக்கு சென்றோம். உன்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்வது இதுவே முதல்முறை. நானும் அம்மாவும் காதலர்களாக மெரினாவுக்கு வந்திருக்கிறோம். கணவன் – மனைவியாக வந்திருக்கிறோம். முதன்முறையாக அப்பா – அம்மாவாக வருகிறோம்.

23/12/2015
நீ இப்போது சில எளிய வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டாய். Duck என்கிறாய். Bat என்கிறாய். டாய் பாக்ஸில் இருந்து பொருளின் பெயரைச் சொல்லி எடுக்கச் சொன்னால் சரியாக எடுக்கிறாய்.

அம்மா உனக்கு குப்பைகளை குப்பைத்தொட்டியில் கொண்டு போய் போட சொல்லிக் கொடுத்திருக்கிறாள். எதையாவது கொடுத்து குப்பைத்தொட்டியில் போடச் சொன்னால் சரியாக போட்டுவிடுகிறாய். ஆனால், பவுடர் போட்டு முடித்ததும் பவுடர் டப்பாவை கொண்டு போய் குப்பையில் போடும் சேட்டையெல்லாம் கூட செய்கிறாய்.

- அப்பா 

தொடர்புடைய சுட்டி: டைரி

Post Comment

1 January 2015

டைரி

அன்புள்ள வலைப்பூவிற்கு,


டைரி எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்டகால அவா என்றாலும் அதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மனம் தளராமல் தொடர்ச்சியாக எழுத வேண்டும். யார் கையிலும் சிக்கி விடாமல் பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டும். அப்படியே பாதுகாத்தாலும் கூட ஒரு insecured feeling இருக்கும். அதனால் எல்லா ரகசியங்களையும் அப்பட்டமாக எழுத முடியாது. சரி, சங்கேத மொழியில் எழுதலாம் என்றால் அது பின்னாளில் நமக்கே புரியாமல் போகக்கூடிய அபாயம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக எழுதுவதற்கு தேவையான அரை மணிநேர தனிமை கிடைக்காது. இது போன்ற காரணங்களுக்காக நான் இதுவரையில் ஹார்ட் காப்பியாக டைரி எழுதியது கிடையாது. (கூகுள் நோட்புக் என்ற சேவை இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் சாஃப்ட் காப்பியாக டைரி எழுதியிருக்கிறேன்).

தேடிக் கண்டுபிடித்து வாங்கிய நோட்புக்
சமீபகாலமாக ஒரு எண்ணம். டைரி எழுதினால் வாழ்க்கையின் பல அற்புதமான தருணங்களை பதிவு செய்யலாமே என்று தோன்றுகிறது. குறிப்பாக எனது மகளுடைய குழந்தை பருவத்தை எனது வார்த்தைகளில் பதிவு செய்து வளர்ந்த பிறகு அவளிடம் காட்ட வேண்டும் என்கிற பேராவல். நியாயமாக பார்த்தால் இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் டைரி எழுத ஆரம்பித்திருக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது. இப்போதும் ஒன்னும் கெட்டுவிடவில்லை, கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்கையும் சேர்ந்து டைரியில் எழுதிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எனக்கு வரிசையாக தேதி போட்டு, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு அரைநாள் மட்டும் ஒதுக்கும் ஒழுங்குமுறை டைரிகள் ஒத்துவராது. சுதந்திரமாக எழுத வேண்டும். தேவைப்பட்டால் ஆறு பக்கமும், இல்லையென்றால் அரை பக்கமும் எழுதிக்கொள்ளும் சுதந்திரம் வேண்டும். அதற்காகவே தேடிக் கண்டுபிடித்து ஸ்பெஷலாக ஒரு நோட்டு புத்தகம் வாங்கியிருக்கிறேன். கீ-போர்டில் நடனமாடிய எனது விரல்கள் இனி மகளுக்காக பேனாவும் பிடிக்கப் போகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

30 May 2012

மீண்டும் லியோ...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

மார்ச் 23, 2003. ஞாயிற்றுக்கிழமை. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உலககோப்பை இறுதிப்போட்டி நடந்தநாள். ஞாயிறு தவறாமல் மாஸ்கான் சாவடிக்கு சென்றுவரும் தந்தை அன்று திரும்பிவரும்போது எங்களுக்கெல்லாம் அளவுகடந்த ஆனந்தத்தையும் சேர்த்து அள்ளிக்கொண்டு வந்தார். அப்பா கொண்டுவந்த கூடைக்குள்ளிருந்து அழகாக எட்டிப்பார்த்தது அந்த நாய்க்குட்டி. நானும் என் தங்கையும் அண்டை வீட்டு குழந்தைகளும் மாறி மாறி புது நாய்க்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தோம். அடுத்ததாக நாய்க்குட்டிக்கு பெயர்சூட்டுவிழா. உலககோப்பை இறுதிப்போட்டியன்று வந்ததால் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி பெயரை வைக்கலாமா என்றுகூட விளையாட்டாக பேசிக்கொண்டோம்.

உண்மையில் எங்களுக்கு நாய்க்குட்டி என்பது புதியதல்ல. விவரம் தெரிய ஆரம்பித்திருந்த புதிதில் கறுப்பு நிற நாய்க்குட்டி ஒன்றை இதேபோலதான் அப்பா வாங்கி வந்தார். ஆனால் வந்த சில நாட்களிலேயே சாலை விபத்தில் உயிர் நீத்துவிட்டது ப்ளாக்கி. யாராவது இறந்துவிட்டால் வருத்தப்பட வேண்டும் என்றுகூட தெரியாத வயது எனக்கு. அதற்கடுத்து ஒரு பிரவுன் கலர் நாய்க்குட்டி. லியோ என்று அழைத்தால் எங்கிருந்தாலும் நம்முன் வந்து காதை உயர்த்தி சிக்னல் காட்டும். பிற்காலத்தில் லியோவிடம் நகக்கீறல் வாங்கியவர்கள் கடித்துவிட்டது என்று பயந்ததாலும், அண்டை வீட்டு வாசல்களில் சிறுநீர் கழித்துவிடுகிறது என்ற குற்றச்சாட்டுகளினாலும் வேறு வழியின்றி லியோவை பாதுகாப்பான ஒரு இடத்தில் விடவேண்டியதாகி போய்விட்டது.

இப்போது வந்திருக்கும் நாய்க்குட்டிக்கும் அச்சு அசலாக லியோவின் சாயல். எனவே, லியோ என்றே பெயர் சூட்டிவிடலாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. நாய்களின் வளர்ச்சி அபாரமானது. சுமார் ஆறுமாத காலத்திலேயே லியோ நன்றாக வளர்ந்துவிட்டது. அதன் அறிவும்தான். சிறுநீர், மலம் கழிக்க வேண்டுமென்றால் ரொம்பவும் விவரமாக மொட்டைமாடிக்கு ஓடும். அப்படியே கட்டிப்போடப்பட்டிருந்தால் கூட சன்னமான குரலில் குரைத்து அதன் நிலைமையை நமக்கு புரிய வைக்கும். முந்தய லியோவைப் போல அண்டைவீட்டார்களிடம் அளவாகவே வைத்துக்கொள்ளும். மூன்றாவது வீட்டில் குடியிருந்த அம்மையார் மட்டும் பைரவ சாமி என்று லியோவிற்கு அடிக்கடி படையல் போடுவார்.

சுஜாதாவின் என் இனிய இயந்திரா படித்துவிட்டு ஒரு வாரத்திற்கு லியோவை ஜீனோ... ஜீனோ... என்று கொஞ்சிக்கொண்டிருந்தேன். ஜீனோ அளவிற்கு இல்லையென்றாலும் லியோவும் ஜீனியஸ்தான். எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் லியோ தன்னுடைய அதிநவீன செயலாற்றல் கொண்ட மூக்கினால் சோதித்தபிறகே உள்ளே அனுப்பும். சமயங்களில் அதற்கு திருப்தி இல்லையென்றால் அதகளம் தான். இருந்தாலும் லியோ பேசாம இருன்னு சொன்னா போதும், பிரச்சனை எதுவுமில்லை என்று புரிந்துக்கொண்டு அமைதியாக தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்துக்கொள்ளும். அவ்வளவு சாந்தமான லியோ சகநாய்களை மட்டும் எக்காரணம் கொண்டும் வீட்டிற்குள் அனுமதிக்காது. திடீரென ரோட்டில் இருந்து நாய் அடிப்பட்டு அலறும சத்தம் கேட்கும். லியோவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறும்போதே சில நொடிகள் கேப் கொடுத்து கம்பீரமான குரலில் குரைத்துக்காட்டும் லியோ. பாதிக்கப்பட்ட நாய் பம்மியபடியே ஏரியாவை கடந்துபோகும்.

ஒரே வீட்டில் புறா, லவ் பேர்ட்ஸ், மீன்கள் ஆகியவற்றையும் வளர்த்து லியோவையும் நாங்கள் வளர்த்தது மற்றவர்களுக்கு பிரமிப்பாகவே இருக்கும். காலை, மாலை புறாக்களின் உணவு நேரங்களில் லியோவிற்கு இயற்கையின் அழைப்பு வந்தாலும் கூட புறாக்கள் மிரளாதபடி பூனைநடை நடந்து மொட்டைமாடிக்கு செல்லும். அதேசமயம் புறாக்களை வாசம் பிடித்து பூனைகள் வந்தால் அந்தர் பண்ணிவிடும். 

வீட்டுப்பெரியவர்களுக்கெல்லாம் பாசக்காரபிள்ளை லியோ. நாள் ஒன்றிற்கு ஆறு டீயாவது குடிக்கும் தாத்தா, அளந்துபார்த்தால் அவற்றில் மூன்றையாவது லியோவுக்குத்தான் ஊற்றியிருப்பார். அடுப்படியில் இருந்த ஆட்டுக்கறியை ஆட்டையைப்போட்டு தின்றாலும் கூட கோபப்படவேமாட்டார் அய்யம்மா. எங்கள் தலையணைகளில் பாதியை உரிமையோடு பரித்துக்கொள்ளும். எங்களைப்போலவே எங்கள் தாயோடு பாசமொழி பேசும். நாங்கள் அம்மாவோடு அதிக நெருக்கம் காட்டினால் கூட அதன் முகத்தில் பொறாமை அப்பட்டமாக தெரியும். சில சமயங்களில் அம்மா மடியில் படுத்துக்கொண்டு எங்களையும் பொறாமை படவைக்கும்.

நாய் என்றால் பால், பிஸ்கெட் சாப்பிடும் என்பது பாடப்புத்தகங்களில் படித்ததோடு சரி. மற்றபடி எங்கள் லியோவிடம் எதைக் கொடுத்தாலும் ஒருபிடி பிடித்துவிடும். முக்கியமாக பொங்கல் பண்டிகை நேரத்தில் லியோ கரும்பு சாப்பிடும் ஸ்டைலை பற்றி சொல்லியே ஆகவேண்டும். இரண்டு கைகளாலும் கரும்பை அசையாதபடி லாவகமாக பிடித்துக்கொண்டு கடவாய்ப்பல்லால் துவம்சம் செய்துவிடும். சோளக்கட்டை கிடைத்தாலும் அதே டெக்னிக்தான். டீ, காபி, பாதாம் மில்க், ஃபேண்டா, பால்கோவா என்று படோடோபமாகவே இருக்கும். தண்ணீரில் கூட Pure it தண்ணீர் தான். அதற்கென்று தனி மெத்தை இருந்தாலும் கூட மக்களோடு மக்களாக உறங்க ஆசைப்படுவதில் லியோ ஒரு ராகுல்ஜி.

இப்படியெல்லாம் கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக எங்களோடு வாழ்ந்து எங்கள் கவலைகளை மறக்கடித்த லியோ, மே 14ம் தேதி நள்ளிரவோடு தன்னுடைய மூச்சை நிறுத்திக்கொண்டது. அதன் கடைசி நிமிட வேதனைகளை நினைத்தால் இப்பொழுதும் கதறி அழத்தோன்றுகிறது. அன்றிரவு எங்கள் வீட்டில் யாரும் உறங்கவில்லை. உறங்குவது போல நடித்துக்கொண்டுதான் இருந்தோம். எப்படியாவது திரும்பவும் உயிர் வந்துவிடாதா என்று அதன் சடலத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னமும் எங்களுக்கு விடியவில்லை. மீண்டுமொரு லியோ எங்களுக்காக பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

கலங்கிய கண்களுடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 February 2012

“பல்”லாண்டு வாழ்க...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

டிஸ்கி 1: பர்சனல் பக்கம் - பிடிக்காதவர்கள் புரட்ட வேண்டாம்.

டிஸ்கி 2: மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு...!

வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி. விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியின் இறுதிக்கட்டத்தை போன்றதொரு பரபரப்பு. இன்னும் ஒருமணி நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தாக வேண்டும். நாள் முழுக்க அலுவலகத்தில் பணியாற்றிய களைப்பு வேறு. நடை, ஓட்டம், பேருந்து, ஆட்டோ என பல்வேறு பரிமாணங்களை கடந்து அந்த பயணத்தை முடிக்கும்போது மணி சரியாக பத்தாக பத்து நிமிடங்கள் இருந்தன. நல்லவேளையாக டாஸ்மாக் மூடியிருக்கவில்லை. பேரார்வத்துடன் உள்ளே நுழைய சில வருடங்கள் கழித்து சந்திக்கும் சில நண்பர்கள். இப்படித்தான் ஆரம்பமானது கடந்த வாரயிறுதி நாட்கள்.

சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு நான் கடைசி பெஞ்சில் அமர்ந்து சரோஜாதேவி புத்தகத்தை சத்தம்போட்டு வாசிக்க, என்னைச் சுற்றி கதை கேட்கும் மழலையின் பாங்குடன் அமர்ந்திருந்த அதே நண்பர்கள் குழு. காலம் செய்த கோலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்க, இப்போது மற்றொரு நண்பனின் திருமண நிகழ்விற்காக ஒன்றுகூடியிருக்கிறோம். 

“நீ எங்க வேலை செய்யுற...?”, “எப்பல்லருந்து மச்சி சரக்கடிக்க ஆரம்பிச்ச...?”, “ங்கொய்யால இன்னுமா அதே ஃபிகரை லவ் பண்ணுற...?”, “நீ ஒருமுறை என்கிட்ட சண்டை போட்ட ஞாபகமிருக்கா...?” இப்படியான பரஸ்பர கேள்வி பதில் பகுதிகளோடு, பியர் பாட்டில்களும், பிராந்தி டம்ளர்களும் காலியாகின. அரை மயக்கத்தில் கோயம்பேடு ஆம்னி பஸ் ஸ்டாண்டு நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்தோம். சும்மாவே பாசத்தை பொழிபவர்கள், போதையில் இருந்தால் சொல்லவா வேண்டும். 

மதுரையை நோக்கி பயணிக்கும் குளிர்பதன பேருந்தின் கடைசி இருக்கைகளை ஆக்கிரமித்துக்கொண்டோம். பேருந்து கிளம்பியதும் மறுபடியும் ஒவ்வொருவருடைய சுயசரிதையும் விவாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் பசியெடுக்க, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பிரியாணி, புரோட்டா பொட்டலங்களை பிரித்தோம். எனதருகே அமர்ந்திருந்த பாசக்கார நண்பன் ஆசையாய் கேட்டதால், ஒரு அவித்த முட்டையை எடுத்து அவன் வாயில் திணித்தேன். அதை அவன் ஆம்லேட்டாக மாற்றி என்மேல் கக்கினான். ஏசி பஸ் முழுவதும் நாறி நசநசத்துவிட்டது. திருநெல்வேலிக்கே அல்வா, திருப்பதிக்கே லட்டு என்ற பாணியில் எனக்கே ஆம்லேட் போட்டு காட்டிய ஸ்ரீகணேஷ் நிச்சயம் சரித்திரத்தில் இடம்பிடிப்பான்.

அவித்த முட்டையை ஆம்லெட்டாய் மாற்றிய அதிசயப்பிறவி...!
அதன்பிறகு பயணம் எப்படி அமைந்தது என்று சொல்ல வேண்டியதில்லை. காலையில் மதுரையை நெருங்கும்போதே வம்ப வெலைக்கு வாங்கும் நோக்கத்தோடு மணிக்கு கால் செய்து லைவ் கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தேன். காலை ஒன்பது மணியளவில் மணி எனது நண்பர்கள் குழுவுடன் இணைந்தார். அனைவரும் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள டெம்பிள் சிட்டி உணவகத்தில் சிற்றுண்டி முடித்தோம். இப்போது மணி 9.35 ஆகியிருந்தது. சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் கையை பிசைந்துக்கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. பின்னே, கடை பத்து மணிக்கு தானே திறப்பாங்க.

அன்றைய தினத்தின் முதல் வாடிக்கையாளர் நம்ம கஞ்சாநெஞ்சன் மணிவண்ணன் தான். மதுரை மதுக்கூடத்தில் ஃபுரூட் சாலட், கொய்யாக்கனிகள் என உடலுக்கு ஆரோக்கியம் தரும் சைடு டிஷ்கள் கிடைத்தது பாராட்டவேண்டிய ஒன்று. நேற்றிரவு எனக்கு ஆம்லேட் போட்டுக்காட்டிய கயவனை எனது மைத்துனர் நெப்போலியன் துணையோடு பழிவாங்க போராடினேன். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடி விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாம் மாயா மாயா சாயா சாயா. மணியான பதிவரை யார் வழியனுப்பி வைத்தது...??? ஷார்ட்ஸ் அணிந்திருந்த நான் எப்போது பேண்ட்டுக்கு மாறினேன்....??? மதுரையிலிருந்தவன் எப்போது விருதுநகருக்கு வந்தேன்...??? எல்லாம் மாயை...!

கண்விழித்து பார்த்தபோது விருதுநகர் VVS திருமண மண்டபத்தின் மாடியறையில் படுத்திருந்தேன். கீழே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரும்படிக்கிற இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை. விழா அரங்கை லாவகமாக கடந்துவந்து மறுபடியும்... வேறெங்கே கழுதை கெட்டா குட்டிச்சுவரு டாஸ்மாக்தான். மதுரையை காட்டிலும் விருதுநகர் ஓஸ்தி. அந்த மதுக்கூடத்தின் சுவரெங்கும் மல்லிகா ஷெராவத், தீபிகா படுகோன், பூனம் பாண்டே மற்றும் பல உலகலெவல் ஃபிகர்களின் கவர்ச்சிப்படங்கள். பூனம் பாண்டேயின் தொப்புளில் யாரும் காறித்துப்பாமல் இருந்தது அது புதிதாய் கட்டப்பட்ட மதுக்கூடம் என்பதை பறைசாற்றியது.

இரவு மீண்டும் மண்டப அறையில், நண்பன் ஒருவன் சொன்ன சுவாரஸ்யமான மலேசியக் காதல் என்னுள் ஒரு நாவலின் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. உறங்காத விழிகளுள் கனவுகளை நிரப்பியபடி மணமகனும் எங்களுடன் தங்கியிருந்தான். மணி பன்னிரண்டை கடந்ததும் “இன்னைக்கு எனக்கு கல்யாணம்...!” என்று அவன் உற்சாகமாய் துள்ளிக்குதித்ததை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.

பொழுது விடிந்தது, சில மணிநேரங்களில் நண்பனுக்கு திருமணம். இந்த சமயத்தில் அவனைப் பற்றி சில வரிகள் சொல்லியாக வேண்டும். அவனுக்கு குமரிமுத்து ரேஞ்சுக்கு கூட கண்ணடிக்க தெரியாது. அவனுக்கு காதல் திருமணம் கைகூடியிருப்பது உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். உலக நடப்புகளைப் பற்றி ஒன்றும் அறியாதவன். நான் லத்திகா படத்திற்கு அழைத்துச்சென்றபோது கூட வெள்ளந்தியாக என்னுடன் வந்து படம் பார்த்தவன். இருப்பினும் லத்திகா படத்தையே தாங்கிக்கொண்டவன் இந்த துயரத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவான் என்று நம்புகிறேன்.

ரொமாண்டிக் லுக்...!
பெரியோர்கள் முன்னிலையில், சொந்தபந்தங்கள் கூடி, நண்பர்களின் அலப்பறைகளோடு “பல்” என்று பலராலும் அன்போடு அழைக்கப்படும் எங்கள் நண்பனின் திருமணம் இனிதே நடந்துமுடிந்தது. 

அன்றாட பணிகள் அவரவர் சட்டைக்காலரை பிடித்து இழுத்தமையால் உடனடியாக மணமக்களை வாழ்த்திவிட்டு எங்களது அன்பை மட்டும் பரிசாகக் கொடுத்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம். பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது விருதுநகருக்கே உரித்தான எண்ணையில் தோய்த்த பரோட்டா...! ஆனால் ஏற்கனவே வயிறும் மனதும் நிரம்பியிருந்ததால் புறக்கணிக்க வேண்டியதாகிவிட்டது. மறுபடியும் மதுரை. இந்தமுறை மணியை அழைக்கவில்லை. மிலாடி நபி காரணமாக கடை விடுமுறை என்பதால் அவரை அழைத்துவந்து ஏமாற்றமளிக்க மனம் ஒப்பவில்லை. 

“சென்னை போகனுமா...? வால்வோ பஸ்... ஏசி பஸ்...” என பேருந்து புரோக்கர்கள் கையைப் பிடித்து இழுத்தவண்ணம் இருந்தனர். இறுதியில் ஒரு குளிர்பதன பேருந்தில் ஏறி அமர்ந்தோம். இங்கிருந்து போகும்போது காதல் கதைகளோடு சென்ற பயணம், அங்கிருந்து வரும்போது காமக்கதைகளாக நகர்ந்துக்கொண்டிருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் சென்னை திரும்பிவிடுவோம், நண்பர்களை பிரிந்துவிடுவோம், மறுநாள் காலை அலுவலகம் செல்லவேண்டும் என்று நினைக்கும்போதே துக்கம் நெஞ்சை அடைத்தது.

பயணங்கள் முடிவதில்லை...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

29 January 2012

திருவொற்றியூர் – புலம்பல்கள்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

எச்சரிக்கை: கொஞ்சமே கொஞ்சம் பொது விஷயங்களோடு நிறைய பர்சனல் விஷயங்களை பகிர்ந்திருக்கிறேன். பிடிக்காதவர்கள் இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம்.

சென்னையின் பிரச்சனைகள் என்றால் வெளியூர்க்காரர்கள் வெயிலையும் உள்ளூர்க்காரர்கள் போக்குவரத்து நெரிசலையும் குற்றம் சாட்டுவார்கள். சென்னையை ஒட்டி அமைந்துள்ள திருவொற்றியூர் நகரத்தின் நிலை அதனினும் கொடிது. நகர்ப்புறங்களில் இருந்து திருவொற்றியூர் நோக்கி பயணிப்பவர்கள் ஊர் எல்லைக்குள் நுழைந்ததும் கரடு முரடான, எளிதாக போய்வர வழியில்லாத கொடுமையான சாலை வசதியை அனுபவிப்பார்கள். போகவும் வரவும் நாற்பதடிதான். மழைக்காலங்களில் இன்னும் கொடுமை. ஒவ்வொரு மழைக்காலத்திலும் திருவொற்றியூர் புகைப்படம் தினத்தந்தியில் தவறாமல் இடம்பெறும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்... கூடவே வலியும் பிறக்கும் போல...! திருவொற்றியூரின் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக என் தந்தையின் கடை, வீடு பாதிக்கு மேல் இடிபட போகிறது. இப்பொழுதே வீட்டில் அனைவரும் இடிந்துபோய் தான் இருக்கிறோம்.

அம்மாவின் டென்ஷன் பேசப் பேசத்தான் குறையும். அப்பாவின் டென்ஷன் பேசாமலிருந்தால் தான் குறையும். இருவரது கண்களில் எந்தவொரு சமயத்திலும் கண்ணீர் கசிந்துவிடக் கூடாதென்பது என்னுடைய கவலை. ஓரளவுக்கு பக்குவப்பட்ட (!!!) எனக்கே இப்படியென்றால் என் தங்கையின் மனநிலை எப்படி இருக்கும்..? அன்றாட வாழ்வாதாரத்திற்காக தன்னுடைய கடையின் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் கடைக்கோடி வியாபாரியின் மனநிலை...???

நீங்கள் பல வருடங்களாக உழைத்து சம்பாதித்த வீடோ, கடையோ சில நொடிகளில் பொக்லைன் இயந்திரத்தால் தரைமட்டமாக்கப்படும்போது எப்படி இருக்கும்...?

கடந்த வாரம் சனிக்கிழமை, எங்கள் மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்காக நகரம் நோக்கி பயணித்துவிட்டு மாலை வீடு திரும்பும்போது திருவொற்றியூர் ஒட்டுமொத்தமாக உருமாறியிருந்தது. காலையிலேயே மின்சாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. மதியம் பன்னிரண்டு மணிவாக்கில் பொக்லைன் இயந்திரங்கள் ஆங்கிலப்பட டைனோசர்கள் போல ஊருக்குள்ளே நுழைந்தன. முந்தய நாள் இரவே தகவல் தெரிந்திருந்ததால் வியாபாரிகள் தத்தம் கடைகளை காலி செய்துக்கொண்டிருந்தனர். கலவரம் நடந்தாற்போல ஊர் முழுவதும் பரபரப்பு, காக்கிசட்டைகள். ஈவு இறக்கமில்லாமல் வீடுகளும் கடைகளும் இடித்து தள்ளப்பட்டன. ஒருசில கடைகளுக்கு முன்னெச்சரிக்கை கிடைக்காமல் போக பொருட்களோடு கடைகள் இடிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் திருவொற்றியூரை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று, மெயின் ரோட்டோரம் சொந்தக்கடை அல்லது வீடு வைத்திருப்பவர்கள். இரண்டு, மெயின் ரோட்டோரம் வாடகை கடை / வீடு வைத்திருப்பவர்கள். (இந்த லிஸ்டில் நம்ம பதிவர் அஞ்சாசிங்கமும் இருக்கிறார். மனிதர், அவருடைய அலுவலகம் அடித்து நொறுக்கப்படும்போது கூட ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் மாதிரி சிரித்தபடி இருந்தார். கூலர்ஸ் வேறு). மூன்றாவது, வீதிகளில் அல்லது கடலோரச் சாலையில் வசிப்பவர்கள்.

மூன்றாவது பிரிவினர், நிறைய பேர் விஷயம் என்னவென்று தெரியாமல் இது என்னவோ முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான புரட்சி போராட்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஷங்கர் படத்தில் வரும் பொதுஜனம் ரேஞ்சுக்கு “வெச்சான் பார்யா ஆப்பு”, “இவ்ளோ நாள் ஆடுனீங்கல்ல... சாவுங்கடா” போன்ற கமெண்ட் அடிக்கும்போது வேடிக்கையாக இருந்தாலும் வேதனையாக இருக்கிறது. தனது கடையின் பெயர்பலகையை கழட்டிக்கொண்டிருந்த வியாபாரி ஒருவரைப் பார்த்து பொதுஜனம் அடித்த கமெண்ட் – “ங்கோத்தா... கடையே போயிடுச்சு லூசுக்கூதி போர்டை கழட்டிட்டு இருக்கான்...”

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அரசாங்கத்தை ஏமாற்றி, விதிமுறைகளை மீறி, பொதுவழியை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை என்பது அவர்களது எண்ணமாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலானவர்களிடம் பட்டா இருக்கிறது. ஆம் அரசாங்கம் பணம் தருகிறது. தற்போதைய நிலவரப்படி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு சதுர அடி 4000ரூ. ஆனால் அரசாங்கம் தருவதோ 910ரூ. (அன்பே சிவம்...!) அந்த தொள்ளாயிரத்து பத்தையும் நாயாக அலைந்து திரிந்து வாங்க வேண்டும். மேலே சொன்னது காலியிடத்தின் விலை மட்டுமே. அங்கே கட்டிய வீடு, அதற்காக செலவழிக்கப்பட்ட பணம் எல்லாம் காந்தி மகான் கணக்கு தான்.

இவ்வளவையும் செய்தால் உடனே திருவொற்றியூர் சிங்கப்பூராக ஆகிவிடுமா...? அதற்கு நிறைய தடைகள் உள்ளன. மரங்கள், மின் கம்பங்கள், தெரு விளக்குகள், ட்ரான்ஸ்பார்மர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அதனினும் கொடிது, ஒவ்வொரு தெருமுனையிலும் தவறாமல் வீற்றிருக்கும் கோவில்களையும் இடித்துதள்ள வேண்டும். எங்கள் வீட்டிற்கு நேரெதிரே மசூதி ஒன்று உள்ளது. மசூதியை இடித்தால் என்ன நடக்குமென்பது நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதற்கு சற்றே தள்ளி அமைந்திருக்கும் துலுக்கானத்தம்மன் கோவிலின் கோபுரம் கிட்டத்தட்ட நடுரோட்டில் இருக்கிறது. நல்லவேளையாக, தேவாலயங்களை முன்னெச்சரிக்கையாக உள்ளேதள்ளி கட்டியிருக்கிறார்கள். சொல்ல முடியாது, “ஹே... ஹே... பார்த்தீங்களா கோவில், மசூதியெல்லாம் இடிச்சிட்டாங்க... “சர்ச்சை” மட்டும் இடிக்கவில்லை... கர்த்தர் டீவிக்கிறார்...!” என்று சொல்லி ஆள்சேர்க்கப் பார்த்தாலும் பார்ப்பார்கள்.

எல்லாம் முடிந்து திருவொற்றியூர் விரிவடைந்த சாலையாகவும், வியாபாரிகள் விழுந்த அடியில் இருந்து மீண்டு வரவும் குறைந்தது ஆறு மாதங்கள் வரை ஆகலாம். இதுவும் கடந்துபோகும்...!

இன்னும் சில வாரங்களில் என்னுடைய வசிப்பிடமும் தகர்க்கப்படலாம். அதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் வருந்துகிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 December 2011

புலியிடம் பால் கறந்த பிரபல பதிவர்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தய பாகங்கள்:
மதிய உணவை முடித்துக்கொண்டு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் குகையை நோக்கி புறப்பட்டோம். யாருக்கும் வழி தெரியாத காரணத்தினால் ஒரு வழிப்போக்கரிடம் கேட்டோம். பன்னிரண்டு கிமீ கடக்கச் சொன்னார். அவர் சொன்னபடி கடந்துவிட்டு மறுபடியும் ஒருவரிடம் வழி கேட்டோம். சமணர் குகையா...? அது பத்து கிமீ முன்னாடியே போயிருக்குமே என்றார். ஒருவேளை முன்னர் வழி சொன்னவர் பொள்ளாச்சி போயிட்டு ரிட்டர்ன் வரும்போது புளியம்பட்டிக்கு வழி சொல்லியிருப்பாரோ. மறுபடியும் திரும்பிச்சென்றால் தாமதமாகி விடுமென சமணர் குகை திட்டம் கைவிடப்பட்டது.

அடுத்ததாக வியூ பாயிண்ட். எனக்கு ஹைட்டுன்னா ரொம்ப பயம். மொட்டை மாடியில இருந்து கீழே எட்டிப்பார்க்க கூட பயப்படுவேன். (அதுக்கு பின்னாடி ஒரு கருப்பு சரித்திரமே இருக்கு). இந்த லட்சணத்துல மலையுச்சியிலிருந்து கீழே பாக்குறதுன்னா சும்மாவா. தயங்கித் தயங்கி எட்ட நின்று போட்டோ எடுத்துக்கொண்டேன்.

செருப்பு அணிந்து நிற்பவர் (போலி) பகுத்தறிவாளர் செல்வின்...!
சமணர் குகை சமாச்சாரத்தில் ஏமாற்றம் அடைந்த நமக்கு ஆறுதல் தரும் விதமாக இன்னொரு பழமையான கோவில் அருகிலிருப்பதாக தகவல் கிடைத்தது. அமானுஷ்யமான அந்த வனப்பகுதியில் சில தூரம் நடந்து உள்ளே சென்றால் பாதி மண்ணில் புதைந்த நிலையில் இருந்தது அந்த கோவில். ரகசிய அறை ஏதாவது இருக்கிறது என்று தேடிப்பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பினோம்.

கிட்டத்தட்ட எங்கள் பயணம் முடியும் தருவாயில் இருந்தது. மலை அடிவாரத்தை நோக்கி விரைந்துக்கொண்டிருந்தும். அதற்குள் எங்களிடம் இன்னும் கொஞ்சம் திரவ உணவு மீதமிருப்பது நினைவுக்கு வர, ஒரு கொண்டையூசி வளைவு தற்காலிக பாராக மாறியது. இந்த பயணத்திற்கு பிறகு எந்த சரக்கடித்தாலும் சரி, மிக்ஸிங் மட்டும் போவொண்டோ தவிர வேற எதுவும் கிடையாது என்று சபதமெடுத்துக்கொண்டேன்.

பதிவின் தலைப்பை படிக்கவும்...!
மறுபடி நாமக்கல் நகரத்திற்குள் நுழைந்தோம். மறுபடி டாஸ்மாக், மறுபடி புஷ்பா ஹோட்டல், மறுபடி எண்ணையில பொரிச்ச கோழி. மறுநாள் அதிகாலை செல்வினின் நண்பருக்கு திருமணம். ஏழு மணிவரைக்கும் எல்லோருமே மட்டை. அப்புறம் சாவகாசமாக எழுந்து சுதாரித்துக் கொண்டு திருமண மண்டபத்திற்கு விரைந்தோம். அங்கே ஒரு அழகான பெண். ஆமாங்க, பரந்துவிரிந்த அந்த மண்டபத்திலேயே அந்த ஒரு பொண்ணு தான் உருப்படி. அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள், அதை பக்கத்திலிருந்த அவளுடைய அம்மாவும் நோக்கியதால் ஜகா வாங்கிக்கொண்டேன். பின்ன என்னவாம், நானே கெஸ்ட்டோட கெஸ்ட். ஏற்கனவே உள்ளூர்ல வாங்குனதெல்லாம் பத்தாதுன்னு வெளியூர் போயி வேற வாங்கணுமா...?

கடைசியாக நாமக்கல் கோட்டையிடமும், டாஸ்மாக்கிடமும் விடைபெற்றுக்கொண்டு மனதை கள்ளாக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

டிஸ்கி: அவர் பால் தான் கறக்கிறாரா அல்லது வேறு ஏதாவது செய்கிறாரா என்று யாராவது கேட்டு சொல்லுங்கள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

24 November 2011

அறப்பளீஸ்வரர் கோவிலும் ஆகாய கங்கையும்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,


வீர மரணம் அடைந்த வல்வில் ஓரி...!
ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு சேஞ்சுக்காக டீ குடித்துவிட்டு கால்நடையாக ஒரு உலா சென்றோம். அப்போது கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி சிலையை காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் ஒரே ஒரு அம்பு எய்தினால் அது யானை, புலி, கலைமான், பன்றி, உடும்பு ஆகிய ஐந்து விலங்குகளையும் மாய்க்கும் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. LOL, பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டாரையெல்லாம் விட பெரிய அப்பாட்டாக்கராக இருந்திருப்பார் போல. சிலையில் குதிரை வடிவமைப்பு பற்றி செல்வின் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். அதாவது, முன்னிரண்டு கால்களை தூக்கியபடி இருந்தால் அந்த மன்னர் போரில் வீர மரணம் அடைந்திருக்கிறார். ஒரு காலை மட்டும் தூக்கியபடி இருந்தால் மன்னர் போரில் விழுப்புண் பெற்று சில காலம் கடந்து இறந்திருக்கிறார். குதிரையின் நான்கு கால்களும் தரையில் இருந்தால் மன்னர் இயற்கை மரணம் அடைத்திருக்கிறார். எப்படி இந்த மனுஷன் எப்படி இந்த மனுஷன் அறிவியல், வரலாறு, சரக்கியல் (ஹி.. ஹி... எந்த சரக்குல எதை மிக்ஸ் பண்ணனும்ன்னு சொல்ற படிப்பினை) என்று சகலத்துறைகளின் விவரத்தையும் விரல்நுனியில் வைத்திருக்கிறார் என்று செல்வினின் உலக அறிவைக் கண்டு வியந்தேன்.

பின்னர் கேரவனை எடுத்துக்கொண்டு மலையுச்சியை நோக்கி பயணிக்க கிளம்பினோம். அதற்குள் நேற்றிரவு ஹோட்டலில் தூங்கி வழிந்த முகத்துடன் காணப்பட்ட செம்மேடு ஆண்ட்டி சீவி முடிச்சு சிங்காரிச்சு பொட்டு வச்சு பூ முடிச்சு ஜில்லுன்னு ஜோரா சிக்குன்னு கூலா குறுக்கே வந்தார். அவரைப் பார்த்ததும் டிபன் சாப்பிடும் ஞாபகம் வர அதே ஹோட்டலில் வண்டியை நிறுத்தினோம். சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பும்போது செல்வின் நாசூக்காக பேசி செம்மேடு ஆண்ட்டியிடம் இருந்து செல்போன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டார். 

அதன்பிறகு வேறெந்த ஆண்ட்டிக்காகவும் வண்டியை நிறுத்தாமல் ஆகாய கங்கை அமைந்திருந்த இடத்திற்கு சென்றோம். அருவியைக் காண ஆயிரம் படிகட்டுகளுக்கு மேல் இறங்க வேண்டியிருக்கும் அதனால் இதை குடித்துவிட்டு செல்வோம் என்று இயற்கையளித்த Red Bull மொடவாட்டு கால் கிழங்கு சூப் வாங்கிக்கொடுத்தார் செல்வின். சற்றே அயர்ச்சியான அந்த படிக்கட்டு பயணம் நாற்பதை தாண்டியவர்களுக்கு உகந்ததல்ல. ஆனால் செல்வின் மட்டும் விடாப்பிடியாக இறங்கியது ஆச்சர்யமாக இருந்தது. What a man...? கீழே இறங்க இறங்க அருவியின் அமானுஷ்ய சத்தம் பேராவலை தூண்டியது. இன்னும் இறங்க அருவிச்சாரல் மேலே தெறிக்க ஆரம்பித்து, குளிர் வதைக்க ஆரம்பித்தது. அருகே நெருங்கிவிட்டோம் ஆனால் அருவியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவ்வளவு வீரியத்துடன் நூற்றியென்பது அடி உயரத்தில் இருந்து பாய்கிறது அருவி. சுமார் நாற்பதடி தூரத்தில் அருவி – அதற்குமேல் அருகே செல்வது ஆபத்தானது. நானோ ஏற்கனவே குளிரில் நனைந்த கோழியாக நின்றிருந்தேன். தயங்கி தயங்கி முன்னேறி அருவியிடம் புறமுதுகு காட்டி சில நிமிடங்கள் நனைந்துவிட்டு நடையை கட்டினேன்.

மேலே இருக்கும் புகைப்படம் நெட்டில் சுட்டது. இந்த இடத்திற்கு கேமராவை எடுத்துச் சென்று படமெடுப்பது சாமான்யமானவர்களுக்கு சாத்தியப்படாத செயல்.

மீண்டும் ஆயிரக்கணக்கான படிகள் ஏறி வந்ததும், நமக்கு மொடவாட்டு கால் கிழங்கு சூப்பெல்லாம் வேலைக்கு ஆகாது, பிராந்தி தான் சரிபட்டு வரும் என்று சில நண்பர்கள் பாட்டிலை திறந்துவிட்டனர். நானும் செல்வினும் மட்டும் நல்லபிள்ளையாக மறுபடி ஒருமுறை சூப் குடித்துவிட்டு அருகில் குளிப்பதற்கு தகுந்தபடி இருந்த மற்றொரு சிறிய அருவியை பார்த்துவிட்டு வந்தோம். 

இதுவும் நெட்டில் சுட்டது தான்...!
அடுத்தது அறப்பளீஸ்வரர் கோவில். இப்போது சரக்கடித்த நண்பர்கள் நாங்கள் குளித்துவிட்டு தான் கோவிலுக்குள் வருவோம் என்று சென்டிமென்ட்டாக அடம்பிடித்து குளித்துவிட்டு வந்தனர்.

கோவிலின் வரலாறு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. அது உங்கள் பார்வைக்காக: கோயிலின் அருகில் பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, “அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்” என்ற பெயர் வழங்கலானது.

இந்த கோவிலுக்கு கொல்லிப்பாவை எனும் தெய்வீக சிறப்பு இருப்பதாக குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கொல்லிப்பாவை...? இம்மலைப் பகுதியில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.

மதிய உணவு சாப்பிடுவதற்காக தேடிக் கண்டுபிடித்து வீட்டுச்சூழலில் இருந்த ஒரு ஐயர் மெஸ்ஸுக்கு சென்றோம். இந்தமுறை ஆண்ட்டி யாருமில்லை ஒரு ஆயா தான் பரிமாறினார். மெஸ் வாசலில் போர்டை பார்க்காமல் எங்களுடன் வந்த நண்பர் ஆயாவிடம் ஒரு ஆப்பாயில் போடுங்க என்றார். அப்போது ஆயா பார்த்த பார்வையில் அவருக்கு அடித்த ஆஃப் இறங்கிவிட்டது.

அஞ்சா சிங்கமும் ஐயர் ஓட்டலில் ஆஃப் பாயில் கேட்ட நண்பரும்...!
அடுத்ததாக இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் குகையை நோக்கி புறப்பட்டோம்...

அடுத்த பாகத்தில்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment