6 August 2012

மதுபான கடை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சமீப காலமாக பொல்லாங்கு, அட்டகத்தி, நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் என்று விளம்பர யுக்தியில் புதியவர்கள் அசத்துகிறார்கள். அந்தவரிசையில் மதுபான கடை பேப்பர் விளம்பரம் மட்டுமே என்னை தியேட்டர் வரைக்கும் அழைத்துச்சென்றது. ட்ரைலர் கூட பார்க்கவில்லை. படமே மொக்கையாக இருந்தாலும் கூட, புத்திசாலித்தனமான விளம்பர யுக்திக்கு சன்மானமாக ஒருமுறை பார்க்கலாம் என்பது என் எண்ணம்.

கதை என்று எதுவுமே படத்தில் இல்லை என்று அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டதால் நாம் குய்யோ முறையோ என்று புலம்ப வேண்டிய அவசியமில்லை. காந்தி ஜெயந்திக்கு முந்தய நாளன்று அரசு மதுபான கடையொன்றில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு என்று கொள்ளலாம்.

கேரக்டரைசேஷன் தான் படத்தினுடைய நாயகன். 

கோவை வீதிகளில் குடித்துக்கழித்த ஜான் ஆபிரஹாம் என்று யாரோ ஒரு தோழருக்கு சமர்ப்பித்து படம் ஆரம்பமானபோதே அவர் யாரென்ற ஆர்வம் எனக்குள் தொற்றிக்கொண்டது. நேற்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் அவரைப்பற்றிய புத்தகம் ஒன்றினை பார்த்தபோதும் கூட தோழர், கலகக்காரன் போன்ற வார்த்தைகள் ஏற்படுத்திய சலிப்பால் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன்.

ரபீக்கை திரையில் பார்த்தபோது நான்கு மாதங்களுக்கு முன்பிருந்த என்னையே பார்த்தது போல இருந்தது, அவ்வளவு நீளம். நடிப்பில் கனா காணும் காலங்கள் வினீத்தின் சாயல்.

ரபீக்கின் காதலியாக வரும் ஐஸ்வர்யா நேற்று பூத்த ரோஜா மொட்டு போல ஃபிரஷாக இருக்கிறார். மழலையின் சிணுங்கலை போல ரசிக்க வைக்கிறார். இத்தனைக்கும் ஐஸுக்கு இரண்டே காட்சிகள் தான். ஆனால் முத்தத்திற்காக ஏங்கும் முகபாவனைக்காகவே பாஸ்மார்க் போடலாம். 

ஏனைய கேரக்டர்கள் அனைத்துமே அநேகமாக டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் அனைவருமே பார்த்திருக்கக்கூடிய எதார்த்த பாத்திரங்கள்.

பெட்டிஷன் மணி தண்ணியடித்து அலப்பறை கொடுத்து அவ்வப்போது தத்துபித்துவங்கள் உதிர்க்கும் மூத்த குடிமகன், வாடிக்கையாளர்களிடம் பாட்டு பாடி ஓசிக்குடி குடிப்பவர், பர்ஸை தொலைத்துவிட்டேன் என்று ஆங்கிலத்தில் பீட்டர் விட்டு ஏமாற்றி கட்டிங் குடிப்பவர், ராமர், ஆஞ்சநேயர் வேடமிட்டு பிச்சை எடுத்து குடிப்பவர்கள், மனநலம் தவறிய பார் இடத்தின் முன்னாள் உரிமையாளர், கடை திறக்க காத்திருந்து முதல் ஆளாக உள்ளே நுழைபவர், காதல் தோல்வி ஆர்வக்கோளாறுகள், முதல்முறை குடிக்கும் இளசுகள், அரவாணிகள், தொழிலாளிகள் இவர்கள் தவிர்த்து பார் ஓனர், சப்ளையர்கள், பெட்டிக்கடைக்காரர் அத்தனையும் நிஜ முகங்கள். ஒரே ஒரு நாளுடைய சம்பவங்களை மட்டும் திரையில் காட்டிவிட்டு பாத்திரங்களின் குணாதிசயம், முன்கதை ஆகியவற்றை விளங்க வைத்திருக்கும் இயக்குனருடைய திறமையை மெச்சலாம். 

நடிகர்கள் அனைவருமே அத்துனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஒருவேளை காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததும் ஆளுக்கொரு ஆஃப் ஊற்றிக்கொடுப்பார்களோ என்னவோ...?

கூலித்தொழிலாளிகள் வலி மறப்பதற்கு குடிக்கிறோம் என்பது, அரவாணிகள் எங்களை கிண்டல் பண்றாங்க என்பது போன்ற நியாயப்படுத்தல்களை ஏனோ என்னால் சுலபமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்படி பார்த்தால் எல்லோருமே நியாயமானவர்கள் தான்.

ஒரு பாடல்காட்சியின் இடையே திடீரென இசை நின்று, பெரியவர் ஒருவர் அழிந்துபோன கூத்துக்கலையை பற்றி ஃபீல் பண்ணி பாடுகிறார். அதன்பின் பத்து நொடிகள் அமைதி. எல்லோரும் பெரியவரையே வெறித்துப்பார்க்கிறார்கள். பெரியவர் சுதாரித்துக்கொண்டு குத்தாட்டம் போட, இசை ஆரம்பிக்கிறது. மேற்படி காட்சி போல மசாலா பிசிறுகள் ஆங்காங்கே தென்படவும் செய்கின்றன.

போலீஸ்காரராக வரும் நபரை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே என்று யோசித்தால்... அடடே, சாதனைத்தமிழர் யோகநாதன்.

சினிமாவாக பார்க்கும்போது பெட்டிஷன் மணி பேசும் சில காட்சிகள் சூரமொக்கையாக இருந்தாலும் கூட, நாமும் ஒரு டாஸ்மாக்கில் அமர்ந்து பகார்டி அருந்திக்கொண்டே வேடிக்கை பார்க்கிறோம் என்று நினைத்துக்கொண்டால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை. 

இயக்குனர் ஒரு “தோழர்” என்பதால் ஆங்காங்கே தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் குடிகாரர்களையும் தொழிலாளிகள் லிஸ்டில் சேர்த்தது என்ன எழவென்று புரியவில்லை.

மூன்று பாடல்களுமே குடி வாழ்த்து வகையறா. “கோடிக்கால் பூதமடா தொழிலாளி...” பாடல் ஓகே.  ஒரு TASMAC Anthem எப்படி இருந்திருக்க வேண்டும்...? அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா...? ஆனால் மேற்கத்திய இசையை ரொப்பி மொக்கை செய்திருக்கிறார்கள்.

7D கேமராவை வைத்துக்கொண்டு ஐஸ்வர்யாவின் மூக்குக்கும் உதடுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தென்படும் பூனைமுடியை கூட துல்லியமாக படம் பிடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் கதை வேண்டாம் என்று முடிவு செய்திருந்தால் வெறுமனே சம்பவங்களையும், மனிதர்களையும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம், மாறாக கதை சொல்லியாவது சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். இரண்டுகட்டானாக ஃப்ளாட்டாக ஆரம்பம் முடிவு கருத்து கத்தரிக்காய் என்று எதுவுமே இல்லாமல் படமெடுத்திருக்கிறார்கள்.

நில அபகரிப்பு, குழந்தை தொழிலாளிகள், சாதி ஏற்றத்தாழ்வுகள், தொழிலாளர் நலன் என்ற பல சமூக அவலங்களை ஊறுகாயாக தொட்டுக்கொண்டாலும் கூட, படம் முடிந்தபிறகும் கூட “ம்ம்ம் சரி அப்புறம்... இதனால் தாங்கள் கூற விரும்புவது...?” என்று இயக்குனரை நோக்கி கேள்விக்கணை தொடுக்க தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நிற்க, அதான் கதை இல்லையென்று அவர்களே சொல்லிவிட்டார்களே என்று கேட்கலாம். ஆனால் நிறைய கருத்துகளை சொல்ல வாய்ப்பிருக்கும் அருமையான கதைக்களனை வீணடித்துவிட்டார்களே என்று ஒரு சினிமா ரசிகனாக என்னுடைய வருத்தத்தை பதிவு செய்துகொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

27 comments:

Philosophy Prabhakaran said...

Off the Record:
படத்தினுடைய தலைப்பில் “க்” வருமா வராதா என்று தெரியவில்லை... சொல்லி வைத்தாற்போல பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய பதிவுகளில் மதுபானக்கடை என்றே எழுதியிருக்கிறார்கள்.... ஆனால் சினிமா போஸ்டர் மதுபான கடை என்று சொல்வதால் நாம் அதையே எடுத்துக்கொள்ளலாம்...

உண்மையாகவே சரியான தமிழ் இலக்கண முறையை தெரிந்துக்கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் மேற்கண்ட சந்தேகத்தை பழமைபேசி மாதிரியான தமிழ் அப்பாட்டாக்கர்களை டேக் பண்ணி கேட்டால் கூட பதில் கிடைக்காது... ஏனென்றால் அவர் ஒளிவட்ட பதிவர், சக ஒளிவட்டங்களுக்கு மட்டுமே பதில் சொல்வார்...

இப்பொழுதெல்லாம் லோ-பட்ஜெட் படங்களை சுலபமாக பார்க்க முடிவதில்லை... ஏதோ ஒரு துக்கடா தியேட்டரில் ஒரு ஷோ, ரெண்டு ஷோ ஓட்டுகிறார்கள்... வேறு வழியின்றி தேவி வரை பயணம் செய்ய வேண்டியதாகிவிட்டது... சில திரையரங்குகளில் பாதியிலேயே ஏசியை ஆஃப் பண்ணி சாகடிக்கிறார்கள்... தேவியில் மட்டும் ஏசியை போட்டே சாகடிக்கிறார்கள்... குளிர் தாங்கமுடியவில்லை... படம் முடியும்போது ஞாய்ற்றுக்கிழமை காலையில் தூங்கி எந்திரிச்சா மாதிரி தலை வலிக்குது...

Anonymous said...

மீ தான் 1stuuuuuuuu ...

நல்லா இருக்கு விமர்சனம் ...

கொஞ்சம் சிரிச்சேன் ...


ரபீக்கை திரையில் பார்த்தபோது நான்கு மாதங்களுக்கு முன்பிருந்த என்னையே பார்த்தது போல இருந்தது, /////

நம்பிட்டம் ....

எப்பவும் போல விமர்சனம் superb,,,

வவ்வால் said...

பிரபா,

மதுபான கடை அன்புடன் அழைக்கிறது என போர்டு வச்சாங்களா :-))

நிறைய ஒளிவட்டம் இருக்குங்க, உனக்குலாம் நான் பதில் சொல்ல மாட்டேன் ,இல்லைன பதில் சொல்றதே பெருசுன்னு ஒரு பதிலை சொல்லுங்கள் :-))

"க்" வராது என்பது எனது கருத்து,
சின்ன கண்ணன் என்ற பெயரில் க் வருவதில்லை, னகரம் ,ககரம் எல்லாம் மெல்லினம் ,வல்லினம் என்று ஏதோ சொல்வார்கள், இதை எல்லாம் மீண்டும் கோணார் நோட்டிஸ் பார்த்தால் தான் சொல்ல முடியும்.

நல்லா அழுத்தி சொல்லணும் என்றால் "க்"போட்டுக்கோங்க :-))

குத்து குடிப்பாட்டு வைக்க மிஷ்கின் கிட்டே ஆலோசனைக்கேட்டு இருக்கலாம் ,இயக்குனர்,

வவ்வால் said...

பின் குறிப்பு:

சாராயக்கடைனு எழுதினால் "க்" வைக்கணும் புதுவையில் சாராயக்கடைனு "க்"வைத்து எழுதி இருப்பதோடு "க்" ஐ மட்டும் குறிப்பாக தலைகீழாக எழுதி இருப்பார்கள் :-))

Unknown said...

இந்தப் படத்தில் கோவை, ஈரோடு பகுதியில் அதிக அளவில் இருக்கும் சாதீயத்தை சாடியிருக்கிறார் இயக்குனர்.சாதி வெறியனின் கண்ணத்தில் முருகேசன் அறையும் போது என்னை அறியாமல் கைதட்டினேன்.

அப்புறம் இன்னோரு விசயம் நம்ம யோகநாதன் நிறைய குறும்படத்தில் நடித்திருக்கிறார் அதில் ஒரு படம் இண்டர்நேசனல் அவார்டு வாங்கிய படம்.

அனுஷ்யா said...

//முகபாவனைக்காகவே பாஸ்மார்க்//
//அனைத்துமே அநேகமாக டாஸ்மாக் //

அடடே... ஆச்சர்யக்குறி...

அனுஷ்யா said...

தலைப்பு மற்றும் விளம்பர வசீகரங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனை இது... dont worry... இன்னும் வியாதி முத்தல.... சரி பண்ணிரலாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நேற்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் அவரைப்பற்றிய புத்தகம் ஒன்றினை பார்த்தபோதும் கூட தோழர், கலகக்காரன் போன்ற வார்த்தைகள் ஏற்படுத்திய சலிப்பால் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன். ///////

இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் இருக்கே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ஆனால் முத்தத்திற்காக ஏங்கும் முகபாவனைக்காகவே பாஸ்மார்க் போடலாம். /////

எல்லாப் படத்துலயும் ஹீரோயினுங்க மட்டும் பாஸ்மார்க் வாங்கிடுதுங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பெட்டிஷன் மணி தண்ணியடித்து அலப்பறை கொடுத்து அவ்வப்போது தத்துபித்துவங்கள் உதிர்க்கும் மூத்த குடிமகன், வாடிக்கையாளர்களிடம் பாட்டு பாடி ஓசிக்குடி குடிப்பவர், பர்ஸை தொலைத்துவிட்டேன் என்று ஆங்கிலத்தில் பீட்டர் விட்டு ஏமாற்றி கட்டிங் குடிப்பவர், ராமர், ஆஞ்சநேயர் வேடமிட்டு பிச்சை எடுத்து குடிப்பவர்கள், மனநலம் தவறிய பார் இடத்தின் முன்னாள் உரிமையாளர், கடை திறக்க காத்திருந்து முதல் ஆளாக உள்ளே நுழைபவர், காதல் தோல்வி ஆர்வக்கோளாறுகள், முதல்முறை குடிக்கும் இளசுகள், அரவாணிகள், தொழிலாளிகள்////////

ஓ இது விளிம்புநிலை மனிதர்களின் வலிகளை, வாழ்வை இயல்பா சித்தரிக்கும் யதார்த்த படமா....... ஆளை விடுங்கடா சாமி.......!

யுவகிருஷ்ணா said...

தோழர் பிரபா,

‘க்’ ‘ச்’ மாதிரி சந்தெழுத்துக்கள் குறித்த சந்தேகம் உங்களுக்கு மட்டுமில்லை. பெரிய அப்பாடக்கர்களுக்கே உண்டு.

புதிய தலைமுறை (த் கிடையாது) பத்திரிகையாளர்களுக்கு சொற்பொழிவாற்ற ஒருமுறை பேராசிரியர் நன்னன் வந்திருந்தார்.

‘ச்’ ‘த்’ ‘க்’ பிரச்னை பற்றி ரொம்ப சுலபமாக சொன்னார். இதுக்கு இலக்கண விதிகள் இருந்தாலும்கூட, அதையெல்லாம் ஸ்ட்ரிக்டாக ஃபாலோ செய்யமுடியாதவர்களுக்கு ஈஸியாக ஒரு வழிமுறை சொன்னார்.

”ஒரு வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள். ‘க்’கோ, ‘ச்’சோ உச்சரிப்பில் தேவைப்படுகிறது என்றால் தயங்காமல் போட்டுவிடுங்கள். எண்பது சதவிகிதம் சரியாகத்தானிருக்கும்.”

தமிழ் இலக்கணம் அறியா பாமரனான நான் இந்த மெத்தட்டைதான் ஃபாலோ செய்கிறேன். என்னுடைய எழுத்துகளில் சந்தேழுத்துக்கள் நிச்சயமாக இருபது சதவிகிதமாவது தவறான இடங்களில்தான் வருகிறது என்று நினைக்கிறேன். மதுபான கடை என்று உச்சரித்துப் பார்த்தபோது ‘க்’ இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. போட்டுவிட்டேன்.

பொதுவாக 'noun'க்கு சந்தி கிடையாது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் போதும். மதுபானக்கடை என்பது எனக்கு noun போல தோன்றவில்லை :-)

Unknown said...

//கூலித்தொழிலாளிகள் வலி மறப்பதற்கு குடிக்கிறோம் என்பது, அரவாணிகள் எங்களை கிண்டல் பண்றாங்க என்பது போன்ற நியாயப்படுத்தல்களை ஏனோ என்னால் சுலபமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை//

மிக நிதர்சனமான உண்மை நண்பரே!. குடிமகன்கள் குடிப்பதற்கு ஏதாவது காரணம் வேண்டும் . அதற்காகவே எதாவது ஒன்றை சொல்லி குடிக்கிறார்கள் . விமர்சனம் அருமை!
வாழ்த்துக்கள் !

Kite said...

சந்தி என்பது ஒரு Filler போன்றது . தொடர்புடைய இரு வார்த்தைகளை இணைப்பதற்குப் பயன்படுத்துவது. சமஸ்க்ருதத்திலிருந்து தமிழுக்கு வந்த வார்த்தைகளின் பின் சந்தி சேர்ப்பதில்லை. உதாரணம்: சங்க காலம். இதில் சங்கம் என்பது சமஸ்க்ருதம். ஆனால் தங்கக் காசு என்பதில் க் மிகும்.
இந்த விதிப்படி மதுபானம் என்பது சமஸ்க்ருத வார்த்தையாக இருப்பதால் மதுபான கடை என்பதே சரி. ஆனால் சாராயக் கடை என்பதில் க் மிகும்.

ananthu said...

பிரபா பொல்லாங்கு பற்றிய உங்களின் விமர்சனத்தை பார்த்த பிறகு நான் படத்திற்கு போகவில்லை , அதேபோல இந்த படமும் நன்றாக இருப்பது போல தான் எல்லோரும் எழுதுகிறார்கள் , ஏனோ எனக்கு போகவேண்டுமென்று தோன்றவில்லை ... இயக்குனரின் முயற்சிக்காக ஒரு முறை பார்க்கலாம் என்று நினைக்கிறேன் ...

Philosophy Prabhakaran said...

@ கலை
// எப்பவும் போல விமர்சனம் superb,,, //

நன்றி கலை...

Philosophy Prabhakaran said...

@ வவ்வால், யுவகிருஷ்ணா, Jagannath

தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி... மதுபான கடையில் க் வராது என்று தெரிந்துக்கொண்டேன்...

Philosophy Prabhakaran said...

@ வீடு சுரேஸ்குமார்
// இந்தப் படத்தில் கோவை, ஈரோடு பகுதியில் அதிக அளவில் இருக்கும் சாதீயத்தை சாடியிருக்கிறார் இயக்குனர்.சாதி வெறியனின் கண்ணத்தில் முருகேசன் அறையும் போது என்னை அறியாமல் கைதட்டினேன். //

இருக்கலாம் தல... ஆனால் அந்த வசனமோ / காட்சியோ படத்தோடு ஓட்டாமல் தனியாக இருப்பது போல தோன்றுகிறது...

// அப்புறம் இன்னோரு விசயம் நம்ம யோகநாதன் நிறைய குறும்படத்தில் நடித்திருக்கிறார் அதில் ஒரு படம் இண்டர்நேசனல் அவார்டு வாங்கிய படம். //

அப்படியா... அதுபற்றியெல்லாம் பதிவர் சந்திப்பில் சொன்னாரா... அல்லது நான் அசந்துவிட்டேனா...

Philosophy Prabhakaran said...

@ மயிலன்
// தலைப்பு மற்றும் விளம்பர வசீகரங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனை இது... dont worry... இன்னும் வியாதி முத்தல.... சரி பண்ணிரலாம்... //

இல்லை மயிலன் முத்திடுச்சு... இப்பல்லாம் படம் மொக்கையாக இருக்கும்'ன்னு முன்பே தெரிந்தாலும் கூட வக்காளி வாங்கடா பாத்துடலாம்'ன்னு வெறியோட தியேட்டருக்கு கிளம்பி போகிறேன்...

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் இருக்கே...? //

நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கீங்க...

// எல்லாப் படத்துலயும் ஹீரோயினுங்க மட்டும் பாஸ்மார்க் வாங்கிடுதுங்களே? //

ஹீரோவுக்கெல்லாம் மார்க் போடுறதில்லை ப.ரா...

// ஓ இது விளிம்புநிலை மனிதர்களின் வலிகளை, வாழ்வை இயல்பா சித்தரிக்கும் யதார்த்த படமா....... ஆளை விடுங்கடா சாமி.......! //

பரா இது அப்படிப்பட்ட படம் இல்லை... ஒருவேளை அப்படி இருந்திருந்தால் உலகப்படம் என்று கொண்டாடியிருப்பார்களோ என்னவோ...?

Philosophy Prabhakaran said...

@ இரா.மாடசாமி
// மிக நிதர்சனமான உண்மை நண்பரே!. குடிமகன்கள் குடிப்பதற்கு ஏதாவது காரணம் வேண்டும் . அதற்காகவே எதாவது ஒன்றை சொல்லி குடிக்கிறார்கள் . விமர்சனம் அருமை!
வாழ்த்துக்கள் ! //

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...

Philosophy Prabhakaran said...

@ ananthu
// பிரபா பொல்லாங்கு பற்றிய உங்களின் விமர்சனத்தை பார்த்த பிறகு நான் படத்திற்கு போகவில்லை , அதேபோல இந்த படமும் நன்றாக இருப்பது போல தான் எல்லோரும் எழுதுகிறார்கள் , ஏனோ எனக்கு போகவேண்டுமென்று தோன்றவில்லை ... இயக்குனரின் முயற்சிக்காக ஒரு முறை பார்க்கலாம் என்று நினைக்கிறேன் ... //

அனந்து... பொல்லாங்கு படத்திற்கு என்னால் ஒரு டிக்கெட் இழப்பு என்று நினைக்கும்போது சற்றே கவலையாக இருக்கிறது... அது ஒன்றும் சூரமொக்கை இல்லை... நீங்கள் பார்த்திருக்கலாம்...

பழமைபேசி said...

தயிர் கடை
தயிர்க்கடை
===========
வாரம்+சந்தை = வாரச்சந்தை
==========================
மதுபானம் கடை
மதுபானக்கடை

Unknown said...

பட விமர்சனத்தில் தமிழ் எழுத்துமுறை பற்றிய விவாதத்தை எடுத்து வைத்து, படத்தை எடுத்த இயக்குனரை விட எழுதிய பிரபா அதிக பாராட்டைப் பெறுகிறார்.

யுவகிருஷ்ணா said...

எழுத்தாளர் ஞாநி மதுபான கடைக்கு ‘க்’ வரும் என்கிறார். நியூமராலஜி பார்த்து ‘க்’ஐ தூக்கிவிட்டார்கள் என்பது அவரது சந்தேகம்.

ananthu said...

தங்களை பற்றி வலைவ்ஹஅரத்தில் குறிப்பிட்டுள்ளேன் http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_8.html
பார்க்கவும்

ananthu said...

வலைச்சரம்

MaduraiGovindaraj said...

மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்!