8 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 08052017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த குறிப்பிட்ட ஒயின்ஷாப்பானது விளாத்திகுளத்திலிருந்து வெளியாகிறது !

லக்கி பாட் போல என்னுடைய ஹார்ட் டிஸ்கில் மெளஸை விட்டுத் துழாவியதில் ‘வாலு’ படம் சிக்கியது. ஹன்சிகாவை பார்க்கும்வரை வாலு என்பது சிம்புவும், நயன்தாராவும் பேசிக்கொண்டே இருக்கும் படம் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இது வேற ஆளு என்று அப்புறம்தான் தெரிந்தது. வாலுவில் எனக்கு பிடித்திருந்த ஒரு விஷயம், கதாபாத்திரங்களின் தன்மையை நம் மனதில் நிலை நிறுத்தும் யுக்தி. குறிப்பாக வில்லனுடையது. நடிகருடைய பெயர் ஆதித்யா. கன்னட நடிகர் போலிருக்கிறது. ஒரு மாதிரி கோனையாக ‘ரஜினி’ தமிழ் பேசுகிறார். படத்தில் ஆதித்யா ஒரு தொழிலதிபர். ரெளடி / தாதா என்று சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் செய்யும் எந்த கெட்ட காரியத்தையும் ஆதித்யா செய்யவில்லை. மேலும் தமிழ் சினிமாக்களில் ரெளடி கம் தொழிலதிபர் என்றாலே ஏராளமான பணத்தை வைத்துக்கொண்டு அதனை செல்லுமிடமெல்லாம் வாரி இறைப்பவர். ஆதித்யா அப்படியில்லை. அவருடைய மண்டியிலிருந்து வாழைப்பழங்களை வண்டியேற்றும் போது ஊழியர் ஒருவர் ஒரு பழத்தை கீழே தவறவிடுகிறார். ஆதித்யா அவரை அழைத்து ஒரு பழம் நான்கு ரூபாய் என்றும், கவனமாக எடுத்துச்செல்லுமாறும் எச்சரிக்கிறார். இன்னொரு காட்சியில், வட்டியில் பணம் கடன் கொடுக்கும் ஆதித்யாவை சந்திக்க கடனாளியின் மனைவியான மந்த்ரா வருகிறார். எதுவாக இருந்தாலும் தன்னிடம் கேட்குமாறும், எப்போது கூப்பிட்டாலும் வருவதாகவும் குழைகிறார். ஆதித்யா ஸ்லிப் ஆகாமல் அவருடைய காரை பறிமுதல் செய்துகொண்டு அவரை ஆட்டோவில் வழியனுப்பி வைக்கிறார். (ஒருவேளை தேடினேன் வந்தது காலத்து மந்த்ரா வந்திருந்தால் ஓகே சொல்லியிருப்பாரோ ?). இதுபோல ஆதித்யா ஒவ்வொரு ரூபாயின் மீதும் கவனமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் காட்டப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால் வில்லன் ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என்று படபடப்பாக காத்திருந்தாலும், கடைசி வரை தன்னுடைய தன்மையை வெளிக்காட்டுவதைத் தவிர எதுவும் செய்யவில்லை. அதேபோல சிம்புவின் கதாபாத்திரமும் வீரனெல்லாம் இல்லை, ஆனால் கோபம் வந்துவிட்டால் எத்தனை பேரை வேண்டுமானால் த்வம்சம் செய்துவிடுவார் என்று காட்டப்படுகிறது. 

சிம்புவுடைய ஆழ்மனதிற்குள் சென்று யாரோ அவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று நம்ப வைத்திருக்கிறார்கள். குறிப்பாக எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் இந்த வரிசையில் அடுத்து அவர்தான் என்பதை மீண்டும் மீண்டும் அவருடைய படங்களில் வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறார். தற்போதைய தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்கள் என்றால் ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டும்தான். சிவகார்த்திகேயன் கூட இன்னும் நான்கைந்து வருடங்களாகும். ஆனால் சிம்பு தற்போதே தானொரு மாஸ் நடிகர் என்கிற மிகுபுனைவுலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். சிம்பு தன்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் சினிமா ரசிகர்களைப் பற்றிய அவருடைய எண்ணம் கவலைக்குரியதாக இருக்கிறது.

விநாயக முருகனின் ‘நீர்’ நாவலை படித்தேன். எழுத்தாளரின் நான்காவது நாவல். இவற்றில் வலம் தவிர மற்ற மூன்றையும் படித்தாயிற்று. நீர் என்பது சென்னை செம்பரம்பாக்க புகழ் வெள்ளத்தைப் பற்றியது. 

நீரை வாசிக்கும்போது எனக்கு இருவேறு உணர்வுகள் தோன்றின. ஒன்று, இந்நாவல் சென்னை பெருவெள்ளத்தைப் பற்றிய ஒரு ஆவணம் போல இருக்கிறது. புத்தகத்தில் உள்ள சில விஷயங்கள் சென்னை அல்லாதோருக்கு கொஞ்சம் அதிகப்படியாகக் கூட தோன்றியிருக்கலாம். இப்படியெல்லாம் நடந்திருக்காது என்று நினைத்திருப்பார்கள். ஆனால் வெள்ளச் சமயத்தில் நானே கூட நிறைய துயரச் செய்திகளை கேள்விப்பட்டிருக்கிறேன். நீர் நாவலின் குறைபாடு என்று எனக்குத் தோன்றுவதும் ஆவணம் போல இருக்கும் அதன் நடைதான். தட்டையான நாவல். கிட்டத்தட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஐ.டி. நிறுவன ஊழியரின் மூன்றுவார டைரிக்குறிப்பு போலவே இருக்கிறது. எப்படியெல்லாம் அடித்து ஆடவேண்டிய களம் வி.மு.விற்கு கிடைத்திருக்கிறது. எதையும் புனையக்கூட அவசியமில்லை. நடந்த விஷயங்களை அதன் பின்புலத்தோடு சுவாரஸ்யமாக எழுதியிருந்தாலே செமத்தியாக இருந்திருக்கும். வி.மு.விடம்  சுவாரஸ்யம் என்றால் அது எங்கேயோ திருச்சி பக்கம், திண்டுக்கல் பக்கம் இருக்கு என சொல்லிவிடுவார் போலிருக்கிறது. நாவல் என்றால் கொஞ்சம் செக்ஸ் கலக்க வேண்டுமென யாரோ ஒரு பிரகஸ்பதி வி.மு.வுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் சந்திரா என்றொரு கதாபாத்திரத்தை தண்டத்திற்கு உருவாக்கி உலவ விட்டிருக்கிறார். என்னதான் கடைசியில் பெண்ணின் காமத்தையும், நீரின் தன்மையையும் ஒப்பிட்டு ஜல்லியடிக்க முயன்றாலும், நாவலில் இருந்து சந்திரா கேரக்டரை உருவியிருந்தால் அட்லீஸ்ட் இருபது பக்கங்களுக்கு உண்டான மரத்தையாவது பாதுகாத்திருக்கலாம்.

உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா விருதுகள் நிகழ்வில் ஒரு பார்வையாளனாக கலந்துக்கொண்டேன். சு.வி. நிகழ்வில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. ஐந்தரை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் முதல் அமர்வில் யுவா, அதிஷா பேச்சு இருந்ததாலும் நேரத்திற்கு செல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். அலுவலகத்தில் முன்பே பர்மிஷன் கேட்டிருந்தாலும் மேனேஜரிடம் இருந்து லாவகமாக தப்பித்து கிளம்புவதற்குள் மணி ஐந்தரையாகி விட்டது. ஸ்பென்சரில் இருந்து கவிக்கோ மன்றம் குறைந்த தொலைவுதான் என்றாலும் பேருந்து ரூட் தெரியாமல், கண்டக்டரிடம் திட்டு வாங்கி இறங்கி ஏறி, ஒரு கி.மீ. நடந்து நிகழ்விடத்திற்கு சென்றபோது மணி ஆறு. அவசர அவசரமாக உள்நுழைந்து, முதல் அமர்வு முடிந்துவிட்டதா என்று பின்சீட்டு ஆசாமியைக் கேட்டால் இன்னும் தொடங்கவே இல்லை என்று வயிற்றில்  பியரை வார்த்தார். சற்று நேரம் கழித்து நிகழ்ச்சி தொடங்கியது. நான் எதிர்பார்த்தது போலவே செளம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செளம்யாவின் தமிழை கேட்கும்போது ழ, ள, ல உச்சரிப்பு வேறுபாடுகள் அத்தனை அழகாக இருக்கிறது. ஆனால் செளம்யாவைப் பார்த்தால் அவருடைய தமிழ் உச்சரிப்பு ஒன்றும் அவ்வளவு அழகில்லை என்று தோன்றுகிறது. நல்ல கவிதைகளை படைப்பது மட்டுமல்ல, நல்ல கவிதைகளை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவதிலும் கூட மனுஷ்யபுத்திரன் வல்லவராக இருக்கிறார். ஆனால் செளம்யா ஒரு ட்விஸ்ட் கொடுத்தார். சில காரணங்களுக்காக, முதல் அமர்வையும், இரண்டாம் அமர்வையும் மாற்றிப் போட்டுவிட்டார்கள். முதல் அமர்வில் மட்டும் அமர்ந்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாமென்ற நினைப்பில் மண். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கதாகாலட்சேபம் நடத்த ஆரம்பித்தார்கள்.  பிரபு காளிதாஸ் வேட்டைக்கு தயாராகும் ஒரு சிங்கத்தினை போல பதுங்கி, பதுங்கி புகைப்படங்களை சுட்டுத்தள்ளுகிறார். மற்ற புகைப்படக்கலைஞர்களைப் போல டேபிளின் மீது ஏறி நின்று ரெளடித்தனம் செய்வது, விழா அரங்கின் மத்தியில் நின்றுக்கொண்டு யாரையும் பார்க்க விடாமல் செய்வது, சார் கொஞ்சம் சிரிங்க, சார் ஒரு ரெண்டு பேர் இந்தப்பக்கம் வந்து நில்லுங்க என்று பாவனையாளர்களை டார்ச்சர் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடாத புகைப்படக் கலைஞரை முதல்முறையாக கண்டேன். 

மேடையில் பேசும்போது வார்த்தைகளை எவ்வளவு கவனமாக கையாள வேண்டும் என்று தமிழ்மகன் பேசியபோது தெரிந்துக்கொண்டேன். இணைய விருது பெற்றவர்களைப் பற்றி பேச வந்த இரா.முருகன் அவர்களைப் பற்றி பேசாமால் ராயர் காப்பி கிளப் காலத்து பழங்கதைகளை பேச ஆரம்பித்துவிட்டார். எழுத்தாளர் சுஜாதாவின் சித்தப்பா மகள் ஒருவர் அவர்களுடைய சிறுவயது வாழ்க்கையைப் பற்றி பேசியது நெகிழ்வாக இருந்தது. சாரு நிவேதிதா பேசும்போது சுஜாதா வாசகர்கள் பெரும்பாலும் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் படித்திருக்க மாட்டார்கள் என்றார். குற்ற உணர்வு எழுந்தது. நான் கணையாழியின் கடைசிப் பக்கங்களை துண்டு துண்டாக கொஞ்சம் வாசித்திருக்கிறேன். முழுமையாக வாசித்ததில்லை. நட்சத்திர கலை விழாக்களில் கமலையும், ரஜினியையும் கடைசியாக பேச வைப்பது போல யுவாவும், அதிஷாவும் கடைசியாக பேசினார்கள். ஆனால் நேரம் காரணமாக இருவரும் சுருக்கமாக முடித்துக்கொண்டது போலிருந்தது. திருமதி. சுஜாதா நன்றியுரை கூறி முடித்தபோது மணி ஒன்பதரை. 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

ராஜி said...

சிம்பு படம்லாம் பார்க்குற அளவுக்கு பொறுமை இருக்கா