24 July 2017

பிரபா ஒயின்ஷாப் – 24072017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சுஜாதாவின் நேர்காணல்கள், விமர்சனங்கள், கட்டுரைகள் கலந்து கட்டிய தோரணத்து மாவிலைகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து இரண்டு புதிய சொற்பதங்களை கற்றுக்கொண்டேன். அவருடைய வாசகர்களுக்கு பரிட்சயமானவைதான். அவற்றிற்கு என்று ஒரு பெயர் இருப்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

முதலாவது, யுஃபொனி (EUPHONY). சுஜாதா, போன் செய்தான் என்பதை போனினான் என்பதுபோல அவ்வப்போது சில புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்தினார். இதன் உடனடி பலன் என்பது வார்த்தை விரயத்தை தவிர்ப்பது. இது குறித்து நேர்காணல் செய்பவர் கிண்டலாக கேட்கிறார். இப்படியே போனால் இட்லித்து, சாம்பாரித்து விட்டு ஆபீஸினான் என்று எழுதுவீர்கள் போலிருக்கிறதே ? இதற்கான பதிலில் யுஃபொனி பற்றி குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. வார்த்தையின் ஒலி காதுகளில் நாராசமாக ஒலித்தால் அதனை வாசகர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்கிறார். போனினான் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் ஏதோ ஒரு வகையில் அதன் ஒலி நமது காதுக்கு தகுந்தபடியும், எளிதாக புரிந்துக்கொள்ளும்படியும் இருப்பதால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. மேலும் தமிழிலேயே போனினான் என்கிற சொல் கம்ப ராமாயணத்திலும், கந்த புராணத்திலும் வருகிறது.

இரண்டாவது, கேடலாகிங் (CATALOGUING). ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது அதன் பிராண்ட் பெயரை குறிப்பிட்டு எழுதுவது. உதாரணமாக ஸ்கூட்டரில் வந்தான் என்பதை லாம்ப்ரெட்டாவில் வந்தான் என்று எழுதுவது. இதில் இரண்டு, மூன்று விஷயங்கள் இருக்கின்றன. முதலில், பிராண்ட் பெயரை எழுதுவதில் ஒரு கிக் இருக்கிறது. குடித்துக்கொண்டிருந்தான் என்பதை விட ஓல்ட் மாங் அடித்துக்கொண்டிருந்தான் என்பதில் கிக் கூடுதல். இரண்டாவது, கேடலாகிங் வழியாக கதாபாத்திரத்தின் ரசனை, நிதி நிலைமை மற்றும் கதை நடைபெறும் காலகட்டம், கதை சார்ந்த சமூகத்தின் கலாச்சாரம் என்று நிறைய விஷயங்களை சிக்கனமாக சொல்லிவிட முடிகிறது. சுஜாதாவின் சில கதைகளிலேயே படித்த, மேட்டிமை மனோபாவப் பெண் என்றால் ஃபெமினா படிப்பதாக எழுதியிருக்கிறார். இதன்மூலம் நாம் அந்த கதாபாத்திரம் ஆங்கிலம் சரளமாக படிக்கத் தெரிந்த பெண், நவநாகரீகமான பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறோம். மேலும் அக்காலத்தில் ஃபெமினா என்ற பத்திரிக்கைக்கு இருந்த மரியாதையையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. 

புகை பிடிப்பதை எடுத்துக்கொண்டால், காஜா பீடி குடித்தான் என்றால் அவனது நிதி நிலைமை மோசம் என்று பொருள். சிஸர்ஸ் என்றால் சுமார். கிங்ஸ் என்றால் ஆள் வெயிட் என்று புரிந்துக்கொள்ளலாம். இப்போது ஐடி ஊழியர்களை எடுத்துக்கொண்டால் தொண்ணூறு சதவிகித புகைப்பாளர்கள் கிங்ஸையே புகைக்கிறார்கள். எனக்கு இந்த கிங்ஸ் என்ற பெயரே நீண்டநாள் பிடிபடாமல் இருந்தது. பெட்டியில் கோல்ட் ஃப்ளேக் என்றுதானே போட்டிருக்கிறது. அது சைஸ் என்று பின்னாளில் தெரிந்துக்கொண்டேன். சில பழைய காலத்து மாமாக்கள் மட்டும் இன்னும் வில்ஸ் நேவி கட் (அதுதான் கெத்து என்று நினைத்துக்கொண்டு) புகைத்துக்கொண்டிருக்கிறார்கள். NRI மாமாக்களை பொறுத்தவரையில் எப்போதும் லைட்ஸ் தான். இந்த லைட்ஸ் என்னும் குழலை நாபிக்கமலத்திற்கு பன்னிரண்டு அங்குலம் கீழேயிருந்து இழுத்தால் கூட ஒரு உணர்வும் ஏற்படாது. என்ன எழவுக்கு இதையெல்லாம் குடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வித்தியாச விரும்பிகள் ப்ளாக், குடாங் கரம் போன்றவற்றில் இறங்குகிறார்கள். ப்ளாக், குடாங் கரம் புகைப்பவர்கள் மீது கிங்ஸ் ஆசாமிகளுக்கு எப்போதும் ஒரு காண்டு இருக்கிறது. அதனால் ப்ளாக் / குடாங் கரம் குடித்தால் பிள்ளைப்பேறு வாய்க்காது என்று விபரீதமாக பரப்பிவிடத் துவங்கிவிட்டனர். இதனாலேயே ப்ளாக் / குடாங் கரம் பிஸினஸ் குறைந்துவிட்டது. நம்மாட்கள் ஒரு விஷயத்தை புறக்கணிக்க வேண்டும் என்றால் அதனால் ஆண்மை போய்விடும் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும் !

ராயப்பேட்டை YMCAவில் மூன்றாவது வருடமாக மினி புக் ஃபேர் போட்டிருக்கிறார்கள். வருடாந்திர தை மாத புக் ஃபேருக்கு மத்தியில் இப்படி சின்ன புக் ஃபேர் என்பது தற்காலிக ஆக்ஸிஜன். ஆனால் அரங்கின் வெக்கை தாள முடியவில்லை. வெக்கை என்றால் உள்ளே நுழைந்த ஐந்தாவது நிமிடமே எப்போது வெளியே செல்லலாம் என்று நினைக்கும் அளவிற்கு வெக்கை. அரங்கில் ஏஸி செய்வதற்கான வசதிகள் கூட இருக்கின்றன. விழாக்குழுவினரிடம் தான் வசதியில்லை. வலைப்பதிவுகள் தான் அருகி வருகின்றன என்றால் வலைப்பதிவர்கள் என்ன ஆனார்கள் ? இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சுற்றியும் ஒரு வலைப்பதிவரைக் கூட பார்க்க முடியவில்லை. புக் ஃபேர் என்பது மோனோடோனஸாக தோன்றத் துவங்கிவிட்டது. அதே புத்தகங்கள், அதே பிக் ஃபோர் ஃபார் டூ ஹண்ட்ரட் ஆங்கில நாவல்கள், அதே போட்டோஷாப் பயிற்சி மென்பொருள் (இப்ப நான் மூக்கை பெருசாக்கப் போறேன்), அதே கண்மணி பாப்பா பாடல்கள், அதே குரான் இலவசம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும், அதே பொன்னியின் செல்வன் மலிவு விலை, அதே மணிமேகலை பிரசுரம், அதே நக்கீரன். இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் புக் ஃபேர் செல்வதையே நிறுத்திவிடுவேனா என்று அச்சமாக இருக்கிறது. ஒரேயொரு ஆறுதல் ஒவ்வொரு வருடமும் என்னுடைய சிலபஸிற்கு உட்பட்டு சுமார் இருபது புதிய வெளியீடுகள் வருவதுதான். இம்மாதம் 31ம் தேதி வரை புக் ஃபேர் நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

விக்ரம் – வேதா ! முன்னோட்டம், விளம்பர வடிவமைப்பு, நிறத்தொனி எல்லாமே ஈர்ப்புடையதாக இருந்தன. ஒருவேளை படம் தரை மொக்கை என்று எல்லோருமாக சேர்ந்து தீர்ப்பு எழுதியிருந்தால் கூட புஷ்கர் – காயத்ரிக்காக பார்த்திருப்பேன். அவர்களுடைய பாணியின் ரசிகன் நான் ! படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே செமத்தியாக இருக்கப் போகிறது என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது. தங்களுடைய முந்தைய இரண்டு படங்களிலிருந்த க்வெர்க்கி அடையாளங்களை எல்லாம் துறந்துவிட்டு சீரியஸாக படம் எடுத்திருக்கிறார்கள். 

படத்தின் முதல் பலம் காஸ்டிங். ஒரு பக்கம் மாதவன், இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி அதகளம் செய்திருக்கிறார்கள். கொஞ்ச நேரமே வந்தாலும் ஷ்ரதா தொந்தரவு செய்கிறார். அப்புறம் சின்னச் சின்ன வேடங்களில் நடித்த அத்தனை பேரும் பொருத்தம். சேட்டா மட்டும் கொஞ்சம் உறுத்தல். இரண்டாவது பலம் திரைக்கதை. ரஜினி – கமல், அஜித் – விஜய் போன்ற பெருந்தலைகள் நடிக்க வேண்டிய ஸ்க்ரிப்ட் சார் இது ! படத்தின் பிற்பகுதிக்கான குறிப்புகளை துவக்கத்திலேயே துருத்தாமல் கொடுத்துவிட்டு, பார்வையாளர்களுக்கு புதிர் போட்டு விடுவிக்கும் அந்த பாணி அபாரம். மூன்றாவது பலம் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் கலையலங்காரம். விஜய் சேதுபதிக்காக போட்ட அந்த தனனனன னா பின்னணியிசை படம் பார்த்ததிலிருந்து மனதிலிருந்து அகல மறுக்கிறது. சைமன் இறப்பின்போது வரும் இசைத்துணுக்கு சிறப்பு. ஒட்டுமொத்தமாகவே விக்ரம் வேதாவில் ஒளிப்பதிவாளரின் பங்கு மகத்தானது. சுமாராக இருக்கும் ஷ்ரதாவை க்யூட்டாக தெரியும்படி செய்தது கூட ஒளிப்பதிவாளரின் வித்தைதான். நெஞ்சாத்தி பாடலில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் கலையலங்காரம் மூவரும் சேர்ந்து ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

பொதுவாக விமர்சகர்கள் சுமாரான படங்களை ஒருமுறை பார்க்கலாம் என்பார்கள். விக்ரம் வேதா குறைந்தது இரண்டு முறை பார்க்க வேண்டிய படம். அதனாலேயே குடும்பத்தினர் அழைத்தபோது ஆசையாக ஓடினேன். ஆனால் படம் துவங்கி இரண்டு நிமிடங்களில் நான் பெற்ற வேதாளம் வெளியே போக வேண்டுமென அடம்பிடிக்க அதனை தோளில் சுமந்துக்கொண்டு, இரண்டரை மணிநேரம் தியேட்டர் கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டு அதன் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும்படி ஆகிவிட்டது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

ஸ்ரீராம். said...

நான் சீனியர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றே மூன்று வருடங்கள் ஆகிறது! விக்ரம் வேதா நான் கூட பார்க்கவேண்டும்! சுஜாதா படைத்த வார்த்தைகளில் நான் அடிக்கடி உபயோகிப்பது "அபுரி" (புரியவில்லை என்கிற அர்த்தத்தில்)

விமல் ராஜ் said...


//ஆனால் படம் துவங்கி இரண்டு நிமிடங்களில் நான் பெற்ற வேதாளம் வெளியே போக வேண்டுமென அடம்பிடிக்க அதனை தோளில் சுமந்துக்கொண்டு, இரண்டரை மணிநேரம் தியேட்டர் கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டு அதன் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும்படி ஆகிவிட்டது.

ஹா..ஹா..ஹா..

Anonymous said...

நான் பெற்ற வேதாளம் வெளியே போக வேண்டுமென அடம்பிடிக்க அதனை தோளில் சுமந்துக்கொண்டு, இரண்டரை மணிநேரம் தியேட்டர் கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டு அதன் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும்படி ஆகிவிட்டது. - Praba Touch