28 August 2017

பிரபா ஒயின்ஷாப் – 28082017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வார ஒயின்ஷாப் முழுவதும் விவேகம் என்பதை எச்சரித்துவிடுகிறேன். அலுப்பாக இருந்தால் நேரடியாக நான் ஆரம்பம் படம் வந்தபோது எழுதியதையே படித்துக் கொள்ளலாம்.

விவேகத்தைப் பற்றிய என் கணிப்புகள் சில பிசகிவிட்டன.

1. ஏ.கே.யின் சர்வைவல் படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் என்று நினைத்திருந்தேன். காரணம் ரிலீஸுக்கு முன்பு டீஸர், டிரைலர், போஸ்டர்களில் சர்வைவல் பகுதி முன்னிறுத்தப்பட்டிருந்தன. படத்தில் அது வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டும் வருகிறது.

2. காஜல் அகர்வாலுக்கு ஒரு மாண்டேஜ் பாடல் உட்பட பத்து நிமிடக்காட்சிகள் மட்டும் இருக்கும் என்று யூகித்திருந்தேன். அதுவும் பொய்த்துவிட்டது. மாறாக அத்துரோகத்தை அக்ஷராவுக்கு நிகழ்த்தியிருக்கிறார்கள். (காஜலின் வேடம் பற்றி பிற்பகுதியில் பார்க்கலாம்).

மற்றபடி படம் நன்றாக இருக்காது என்ற என் கணிப்பில் எந்த பிசகுமில்லை. எனக்கு பிரச்சனையில்லை. நான் கொடுத்த 47 ரூபாய் 20 பைசாவிற்கு தேவி தியேட்டர் ஏஸியில் இளைப்பாறியதற்கும், வீணா இன் வியன்னா கேட்டதற்கும், காஜல் அகர்வாலை பார்த்ததற்கும் சரியாக போய்விட்டது. மற்றவர்கள் படம் பார்ப்பதற்கு முன் ஒருமுறை யோசித்துக் கொள்வது நல்லது.

கடந்த நான்கு நாட்களில் விவேகத்தை பல தரப்பினரும் போதுமான அளவிற்கு கழுவி ஊற்றிவிட்டார்கள். அதனால் படத்தின் பாஸிடிவ் விஷயங்களை முதலில் பார்க்கலாம்.

1. அக்ஷரா ஹாஸனின் அறிமுகம் மற்றும் அறிமுகத்திற்கு முன்பு வரும் ஃபேஸ்மேக்கர் டிராக்கிங், ஹோலோகிராம் காட்சிகள்.
2. அஜித்துக்கும் காஜலுக்கும் இடையே உள்ள அன்னியோன்யம். காதலாட பாடல். மோர்ஸ் கோட். அதை க்ளைமாக்ஸில் கனெக்ட் செய்த உத்தி.
3. இரண்டாம் பாதியில் அஜித்துக்கும் விவேக் ஓபராய்க்கும் நடக்கும் ஒரு மனக்கணக்கு விளையாட்டு.

இனி நெகடிவ் விஷயங்கள் -

1. ஒரு படத்திற்கு எப்போதும் ஆரம்பம், முடிவு, இடைவேளைக்கு முந்தைய காட்சி மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். நடுவில் உள்ள காட்சிகள் மொக்கையாக இருக்கலாம் என்றில்லை. இம்மூன்றும் சரிவர அமைந்தால் மற்றவை மறக்கப்படும், மன்னிக்கப்படும். விவேகத்தின் முதல் காட்சி ஒரு அபத்தக்களஞ்சியம். தமிழே தெரியாத போர் வீரர்களிடம் அஜித் தமிழில் நீண்ட, அன்னாயிங் வசனமொன்றை பேசுகிறார். அத்தனை பேரும் துப்பாக்கிகளை அஜித் மீது குறிவைத்து காத்திருக்கிறார்கள். நான்கைந்து ஹெலிகாப்டர்கள் வேறு பறக்கின்றன. அத்தனையும் மீறி தல பாலத்திலிருந்து தலைக்குப்புற டைவ் அடித்தபடியே வீரர்களை கைத்துப்பாக்கி கொண்டு சுட்டு வீழுத்துவதும், அவர்கள் பதிலுக்கு சுடும் குண்டுகள் ஒன்று கூட தோழர் மீது படாததும் அப்பப்பா ! அந்த ஒரேயொரு காட்சி மட்டும் போதும் விவேகத்தை வச்சு செய்ய !

2. ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்கள். ஆனால் அஜித்துக்கு இப்படத்தில் சறுக்கலே கிடையாது. முதுகில் குத்தினாலொழிய அவரை யாராலும் வீழ்த்தவே முடியாது. அக்ஷன் படங்களைப் பொறுத்தவரையில் வில்லன் ஹீரோவுக்கு நிகரான பலம் பொருந்தியவனாக இருக்க வேண்டும். தர்மத்தினை வாழ்வுதனை சூது கொஞ்சம் கவ்வ வேண்டும். இறுதியில் தர்மம் வெல்ல வேண்டும். அப்போதுதான் சுவாரஸ்யம் இருக்கும்.

3. எரிச்சலூட்டும் வசனங்கள். எப்போதாவது தத்துவம் சொன்னால் பரவாயில்லை. எப்போதுமே தத்துவம் சொல்லிக்கொண்டே இருந்தால். வசனங்கள் எழுதியதும் சிவா என்றே நினைக்கிறேன். அவர் உடனடியாக மணிமேகலை பிரசுரத்தை தொடர்பு கொண்டு அவர் எழுதிய பொன்மொழிகள் புத்தகத்தை பிரசுரிக்கச் சொல்லி கேட்கலாம். இப்போது வேலைகளை தொடங்கினால் ஜனவரி புத்தகக்காட்சியில் வெளியிட்டுவிடலாம்.

4. படத்தின் கதை இதுதான் என்பதையே பார்வையாளர்களுக்கு பொறுமையாக சொல்லப்படவில்லை. குத்துமதிப்பாக விவேக் ஓபராய் கெட்டவருப்பா, அஜித் நல்லவரு என்று நாமாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. திடீரென ஒரு காட்சியில் ஷேடோ கவர்ன்மென்ட், சீக்ரெட் சொஸைட்டி என்கிறார்கள். ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஒதுக்கி (துப்பாக்கியில் வரும் ஸ்லீப்பர்செல்ஸ் விவரணை போல) அதனைப்பற்றி இன்னும் விலாவரியாக காட்டியிருக்கலாம்.

5. இறுதிக்காட்சி. முன்பே சொன்னதுபோல கிளைமாக்ஸ் என்பது ரசிகர்களின் மனநிலை மீது முக்கிய பங்கு வகிக்கிறது. விவேகத்தை எடுத்துக்கொண்டால் அஜித் எப்படியும் அந்த சதியை முறியடித்துவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் விவேக் ஓபராய் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவ்விடத்தை வந்தடைகிறார் என்பதுடன் படம் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு ஒரு ஃபைட் சீன் என்பது கூட சம்பிரதாயமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் காஜல் பாட்டு பாடுவதெல்லாம் ரசிகர்களின் சோதித்துப் பார்க்கும் சாடிஸ மனப்பான்மை.

இவை போக பொதுவாக சில விஷயங்கள்,

6. பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கும் இயக்குநர்கள் தங்கள் பேட்டிகளில் தவறாமல் ஒரு வாக்கியத்தை சொல்வார்கள். அவருடைய ரசிகர்களுக்காக சில விஷயங்களை சேர்த்திருக்கிறோம் என்பார்கள். தியேட்டரில் ரசிகர்கள் விசிலடித்துப் பார்க்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் அவர்கள் அப்படி செய்ய வேண்டுமென்றே வலிந்து சில காட்சிகளை, செய்கைகளை திணிப்பது நல்லதல்ல. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அஜித் மெதுவாக திரும்பிப் பார்ப்பது, நடந்து வருவது, சம்பந்தமே இல்லாமல் சக்ஸஸ் மீட் வைப்பவர்களை நக்கல் விடுவது, பைக்கில் வீலிங் செய்வது, சட்டையைக் கழட்டுவது என்று மொத்தமாக ஒரு இருபது காட்சிகளை படத்தில் வைத்துவிடுகிறார்கள். வைத்துவிட்டு தெறிக்குது, ஒழுகுது என்று வடை சுடுகிறார்கள்.

7. பெரிய பட்ஜெட், கடின உழைப்பு ஓகே. ஆனால் நிஜமாகவே இவ்வளவு பெரிய பட்ஜெட் இப்படத்திற்கு தேவையா ? இப்படத்திற்கு இத்தனை தேசங்களில் படம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லையே ? சர்வைவா பாடலில் குறுக்கும் நெடுக்குமாக ஹெலிகாட்பர்கள் தேவையில்லாமல் அட்மாஸ்பியரில் பறக்கின்றன. ஒரு காட்சியில் விரையும் மெட்ரோ ரயில்களுக்கு மத்தியில் சண்டை போடுகிறார்கள். அஜித் ஏன் ஸ்வாமி சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் ? யாராவது கேட்டார்களா ?

உடனடியாக அஜித் சில விஷயங்களை நிறுத்துவது நல்லது. அவருக்கு.

1. கூலிங் கிளாஸ்.
2. சால்ட் அண்ட் பெப்பர்
3. நடப்பது.
4. சுடுவது.
5, பைக் சேஸிங் காட்சி.
6. முதுகில் குத்துப்படுவது.
7. எரிக்க எரிக்க எழுந்து வருவது.
8. ஸ்லோ மாடுலேஷன் டயலாக் டெலிவரி.
9. வில்லனால் / அல்லக்கைகளால் புகழப்படுவது.

மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அஜித் செய்தபோது ரசித்தோம். ஆனால் அதையே செய்துக்கொண்டிருந்தால்... ருசிக்காக இரண்டு இட்லி கூடுதலாக சாப்பிடலாம். ஐம்பத்தி ஏழு கிலோ இட்லியெல்லாம் முடியாது ! அஜித்தின் சில முந்தைய படங்களில் இதேபோன்ற காட்சிகள் வந்தால் கூட அதையும் மீறி ஒரு ரசிகனாக அக்காட்சிகள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும். இப்போது அந்நிலை கடந்தாயிற்று. ஆங்கிலத்தில் கூஸ்பம்ஸ் என்பார்களே அது ஒட்டுமொத்த விவேகத்தில் ஒருமுறை கூட எனக்குத் தோன்றவில்லை. எனக்குள் இருக்கும் அஜித் ரசிகன் கொஞ்ச கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறான். ஒரேயொரு ஆறுதல். முன்பெல்லாம் அஜித் படங்கள் என்றாலே துணை கதாபாத்திரங்கள் எல்லாம் ‘தல’ என்ற வார்த்தையை வைத்து எத்தனை விதமான வாக்கியங்கள் அமைக்கலாம் என்ற சொல் விளையாட்டை விளையாடுவார்கள். நல்லவேளையாக அது விவேகத்தில் இல்லை.

ஒரு விவேக் நகைச்சுவை காட்சியில் அவரது மனைவியாக வருபவர் விவேக் ஓபராயுடன் மட்டும் ஒருமுறை நடித்துவிட வேண்டும் என்று விளையாட்டாய் சொல்வார். அந்த துணை நடிகை மனம் தளராமல் காத்திருந்தால் அவருடைய ஆசை கூடிய விரைவில் நிறைவேறலாம். அந்த அளவிற்கு ஒரு சொத்தை வில்லனாக விவேக் ஓபராய். அதுவும் பட ரிலீஸிற்கு முன்னால் குழுவினர் அளித்த பேட்டிகளில் எல்லாம் சொல்லிவைத்த மாதிரி, அவரை வில்லன் என்று சொல்ல முடியாது. ஒரு முக்கியமான காதாபாத்திரம் என்று சொல்லியிருந்தார்கள். சஸ்பென்ஸ் காயத்ரி வைக்கிறார்களாம். 

விவேகத்தின் சந்தோஷமான விஷயம் – காஜல் அகர்வால். (காஜல் என்னோட சந்தோஷம்ன்னு சொல்றத விட என்னோட சந்தோஷமே காஜல்தான்னு சொல்லலாம்). தமிழில் காஜல் அகர்வால் நடித்ததிலேயே சிறப்பான கதாபாத்திரம் என்றால் அது விவேகம் படத்தின் யாழினிதான். பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்றாலே அரைக்கிறுக்காக காட்டுவார்கள். காஜலும் பெரும்பாலான படங்களில் ஒரு முட்டாள் காதலியாகத்தான் வந்திருக்கிறார். குறிப்பாக, ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற குப்பை தலைவியை திட்டமிட்டு பங்கம் செய்தது போலிருந்தது. ஒப்பீட்டளவில் மாற்றான் கொஞ்சம் பரவாயில்லை. விவேகத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பம் முதல் இறுதிவரை அர்த்தமுள்ள கதாபாத்திரம் காஜலுக்கு கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 comments:

Anonymous said...

அவரை வில்லன் என்று சொல்ல முடியாது. ஒரு முக்கியமான காதாபாத்திரம் என்று சொல்லியிருந்தார்கள். சஸ்பென்ஸ் காயத்ரி வைக்கிறார்களாம். - Very nice...

Vathiyar Paiyan said...

Good Good.....

Anonymous said...

Good Good

Ponchandar said...

சஸ்பென்ஸ் காயத்ரி வைக்கிறார்களாம். ஹ..ஹ...ஹ....ஹா...ஹா....... ! ! !

ARUN said...

அந்த 8 விஷயத்தையும் நிறுத்தி விட்டால் அப்புறம் அஜித் நடிக்கவே முடியாதுங்க.. ����������