29 January 2018

பிரபா ஒயின்ஷாப் – 29012018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இம்முறை சென்னை புத்தகக் காட்சி செலவுகளுக்கென அவ்வப்போது சிறுகச்சிறுக சேர்த்து ஐயாயிரம் ரூபாய் வைத்திருந்தேன். ஆனால் கடைசியில் மொத்த பர்ச்சேஸும் அதில் பாதியிலேயே முடிந்துவிட்டது. தேவையில்லாத புத்தகம் ஒன்று கூட வாங்கவில்லை. சொல்லப்போனால் இரண்டே பதிப்பகங்களில் என் கொள்முதல் முடிந்துவிட்டது. பு.கா.வில் வாங்கியவற்றின் பட்டியல்.

**********

ஏ.கே.செட்டியாரின் குடகு புத்தகத்தை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். செட்டியாரின் எழுத்துநடை எளிமையாக இருக்கிறது. புத்தகத்தின் துவக்கக்கட்டத்தில் ப்ளாக் எதவும் படிக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு யாரெல்லாம் உடன் வந்தார்கள், அவர்கள் என்ன சேட்டை செய்தார்கள், யார் வீட்டில் தங்கினார்கள், அவருக்கு எத்தனை குழந்தைகள், அக்குழந்தைகள் என்னென்ன பணியில் இருக்கிறார்கள் என்று நீள்கிறது. பின்னர் படிப்படியாக குடகர்களின் கலாசாரம், அரசியல், வாழ்வியல் முறைகள், திருமண முறைகள், பண்டிகைகள் என்று விவரிக்கிறார். தோராய கணக்கீட்டின் படி இப்புத்தகம் எழுதப்பட்டு குறைந்தது ஐம்பது வருடங்கள் ஆகியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனை மனதில் வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் குடகர்களின் வாழ்க்கைமுறை வியக்க வைக்கிறது. அக்காலத்திலேயே குடகர்கள் படித்து, நல்ல வேலையில் இருந்திருக்கிறார்கள். ராணுவத்தில் உயர்பதவி வகித்த K.M.கரியப்பா (மற்றும் அவரது மகன் K.C.கரியப்பா) இருவரும் குடகர்கள். இவர்களை தவிர்த்து விளையாட்டு, சினிமா உட்பட பல துறைகளில் குடகர்கள் சாதித்திருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா கூட குடகை பூர்வீகமாக கொண்டவர்தான். குடகர்களின் குடும்பப்பெயர்கள் பெரும்பாலும் கரியப்பா, பெல்லியப்பா, உத்தப்பா என்றோ அப்பையா, திம்மைய்யா, நானய்யா என்றோ இருக்கிறது.

தலைக்காவேரி !
குடகர்களைப் பற்றிய இன்னொரு ஆச்சர்யம், குடகர்கள் பேசும் மொழி தமிழோடு நிறைய இடங்களில் ஒத்துப்போகிறது. நிறைய வார்த்தைகளுக்கு தமிழிலும் குடகிலும் ஒரே பொருள்தான். 

**********

நீண்ட வாரயிறுதியில் இரண்டு உருப்படியான காரியங்கள் செய்தேன். 

முதலாவது, என்னிடமுள்ள அச்சு புத்தகங்கள் அத்தனையையும் முறைப்படுத்தியது. ஏற்கனவே ஓரளவு முறைப்படுத்தித்தான் வைத்திருந்தேன். வீட்டில் புத்தகங்களுக்கென தனியாக அலமாரி எதுவும் இல்லாத காரணத்தினால் ஒரு பத்து, பதினைந்து புத்தகங்கள் தவிர்த்து மற்றவை அனைத்தும் பரணில் தான் இருக்கும். கீழே இருக்கும் பத்து, பதினைந்து சுழற்சி முறையில் மாற்றப்படும். இருப்பினும் திடீரென கடைகளில் ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பார்த்தால் இது நம்மிடம் இருக்கிறதா இல்லையா ? எந்த பெட்டியில் இருக்கிறது ? அப்பெட்டி பரணில் எங்கே இருக்கிறது ? என்றெல்லாம் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் கிழக்கு அரங்கில் சுஜாதாவின் அத்தனை புத்தகங்களையும் ஒருசேர பார்க்கும்போது மேற்கே ஒரு குற்றம் / மேலும் ஒரு குற்றம், அனிதா இளம் மனைவி / அனிதாவின் காதல்கள் போன்ற நூல்களுக்கிடையே பயங்கரக் குழப்பம் ஏற்படுகிறது. தீண்டும் இன்பம் என்கிற சுஜாதா நாவலில் ஒரு பதின்ம வயதுப் பெண் விபத்தாக செக்ஸில் வீழ்கிறாள். ஆதலால் காதல் செய்வீர் என்கிற திரைப்படத்தில் இதேபோல ஒரு பதின்ம வயதுப் பெண் செக்ஸில் வீழ்கிறாள். ஆனால் சுஜாதாவின் மற்றொரு நாவலான ஆதலினால் காதல் செய்வீர் கதை அது கிடையாது. இப்படி நிறைய குழப்பங்கள். எனவே இவற்றையெல்லாம் தீர்க்க, கிட்டத்தட்ட ஒரு லெவல் 5 ப்ராஸஸை தயார் செய்தேன். என்னிடமுள்ள எல்லா புத்தகங்களையும் கீழே இறக்கி ஹாலில் அடுக்கினேன். அவற்றில் ஒரு நூறை மட்டும் நூலகத்திற்கு கொடுத்துவிடலாம் (நூலகத்திற்கு கூட கொடுக்க முடியாதவற்றை எடைக்கு போட்டுவிடலாம்) என்று தனியாக கழித்தேன். மீதமுள்ளவற்றில் என்சைக்ளோபீடியா போன்றவற்றை எல்லாம் எளிதில் எடுக்க முடியாத தூரத்தில் ஒரு உள்பெட்டி. ஏற்கனவே படித்து முடித்தவை அதற்கடுத்த பெட்டி. படிக்க வேண்டும், ஆனால் எப்போதென்று தெரியாது என்பவை அதற்கடுத்த பெட்டி. சுஜாதாவுக்கு தனிப்பெட்டி. அடுத்து சுழற்சி முறையில் இறக்க வேண்டியவை எளிதில் எடுக்கக்கூடிய முன்பெட்டி. மேஜையில் அடுத்து படிக்கப்போகிற பத்து புத்தகங்கள் மட்டும் ! இவையணைத்தையும் எந்தெந்த தலைப்புகள், எந்தெந்த பெட்டியில் இருக்கிறது என்று ஒரு எக்ஸல் ஷீட்டிலும் போட்டு வைத்தாயிற்று. மொத்தமாக இச்செயலை செய்து முடித்ததும் ஒருமாதிரி மனநிறைவாக இருந்தது. 

இரண்டாவது, அமேஸான் கிண்டில் வாங்கியது. வாங்க வேண்டும் என்று சுமார் ஆறு மாதங்களாகவே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல ஆஃபரும், கையில் பணமும் ஒருசேர அமையும் தருணத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்தேன். இரண்டாவது விஷயம் அமையவே அமையாது என்று ஒரு தருணத்தில் புரிந்து, EMIயில் வாங்கிவிட முடிவெடுத்தேன். இப்படி பெரிய திட்டமெல்லாம் போட்டு வாங்கிய கிண்டில் கையில் வந்ததும் கவனித்த முதல் விஷயம் அதன் திரையின் வலது மூலையில் ஒரு சிறிய கீறல். பதறியடித்து அமேஸானை தொடர்புக்கொண்டு, எல்லாம் சுமூகமாக முடிந்து புதிய கிண்டில் நேற்று கைக்கு வந்து சேர்ந்தது. புது மனைவியைப் போல கவனமாக கையாள வேண்டியிருக்கிறது. இங்கே தொட்டால் சிணுங்குவாளோ, அங்கே தொட்டால் கோபித்துக்கொள்வாளோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள இன்னும் கால அவகாசம் தேவையென்று நினைக்கிறேன்.

**********

இவ்வார சரஹா கேள்வி –

உங்களுக்கு வயதாவதை நீங்கள் உணர்கிறீர்களா ? முன்பு நீங்கள் அஜித் படங்களை விரும்பினீர்கள், இப்போது விரும்புவதில்லை (அவர் முன்பைவிட மோசமான படங்களில் நடிப்பதாக நான் நினைக்கவில்லை). உங்களுக்கு வயதாகி விட்டதை நீங்கள் உணர வேண்டும் / ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆம், எனக்கு வயது முப்பது நிறைவடையப்போகிறது.

ஆனால் அஜித்தை ரசிப்பதையும் வயதையும் ஒப்பிடுவதை என்னால் சுத்தமாக புரிந்துகொள்ள முடியவில்லை. அஜித்தை தொடர்ந்து கொண்டாடிக்கொண்டே இருக்கும் அண்ணன் கணேசன் அன்புக்கு என்னைவிட பத்து வயது கூட இருக்கும். அஜித் படங்களை விரும்பினால் இளமையானவர் என்று அர்த்தம் கிடையாது. மாறாக நேரெதிராக வேண்டுமானால் கருதலாம். அதாவது தற்போது வரும் இளம் இயக்குநர்களின் (கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி வகையறா) படங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு இன்னமும் சிட்டிசனில் தலை ஒன்பது கெட்டப்புகள் போட்டார், வரலாறில் அஜித்தின் டிரான்ஸ்ஃபார்மேஷன் சீன் பயங்கரமாக இருக்கும் என்று அங்கேயே நின்றுக்கொண்டிருந்தால் அப்போதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்று கருத்தில் கொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

Anonymous said...

பிரமிட்டில்(Pyramids) இருக்கும் சிலைக்கு கீழே தடை செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி

Ponmahes said...

அருமையான பதிவு....வாழ்த்துகள்...