5 March 2018

பிரபா ஒயின்ஷாப் – 05032018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மருத்துவர் கந்தனின் பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு வெளியான கவிதைத்தொகுப்பு நையாண்டி மேளம். இதன் இரண்டாம் பாகம் கடந்த செவ்வாயன்று திருவொற்றியூரில் வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் நான் கலந்துகொண்ட விதம் இயல்பானது. விழாவுக்கு முந்தைய நாள் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரைக் காணச் சென்றிருந்தேன். வழக்கமாக தனிப்பட்ட முறையில் பேச்சு கொஞ்சம் நீளும் என்றாலும் இம்முறை ஜெண்டாமைஸினை செலுத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்து சந்திக்குமாறு கூறினார். அப்போது கூட புத்தக வெளியீடு பற்றி கூறவில்லை. வீட்டில் எதேச்சையாக விழா குறித்தும், கிரேஸி மோகன் சிறப்புரை என்றும் சொன்னார்கள். மறுநாள் சீக்கிரமாக அலுவலகத்தில் இருந்து கிளம்ப வேண்டுமென்று நினைத்த தருணத்தில் வழக்கம் போல வேலை வந்து சேர, வீடு திரும்பவே மணி எட்டரை ஆகிவிட்டது. (விழா முடியவில்லை என்று வெளியே கேட்ட சொற்பொழிவு சப்தத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்). அவசர அவசரமாக கிளம்பிப் போனால் இல.கணேசன் பேசிக்கொண்டிருந்தார். விழா தலைமை அவர்தான் போலிருக்கிறது. 

விழா மேடையில் (புகைப்பட மூலம்: மா.கி.ரமணன்)
இந்நிகழ்வை நடத்தியது திருவொற்றியூர் பாரதி பாசறை. (பிற்பாடு பாசறையின் துணைத் தலைவரே மருத்துவர் தான் என்று தெரிந்துக்கொண்டேன்). இப்பாசறையை நிறுவியர் முனைவர் புலவர் மா.கி.ரமணன் என்பதால் அவரும் மேடையில் அமர்ந்திருந்தார். ரமணன் அய்யாவுக்கும் எனக்கும் ஒரு சுவாரஸ்யமான, குறிப்பிடத்தகுந்த பந்தம் உண்டு. துரதிர்ஷ்டவசமாக அவர் தீவிர வலதுசாரி மற்றும் இந்துத்துவ ஆதரவாளர். ஆனால் எனக்குக் கிடைத்த சிறந்த தமிழாசிரியர் ரமணன் அய்யாதான். நான் சென்று கொஞ்ச நேரத்தில் இல.கணேசன் பேசி முடித்தார். ரமணன் அய்யா மைக்கை நிறைத்துக்கொண்டு தமிழில் இல்லை என்று பொருள் தரும் ‘இல’ என்று சொல்லில் முடியுமாறு நான்கைந்து சொற்றொடர்களை ஒப்பித்தார். (இந்த ஆள் இன்னும் திருந்தவே இல்லை). அதன்பிறகு கிரேஸி மோகன் பேசினார்.

புத்தக வெளியீடு (மூலம்: தினமலர்)
பொதுவாக திருவொற்றியூருக்கு மத்திய / தென் சென்னையில் வசிக்கும் நண்பர்களை அழைத்தால் வரும் வழியெல்லாம் தூரத்தை வியந்து புலம்பிக்கொண்டே வருவார்கள். கடைசியில் ஆந்திரா பார்டருக்கே வந்து விட்டோம் என்று சொல்லி பெரிதாக சிரிப்பார்கள். கிரேஸியும் இதையே சொல்கிறார். வந்துரும் வந்துரும் என்று நீண்டநேரம் காரில் அழைத்து வந்ததை நினைவு கூர்கிறார். இல.கணேசனுக்கு ரொம்ப ஈஸி இங்கேயிருந்து டெல்லி ரொம்ப பக்கம் என்கிறார். தொடர்ந்து பேசிய கிரேஸி மோகன் படபடவென நிறைய நகைச்சுவை ஒன்லைனர்களை எடுத்துவிட்டுக் கொண்டிருந்தார். புத்தகத்தைப் பற்றி பேசும்போது இது நையாண்டி மேளமில்லை மெய்யாண்டி மேளம் என்று ஸிக் ஜோக் அடித்தார். மருத்துவரை மரபுக்கவிதைகள் முயன்று பார்க்கப் பணித்தார். இப்படியாக நவீன இலக்கியத்தின் கவனத்துக்கு வராமலேயே ஒரு நிகழ்வு நடந்து முடிந்தது.

நவீன இலக்கியங்களில் காணக்கிடைக்காத ஒரு காட்சியை இந்நிகழ்வில் கண்டேன். விழா முடிந்தபிறகு ஒரு வி.ஐ.பி. அவசரமாக முகப்புக்கு வந்து, புத்தகத்தின் இருபது பிரதிகளை மொத்தமாக வாங்கினார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. எப்பேர்ப்பட்ட வஸ்தாது புத்தகமாக இருந்தாலும் கவிக்கோ மன்றத்திலோ, டிஸ்கவரியிலோ நடைபெறும் புத்தக வெளியீட்டில் யாரும் இத்தனை பிரதிகள் வாங்கிப் பார்த்திருக்கிறீர்களா ? நான் வாங்கிய ஒரு பிரதியையும் சேர்த்து குறைந்தது நூறு பிரதிகளாவது அன்றைய தினம் விற்பனை ஆகியிருக்கும். எத்தனை பெரிய சாதனை இது ?

புத்தகத்தை ஒரு கிளான்ஸ் புரட்டினேன். மருத்துவர் என்பதால் முதுமை, மரணம், குடிப்பழக்கம், குழந்தையின்மை போன்ற விஷயங்களைச் சுற்றி நிறைய கவிதைகள். புத்தகத்திலிருந்து இரண்டு குறுங்கவிதைகள் –

உயிரோட்டமாய் கோழி படம்
கீழே வாசகம்: கிலோ 120 ரூபாய் !

தினசரி காலண்டர் திருதிருவென விழித்தது
பிப்ரவரி முப்பதைக் கேட்டபோது !

அடுத்த முறை மருத்துவரை சந்தித்தால் சில யோசனைகளை சொல்ல வேண்டுமென நினைத்திருக்கிறேன். முதலில் மருத்துவர் இந்த பாரதி பாசறை ஆசாமிகளையெல்லாம் விட்டு வெளியே வர வேண்டும். கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டு தன் மருத்துவ அனுபவங்களை நேரடியாகவோ, புனைவாகவோ எழுத வேண்டும். இதனை ஒரு வாசகர் விருப்பம் போல கேட்க இருக்கிறேன்.

**********

தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அதன் போக்கையே மாற்றியமைத்தது துள்ளுவதோ இளமை. நான் ஒன்பதாம் வகுப்பு முடித்திருந்த சமயம் துள்ளுவதோ இளமை வெளிவந்தது. அப்போது என் வயதையொத்த பருவத்தினர்களுள் இரண்டே வகைதான். துள்ளுவதோ இளமை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள். நானெல்லாம் அப்போது அதன் தலைப்பை உச்சரிப்பதற்குக் கூட தயங்கும் நிலையில் இருந்தேன். அதனை தியேட்டருக்கு போய் பார்ப்பதை எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. என் வீட்டில் அப்போது கட்டுப்பாடுகள் அதிகம். கட்டிப்புடி கட்டுப்பிடிடா பாடலின் காரணமாக குஷி படம் பார்ப்பதற்கே எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலம் அது. அப்போது து.இ. பார்த்த பாக்கியசாலிகள் வந்து கதை கதையாக அளந்து விடுவார்கள். அதன் காட்சிகளை விஸ்தாரமாக விவரிப்பார்கள். அப்பொழுதெல்லாம் அப்படத்தை பார்க்க வேண்டும் என்பது பெரும் ஏக்கமாகவே இருந்தது.

காலப்போக்கில் துள்ளுவதோ இளமையை மறந்தே போனேன். ஒரு படத்தில் அஜித் தனது தங்கைக்கு சின்ன வயதில் ஆசைப்பட்டு கேட்ட பொருட்களை வாங்கித் தருவார். அது போல தற்போது எனது நிறைவேறா ஆசையை தணிக்கும் பொருட்டு துள்ளுவதோ இளமை பார்த்தேன். (யூடியூபில் கிடைக்கிறது). அவ்வளவு சீனெல்லாம் இல்லை. பள்ளி மாணவ – மாணவிகள் மத்தியில் சிகரெட், குடிப்பழக்கம், மஞ்சள் புத்தகங்கள், இனக்கவர்ச்சி, சுயமைதுனம், செக்ஸ் என்று போகிறது கதை. ஆங்கிலத்தில் கமிங் ஆஃப் ஏஜ் என்கிறார்கள். பருவ வயதினருக்கான படங்கள். தமிழில் துள்ளுவதோ இளமை அப்படிப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சீரழிவு திரைப்படம். பருவ வயதினரை தவறு செய்துப்பார்க்கத் தூண்டும் திரைப்படம். படம் முழுக்க சீரழிவைக் காட்டிவிட்டு கடைசியாகக் கூட பெற்றோர்களை குற்றம் சாட்டி முடிக்கிறார்கள். அந்த வகையில் படத்தில் வரும் பெற்றோரை விட மோசமானவர் கஸ்தூரி ராஜா. துள்ளுவதோ இளமை திரைப்படம் செய்த ஒரே நற்காரியம் என்றால் காண்டம் பற்றிய (ஓரளவு) விழிப்புணர்வு ஏற்படுத்தியது தான். 

துள்ளுவதோ இளமைக்கு பிறகு தமிழில் பருவ வயதினருக்கான படங்கள் நிறைய வெளிவந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கது பாய்ஸ். (பாய்ஸ் வெளிவந்தபோது என் வீட்டில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டிருந்தது). துள்ளுவதோ இளமையின் திருத்தப்பட்ட வடிவம்தான் பாய்ஸ் என்பது இப்போது படம் பார்க்கும்போது தெரிகிறது. பாய்ஸில் விவேக், து.இ.யில் ரமேஷ் கண்ணா. இரண்டிலும் பையன்கள் விலைமாதுவிடம் செல்கிறார்கள். வீட்டை விட்டு கூட்டாக வெளியேறுகிறார்கள். இருப்பினும் துள்ளுவதோ இளமையில் உள்ள நெகடிவ் விஷயங்கள் இதில் குறைவு. பாய்ஸ் நாயகர்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென நினைக்கிறார்கள், சாதிக்கிறார்கள். பாய்ஸின் முதல் பாதி அபத்தங்கள் இரண்டாம் பாதியிலேயே களையப்பட்டுவிடுகிறது. அது சரி, ஆனந்த விகடனில் துள்ளுவதோ இளமைக்கு என்ன ரேட்டிங் கொடுத்தார்கள் ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

கரிகாலன் said...

நான் பெரிதாக தமிழ்படங்கள் பார்க்காத படியால் இது பற்றி தெரியவில்லை நண்பரே .
எனக்கு தெரிந்து சில மருத்துவர்கள் இருக்கிறார்கள் கவிதை ,கதை என்று எழுதுவார்கள் .தமது துறையை பற்றி எழுதலாமே என்று கேட்டால் சொல்வார்கள் .மீண்டும் மீண்டும் மருத்துவம் பற்றி எழுதுவது தமக்கு அயற்சி தருகிறது என்று .

Saravanan said...

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி பாசறை நடத்திய மாறு வேட போட்டியில் பாரத்தியாக வேஷம் கட்டி அந்த கால சூர்யாவிடம் விருதும் வாங்கியுள்ளேன் என்பதை....

Unknown said...

தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

நன்றி .
தமிழ்அருவி திரட்டி

Ponmahes said...

அருமையான பதிவு ...வாழ்த்துகள் தம்பி...