16 April 2018

பிரபா ஒயின்ஷாப் – 16042018


அன்புள்ள வலைப்பூவிற்கு,

இவ்வாரயிறுதி ஈ.சி.ஆரில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சியையும், துறைமுகத்தில் போர்க்கப்பல்களை பார்க்க மக்கள் அனுமதிக்கப்பட்ட நிகழ்வையும், அதன் தேதிகளையும் போட்டுக் குழப்பிக்கொண்டு கடைசியில் இரண்டையும் பார்க்க முடியாமல் வீணானது.

**********

மருத்துவர் ஷாலினியின் அந்தரங்கம் இனிமையானது என்கிற நூலை கிண்டிலில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஷாலினி சில ஆச்சர்யமான விஷயங்களை முன் வைக்கிறார்.

தற்போது மேற்குலகில் காமத்தை பரந்த மனப்பான்மையுடன் அணுகுகிறார்கள். இந்தியாவில் இன்னும் அப்படிப்பட்ட சூழல் இல்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு சூழல் நேரெதிராக இருந்தது என்கிறார். அதாவது ஆங்கிலேயர்கள் கட்டுப்பட்டித்தனமாகவும், இந்தியர்கள் பரந்த மனப்பான்மையுடன். நாற்காலிக்கு கூட கால் வெளியே தெரியக்கூடாது என்று மூடி மூடி பழக்கப்பட்ட ஆங்கிலேயர்களின் கலாசாரம் நம்மை அறியாமல் நம் மக்களிடம் திணிக்கப்பட்டுவிட்டது என்கிறார். இந்தப் பக்கம் இப்படியிருக்க அந்த பக்கம் அமெரிக்காவிலிருந்த ஆங்கிலேயேர்கள் ஆடை விஷயத்தில் ஒரு புதிய புரட்சியை செய்தார்கள். பின்னர், இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனாலும் நாம் ஆங்கிலேயர்கள் கற்றுக்கொடுத்த மூடிமறைக்கும் கலாசாரத்தையே பின்பற்றுகிறோம். ஆங்கிலேயர்கள் கரையேறிவிட்டனர்.

அந்த கால தமிழ் இலக்கியங்களை படித்தாலே நம் முன்னோர்கள் செக்ஸுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று புரிந்துக்கொள்ளலாம். (முன்னோர்கள் முட்டாள் இல்லை !). திருக்குறளில் காமத்துப்பால் என்று ஒரு அத்தியாயமே வருகிறது. தமிழில் மட்டுமல்ல, காமசூத்ரா என்கிற உலகின் முதல் செக்ஸ் நூலைக் கொண்டது இந்திய இலக்கியம். கிறஸ்தவ பாதிரியாரான கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (தமிழில்: வீரமாமுனிவர்) திருக்குறளின் அறம் மற்றும் பொருளை மட்டும்தான் மொழிபெயர்த்தார் என்பதை ஷாலினி சுட்டிக்காட்டுகிறார். காமத்துப்பால் கிறிஸ்தவ மதத்திற்கு ஏற்புடையது அல்ல என்று புறக்கணிக்கிறார். ஆனால் அவர் விட்டாலும் கூட இப்போதுள்ள பாதிரியார்கள் காமத்துப்பாலை செயலிலேயே காட்டி வருகிறார்கள்.

இப்புத்தகத்தின் கிண்டில் வடிவம் அமேஸானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 

**********

தினசரி நான்கு அல்லது ஐந்து டீ குடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. திடீரென ஒரு சமயம் டீ இல்லை, காபி தரட்டுமா என்று யாரேனும் கேட்டால் முகம் உம்மென்று மாறிவிடுகிறது. என்றைக்கும் காபி என்பது டீயின் மாற்று கிடையாது என்பது என் கருத்து.

உலகிலேயே நீருக்குப் பிறகு அதிகம் குடிக்கப்படும் திரவம் டீ ! மூன்றாம் இடம் காபிக்கு. (நான்காவது பியர் !) இதற்கு முக்கிய காரணம் உலகில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் நாடு சீனா. அதற்கடுத்து இந்தியா. இப்படி மெகா ஜனத்தொகையை கொண்டுள்ள முதல் இரண்டு நாடுகளில் தேயிலை உற்பத்தியாவதால் அது அதிகம் பருகப்படுகிறது. 83 சதவிகித இந்தியர்கள் டீ குடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், இந்தியாவின் தரமான தேயிலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு எஞ்சியிருக்கும் மூன்றாம், நான்காம் தர தேயிலை பொடிதான் நம்மிடம் விற்பனைக்கு வருகின்றன.

காபி கண்டுபிடிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே தேயிலை கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. முதன்முதலில் டீயை உலகிற்கு அறிமுகப்படுத்திய தேசம் சீனா. இது குறித்து எழுத்தாளர் எஸ்.ரா தனது உணவு யுத்தம் தொடரில் சில விஷயங்களைச் சொல்கிறார். சீனச் சக்கரவர்த்தி ஷென் நுங் குடிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரில் தேயிலைச் செடியின் இலைகள் பறந்துவந்து விழவும், அதைக் குடித்த மன்னர் புதிய பானமாக இருக்கிறதே என டீயை சிறப்பு பானமாக அறிமுகம் செய்தார் என்கிறார்கள். தேயிலைத்தூளில் கலப்படம் செய்யப்படும் பொருட்களை எஸ்.ரா. பட்டியிலிடுகிறார். அவற்றை படித்தால் டீயின் மீதுள்ள ஆர்வமே போய்விடும் என்பதால் தவிர்க்கிறேன். காபி கண்டுபிடிக்கப்பட்ட கதை அதைவிட சுவாரஸ்யமானது - எத்தியோப்பியாவில் இடையர்கள் சிலர் தங்களின் ஆடுகள் வழக்கத்துக்கு மாறான ஆற்றலுடன் இரவிலும் தூங்காமல் இருப்பதைக் கண்டு காரணத்தைத் தேடினார்கள். பின்பு, அவை காபி கொட்டைகளை சாப்பிடுவதாலேயே அவ்வாறு இருக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள்.

காபி, டீ இரண்டும் தூக்கம் வராமல் இருக்க உதவுகிறது. தேயிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட் புத்துணர்வு தரக்கூடியது. காபியில் கெஃபெயின் என்னும் சாரம் உள்ளது. கெஃபெயினும் புத்துணர்வு தரக்கூடியதுதான். இதனை சென்ட்ரல் நெர்வஸ் சிஸ்டம் ஸ்டிமுலன்ட் என்கிறார்கள். தொடர்ந்து காபி குடிப்பவர்கள் அதற்கு அடிமையாகிவிடக்கூடும். அதிக காபி வயிற்று உபாதைகளையும், நரம்பு தளர்ச்சியையும் தோற்றுவிக்கலாம். டீயிலும் கெஃபெயின் உண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு.

டீயோ, காபியோ குறைவாக அருந்துவது நல்லது. காலையில் துயில் எழுந்ததும் ஒருமுறை, மதிய உணவிற்கு பிறகு கண்கள் மய்யமாக சொருகும்போது ஒருமுறை !

**********

சென்ற வாரத்தில் தமிழகம் வந்த மோடியை எதிர்க்கும் வண்ணம் GoBackModi என்கிற ஹேஷ்டேகை பிரபலப்படுத்தினார்கள் இணைய சமூக ஆர்வலர்கள். இந்த ஹேஷ்டேக் அன்றைய தினம் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் சில மணிநேரங்கள் முதலிடத்தையும் பெற்றது.

2011ல் நியூ யார்க் வால் ஸ்ட்ரீட்  போராட்டங்களின் போதுதான் ஹேஷ்டேக் என்கிற சொல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார்கள். ஒரு சம்பவம் குறித்த எல்லா தகவல்களையும் ஒரே சமயத்தில் தெரிந்துகொள்வது ஹேஷ்டேகின் முதன்மை பயன்பாடு. பெரும்பான்மை சமூகம் மற்றும் அதிகார வர்க்கத்தின் கவனத்தை பெற்றுத்தரும் வல்லமை கொண்டது ஹேஷ்டாக். ஒரு விஷயத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நன்கொடைகள் வசூலிக்கவும் கூட பயன்படுகின்றன.

ஒரு உதாரணம் தருகிறேன் 2014ல் விர்ஜின் மொபைல் நிறுவனமும், ஆஸி ஹார்வெஸ்ட் என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து #mealforameal என்கிற ஹேஷ்டேகை அறிமுகப்படுத்தினர். இணைய பயனாளிகள் இந்த ஹேஷ்டேகுடன் தாங்கள் சாப்பிடும் உணவை படமெடுத்து பதிய வேண்டும். பகிரப்படும் ஒவ்வொரு படத்திற்கும் ஆஸி ஹார்வெஸ்ட் ஒரு நபருக்கு ஒரு வேளை உணவு வழங்கும்.  இதன் மூலம் ஏறத்தாழ இரண்டு லட்சத்தி இருபதாயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் சொல்கிறது.

எல்லோருடைய கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதே ஹேஷ்டேகின் நோக்கம். ஆனால் இதுவரை GoBackModi ஹேஷ்டேக் சம்பந்தப்பட்டவருக்கு சுரணை ஏற்படுத்தியது போலவே தெரியவில்லை.

இதற்கிடையே இன்னொரு முட்டாள் குரூப், ஒரே போஸ்டில் இம்பொசிஷன் எழுதுவது போல நூறு முறை ஒரே ஹேஷ்டேகை போட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது என்று கண்டுபிடித்த குழுவிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சூடு சொரணை என்று ஏதாவது இருந்தால் தானே...?

சலீம்பாய் said...

திண்டுக்கல்லாருக்கு பிலாசபி மேல அப்படியென்ன காண்டு... சூடு சொரணை இல்லைனு திட்டராரு?