14 May 2018

பிரபா ஒயின்ஷாப் – 14052018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில வாரங்களுக்கு முன்பு திருடா திருடா படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் நீட்சியாக நடிகர் பிரசாந்த் பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் (மற்றும் விஜயகாந்த்) கோலோச்சிய காலகட்டத்திற்கு பிறகு தொண்ணூறுகளில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வரத்துவங்கினர். அவர்களில் ஒருவர்தான் நம்ம ஹீரோ ! ஏற்கனவே ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் தியாகராஜனின் மகன்தான் பிரசாந்த். முதல் படத்திலேயே (வைகாசி பொறந்தாச்சு) ஃபிலிம்ஃபேர் விருதைப் பெற்றார் (சிறந்த அறிமுக நடிகர்). அடுத்து ரோஜாவுடன் நடித்து வெளிவந்த செம்பருத்தி சூப்பர்ஹிட். பிரசாந்துக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. முக்கியமாக மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பிரசாந்துக்கு ஏறுமுகம் தான் !

98ல் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடித்தார். அப்போது மணிரத்னம் மற்றும் ஷங்கர் படங்களில் நடித்திருந்த ஒரு சிலருள் பிரசாந்தும் ஒருவர். அது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் வேண்டும், வேண்டுமென சிலரெல்லாம் தவமாய் தவமிருந்து பின் சலித்துப் போனபின் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரசாந்துக்கு பெரிய சிரமமெல்லாம் இல்லாமல் எளிதாகவே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக கிடைத்தார். அதுவும் இரட்டை வேடம்.

ரஜினி கமல் இணைக்குப் பிறகு விஜய் அஜித் அந்த இடங்களை பிடித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு கட்டத்தில் அஜித்தின் இடத்தில் பிரசாந்த் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். கல்லூரி வாசல் வெளிவந்திருந்த சமயம். அத்திரைப்படத்தில் பிரசாந்த் அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். அப்போது ஒரு கடை திறப்பு விழாவுக்கு இருவரையும் அழைத்திருக்கிறார்கள். விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் மத்தியில் பிரசாந்துக்கு மிகுந்த ஆரவாரம். அதே சமயம், அஜித்தை அதிகம் பேர் கண்டுகொள்ளவில்லை.

கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி என்று அடுத்தடுத்து ஹிட் படங்கள். அந்த ஸ்ட்ரீமில் இருந்து பிரசாந்துக்கு முதன்முதலில் அதிர்ச்சி கொடுத்த படம் ஹலோ என்று நினைக்கிறேன். அதற்கடுத்து, குட் லக். இந்த காலகட்டத்தில் தான் வாலி, அமர்க்களம், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று அஜித்தின் கிராஃப் விறுவிறுவென்று ஏறுகிறது. கவனிக்க: முதலில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அப்பாஸ் நடிக்க வேண்டிய வேடத்தில் அஜித்தும், அஜித்தின் வேடத்தில் பிரசாந்தும் நடிக்க வேண்டியது. சில காரணங்களுக்காக பிரசாந்த் விலகிக்கொண்டார். (தபுவுக்கு பதில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக்க வேண்டும் என்று கேட்டதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் உண்டு). பிரசாந்த் விலகியபின் அஜித்துக்கு அவ்வேடம் கிடைத்தது. இதுதான் மேஜை எதிரெதிர் பக்கம் திரும்பிய தருணம் என்று நினைக்கிறேன்.

அதன்பிறகு தீனா வெளிவந்தது. அஜித் தலையானார். பின்னர் வெற்றியோ, தோல்வியோ அஜித்துக்கென ஒரு ராணுவம் உருவானது. அதே சமயம், பார்த்தேன் ரசித்தேன், ஸ்டார், சாக்லேட், தமிழ் என்று ஓரளவுக்கு சுமாரான படங்கள் கொடுத்தாலும் பிரஷாந்தால் விட்ட இடத்தை பிடிக்கவே முடியவில்லை. பிரசாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய சிக்கல்களுக்கு ஆளானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னர் சங்கர் படத்தில் நடித்தார். திவ்யா பரமேஸ்வரன் என்கிற டார்லிங்குக்காக அப்போது நானும், ஹோட்டல் பதிவரும் அப்படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்தோம். படம் அட்டர் ஃப்ளாப். மம்பட்டியான், புலன் விசாரணை, சாஹசம் என்று பிரசாந்தின் மீள்வருகை முயற்சி ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடிந்தன. தற்போது பிரசாந்த் மனம் தளராமல் தன்னுடைய அடுத்த மீள்வருகையான ஜானியை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். ஜானி 2007ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ஜானி கட்டார் என்கிற படத்தின் ரீ-மேக்.

பிரசாந்தின் கேரியரில் குறிப்படப்பட வேண்டிய அம்சம் மலேசியாவில் அவருக்கு இப்போதும் இருக்கும் கிரேஸ். ஒரு கட்டத்தில் தமிழக ரசிகர்கள் பிரசாந்தை கைவிட்டனர். ஆனால் மலேசிய ரசிகர்கள் விடவில்லை. தமிழகத்தில் படுதோல்வி அடைந்த படங்கள் கூட மலேசியாவில் ஓரளவுக்கு வசூலைத் தந்தன. அப்போதைய பிரபல ஏழு கதாநாயகிகளுடன் பிரசாந்த் மலேசியாவில் நடத்திய கன்சர்ட் நினைவிருக்கிறதா ? இப்போதும் கூட ஒன்றும் குறைந்துவிடவில்லை. பார்ப்பதற்கு இளமையாக இருக்கும் பிரசாந்த் நல்ல கதைகளை (மாதவனின் இறுதிச்சுற்று மாதிரியான) தேர்ந்தெடுத்து நடித்தால், அல்லது பிரபல ஹீரோக்களுக்கு வில்லனாக (என்னை அறிந்தால் அருண் விஜய் போல) நடித்தால் சரிவிலிருந்து மீண்டு வரலாம்.

**********

திருமண வாழ்க்கையை சைக்காலஜியில் செவன் இயர் இட்ச் என்கிறார்கள். தமிழில் மொழிபெயர்த்தால் நாராசமாக இருக்கிறது. பாலின பேதமில்லாமல் பெரும்பாலானவர்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்களுக்குப் பிறகு, அநேகமாக இரண்டு குழந்தைகள் பிறந்தபிறகு திருமண வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. இதைத்தான் செவன் இயர் இட்ச் என்கிறார்கள்.

பொதுவாக திருமண வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது அதனை கணக்கு பாடத்தோடு ஒப்பிடுவார்கள். புரிந்துகொண்டால் வெகு சுலபம், புரியவில்லை என்றால் மிகவும் கடினம். இந்திய ஆண்கள் பெரும்பாலும் கணக்கில் வீக் ! நம் இந்திய ஆண்கள் பொதுவாக திருமண விஷயத்தில் என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்

திருமணத்திற்கு முன்பே மனைவியிடம் சரணாகதி அடைவது: பெரும்பாலான இந்திய ஆண்களுக்கு பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் (வேறு வழி ?!). இவர்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் தலைகால் புரியாமல் இஷ்டத்துக்கு தங்களை முழுமையாக வருங்கால மனைவியிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். எந்த அளவிற்கு என்றால் தங்களுடைய ஈமெயில், ஃபேஸ்புக் கணக்குகளை ஒப்படைக்கும் அளவிற்கு. சில பேர் சினிமா பார்த்தால் மனைவியுடன் மட்டும்தான், ட்ரிப் போனால் மனைவியுடன் மட்டும்தான். அப்புறம் தினசரி இருவரும் ஒரே நிற உடை அணிவது, CUG போட்டுக்கொண்டு 24 மணிநேரமும் தொடர்பில் இருப்பது என்று இவர்கள் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லை. இவ்வளவு அன்னியோன்யமாக இருப்பது ரொம்ப நல்ல விஷயம், உங்களால் எஞ்சியிருக்கும் வாழ்க்கை முழுமைக்கும் இதே சரணாகதியை கடைபிடிக்க முடியும் என்றால் மட்டும் !

ஹனிமூன் காலத்திலேயே தங்கிவிடுவது: ஐ.டி. துறையில் புதிதாக ஒரு வேலையில் சேர்ந்து முதல் சில நாட்களை / வாரங்களை ஹனிமூன் காலம் என்பார்கள். அந்த காலகட்டத்தில் வேலை அதிகம் இருக்காது, யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், வெட்டியாய் உட்கார்ந்து ப்ரளஸ் செய்துகொண்டோ, பாட்டு கேட்டுக்கொண்டோ நிம்மதியாக இருக்கலாம். அதுபோல திருமண ஹனிமூனில் என்பது பணம், நேரம் போன்றவை பொருட்டில்லாத தருணம். புது மனைவிக்கு கார் கதவு திறந்து விடுவது, ஷாப்பிங் போகும்போது என்ன கேட்டாலும் வாங்கித் தருவது, கொஞ்சம் கால் வலிக்கிறது என்றால் பிடித்து விடுவது’ (ஹவ் ஸ்வீட் யூ நோ !) என்று எல்லாமே மிக மிக நல்ல விஷயங்கள். மறுபடியும் கடந்த பத்தியின் கடைசி வாசகத்தை படித்துக்கொள்ளுங்கள்.

ஆண் பெண் வேறுபாடை அறிந்துகொள்ளாதது: ஆணும் பெண்ணும் சமம் என்பது சரிதான். ஆனால் உளவியல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உள்ளன. (எக்ஸப்ஷன்ஸ் இருக்கிறார்கள். குறிப்பாக ஃபேஸ்புக் போன்ற இடங்களில் உளவியல் ரீதியாக ஆணைப் போலவே நடந்துகொள்ளும் பெண்கள் நிறைய). பொதுவான சராசரியான ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால் அவர்களுக்குள் நிறைய வேறுபாடுகள். ஆண் சாதாரணமாக சொல்லும் விஷயத்தை பெண் வேறு விதமாக இன்டர்ப்ரெட் செய்துகொள்கிறாள் என்பது போன்ற வார இதழ் ஜோக்குகள் ஏராளம் படித்திருக்கிறோம். ஆனால் அவற்றை ஏன் என்று புரிந்துக்கொள்ள முயல்வதில்லை. இவ்வேறுபாடை புரிந்துகொள்ள இதுவரை ஆயிரம் பேராவது உங்களுக்கு பரிந்துரைத்த அந்த பச்சை நிற நூலை கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாசித்தல் நலம்.

குழந்தை: தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலான பிரச்சனைகள் குழந்தை வந்தபிறகுதான் ஆரம்பமாகிறது. குழந்தையின் வருகை பெரும்பாலும் கணவர்களை பாதிப்பதில்லை. ஆனால் மனைவியின் வாழ்க்கையை கிட்டத்தட்ட முழுமையாக எடுத்துக்கொள்கிறது. குறைந்தது ஆறு மாதத்திற்காவது அவள் அவசரத்துக்கு பாத்ரூம் போவதென்றால் கூட குழந்தையைப் பற்றி நினைத்துக்கொண்டே தான் போக வேண்டும். நம்ம ஹீரோக்களோ இந்த சமயத்தில் ஃபேஸ்புக்கில் ஜனகராஜ் படத்தை பதிந்துவிட்டு (என்னவோ மனைவி இவரை டார்ச்சர் செய்வது மாதிரி) ஜாலியாக கூத்தடித்துக் கொண்டிருப்பார். இந்த சமயத்தில் மனைவிக்கு உளவியல் ரீதியாக கணவனின் சப்போர்ட் தேவை. உடலுழைப்பு சார்ந்த வேலைகள் செய்ய முடியாவிட்டாலும் ஆதரவாக அருகிலிருப்பது அவசியம்.

மனைவியை கிண்டலடிப்பது: இதை கேட்கும்போது மிகவும் சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால் பெரும்பாலான ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். குறிப்பாக வாட்ஸப் குரூப்புகளில் கணவன் மனைவி பற்றிய ஜோக்குகளை பரிமாறிக்கொள்வது, உறவினர்கள் கூடியிருக்கும் சமயத்தில் மனைவியை மட்டம் தட்டிப் பேசுவது, மனைவியின் குடும்பத்தினரை கேவலமாகப் பேசுவது போன்றவை மனைவியின் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடும். பெண்கள் இதுபோன்ற விஷயங்களை எந்த அளவிற்கு நினைவில் வைத்துக்கொள்வார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இவையெல்லாம் சும்மா சாம்பிள்கள் தான். இவை தவிர்த்து ஆண்கள் காலம் காலமாக செய்து வரும் சந்தேகப்படுவது, வெளியில் உள்ள கோபத்தை வீட்டில் காட்டுவது, செக்ஸில் வன்முறையை புகுத்திப் பார்ப்பது என்று பட்டியல் நீள்கிறது.

சரி இப்படியெல்லாம் இருக்கக்கூடாதா ஃபேஸ்புக் பாஸ்வேர்டை மனைவியிடம் தரக்கூடாதா, சும்மா ஒரு ஃபன்னுக்காக மாமனாரை கிண்டலடிக்கக் கூடாதா என்றால் பண்ணலாம் தான். திருமண வாழ்க்கைக்கு என்று ப்ளு பிரிண்ட் எதுவும் கிடையாது. அது கயிற்றின் மீது நடப்பது போன்ற ஒரு லாவகமான விளையாட்டு, எல்லைக்கு அப்படியும் போகாமல் இப்படியும் போகாமல் பேலன்ஸ் செய்ய வேண்டும். சுருங்கச் சொல்வதென்றால் ஒரு நகைச்சுவை காட்சியில் கவுண்டமணி சொல்வது போல திருமணம் என்பது ஈயம் பூசியது மாதிரியும் இருக்க வேண்டும், பூசாதது மாதிரியும் இருக்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

N.H. Narasimma Prasad said...

இனி பிரஷாந்த் கதாநாயகனாக நீடிக்க நினைப்பது மிகவும் கடினம். காரணம், நடிகர் ராமராஜன் போல 'நடிச்சா ஹீரோ சார், நான் வெயிட் பண்றேன்' என்று பிதற்றுபவரால் எப்படி சினிமாவில் மீண்டும் இடம் பிடிப்பது? (இதுல 'விட்ட இடம் வேற!')

Anonymous said...

Hello sir,

What is the book name???அந்த பச்சை நிற நூலை கணவன் – மனைவி இருவரும் தனித்தனியாக வாசித்தல் நலம்.. which book??

Unknown said...

Johnny gaddaar already un officially remake in tamil with some changes .
Watch "சிந்தனை செய்"
Then y he act and remake that movie

Philosophy Prabhakaran said...

@Anonymous

It is Men Are from Mars, Women Are from Venus written by John Gray.

It has tamil translation as well - ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்.