2 July 2018

பிரபா ஒயின்ஷாப் – 02072018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பொதுவாக சரக்கு என்கிறோம். ஆனால் ஆல்கஹால் வகைகள் ஒவ்வொன்றையும் குடிப்பதற்கு என பிரத்யேக குடுவைகளும் முறைகளும் உள்ளன. உஷ்ணநிலை, நறுமணம், கலக்கும் பானம் போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் தன்மை மாறுபடும். உதாரணமாக, ஒயினை நீளமான தண்டு கொண்ட டூலிப் குடுவையில் குடிக்க வேண்டும். ஏனெனில் ஒயின் குடுவையில் கைகள் பட்டால் அதன் உஷ்ணநிலை மாறுபட்டு, அதன் சுவையை கெடுக்கும். அது போல சினிமா பார்ப்பதற்கு என்றே எனக்கென பிரத்யேகமான முறைகள் இருக்கின்றன.

1. கூடுமானவரை படம் வெளியான உடன் பார்த்துவிட வேண்டும் (ஸ்பாய்லர்ஸ் குறித்த பயம்).
2. தனியாக பார்க்க வேண்டும். (ரசனை தாக்கத்தை தவிர்க்க)
3. கூட்டம் குறைவாக உள்ள அரங்கில் பார்க்க வேண்டும். ஆடியன்ஸ் நியூஸன்ஸ் குறித்து தனியாக எழுத வேண்டும். படம் போட்டு அரை மணிநேரம் கழித்து வருவது, நகைச்சுவையாக காமென்ட் அடிக்கிறேன் பேர்வழி என்று ஆபாசமாக கத்துவது, போன் இல்லாமலேயே எதிர்முனைக்கு கேட்கும் அளவிற்கு போனில் பேசுவது என்று அது ஒரு பெரிய லிஸ்ட் !

காலாவில் எனது இந்த மூன்று பிரத்யேக விதிகளையும் பின்பற்ற முடியாமல் போயிற்று. ஏற்கனவே கபாலி ரிலீஸ் அன்று நடந்த கலாட்டாக்களாலும், கபாலி சுமார் என்பதாலும் கொஞ்சநாள் பொறுத்து பார்த்துக்கொள்ளலாம் என்று முதல் விதியை தளர்த்தினேன். அதற்குள் குடும்பத்துடன் படம் பார்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால் அடுத்த இரண்டு விதிகளும் ஸ்வாஹா. குடும்பத்துடன் படம் பார்ப்பது என்பது வேறு விதமான தண்டனை. அரங்கில் நுழையும்போதே எனக்கு ஐஸ் டீ வேணும்பா. ஐஸ் டீ இல்லையாம், கோல்ட் காபி ஓகேவா ? ஓகே. ஒரு விளம்பரத்தில் மனைவி கோப்பை தளும்பத் தளும்ப காபி கொண்டு வருவது போல மெல்ல கோல்ட் காபியைக் கொண்டுவந்து உரியவரிடம் சேர்ப்பதற்குள் டைட்டில் போடத் துவங்கியாயிற்று. இடைவேளைக்குப் பின் ஏ.ஸி. குளிர் அதிகமாக இருக்கிறதென என் மனைவி ஷாலைக் கொண்டு முழுக்க போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டார். (அவருக்கு படம் பிடிக்கவில்லை). முழுமையான திரை அனுபவத்திற்காகவே இரண்டாவது முறை தனியாக பார்க்கும்படி ஆகிவிட்டது.

இன்னொரு பக்கம் ஸ்பாய்லர்ஸ் காரணமாகவும் திரை அனுபவம் முழுக்க கெட்டுவிட்டது. சமீபத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகியிருக்கும் காலா என்றோ இன்று காலை சீக்கிரமாக ஆபீஸை கட் அடித்துவிட்டு படம் பார்க்கலாம் என்று நினைத்தால் என்றோ ஆரம்பிக்கும் விமர்சகர்களைப் பற்றி கவலையில்லை. எளிதாக கடந்துவிடலாம். நான்கைந்து வரிகளில் குறு விமர்சனம் வைப்பவர்கள் கூட பரவாயில்லை. முதல் வரியிலேயே ‘காலாவில் ரஜினி இறந்தபிறகு...’ என்று எழுதும் பதிவுகளை தவிர்ப்பதற்கு வழியே இல்லையே. போதாத குறைக்கு செல்வி, ஸரினா, புயல் என்று சகலவித ரொமாண்டிசைஷன் பதிவுகளும் கண்ணில் பட்டுவிட்டன. 

இதனாலேயே காலாவில் நிறைய விஷயங்களை ரசிக்க முடியாமல் போய்விட்டது. உதாரணத்திற்கு, செல்வி செல்வி என்று ஹார்ட்டின் எல்லாம் விட்டு இவர்கள் கொண்டாடிய ஈஸ்வரி ராவ் தன் அறிமுகக்காட்சியில் தொடர்ந்து நூற்றி இருபது நொடிகள் நிறுத்தாமல் வசனம் பேசி சாவடிக்கிறார். பெரியார் சிலை, புத்தர், அம்பேத்கர், ஜோதிராவ் புலே படங்கள், எச்.ஜாரா, க்ளைமாக்ஸில் ஹோலி கொண்டாட்டம் தவிர்த்து பெரிய அளவில் குறியீடுகள் எதுவும் இருப்பதாக என் கண்ணில் படவில்லை. நானா படேகரை கிட்டத்தட்ட மோடியாகவே காட்டியிருக்கிறார்கள். 

காலா ஒரு தோற்றுப்போன தாதாவின் கதை ! எந்தவொரு பெரிய நடிகர் நடிக்கும், வணிக சினிமாவை எடுத்துக்கொண்டாலும் ஹீரோ ஜகஜ்ஜால கில்லாடியாக இருக்க வேண்டும், வெற்றிபெற வேண்டும், பின்னர் தோற்பது போல கொஞ்சம் தோற்க வேண்டும், இறுதியில் மீண்டு வெற்றிபெற வேண்டும் என்பதுதான் வார்ப்புரு. ஹீரோ வெற்றியடைவதை திரையில் பார்க்கும் ரசிகன் தானே வெற்றியடைந்ததாக உவகை கொள்கிறான். படம் வெற்றியடைகிறது. இது அடிப்படை சூத்திரம். நம் காலா இடைவேளை வரை கெத்துதான். (இடைவேளைக் காட்சி பயங்கரம்). அதன்பிறகு காலா தோற்கிறார். தோற்கிறார். தோற்கிறார். மரணமடைகிறார் ! காலா மரணமடைந்தபிறகு ஹரி தாதா தாராவியை கைப்பற்றுவதுடன் படம் நிறைவடைந்துவிடுகிறது. அதன்பிறகு வரும் கருப்பு, சிவப்பு, நீலம் காட்சிகளெல்லாம் ரசிகர்களை ஏமாற்றுவதற்கு / பொதுமக்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கு. காலாவின் இத்தகைய வீழ்ச்சி காலா படத்தையும் வீழ்ச்சியடைய செய்துவிட்டது. 

ஒட்டுமொத்தமாக மனக்குறையை ஏற்படுத்தினாலும் காலாவில் என்னைக் கவர்ந்த சில விஷயங்கள் –

1. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. மிரட்டுகிறது. குறிப்பாக ஹரி தாதா தீம் மியூசிக். முழு OSTக்காக காத்திருக்கிறேன்.
2. செல்வம் கதாபாத்திரம். அருந்ததி. எத்தனை நேர்த்தியான அழகி ! அப்படியே ஒரு நடுத்தர குடும்ப மனைவியை பிரதிபலிக்கும் முகம்.
3. கண்ணம்மா மற்றும் வாடி என் தங்கச்செல பாடல்கள்
4. தீ ! இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும்.
5. நேட்டிவிட்டி. உதாரணமாக, ஒரு தெருமுனைக் கூட்டம் எப்படி நடைபெறுமோ அதனை அப்படியே பாசாங்கில்லாமல் காட்டிய விதம்.
6. அனிமேஷன் காட்சிகள்.
7. செல்வி மற்றும் ஸரினாவுடனான காலாவின் காட்சிகள்.
8. சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கும் நானா படேகர் & அஞ்சலி பாட்டில்.

வணிக ரீதியாக தோல்வி அடைந்தாலும் ரஜினி உட்பட நிறைய பேரைக் கதற வைத்ததில் காலா வெற்றி அடைந்திருக்கிறது.

**********

நீண்ட நாட்களுக்குப் பிறகு சுஜாதாவின் நாவல் ஒன்றைப் படித்தேன். கொலையுதிர்காலம். முதல் அத்தியாயத்திலேயே கணேஷ் – வசந்த் அறிமுகமாகிவிடுகிறார்கள். கணேஷ் – வசந்த் என்றாலே க்ரைம் கதைதானே ! ஆனால் கொலையுதிர் காலம் என்னவோ அமானுஷ்யமாகவே போகிறது. பத்து, பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை அமானுஷ்யம்தான். எப்படியும் கடைசியில் அறிவியல் புள்ளியில் வந்து முடியும் என்பது தெரியும். இருந்தாலும் முதல் பத்து அத்தியாயங்கள் தரும் த்ரில் அலாதியாக இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். இந்நாவலை பாதி படித்து முடித்திருந்த சமயம் நள்ளிரவு நேரத்தில் தனியாக என் அறையை விட்டு வெளியே வருவதற்கே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல் பாதைக்கு வந்து சப்பையாக நிறைவடைகிறது.

இந்நாவலில் கதைகளுக்கு என்று சுஜாதா குறிப்பிட்டுள்ள விதியொன்றை அவரே மீறிவிடுகிறார். கதையில் ஒரு குற்றவாளி உண்டென்றால் அவரை முதல் சில அத்தியாயங்களிலேயே அறிமுகப் படுத்திவிட வேண்டும். திடீரென கதை முடியும் தருவாயில் ஒரு புதிய கதாபாத்திரத்தை நுழைத்து அவர்தான் குற்றவாளி என்பது போங்காட்டம். கொலையுதிர் காலம் நாவலின் முடிவில் அப்படித்தான் நடந்துவிடுகிறது. இதனை தனது கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வது போல அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். The butler did it ! 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

Ponmahes said...

அருமையான பதிவு தம்பி.

ரஜினி அவரோட safety zone அ விட்டு வெளியே வர நினைக்கிறாரோ என்னவோ.

அப்பறம் அந்த தாராவி பிராஜக்ட் டோட பேரு 'மனு'. இது ஒரு முக்கிய குறியீடு.....

ரஜினி க்கு திருநெல்வேலி வட்டார வழக்கு நல்லா வருது பா....அப்பறம் படத்தில் அவரோ கடைசி பையனுக்கும்.

வாழ்த்துகள்....

Ponmahes said...

அருமையான பதிவு தம்பி.

ரஜினி அவரோட safety zone அ விட்டு வெளியே வர நினைக்கிறாரோ என்னவோ.

அப்பறம் அந்த தாராவி பிராஜக்ட் டோட பேரு 'மனு'. இது ஒரு முக்கிய குறியீடு.....

ரஜினி க்கு திருநெல்வேலி வட்டார வழக்கு நல்லா வருது பா....அப்பறம் படத்தில் அவரோட கடைசிப் பையனுக்கும்.

வாழ்த்துகள்....