5 May 2019

சுஜாதா விருதுகள் 2019


அன்புள்ள வலைப்பூவிற்கு, 

நீண்ட நாட்களுக்குப் பிறகு, (ஏறத்தாழ ஓராண்டு) அன்புள்ள வலைப்பூவிற்கு என்று எழுதத் துவங்குவது பூரிப்பைத் தருகிறது. அத்துடன் ஒரு உவப்பான செய்தி. உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா விருதுகளில் இவ்வாண்டின் இணைய பிரிவுக்கான விருதினை நமது வலைத்தளம் பெற்றிருக்கிறது ! இவ்விருதினை வழங்கிய உயிர்மை நிர்வாகத்திற்கும், திரு.மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், தேர்வுக்குழுவில் இடம்பெற்ற எழுத்தாளர், பத்திரிக்கையாளர் யுவகிருஷ்ணா, எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் மற்றும் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

இந்த தருணத்தில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனது முதல் வாசகன் நண்பன் பொன் மகேஸ்வரன், வெறும் பத்து பேர் படிக்கும் வலைப்பூவாக இருந்த காலத்திலிருந்து எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர்கள், என் வலைப்பூவில் முதல் (தனிப்பட்ட பழக்கமில்லாத) கமெண்ட் செய்த உண்மைத்தமிழன், நேரடியாகவோ மறைமுகமாகவோ எனக்கு உந்துதலாக இருந்த கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், கே.ஆர்.பி.செந்தில், யுவகிருஷ்ணா, அதிஷா, கார்க்கி பவா, பரிசல்காரன், ஆதி தாமிரா, சேட்டைக்காரன் சக வலைப்பதிவர்கள் அலைகள் பாலா, SUREஷ் பழனியிலிருந்து, சைவக் கொத்துபரோட்டா, ஜில்தண்ணி, ஜெய்லானி, லோஷன், மைந்தன் சிவா, எப்பூடி, விக்கியுலகம் வெங்கட், சதீஷ் மாஸ், ரோமியோ ராஜராஜன், வேடந்தாங்கல் கருண், கவிதை வீதி செளந்தர், தமிழ்வாசி பிரகாஷ், நினைவில் வாழும் சீனா அய்யா, கோவை நேரம் ஜீவா, நா.மணிவண்ணன், கோகுல், மங்குனி அமைச்சர், சிரிப்பு போலீஸ், பன்னிக்குட்டி ராம்சாமி, நினைவில் வாழும் பட்டாப்பட்டி, என்னை ஒருமுறை சிக்கலில் கோர்த்துவிட்ட பிச்சைக்காரன், எனக்கு அவ்வப்போது போட்டோஷாப் உதவிகள் செய்துத்தந்த சுகுமார் சுவாமிநாதன் (பிரபா ஒயின்ஷாப் பேனர் இவர் செய்து கொடுத்ததுதான்), வீடு சுரேஷ்குமார், துவக்கக்காலத்திலிருந்து எனக்கு ஆதரவாக இருந்து வரும் அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவகுமார், ஆரூர் மூனா செந்தில், ஒருமுறை இணையத்தில் என்னைப் புரட்டியெடுத்த டெரர் கும்மி குழுவினர், அப்போது எனக்கு ஆதரவாகக் களமாடிய ரஹீம் கஸாலி, டொமைன் வாங்கும்போது உதவியாய் இருந்த பிரபு கிருஷ்ணா, அப்துல் பாஸித், தொடர்ந்து constructive criticism செய்து என்னை வழிநடத்தும் மயிலன், ஜீவன் சுப்பு அனைவருக்கும் என் நன்றிகள் ! யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். 

எல்லோருக்கும் ஷார்ட் டெர்ம் மற்றும் லாங் டெர்ம் கோல்ஸ் இருக்குமில்லையா. அதுபோல 2011ம் ஆண்டு சுஜாதா இணைய விருதினை யுவகிருஷ்ணாவும், அதற்கு அடுத்த ஆண்டு அதிஷாவும் பெற்றபோது என்றாவது ஒருநாள் இவ்விருதினை வாங்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஒரு ரகசிய லட்சியமாகவே வைத்திருந்தேன். முதல் சில வருடங்கள் விடாப்பிடியாக விண்ணப்பித்தேன். அதன்பிறகு ஒவ்வொரு முறை அறிவிப்பு வெளிவரும்போதும் பத்து நல்ல இடுகைகள் தேறுகிறதா என்று தேடிவிட்டு (விண்ணப்பிக்க பத்து சுட்டிகள் அனுப்ப வேண்டும்) அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவேன். இம்முறையும் அதேதான் நடந்தது. விண்ணப்ப தேதியைக் கடந்தபின் திரு.மனுஷ்யபுத்திரன் இணைய விருதுக்கு போதுமான விண்ணப்பங்கள் வராததால் தேதியை நீடித்திருப்பதாகவும், அப்படியும் விண்ணப்பங்கள் வராவிட்டால் இப்பிரிவையே கைவிட்டுவிடலாம் என்று முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தார். என்னை அறிந்தால் க்ளைமாக்ஸில் விக்டரிடம் அவனது மனசாட்சி, ‘இதுதான் உன் டைம். போட்டுத் தாக்கு. போட்டுத் தாக்கு’ என்று சொல்லும். அப்படியொரு குரல் எனக்குள் ஒலித்தது. அவசர அவசரமாக எனது வலைப்பூவை ஒரு வாசகனாகத் துழாவினேன். சுஜாதா விருதுகள் விதியின்படி 2018ல் எழுதிய பத்து பதிவுகளின் சுட்டிகளை அனுப்ப வேண்டும். நான் மொத்தமே 34 பதிவுகள் மட்டுமே எழுதியிருந்தேன். அவற்றிலிருந்து மிகவும் சிரத்தை எடுத்து விண்ணப்பிப்பதற்கு ஓரளவிற்கு தகுந்த பத்து பதிவுகளை தேடி அனுப்பி வைத்தேன்.

ஏப்ரல் 22ம் தேதி, மாலை 6:22க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. நான் மனுஷ்யபுத்திரன் பேசுகிறேன் என்கிறது எதிர்முனை. அவ்வளவுதான். எனக்குப் புரிந்துவிட்டது. அதற்குமேல் எனக்கு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. இதுவரை ஒரு நூறுமுறை மனுஷ்யபுத்திரனை அருகிலிருந்து பார்த்திருந்தாலும் கூட ஒருமுறை கூட பேசியதில்லை. அதனால் சட்டென அவரை சார் என்று அழைப்பதா, அய்யா என்று அழைப்பதா என்ற குழப்பத்தில் குழறினேன். பொதுவாகவே எனக்குக் கொஞ்சம் insecured feeling அதிகம் என்பதால் நான் கேட்ட செய்தி உறுதியானது தானா என்று இரண்டு முறை கேட்டு தெளிவடைந்தேன். மறுநாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தபோது, தேர்வுக்குழுவினரை அறிந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. நான் யாரால் உந்தப்பட்டேனோ, அதே யுவகிருஷ்ணா, நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கும் CSK மற்றும் ஷான் கருப்பசாமி. இணையத்தில் எழுதும் ஏராளமானவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக விளங்கும் எழுத்தாளர் சுஜாதாவின் பெயரில் அளிக்கப்படும் இவ்விருதினை பெற்றிருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடுப்பினை. 

சுஜாதாவின் பிறந்தநாளான மே மூன்றாம் தேதி கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற விழாவில் திரு.மனுஷ்யபுத்திரன் மற்றும் திருமதி.சுஜாதாவிடமிருந்து சுஜாதா இணைய விருதினை பெற்றுக்கொண்டேன்.

எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி முதல்முறை நான் தெரிந்துக்கொண்டதே ஒரு எதிர்மறையான வகையில்தான். நான் திராவிட இயக்கத்தில் பங்காற்றிய குடும்பத்திலிருந்து வந்தவன். என் தாத்தா தி.மு.க.காரர். என் அப்பா திராவிடர் கழகம். அது பாய்ஸ் திரைப்படம் வெளிவந்திருந்த சமயம். அப்போது ‘உண்மை’ இதழில் ஜென்டில்மேனில் துவங்கி இயக்குநர் ஷங்கரையும், சுஜாதாவையும் (பாலகுமாரனையும்) கடுமையாக சாடியிருந்தார்கள். பாய்ஸ் வெளிவந்தபோது நான் அது எந்த வயதினருக்காக எடுக்கப்பட்டதோ அந்த வயதிலிருந்தேன். பாய்ஸ் படத்தை நான் மிகவும் ரசித்துப் பார்த்து, அதன் காட்சி வரிசைகளை அப்படியே நினைவில் வைத்திருந்த சமயம் அது. இருப்பினும் எனக்குள்ளிருந்த இன்னொரு மனம் அந்த உண்மை இதழ் கட்டுரையையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டது. 2009ம் ஆண்டு இணையத்தில் புழங்கத் துவங்கியபோது இங்கு முற்றிலும் வேறொரு காட்சியைக் கண்டேன். இங்குள்ள பெரும்பாலானவர்கள் அவரை வாத்தியார் என்று சிலாகிக்கிறார்கள். அதன்பிறகுதான் அவரைப் படிக்கவே துவங்குகிறேன். நான் படித்த முதல் சுஜாதா புத்தகம் – என் இனிய இயந்திரா ! அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. PDF வடிவில் அந்த புத்தகத்தை என் பழைய கணினியில் மாலை நேரம் படிக்கத்துவங்கி, இருண்டபிறகு அறையில் மின்விளக்கை உயிர்பிக்கக் கூட ஏழாமல் முழுமையாக வாசித்து முடித்தேன். அதன்பிறகு அவரது நூல்கள் ஒவ்வொன்றாக வாசிக்கவும், வியக்கவும் துவங்கினேன். அவரிடம் சரணடைந்தேன். எனது மகள் பெயர் நிலா, மகன் பெயர் வசீகரன். அவருக்காகத் தான் வைத்தேன் என்றால் அது உட்டாலக்கடி. ஆனால் அவரது தாக்கம் அப்பெயர்களை சூட்டியதில் உண்டு என்பது உண்மை. (என் இனிய இயந்திராவின் நாயகி பெயர் நிலா, பாரதிராஜா கண்களால் கைது செய் படத்தில் அறிமுகப்படுத்திய நாயகனுக்கு சுஜாதா சூட்டிய பெயர் வசீகரன்). 

யுவகிருஷ்ணா, அதிஷாவிற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் சுஜாதா இணைய விருதை கவனித்து, அது தகுதியான நபர்களுக்கே வழங்கப்படுகிறது என்ற மனநிறைவை அடைந்திருக்கிறேன். இம்முறை மற்றவர்களுக்கு அந்த மனநிறைவு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அப்படி மனநிறைவை அடையாதவர்களை என் எழுத்தின் மூலம் கன்வின்ஸ் செய்ய வேண்டும் என்பதே என் முதல் பணியாக கருதுகிறேன். சிலருக்கு செய்த சாதனைக்காக விருது கிடைக்கும், சிலருக்கு செய்யப்போகும் காரியங்களுக்காக அதாவது இனியாவது நீ பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கிடைக்கும். நான் இரண்டாவது காரணத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றே புரிந்துகொள்கிறேன். அதனை செயல்படுத்தும் பொருட்டு இதோ உடனடியாக மீண்டும் எனது வலைப்பூவை உயிர்ப்பிக்கிறேன்.


என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்

Post Comment

12 comments:

Ponmahes said...

வாழ்த்துக்கள் தம்பி. மென்மேலும் வளர...

ஸ்ரீராம். said...

மனமார்ந்த வாழ்த்துகளும், மனம் நிறைந்த பாராட்டுகளும்.

மென்மேலும் வளர வாழ்த்துகள்.​

கார்க்கிபவா said...

blog படிச்சு எவ்ளோ நாளாச்சு... வாழ்த்துகள் ப்ரோ

சுரேகா said...

வாழ்த்துக்கள் பிரபா!! மறுபடியும் நிறைய எழுதுங்க !

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி...

வாழ்த்துகள்...

Unknown said...

வாழ்த்துக்கள் பிரபா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

கரிகாலன் said...

சில தினங்களுக்கு முன்னர் தான் நினைத்தேன் நீண்ட நாடகளாக காணவில்லை .நல்ல செய்தியோடு வருகை தந்திருப்பது கண்டு மகிழ்ச்சி .தொடர்ந்து எழுதுங்கள் ..

வாழ்த்துக்களுடன் கரிகாலன் ......

pichaikaaran said...

வாழ்த்துகள் பிரபா....

Anonymous said...

Congratulations - you are also deserving !!

Nanjil Siva said...

சுஜாதா இணைய விருதினை பெற்ற தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Liam Bowman said...

Hello nice blog

Liam Bowman said...

This is a ggreat post