அன்புள்ள வலைப்பூவிற்கு,
வீனஸ். பா.கண்மணி எழுதியிருக்கும் சிறிய நாவல்.
எழுத்தாளர் பெயரை முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். புதிய புத்தகம். இதுவரை புத்தகம் குறித்து பெரிய அறிமுகங்கள் வெளிவரவில்லை. இருப்பினும் முதல் பார்வையிலேயே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது வீனஸ். இதுகுறித்து சிந்திக்கும்போது ஒரு எழுத்தாளனாக புத்தகத்தின் தலைப்பு, அட்டைப்படம், பின்னட்டை வாசகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறேன்.
வீனஸ் மீது நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.
இந்த வருடம் முதல் நாவலாக பீச் வாசித்தேன். இரண்டாவதாக வாசித்திருக்கும் வீனஸ் கிட்டத்த்தட்ட பீச் நாவலின் பெண் வெர்ஷன் என்று சொல்லலாம்.
ரஞ்சனி பெங்களூரில் ஒரு அழகு நிலையம் (அதனுடன் ஜிம் மற்றும் ஸ்பா) வைத்திருக்கிறார். அதையும் அதைச் சார்ந்திருக்கிற சிலரைப் பற்றியும் excerptதான் இந்த நாவல். ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆறு சிறுகதைகள் என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் பெண்களைப் பற்றியது. ஆண்களுக்கு முப்பத்தி மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.
இந்நாவலின் பெரிய ஆச்சர்யம், பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் சொற்கள். நவீன கதைக்களம். பியூட்டி பார்லர், ஜிம், ஸ்பா - இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நிறைய அழகான தமிழ்ச் சொற்களோடு நாவல் எழுதியிருக்கிறார் கண்மணி. தரிப்பிடம், செல்வழி, துவாலை, நகப்பூச்சு, வைப்பறை, வட்டணை, வெளுப்பான், குளிரூட்டி, பசுந்தேநீர், புளகம் இப்படி ஏராளமான சொற்கள். ஒரு கட்டத்தில் இது மொழிபெயர்ப்பு நாவலாக இருக்குமோ என்று சந்தேகமே வந்துவிட்டது. அதே சமயம், தேவைப்படும் இடங்களில் ஆங்கில, வடமொழி சொற்களையும் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்.
வர்ணனைகள் எல்லாம் அப்படியே காட்சியாகக் கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறார் எழுத்தாளர். Absolute pleasure of text ! மொஹிதோ பற்றிய வர்ணனை ஒன்று - மேஜையில் தூளாக்கப்பட்ட புதினாவோடு மொஹீடோ கிளாஸ், மழைக்காடாக வந்து அமர்ந்தது. வெள்ளை ரம் கலந்த சோடாவுக்குள்ளே நீள் சுருளாக நறுக்கப்பட்ட எலுமிச்சங்காய் அனகொண்டாவாக அமிழ்ந்திருந்தது. மேலே ஐஸ் கட்டிப்பாறைகள். அதனுச்சியில் முளைத்து நின்ற புதினாக் கொத்தின் மரம். இதனைக் கூட்டியவன் சிறந்த கலைஞன்தான் என எண்ணிக்கொண்டாள். எடுத்து அருந்திட மனம் திறந்துக்கொண்டது.
அவ்வப்போது எராடிகாவின் வாசனை வருகின்றன. அவை வெறும் வாசனைதான் என்றாலும் அவற்றை ஒரு பெண் எழுதியிருக்கிறார் என்பதால் கூடுதல் கவனம் ஏற்படுகிறது.
ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவின் தாயார் ஜோதிடரிடம், "சாமி, இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் வேற'யாரால பண்ண முடியும்" என்று சிலாகிப்பார். அந்த மாதிரி பெண்களைப் பற்றிய சில விஷயங்களைப் பெண்களால் மட்டுமே எழுத முடியும். உதாரணமாக, நாவலின் ஒரு பகுதி இப்படி போகிறது - ரஞ்சனி மல்லாந்து படுத்து இமைகளின் மேல் கைகளை வைத்துக்கொண்டாள். குளிரூட்டியின் மெல்லொலியும் பச்சிலை வாசமும் ரீங்கரிக்க, துருத்திய முலைக் காம்புகள் குத்திட்டு நின்றன. நிகிக்கு ஒன்றரை வயது வரை இரவில் முலையூட்டுவதை நிறுத்த இயலாததால் வந்த வினை. பேடட் கச்சை அணியாவிடில் மானம் போகும்.
இன்னொரு இடத்தில் சந்தியா என்கிற பணக்கார பெண்மணி. வயது நாற்பத்தைந்து இருக்கலாம், எனினும் இளமை குன்றாதபடி தன்னை கவனித்துக்கொள்பவள். அவள் காரில் போகிறாள். வண்டி சிக்னலில் நிற்கிறது. அப்போது - உள்ளுணர்வு உந்த பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். ஸ்டியரிங்கில் தலை சாய்த்திருந்த இளைஞன், சந்தியாவையே பார்த்துக்கொண்டிருந்தான். மீசையில்லாத முகத்தில் விரிந்த புன்னகை சந்தியாவையும் தொற்றிக்கொண்டது. துணிச்சல் பெற்ற அவன், ஆள்காட்டி விரலைக் கண்ணின் கீழும், நடுவிரலை மேலுமாக வைத்து மீன் வடிவில் கோடிழுத்துக் காண்பித்தான். அவனுக்குத் தன் மகனின் வயதிருக்கலாம். இதனை எதிர்கொள்ளும் விதத்தை சந்தியா தீர்மானிப்பதற்குள் ஓட்டுநர் வந்தமர, சந்தியா வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். நரம்புகளுக்குள் புளகம் ஓடி விளையாடியது.
அடிக்கோடிடத் தகுந்த ஏராளமான ஒன்லைனர்ஸ் நாவல் முழுக்க விரவிக் கிடக்கின்றன -
கண்ணியமானவர்களோடு லட்சுமி தங்க மாட்டாள்.
இலையுதிர் காலத்திற்காக எந்த மரமும் வசந்தப் பூக்களை ஒளிப்பதில்லை.
Being a lone wolf is better than being a sheep in a herd.
பசித்த புலிக்குத்தான் வேட்டையில் வேகமிருக்கும். உள்ளே எரியும் நெருப்பானது அணைந்துவிட்டால் சாம்பல்தான் மிஞ்சும்.
பீச் நாவலில், சில விஷயங்களை தமிழில் சொல்லும்போது கொச்சையாகவும் அதே விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்லும்போது அது அந்த உணர்ச்சியை மட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்பட்டிருக்கும். இதிலும் அதே போல ஒரு விஷயம் வருகிறது. நீல் என்கிற நபர் மாடலிங் துறையில் இருக்கும் காதலி நிஷாவுடன் உரையாடுகிறார் - உனக்கு அவுத்துப் போட்டுட்டு ஆடணும். உதடு வரை வந்ததை ஆங்கிலத்தில் நீர்க்கச் செய்த நீல், "You like to exhibit yourself. Is that all ?"
இந்த மாதிரி இன்னும் பல பகுதிகளை இந்நாவலில் இருந்து குறிப்பிட்டு எழுத முடியும். நாவலை படிக்க இருப்பவர்களுக்கான நேரடி அனுபவத்தை கெடுக்காமல் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். சாலார்ஜங்க் மியூசியத்தில் பல அற்புதமான ஆளுயரப் பளிங்குச் சிலைகள் உண்டு. அவற்றில் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பது - இத்தாலிய Veiled Rebecca பெண் சிலையே. மறைக்கப்பட்ட பொருளுக்கு எப்போதுமே ஈர்ப்பதிகம்.
128 பக்கங்கள்
180 ரூபாய்
எதிர் வெளியீடு
என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்
|
|
