அன்புள்ள வலைப்பூவிற்கு,
செல்வராகவன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி போலவே மற்றுமொரு பலமான, அதிக எதிர்பார்ப்புகள் கொண்ட கூட்டணி என்று ஏ.ஆர்.முருகதாஸ் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியை சொல்லலாம். பொதுவாக நான் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களை அதிகம் விரும்புவதில்லை. இந்தமுறை படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு கொஞ்சம் பாடல்களுக்கும் தொற்றிக்கொண்டதால் கேட்டேன்...
ரிங்கா ரிங்கா...
பதறியடிக்கும் ஒரு குரலுடனும், மிரட்டலான இசையுடனும் ஆரம்பமாகும் பாடல், இருபது நொடிகள் கடந்த பின்னர் அடப்பாவிகளா டாக்சி டாக்சி பாடலை இப்படியா காப்பி அடிப்பீங்கன்னு நினைக்க வைக்கிறது. பாடல்வரிகளும் இது தமிழ் தானா என்று சந்தேகிக்க வைக்கிறது. இது ஹீரோ அறிமுகப்பாடலாக இருக்கும் என்று தெரிகிறது. சென்னையின் முக்கிய இடங்களை காட்டுகிறார்களாம். (அதைத்தான் அயன் படத்துலேயே காட்டியாச்சே...)
முன் அந்திச்சாரல் நீ...
ஹாரிஸ் ஜெயராஜுக்கே உரித்தான அக்மார்க் மெலடிப்பாடல். நா.முத்துக்குமார் வரிகளை கார்த்திக் பாட அநேகமாக இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஃஎப்.எம் ரேடியோக்களிலும், இசையருவி, சன் மியூசிக்கிலும் இதுதான் கொண்டாட்டப் பாடலாக இருக்கும். பாடலை கண்டிப்பாக ஏதாவது பாலைவனத்திலோ, அல்லது வெளிநாட்டு மலைப்பிரதேசத்திலோ தான் படம் பிடித்திருப்பார்கள். மெலடி ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரையில் ஓகே ரகம்.
எல்லே லாமா...
டூயட் பாடல்தான் என்றாலும் பார்ட்டிகளில் ஒலிபரப்பும் தகுதிபெற்ற பாடல். ஸ்ருதி ஹாசன் தனது கட்டைக்குரலில் கலந்துகட்டி அடித்திருக்கிறார். (குரலும் செமகட்டை தான்). நடுவில் ஒரு ஹம்மிங், அடேங்கப்பா செம்மொழி பாடலில் இழுத்ததை விட அதிகமாக இழுத்திருக்கிறார். நடுநடுவே அவசர அவசரமாக வந்து பாடிவிட்டுப் போகும் ஆண்குரலும் வசீகரிக்கிறது.
யம்மா யம்மா...
இங்கேயும் ஒரு சோகப்பாடல். எஸ்.பி.பி. குரலில் ஒலிப்பது செம கிளாசிக். அதென்ன சோகப்பாடல் என்றாலே கடம் இசையை கசிய விடுகிறார்கள். (அஞ்சலை எபக்ட். மயக்கமென்ன படத்தில் வரும் காதல் என் காதல் பாடலிலும் கூட). பாடல் மனதை ஈர்ப்பது என்னவோ உண்மைதான். ஆனால் சோகப்பாடலை ஆறு நிமிடங்கள் நீட்டியிருக்க வேண்டுமா...? சுருக்கமாக மூன்றரை நிமிடங்களில் முடித்திருந்தால் இன்னும்கூட அதிகம் ரசித்திருக்கலாம்.
இன்னும் என்ன தோழா...
ஈழ மக்களுக்காக அர்பணிக்கப்பட்ட பாடல் என்று சொல்லப்படுகிறது. (புளி வியாபாரம்...?) பா.விஜய் கைவண்ணத்தில் வரிகள் எல்லாம் உணர்ச்சி மயமாக இருக்க, அதற்கு தகுந்தபடி இசையமைக்க தவறியிருக்கிறார் ஹாரிஸ். உணர்ச்சிகரமான பாடலுக்கு இப்படியா மென்மையாக இசையமைப்பது...? பாடல்வரிகள் நிறைய இடங்களில் கருத்தாழமிக்கதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கின்றன. பாடலின் இடையே வரும் ட்ரம்ஸ் இசை ரசிக்க வைக்கிறது.
Rise of Damo
வழக்கமாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் புரியாத வரிகளை அறிமுகப்படுத்துவார். அந்தமாதிரி போல என்று நினைத்தால் பாடலே சீனமொழிப்பாடலாம். வரிகள் புரியாவிடினும் அழகான மெலடி. இது கிறிஸ்தவ ஆலயங்களில் பாடப்படும் துதிப்பாடலின் மெட்டு என்று கேள்விப்பட்டேன். இடையிடையே சிவாஜி கணேசனின் “மனிதன் மாறிவிட்டான்...” பாடலையும், எம்.ஜி.ஆரின் “புதிய வானம்... புதிய பூமி...” பாடலையும் நினைவூட்டுகிறது. பாடல் வரிகளின் தமிழாக்கம் – மதன் கார்க்கி வலைப்பூவில்.
எனக்குப் பிடித்த பாடல்: எல்லே லாமா...
எனக்குப் பிடித்த வரிகள்:
பூ பூத்த சாலை நீ... புலராத காலை நீ...
விடிந்தாலும் தூக்கத்தில் விழியோரத்தில் வரும் கனவு நீ...
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா...?
இரவோன்றே போதுமென்று பகலிடம் சொல்வோமா...?
பனிமூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா...?
அந்த பகைமூட்டம் வந்து பனியாமல் எங்கள் இருவிழி உறங்குமா...?
என்னுடைய ரேட்டிங்: 6.5 / 10
ஏற்கனவே, நிறைய பேர் சொன்னது போல ஹாரிஸ் ஜெயராஜின் பழைய பாடல்களை நினைவூட்டுகின்றன பாடல்கள். ஆனால் பொதுவாக ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் கேட்டதும் பிடிக்காது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|