Showing posts with label half. Show all posts
Showing posts with label half. Show all posts

8 February 2014

பண்ணையாரும் பத்மினியும்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மறுபடியும் விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ஜோடியில் ஒரு படம். சென்ற வாரமே பண்ணையாரும் பத்மினியும் பார்ப்பதென்று முடிவு செய்தாயிற்று. திரையில் ஐஸ்வர்யாவின் பெயர் நான்காவதாய் தோன்றியபோது ஏதோ உறுத்தலாக இருந்தது.

ஒரு பத்மினி கார். அதனுடன் அதன் உரிமையாளருக்கும் ஓட்டுநருக்கும் உள்ள உணர்வுப்பூர்வமான தொடர்பு தான் கதை.

டைட்டிலில் விஜய் சேதுபதியின் பெயர் முதலாவதாக வந்தாலும் கூட ஜெயபிரகாஷ், துளசி, அப்புறம் அந்த கார் எல்லோருக்கும் அடுத்தபடியாகத்தான் விஜய் சேதுபதி. பாலசரவணனுக்கு படத்தில் பீடை என்று பட்டப்பெயர். சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். பல காட்சிகளில் எரிச்சல். ஜெயபிரகாஷ், துளசி இருவரும் தான் படத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள். கெளரவ தோற்றங்களில் அட்டகத்தி தினேஷ் மற்றும் சினேகா.

நாயகி வேண்டும் என்ற கட்டாயத்திற்காக ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் ரம்மி, ப.ப தோற்றங்களில் ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது கடினம். ரம்மியில் சின்ன ஸ்டிக்கர் பொட்டு, அதற்கு மேல் சிறிய திருநீர்க்கீற்று. ப.ப.வில் கொஞ்சம் பெரிய சைஸ் பொட்டு, திருநீர் கிடையாது. ரம்மியில் நேர் வகிடு. ப.ப.வில் பக்க வகிடு, ரம்மியை விட ப.ப.வில் கழுத்துமணி நீளம் அதிகம். என்னுடைய தேர்வு ரம்மிதான்...! ஒன்று மட்டும் நிச்சயம், எந்த படமாக இருந்தாலும் சரி. ஐஸ்வர்யாவின் கண்கள் விரியும்போது மட்டும் நான் காணாமல் போய்விடுகிறேன்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு நல்வரவு. பின்னணி இசையைக் கேட்டால் புதியவர் என்று சொல்ல முடியாது. பாடல்களில் ஒனக்காக பொறந்தேனே நின்று பேசக்கூடிய ஒன்று.

பீரியட் படம் எடுப்பவர்கள் சுவரொட்டி, சுவர் விளம்பரங்கள் விஷயத்தில் மட்டும் மிகவும் கவனமாக செயல்படுகிறார்கள். பழைய சிவாஜி, எம்ஜியார் பட போஸ்டர், அண்ணாமலை போஸ்டர் என்று காட்டுவதெல்லாம் சரி. ஆனால் வேறு சில விஷயங்களில் கவனத்தை தவறவிடுகிறார்கள். ப,ப.வை எடுத்துக்கொண்டால் ஊருக்குள் முதன்முறையாக கார் வருகிறது. ஊர்க்கார சிறுவர்கள் காருக்கு பின்னே ஓடிவந்து ஆரவாரிக்கிறார்கள். ஊருக்கு முதன்முறையாக பேருந்து வரும்போதும் ஆரவாரம் செய்கிறார்கள். ஆனால் அதே ஊரில் மகேந்திரா வேன் ஒன்று கவனிப்பாரில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிதாக காரில் பயணிப்பவர்கள் நிறைய பேருக்கு அதன் கதவை எப்படி திறப்பது, எப்படி மூடுவது என்பது இரண்டொரு நாட்களுக்கு புரியாத புதிராக இருக்கும். ஜெயப்பிரகாஷ் முதல்முறை பத்மினியில் ஏறும்போதே பழக்கப்பட்டவர் போல ஏறி அமர்கிறார். 

படத்தின் பலம் ஜெயபிரகாஷ் – துளசி பாத்திரங்களுக்கு இடையே உள்ள காதல் தான். குறும்படத்தில் கூட அந்த பகுதி கிடையாது. ஒருவரை ஒருவர் செல்லமாக சீண்டிக் கொள்வது, தமது இணை வருத்தமாக இருக்கும்போது தமது வருத்தத்தை மறைத்துக்கொண்டு ஆறுதலாக பேசுவது, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பது என்று கணவன் மனைவியின் மன உணர்வுகளை அபாரமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். அதிலும் நிறைய வசனங்கள் இல்லாமல் சின்னச் சின்ன முகபாவனைகளிலேயே சொல்லியிருப்பது பாராட்டக்கூடியது. பண்ணையாரின் மனைவியாக நடித்த துளசி விருது பெறத் தகுதியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பண்ணையாரும் பத்மினி படத்தின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், அப்படத்தில் காட்டப்படும் உணர்வுப்பூர்வமான தருணங்களில் ஒன்றையாவது நீங்கள் உங்களுடைய நிஜவாழ்க்கையில் பெற்றிருந்தால் தான் அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவும். இல்லையென்றால் சிரிப்புதான் வரும். உதாரணத்திற்கு, உங்கள் கிராமத்து பெரியவர் ஊரிலேயே முதன்முறையாக கார் வாங்கியிருக்கிறாரா...? நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அந்த காருக்கு பின்னே ஓடியிருக்கிறீர்களா...? அதில் ஒருமுறையாவது பயணம் செய்ய வேண்டுமென ஏங்கியிருக்கிறீர்களா...? இவையெல்லாம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாய்த்திருக்காது. குறைந்தபட்சம் கார் வாங்க வேண்டும் என்ற வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிய நெகிழ்ச்சியோடு அதனுள் அமர்ந்து கண் கலங்கியிருக்கிறீர்களா...? ஏதாவது ஒரு கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லியிருந்தால் நிச்சயமாக பண்ணையாரும் பத்மினியும் உங்களுக்கு ஒரு உணர்ச்சிக்குவியலாக இருக்கக்கூடும். தவற விடாதீர்கள்...!

மற்றவர்களை பொறுத்தவரையில், இயக்குநர் மன்னிப்பாராக. இரண்டரை மணி நேரம் அரங்கில் அமர முடியவில்லை. ஒரு குறும்பட அளவு கதையை முழுநீளப்படமாக எடுப்பது மிகப்பெரிய சவாலான காரியம் தான். ஆனால் ஏன் குறும்பட இயக்குநர்கள் இரண்டரை மணி நேரங்கள் நீட்டி முழக்கி தங்களை மென்மேலும் சிரமப்படுத்திக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலப்பட பாணியில் இரண்டு மணிநேரத்திற்கு குறைவாக முடிக்கலாம் இல்லையா....? நிறைய பேர் சீக்கிரமா படத்தை முடிங்கடா என்று புலம்புவதை காதார கேட்க முடிந்தது. 

அடுத்தடுத்து வெளியானதால் ரம்மி, ப.ப. படங்களைப் பற்றிய சிறிய ஒப்பீடு. இரண்டுமே பீரியட் படங்கள். முந்தையது 1987. இது 1992. செல்போன் என்ற சாதனத்தை வைத்து லாஜிக் பின்ன முடியாத காரணத்திற்காக பீரியட் படங்கள் எடுக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. ரம்மியில் காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட், வன்முறை எல்லாமிருக்கிறது. ப.ப.வில் அப்படியில்லை மற்றவை இருந்தாலும் கூட நெகிழ்ச்சிகள் மட்டும் பிரதானமாக நிரம்பியிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ரம்மி ஒரு மோசமான படம். ஆனால் அதன் காட்சிகள் ஆங்காங்கே ரசிக்க வைத்தன. ப.ப நேரெதிர். ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல படம். ஆனால் காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கின்றன. மொத்தத்தில் இரண்டும் சராசரி படங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 February 2014

ரம்மி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பொங்கல் படங்களுக்குப் பிறகு கோலி சோடா தவிர்த்து சொல்லிக்கொள்ளும் வகையில் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. நன்றாக இருப்பதாக பேசப்பட்டாலும் ஏனோ கோ.சோ பார்க்கத் தோன்றவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து விருந்து கொடுப்பதுபோல அமைந்திருக்கிறது பிப்ரவரி மாதம்.  ரம்மி சேர்ந்தாற்போல விஜய் சேதுபதியும் – அட்டகத்தி ஐஸும் அடுத்தடுத்து இரண்டு படங்களில். முதலாவது ரம்மி. அடுத்தது பண்ணையாரும் பத்மினியும்.

கதை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதலில் ஐஸ்வர்யாவைப் பற்றி சொல்லிவிடுகிறேன். நார்கொடிக்ஸ் கண்ட்ரோல் பியுரோவிடம் சொல்லி ஐஸ்வர்யாவின் கண்களை ஆராய வேண்டும். போதையேற்றும் மூலப்பொருள் ஏதேனும் அவற்றுள் இருக்கக்கூடும். இல்லையேல் அவருடைய கண்களை பெர்முடா வட்டங்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட வேண்டும். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா சரக்கை போட்டுவிட்டு அவளோட ரெண்டு கண்ணும் அப்படியே வயித்துக்குள்ள பாயுது மச்சி என்பார். தெளிவாகவே சொல்கிறேன், அதே தான். ஆனால் ஒரு விஷயம், இதுவரை ஐஸ்வர்யா நடித்த நான்கு படங்களிலும் அவருக்கு கதைப்படியோ அல்லது என்ன எழவோ சரியான அலங்காரம், உடையமைப்பு வாய்க்கவில்லை. ம்ம்ம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா கடக்க இருக்கிற தூரம் நம் கண்களுக்கு எட்டாதது. காத்திருக்கலாம்.

1987ல் நடைபெறுகிற கதை. சிவகங்கை மாவட்ட அரசு கல்லூரியில் பயிலும் நாயகர்கள். ஆளுக்கொரு காதல். காமெடிக்கு பரோட்டா சூரி. சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் கதையில் ஆங்காங்கே அரிவாளை காட்டி அலர்ட் செய்கிறார்கள். கதையின் பிற்பகுதியில் காதல்களுக்கு சிக்கல்கள் துவங்குகின்றன. அது எப்படி ரத்தக்களறியாகி நிறைவு பெறுகிறது என்பதை முடிந்தால் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

துவக்கத்தில் கொஞ்சம் சலிப்பூட்டாமல் நகர்கிறது படம். கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள், (வழக்கமாக மொக்கை போடும்) பரோட்டா சூரியின் சுமாரான நகைச்சுவை, கல்லூரி, விடுதி சம்பந்தமான இயல்பான காட்சியமைப்புகள், விஜய் சேதுபதி – இனிகோ பிரபாகரின் நட்பு என்று எல்லாம் சேர்த்து ஒரு தடவை பார்க்கலாம் என்பது போல இருந்தது. படம் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும்வழியில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு கூட தொற்றிக்கொள்கிறது. ஆனால் பெரிதாக ட்விஸ்ட் எதுவுமில்லாமல் அதே சமயம் மிகப்பெரிய ட்விஸ்டை வைத்துவிட்ட நினைப்பில் படத்தை முடித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ரம்மியை ஒரு முழுமையான திரைச்சித்திரமாகவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இனிகோவிற்கு முதல் நிலை நாயகனாக பிரமோஷன் கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதி இரண்டாம் நாயகனாக வந்தாலும் கூட அரங்குகளில் விசில் பறக்கிறது. காயத்ரி மொக்கை மூஞ்சி. பரோட்டா சூரியை சந்தானத்திற்கு இணையான நகைச்சுவை நடிகர் என்று முன்னிறுத்தும்பொருட்டு ஆரவாரமான தொடக்கக்காட்சியெல்லாம் வைக்கிறார்கள். ஜோ மல்லூரியும் அவருடைய தம்பிகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். டைகர் கார்டன் தங்கதுரை, சென்றாயன் போன்ற நல்ல மனித வளங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. 

கூட மேல கூட வச்சு என்ற பாடல் வந்தனாவின் குரலில் மனதிற்குள் ஐஸ்க்ரீமாய் கரைகிறது. மற்ற பாடல்கள் அரங்கை விட்டு ஓடவைக்கும் வகை. பாடல் காட்சிகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் அபாரம். ஆனால் எல்லா பாடல்களிலும் ஒரே இடத்தையே காட்டுவது போல இருக்கிறது.

கதைப்படி ஐஸ்வர்யா செல்வச்சீமாட்டி. ஆனால் அவருடைய கழுத்துமணியும், உடையும் இன்னபிறவும் ஏழைப்பெண்ணை பிரதிபலிக்கின்றன. ஒருவேளை அவர் பெரிய வீட்டுப்பெண் என்பதையே ஒரு ட்விஸ்ட் என்ற நினைப்பில் வைத்திருக்கலாம். 

நான்கு பிரதான வேடதாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தாலும் கூட ஏனோ அவர்களுடைய கதைகளை சரிவர பிணைக்க தவறியிருக்கிறார்கள். உதாரணமாக, தன்னை சகோதரன் போல நினைக்கும் இனிகோவிடம் விஜய் சேதுபதி தன்னுடைய காதலைப் பற்றி சொல்லவில்லை. போலவே, இனிகோ காதலை காயத்ரி ஏற்றுக்கொண்ட விஷயமும் விஜய் சேதுபதிக்கு தெரிந்திருக்காது. ஐஸ்வர்யாவும் காயத்ரியும் ஒன்றுவிட்ட அக்காள் தங்கைகள். ஆனால் க்ளைமாக்ஸில் மட்டும்தான் பேசிக்கொள்கிறார்கள்.

காதலும் சரி, வன்முறையும் சரி மனதில் அழுத்தமாக பதியவில்லை. கடைசியில் ஐஸ்வர்யா எடுக்கும் உணர்வுப்பூர்வமான முடிவு கூட சிரிப்பையே வரவழைக்கிறது.

ரம்மி – காதல், சுப்ரமணியபுரம் போன்ற புலிகளை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை. கொஞ்சம் விலகியிருந்தாலும் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி போன்ற அபத்த சினிமாக்களில் சேர வேண்டியது. கடைசியில் ரத்தம் தெறிக்க நியாயத்தை நிலைநாட்டினாலும், இஸ்லாமிய செய்யது காதலிக்கக் கூடாது, பெற்றோரை இழந்த / கிறிஸ்தவ ஜோசப் காதலிக்கக் கூடாது ஆனால் ஒரே மதத்தை சேர்ந்த பெண் வீட்டிற்கு நிகரான சமூக அந்தஸ்து உள்ளவரென்றால் காதலிக்கலாம் என்று சொல்கிறார்களோ என்றெல்லாம் தோன்றுகிறது. ரம்மி – 1987ல் நடைபெறும் கதை மட்டுமல்ல, வெளிவந்திருக்க வேண்டிய படமும் கூட.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment