29 May 2017

பிரபா ஒயின்ஷாப் – 29052017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு கிழக்கில் (உண்மையான) அதிரடி தள்ளுபடி தந்தார்கள் நினைவிருக்கிறதா ? அப்போது வாங்கிய புத்தகங்கள் படிக்காமல் இருக்கின்றன. செக்ஸ் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் கூட நான்கைந்து வாங்கியிருந்தேன். (கிழக்கில் ஸாஃப்ட் எராட்டிக் புத்தகங்கள் வெளியிடும் உத்தேசம் இருப்பதாக பத்ரி ஒரு ஃபேஸ்புக் உரையாடலில் சொல்லியிருக்கிறார்). அவற்றிலிருந்து ஓம் ஷின்ரிக்கியோ எனும் புத்தகத்தை எடுத்தேன். ஜப்பான் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஹிரோஷிமா, நாகசாகி. பின்பு டெக்னாலஜி. அவர்களின் உழைப்பு, உயர்வு. ஜப்பானில் ஒரு வருடகாலம் ஆன்சைட் அனுபவித்துவிட்டு வந்த நண்பர் ஒருவர் உலகிலேயே கவர்ச்சிகரமான பெண்கள் ஜப்பானிய பெண்கள் தான் என்றார். அதைப் பற்றியெல்லாம் இல்லாமல் ஜப்பான் – மத தீவிரவாதம் என்ற வித்தியாசமான காம்பினேஷனில் இருந்ததால் வாங்கி வைத்திருந்தேன். அநேகமாக இந்த வருடம் படித்த முதல் அபுனைவு. நூறு பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம். ஆனால் தொட்டதும் வழுக்கிக்கொண்டு போகிற சுவாரஸ்யம். 

ஜப்பானில் ஒரு சாமியார். முழுப்பெயர் உச்சரிப்பதற்கு சிரமம் என்பதால் ஷோகோ என்று சுருக்கமாக வைத்துக்கொள்வோம். ஷோகோ ஹிந்து மதத்தையும், பெளத்த மதத்தையும் கலந்து, ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்குகிறார். அதுதான் ஓம் ஷின்ரிக்கியோ ! உண்மையான மதம் என்று பொருள். ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்டில் துவங்கிய ஷோகோவின் சாமியார் வாழ்க்கை சில வருடங்களிலேயே அபார வளர்ச்சி பெறுகிறது. ஷோகோவின் ஆசாமியிலிருந்து சாமி கதையில் இந்திய சாமியார்களிடம் உள்ள சில பண்புகள் ஒத்துப்போகின்றன. ஷோகோ சாமியாராக ஃபார்ம் ஆனபிறகு செய்த முதல் காரியம், தன் அமைப்பின் பெயரில் சத்துபான விற்பனையில் இறங்கியது. பாபா ராம்தேவின் பதாஞ்சலி பிஸினஸ் நினைவுக்கு வருகிறதா ? அடுத்த காரியம், ஒரு பெரிய சிவலிங்கத்தை தன் ஆசிரம அறையில் அமைத்தது. இது ஈஷா ஜக்கி வாசுதேவ். ஆனால் இந்த ஷோகோ ஒரு மனநோயாளி போல தெரிகிறது. ஏதோ ஆசிரமம் அமைத்தோம் ஜாலியாக இருந்தோம் என்றில்லாமல் உலகத்தையே அழிக்க நினைத்திருக்கிறார். ஒரு பக்கம் ஆன்மிக இயக்கத்தை வளர்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் ரஷ்யாவிலிருந்து கள்ளத்தனமாக ஆயுதங்களையும் வாங்கிக் குவித்திருக்கிறார். ஆயுதங்கள் என்றால் கத்தி, துப்பாக்கி அல்ல. ஹெலிகாப்டரெல்லாம் வாங்கி மறைத்து வைத்திருக்கிறார். 

ஜப்பானில் Religious Corporation Status என்று ஒன்று உள்ளது. மத இயக்கம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் சட்டரீதியாக அதன் மீது கை வைப்பது அத்தனை எளிதல்ல. அது ஷோகோவுக்கு சாதகமாய் அமைந்துவிட்டது. ஆய்வுக்கூடம் அமைத்து ரசாயன ஆயுதங்கள் தயார் செய்திருக்கிறார். 1994ம் ஆண்டு ஸாரின் (Sarin) எனும் ரசாயன தாக்குதல் நிகழ்த்தியதில் ஏழு பேர் இறந்து போயிருக்கிறார்கள். அப்போது பல கோணங்களில் ஆராய்ந்த ஜப்பானிய காவல்துறைக்கு இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. உற்சாகமடைந்த ஷோகோ அடுத்த வருடமே டோக்கியோ சுரங்க ரயில்பாதையில் ஒரு ரசாயன தாக்குதல் நிகழ்த்துகிறார். பதினான்கு பேர் இறந்து போயிருக்கிறார்கள். ஏராளமானவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. சுதாரித்துக்கொண்ட ஜப்பான் காவல்துறை நூல் பிடித்துப்போய் ஷோகோவை பிடித்துவிட்டது. விசாரணையின் இறுதியில் ஷோகோவுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதிலே நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால் ஷோகோவை இன்னமும் தூக்கிலிடவில்லை. ஷோகோவின் வயது 62. இன்னும் சில வருடங்களில் அவரே கூட இயற்கை எய்திவிடலாம். 

ஓம் ஷின்ரிக்கியோ புத்தகத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். முழுக்க படித்துப் பாருங்கள். சில இடங்களில் சமீபத்தில் வெளிவந்த இருமுகன் படத்தை நினைவூட்டுகிறது.

பெர்முடா முக்கோணம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான விமானங்களையும், கப்பல்களையும் காவு வாங்கியிருக்கிறது. சென்னையிலேயே ஒரு பெர்முடா முக்கோணம் இருக்கிறது தெரியுமோ. சென்டிரல் ரயில் நிலையம், பாரிமுனை பேருந்து நிலையம், பீச் ஸ்டேஷன் – இவை மூன்றுக்கும் உட்பட்ட நிலப்பரப்புதான் சென்னையின் பெர்முடா முக்கோணம். இப்பகுதியைக் கடக்கும்போது மர்மமாக உங்கள் செல்போன்கள் தொலைந்து போகலாம். என்னுடைய பிரசித்தி பெற்ற நோக்கியா 3110c மாடல் போன் பீச் ஸ்டேஷனில் வைத்துதான் தொலைந்துபோனது. இவர்களுடைய டார்கெட், பேருந்தைக் கண்டதும் அவசர, அவசரமாக நெரிசலில் நுழைந்து பேருந்து ஏறுபவர்கள்தான். சில வாரங்களுக்கு முன்பு ஒருநாள், சென்டிரலில் நெரிசல் மிகுந்த ஒரு பேருந்தில் விடாப்பிடியாக ஏறிவிட்டேன். என்னுடையது பாதுகாப்பாக இருந்தது. இன்னொரு இளைஞரின் போனைக் காணவில்லை. பேருந்து நகரத்துவங்கிவிட்டது. அந்த நபர் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் சந்தேகப்பார்வை பார்க்கிறார். சக பயணிகள் ஆளாளுக்கு ஒரு இலவச அட்வைஸ் கொடுக்கிறார்கள். ஒரு ஆசாமி அதெல்லாம் அஷ்டு அப்பயே இறங்கியிருப்பான் சார். கீழே இறங்கிப் போய் தேடுங்க என்கிறார். அதற்குள் இன்னொருவர் தன்னுடைய போனிலிருந்து டயல் செய்துகொள்ளச் சொல்கிறார். டயல் செய்துக்கொண்டிருக்கும் போதே கீழே இறங்கித் தேடச் சொன்ன ஆசாமி நைஸாக படியில் இறங்குகிறார். செல்போனை தொலைத்தவர் குரல் எழுப்பி, எல்லோருமாக சேர்ந்து அந்த ஆளை பிடித்து மொத்தப்போகும் போது, போனை எடுத்து என் காலுக்கருகே போட்டுவிட்டு அங்கே இருக்கு பாருங்க என்று யோக்கியத்தனமாக எஸ்கேப் ஆகப்பார்த்தார் மிஸ்டர்.திருடர். அவர்தான் எடுத்தார் என்பது தெரிந்தாலும் செல்போன் கிடைத்துவிட்டதால் திருடரை அடிக்காமல் விட்டுவிட்டோம். வெளியூரிலிருந்து வருபவர்கள் அதிகம் புழங்கக்கூடிய பகுதி இது. வெளியூர்க்காரர்கள் சென்னை வரும் சமயங்களில் முக்கோணத்தை ஜாக்கிரதையாக கடக்க வேண்டும். எனக்குத் தெரிந்து பெர்முடா முக்கோணம், சென்னை முக்கோணம் என்றில்லை. எல்லா முக்கோணங்களையுமே ஜாக்கிரதையாகத்தான் கடக்க வேண்டும்.

வேலு பிரபாகரனின் காதல் கதை மீண்டும் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான சமயத்தில் நான் உட்லேண்ட்ஸ் திரையரங்கில் பார்த்தேன். நான் சிறு வயதிலிருந்த போது வே.பி. கடவுள் என்று ஒரு படம் எடுத்திருந்தார். கமர்ஷியல் கலந்த பிரச்சாரப்படம். அப்பொழுதெல்லாம் அம்மன் படங்கள் அடிக்கடி வெளிவரும். கடவுள் படத்தில் அதே போன்ற ஒரு பாடல் உண்டு. அதன் காரணமாக நிறைய பெண்கள் தெரியாமல் கடவுள் படத்திற்கு வந்துவிட்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்து சில வருடங்கள் கழித்து புரட்சிக்காரன் எடுத்தார். சுத்தமான பிரச்சாரப்படம். அந்த சமயத்தில் திராவிடர் கழக விழாக்களில் புரட்சிக்காரன் பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதில் மண்ணுக்கு நாமதான் சொந்தக்காரங்க, தூங்கும் புலியை (பாரதிதாசன் பாடல்) ஆகிய பாடல்களை இப்போது கூட சில சமயங்களில் கேட்பதுண்டு. வித்யாசாகர் இசை. சில வருடங்கள் கழித்து, ஞான ராஜசேகரன் பெரியார் படத்தை இயக்கினார். அப்போது அப்படத்திற்கு இளையராஜாவை இசையமைக்கக் கேட்டு, அவர் பெரியாருக்கு இசையமைக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அதே சமயத்தில் வே.பி.யின் காதல் கதை (காதல் அரங்கம்) எனும் பிட்டு படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். வே.பி.யின் காதல் கதை படத்தின் துவக்கத்தில் ஒரு நீண்ட பிரசங்கம் செய்கிறார் இயக்குநர். அதன்பிறகு இடையிடையே சில பிரச்சார / புரட்சி வசனங்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வே.பி.யின் காதல் கதை ஒரு சுத்தமான பிட்டுப்படம். குறிப்பாக அதில் வரும் வேலைக்கார பெண்மணி போர்ஷன் எல்லாம் சரோஜா தேவி ரக பிட்டு. பிட்டுப்படம் என்பதாலேயே அதில் இடம்பெற்ற ஒரு அபாரமான பாடல் (காட்டுக்குள்ளே தொடங்கியதே காதல் வேள்வி) வெளிச்சத்திற்கு வராமல் போய்விட்டது. இப்போதும் நான் அடிக்கடி முனுமுனுக்கும் அந்தப்பாடல் உங்களுக்காக –

வே.பி.யின் காதல் கதையில் இன்னொரு பாடலை இளையராஜாவே பாடவும் செய்திருக்கிறார். ரசத்த ஊத்து பங்காளி அதுல பூனை கெடக்குதான்னு பாப்போம் என்பதுபோல அடுத்து வெளிவரவிருக்கும் வே.பி.யின் காதல் டைரியையும் பார்க்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 May 2017

மசினகுடி - முப்பத்தியாறு வளைவுகளிலே

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: மோயாறு பள்ளத்தாக்கு

மசினகுடியில் பிரத்யேக அனுபவமாக சிகூர் அருவி / மோயாறு பள்ளத்தாக்கை பார்த்துவிட்டோம். அதைத் தாண்டி வேறெதுவும் இடங்கள் இருப்பதாக தெரியவில்லை. பைக்காரா சென்றால் அங்கே ஒரு அணை, ‘அனுமதி இல்லைபலகை, சிடுசிடு அதிகாரி எல்லாம்தானே இருக்கப்போகிறது. மசினகுடியிலிருந்து முப்பத்தியாறு கொண்டையூசி வளைவுகளில் ஊட்டி அமைந்திருக்கிறது. ஊட்டியின் எல்லையை மட்டும் தொட்டுவிட்டு வந்துவிடலாம் என்பது திட்டம்.

நீளும் வனச்சாலை
மைசூரு – ஊட்டி சாலையில் பன்னிரண்டு கி.மீ. ஆள் நடமாட்டம் அதிகமில்லாத காட்டுவழிச் சாலை. கிட்டத்தட்ட பந்திப்பூர் வனச்சாலையில் பார்த்த அதே காட்சிகள். மான்கள், மயில்கள், குரங்குகள். பந்திப்பூர் என்பது கர்நாடக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி. இது தமிழ்நாடு ! பந்திப்பூரிலிருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இங்கே இல்லை. சஃபாரி ஜீப்புகள் இல்லை, மேலைநாட்டு பயணிகள் இல்லை. கொஞ்ச தூரம் செல்ல செல்ல உதகையின் பிரம்மாண்ட மலைகள் தெரிய ஆரம்பித்தன. 

பைசன் பாயிண்டிலிருந்து
வனச்சாலையின் முடிவில் பைசன் பாயிண்ட் எனும் நோக்குமுனை வருகிறது. கொண்டையூசி வளைவுகளுக்கு முன்னதாக ஒரு சிறிய ஓய்வு எடுத்துக்கொள்வதற்கு உகந்த இடம். இங்கிருந்து பார்த்தால் மலை மீது ஊர்ந்து செல்லும் காட்டெருமைகளை பார்க்கலாம் என்கிறார்கள். 

கொண்டையூசி வளைவுகள் துவங்குகின்றன. மொத்தம் முப்பத்தியாறு. ஒரு ஒப்பீட்டுக்காக சொல்கிறேன். கொல்லியின் உயரம் சுமார் ஆயிரத்து இருநூறு மீ., எழுபது கொ.ஊ வளைவுகள். ஊட்டியின் உயரம் இரண்டாயிரம் மீட்டருக்கு மேல், ஆனால் முப்பத்தியாறே வளைவுகள். அப்படியென்றால் வளைவுகள் எவ்வளவு உக்கிரமாக இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். மலையேறத் துவங்குகிறோம். அதே சமயம், மழைச்சாரல் துவங்குகிறது. மழை துவங்கியதா அல்லது மழையின் எல்லைக்குள் நாங்கள் நுழைந்துவிட்டோமா என்று தெரியவில்லை. ஏனென்றால் அடிவாரம் வரை மழையில்லை. மேலே ஏற, ஏற ஒரே பனிமூட்டமாக இருக்கிறது. மேகங்களுக்கு உள்ளே புகுந்து வெளியே வருகிறோம். டைட்டானிக் முக்கிலிருந்து கடலை ரசிப்பதுபோல பரவசமடைகிறோம். உடலெல்லாம் சிலிர்க்கிறது. பரவசம் மட்டுமல்ல. ஊட்டி குளிர் அப்படி. போதாததற்கு மழை வேறு. 

மலையழகு !
ஒவ்வொரு வளைவிலும் ஒரு பெரிய கண்ணாடி வைத்திருக்கிறார்கள், சாலையின் மறுபுறம் வரும் வாகனங்களை தெரிந்துகொள்வதற்காக. ஆங்காங்கே சில டீக்கடைகள். ஒரு குறுக்குவழி முகப்பில் ஏதோ ஒரு அருவிக்கு செல்லும் வழி. ஊட்டியில் எந்த இடங்களையும் சுற்றிப்பார்க்க வேண்டாம் என்று முன்பே முடிவு செய்திருந்ததால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்வது போல கடந்தோம். முப்பத்தியாறையும் கடந்தோம்.

ஊட்டியின் எல்லை
ஊட்டியின் மைய இணைப்புச் சாலைக்கு வந்திருந்தோம். பற்ற வைத்தோம். குளிர் தாங்க முடியாமல் அதுவே தான் எங்களை பற்ற வைத்தது. பனி படர்ந்த அந்த மலையை அண்ணாந்து பார்த்தோம். இன்னும் இருக்கிறது உயரம். கொஞ்ச நேரம் பயணித்தால் உச்சகட்டத்தை எட்டிவிடலாம். இப்போது அவசரம். பொழுது சாய்வதற்குள் மசினகுடிக்கு திரும்பியாக வேண்டும். அது மட்டுமல்ல, ஊட்டி என்பது பெரிய சம்பவம். சமயம் பார்த்து செய்யவேண்டும்.

இறங்கத் துவங்கினோம். மலைகளைப் பொறுத்தவரையில் ஏறும்போது இருக்கும் அதே பரவசம் இறங்கும்போதும் இருக்கிறது. ஏற்கனவே பார்த்து வைத்திருந்த இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். ஒரு தேநீர்க்கடை, அதையொட்டி சோளக்கடை. வாகனங்களை நிறுத்திவிட்டு இளைப்பாறினோம். தூரத்தில் எங்கேயோ ஒரு படுகர் இல்லத் திருமண இசை கேட்டது. 

மீண்டும் மசினகுடி ! தொடரில் மசினகுடி ஊர்பகுதியைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதில் விடுபட்ட ஒரு பகுதி ட்ரீம் லேண்ட் உணவகம். பேக்கரி, சூப்பர் மார்க்கெட், உணவகம் மூன்றையும் உள்ளடக்கியிருக்கிறது. விசாலமான டைனிங் ஹால். நாங்கள் போன வேளையில் அதிக கூட்டமில்லை. சூழலும் விருந்தோம்பலும் தரமாக இருந்தது. ஊட்டியிலிருந்து திரும்பியதும் இங்கேதான் மதிய உணவை சாபிட்டோம். மதிய உணவை சாப்பிடும் சமயம் மாலை ஆகியிருந்தது. 

ஊர் திரும்பும் பாதை
மறுநாள் காலையும் அதே உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு திரும்புதலுக்கு தயாரானோம். மீண்டும் பந்திப்பூர் வனச்சாலை. திரும்பிவரும் போது முதுகுப்புறத்தை காட்டியபடி ஒரு யானை காட்டுக்குள் சென்றுக்கொண்டிருந்தது. மக்கள் குழுவாக அதனை பார்த்துக்கொண்டிருந்தனர். வனச்சாலையை கடந்தபிறகு நினைவுப்பொருட்கள் வாங்கிக்கொள்ள சில கடைகள் இருக்கின்றன. போகும்போது கடந்த அதே கர்நாடக நெடுஞ்சாலைகள் திரும்பும்போது ரணமாக இருந்தன. வெயில் வேறு. அந்தி சாயும் சமயத்தில் ஆம்பூர் ஸ்டாரில் பிரியாணியை த்வம்சம் செய்தபிறகு தான் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. அந்தி சாய்ந்தது !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment