5 May 2019

சுஜாதா விருதுகள் 2019


அன்புள்ள வலைப்பூவிற்கு, 

நீண்ட நாட்களுக்குப் பிறகு, (ஏறத்தாழ ஓராண்டு) அன்புள்ள வலைப்பூவிற்கு என்று எழுதத் துவங்குவது பூரிப்பைத் தருகிறது. அத்துடன் ஒரு உவப்பான செய்தி. உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும் சுஜாதா விருதுகளில் இவ்வாண்டின் இணைய பிரிவுக்கான விருதினை நமது வலைத்தளம் பெற்றிருக்கிறது ! இவ்விருதினை வழங்கிய உயிர்மை நிர்வாகத்திற்கும், திரு.மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், தேர்வுக்குழுவில் இடம்பெற்ற எழுத்தாளர், பத்திரிக்கையாளர் யுவகிருஷ்ணா, எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் மற்றும் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

இந்த தருணத்தில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனது முதல் வாசகன் நண்பன் பொன் மகேஸ்வரன், வெறும் பத்து பேர் படிக்கும் வலைப்பூவாக இருந்த காலத்திலிருந்து எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர்கள், என் வலைப்பூவில் முதல் (தனிப்பட்ட பழக்கமில்லாத) கமெண்ட் செய்த உண்மைத்தமிழன், நேரடியாகவோ மறைமுகமாகவோ எனக்கு உந்துதலாக இருந்த கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், கே.ஆர்.பி.செந்தில், யுவகிருஷ்ணா, அதிஷா, கார்க்கி பவா, பரிசல்காரன், ஆதி தாமிரா, சேட்டைக்காரன் சக வலைப்பதிவர்கள் அலைகள் பாலா, SUREஷ் பழனியிலிருந்து, சைவக் கொத்துபரோட்டா, ஜில்தண்ணி, ஜெய்லானி, லோஷன், மைந்தன் சிவா, எப்பூடி, விக்கியுலகம் வெங்கட், சதீஷ் மாஸ், ரோமியோ ராஜராஜன், வேடந்தாங்கல் கருண், கவிதை வீதி செளந்தர், தமிழ்வாசி பிரகாஷ், நினைவில் வாழும் சீனா அய்யா, கோவை நேரம் ஜீவா, நா.மணிவண்ணன், கோகுல், மங்குனி அமைச்சர், சிரிப்பு போலீஸ், பன்னிக்குட்டி ராம்சாமி, நினைவில் வாழும் பட்டாப்பட்டி, என்னை ஒருமுறை சிக்கலில் கோர்த்துவிட்ட பிச்சைக்காரன், எனக்கு அவ்வப்போது போட்டோஷாப் உதவிகள் செய்துத்தந்த சுகுமார் சுவாமிநாதன் (பிரபா ஒயின்ஷாப் பேனர் இவர் செய்து கொடுத்ததுதான்), வீடு சுரேஷ்குமார், துவக்கக்காலத்திலிருந்து எனக்கு ஆதரவாக இருந்து வரும் அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவகுமார், ஆரூர் மூனா செந்தில், ஒருமுறை இணையத்தில் என்னைப் புரட்டியெடுத்த டெரர் கும்மி குழுவினர், அப்போது எனக்கு ஆதரவாகக் களமாடிய ரஹீம் கஸாலி, டொமைன் வாங்கும்போது உதவியாய் இருந்த பிரபு கிருஷ்ணா, அப்துல் பாஸித், தொடர்ந்து constructive criticism செய்து என்னை வழிநடத்தும் மயிலன், ஜீவன் சுப்பு அனைவருக்கும் என் நன்றிகள் ! யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். 

எல்லோருக்கும் ஷார்ட் டெர்ம் மற்றும் லாங் டெர்ம் கோல்ஸ் இருக்குமில்லையா. அதுபோல 2011ம் ஆண்டு சுஜாதா இணைய விருதினை யுவகிருஷ்ணாவும், அதற்கு அடுத்த ஆண்டு அதிஷாவும் பெற்றபோது என்றாவது ஒருநாள் இவ்விருதினை வாங்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஒரு ரகசிய லட்சியமாகவே வைத்திருந்தேன். முதல் சில வருடங்கள் விடாப்பிடியாக விண்ணப்பித்தேன். அதன்பிறகு ஒவ்வொரு முறை அறிவிப்பு வெளிவரும்போதும் பத்து நல்ல இடுகைகள் தேறுகிறதா என்று தேடிவிட்டு (விண்ணப்பிக்க பத்து சுட்டிகள் அனுப்ப வேண்டும்) அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவேன். இம்முறையும் அதேதான் நடந்தது. விண்ணப்ப தேதியைக் கடந்தபின் திரு.மனுஷ்யபுத்திரன் இணைய விருதுக்கு போதுமான விண்ணப்பங்கள் வராததால் தேதியை நீடித்திருப்பதாகவும், அப்படியும் விண்ணப்பங்கள் வராவிட்டால் இப்பிரிவையே கைவிட்டுவிடலாம் என்று முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தார். என்னை அறிந்தால் க்ளைமாக்ஸில் விக்டரிடம் அவனது மனசாட்சி, ‘இதுதான் உன் டைம். போட்டுத் தாக்கு. போட்டுத் தாக்கு’ என்று சொல்லும். அப்படியொரு குரல் எனக்குள் ஒலித்தது. அவசர அவசரமாக எனது வலைப்பூவை ஒரு வாசகனாகத் துழாவினேன். சுஜாதா விருதுகள் விதியின்படி 2018ல் எழுதிய பத்து பதிவுகளின் சுட்டிகளை அனுப்ப வேண்டும். நான் மொத்தமே 34 பதிவுகள் மட்டுமே எழுதியிருந்தேன். அவற்றிலிருந்து மிகவும் சிரத்தை எடுத்து விண்ணப்பிப்பதற்கு ஓரளவிற்கு தகுந்த பத்து பதிவுகளை தேடி அனுப்பி வைத்தேன்.

ஏப்ரல் 22ம் தேதி, மாலை 6:22க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. நான் மனுஷ்யபுத்திரன் பேசுகிறேன் என்கிறது எதிர்முனை. அவ்வளவுதான். எனக்குப் புரிந்துவிட்டது. அதற்குமேல் எனக்கு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. இதுவரை ஒரு நூறுமுறை மனுஷ்யபுத்திரனை அருகிலிருந்து பார்த்திருந்தாலும் கூட ஒருமுறை கூட பேசியதில்லை. அதனால் சட்டென அவரை சார் என்று அழைப்பதா, அய்யா என்று அழைப்பதா என்ற குழப்பத்தில் குழறினேன். பொதுவாகவே எனக்குக் கொஞ்சம் insecured feeling அதிகம் என்பதால் நான் கேட்ட செய்தி உறுதியானது தானா என்று இரண்டு முறை கேட்டு தெளிவடைந்தேன். மறுநாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தபோது, தேர்வுக்குழுவினரை அறிந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. நான் யாரால் உந்தப்பட்டேனோ, அதே யுவகிருஷ்ணா, நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கும் CSK மற்றும் ஷான் கருப்பசாமி. இணையத்தில் எழுதும் ஏராளமானவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக விளங்கும் எழுத்தாளர் சுஜாதாவின் பெயரில் அளிக்கப்படும் இவ்விருதினை பெற்றிருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடுப்பினை. 

சுஜாதாவின் பிறந்தநாளான மே மூன்றாம் தேதி கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற விழாவில் திரு.மனுஷ்யபுத்திரன் மற்றும் திருமதி.சுஜாதாவிடமிருந்து சுஜாதா இணைய விருதினை பெற்றுக்கொண்டேன்.

எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி முதல்முறை நான் தெரிந்துக்கொண்டதே ஒரு எதிர்மறையான வகையில்தான். நான் திராவிட இயக்கத்தில் பங்காற்றிய குடும்பத்திலிருந்து வந்தவன். என் தாத்தா தி.மு.க.காரர். என் அப்பா திராவிடர் கழகம். அது பாய்ஸ் திரைப்படம் வெளிவந்திருந்த சமயம். அப்போது ‘உண்மை’ இதழில் ஜென்டில்மேனில் துவங்கி இயக்குநர் ஷங்கரையும், சுஜாதாவையும் (பாலகுமாரனையும்) கடுமையாக சாடியிருந்தார்கள். பாய்ஸ் வெளிவந்தபோது நான் அது எந்த வயதினருக்காக எடுக்கப்பட்டதோ அந்த வயதிலிருந்தேன். பாய்ஸ் படத்தை நான் மிகவும் ரசித்துப் பார்த்து, அதன் காட்சி வரிசைகளை அப்படியே நினைவில் வைத்திருந்த சமயம் அது. இருப்பினும் எனக்குள்ளிருந்த இன்னொரு மனம் அந்த உண்மை இதழ் கட்டுரையையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டது. 2009ம் ஆண்டு இணையத்தில் புழங்கத் துவங்கியபோது இங்கு முற்றிலும் வேறொரு காட்சியைக் கண்டேன். இங்குள்ள பெரும்பாலானவர்கள் அவரை வாத்தியார் என்று சிலாகிக்கிறார்கள். அதன்பிறகுதான் அவரைப் படிக்கவே துவங்குகிறேன். நான் படித்த முதல் சுஜாதா புத்தகம் – என் இனிய இயந்திரா ! அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. PDF வடிவில் அந்த புத்தகத்தை என் பழைய கணினியில் மாலை நேரம் படிக்கத்துவங்கி, இருண்டபிறகு அறையில் மின்விளக்கை உயிர்பிக்கக் கூட ஏழாமல் முழுமையாக வாசித்து முடித்தேன். அதன்பிறகு அவரது நூல்கள் ஒவ்வொன்றாக வாசிக்கவும், வியக்கவும் துவங்கினேன். அவரிடம் சரணடைந்தேன். எனது மகள் பெயர் நிலா, மகன் பெயர் வசீகரன். அவருக்காகத் தான் வைத்தேன் என்றால் அது உட்டாலக்கடி. ஆனால் அவரது தாக்கம் அப்பெயர்களை சூட்டியதில் உண்டு என்பது உண்மை. (என் இனிய இயந்திராவின் நாயகி பெயர் நிலா, பாரதிராஜா கண்களால் கைது செய் படத்தில் அறிமுகப்படுத்திய நாயகனுக்கு சுஜாதா சூட்டிய பெயர் வசீகரன்). 

யுவகிருஷ்ணா, அதிஷாவிற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் சுஜாதா இணைய விருதை கவனித்து, அது தகுதியான நபர்களுக்கே வழங்கப்படுகிறது என்ற மனநிறைவை அடைந்திருக்கிறேன். இம்முறை மற்றவர்களுக்கு அந்த மனநிறைவு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அப்படி மனநிறைவை அடையாதவர்களை என் எழுத்தின் மூலம் கன்வின்ஸ் செய்ய வேண்டும் என்பதே என் முதல் பணியாக கருதுகிறேன். சிலருக்கு செய்த சாதனைக்காக விருது கிடைக்கும், சிலருக்கு செய்யப்போகும் காரியங்களுக்காக அதாவது இனியாவது நீ பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கிடைக்கும். நான் இரண்டாவது காரணத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றே புரிந்துகொள்கிறேன். அதனை செயல்படுத்தும் பொருட்டு இதோ உடனடியாக மீண்டும் எனது வலைப்பூவை உயிர்ப்பிக்கிறேன்.


என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்

Post Comment

16 July 2018

பிரபா ஒயின்ஷாப் – 16072018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது.

கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும்பாலான இந்தியர்களைப் போல உலகக்கோப்பை இறுதிப்போட்டி மட்டும் பார்க்கும் பழக்கம் என்னிடமுண்டு. 2002ம் ஆண்டு உலகக்கோப்பையில் துவங்கிய பந்தம் அது. அந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனும், பிரதான அணியுமான ஃபிரான்ஸை வென்று அதிர்ச்சியளித்தது செனகல் என்ற குட்டி அணி. அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. இறுதிப்போட்டியில் ப்ரெஸில், ஜெர்மனி அணிகள் மோதி ப்ரெஸில் வென்றது. அதுமுதல் ப்ரெஸில் அணியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, அதன்பிறகு ப்ரெஸில் ஒரு உலகக்கோப்பையைக் கூட வெல்லவில்லை. இம்முறை இறுதிப்போட்டி தவிர்த்து மேலும் சில போட்டிகளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது (புது டிவி !).

கால்பந்து போட்டிகளைப் பொறுத்தவரையில் இரண்டு அணிகளில் ஏதேனும் ஒன்றின் மேல் அபிமானம் இருந்தாலொழிய போட்டியில் ஆர்வம் இருக்காது. இருபது பேர் சேர்ந்து ஒற்றைப் பந்தை அலைக்கழிப்பதை சுரத்தில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். என்னதான் விளையாட்டோ, என்று அரை நொடி நேரம் கவனத்தைத் திருப்பினால் யாரேனும் ஒருவர் கோல் போட்டிருப்பார். போலவே கால்பந்தின் சுவாரஸ்யம் இரண்டு அணிகளில் யாரேனும் ஒருவர் முதல் கோல் போடும் வரைதான். அதன்பிறகு சீக்கிரத்தில் அடுத்த அணி பதில் கோல் போடவில்லை என்றால் போரடிக்கும். மாறாக, முதல் அணியே இரண்டாவது கோலையும் போட்டுவிட்டால் க்ளோஸ். அதே சமயம், நிறைய மாட்சுகளில் கடைசி சில நிமிடங்களில் கூட ஆட்டத்தின் திசை மாறி, அதுவரை அடி வாங்கிக் கொண்டிருந்த அணி வெற்றி பெறும். இரவு பதினொன்றரை மணிக்கு நடைபெற்ற நிறைய போட்டிகளை முதல் கோல் மட்டும் பார்த்துவிட்டு தூங்கி எழுந்து பார்த்தால், முதல் கோல் அடித்த அணி தோற்றிருக்கும். 

கிரிக்கெட் ரசிகர்கள் ஏதேனும் ஒரு கால்பந்து போட்டியை ஒரு பத்து நிமிடங்கள் பார்த்தால் போதும். கிரிக்கெட்டை ஏன் ஜென்டில்மேன்’ஸ் கேம் என்கிறார்கள் என்று புரியும். இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒருவர் இன்னொருவரை தள்ளிவிடுகிறார். அல்லது தள்ளிவிட்டது போல கீழே விழுகிறார்கள். லேசாக எதிரணி வீரரின் கை பட்டாலே கீழே விழுந்து புழுவைப் போல துடிக்கிறார்கள். (அவ்வளவு வீக் பாடியா பாஸ் ?). பல சமயங்களில் இதுபோன்ற கை டச், கால் டச் களேபரங்களே எதிரணிக்கு பெனால்டி கிக், ஃப்ரீ கிக் போன்ற வாய்ப்புகளை வழங்கி அதன் திசையே மாறிவிடுகிறது. கிரிக்கெட்டை கவனியுங்கள். பெரும்பாலான ஆட்டக்காரர்கள் அவுட் என்று தெரிந்தால் நடுவரின் முடிவுக்காக காத்திராமல் பெவிலியன் திரும்புகிறார்கள். கால்பந்தில், முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நடுவரிடம் செவாலியே போல நடித்துக் காட்டுகிறார்கள். கிரிக்கெட்டில் வீரருக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. எதிரணி வீரர்கள் உட்பட வந்து காயம்பட்ட வீரரை கவனிக்கிறார்கள். ஒருவேளை காயத்திற்கு காரணம் இன்னொரு வீரராக இருந்தால் அவர் வருத்தம் தெரிவிக்கிறார். கால்பந்தில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு கீழே விழுந்தால் கூட மீதமுள்ள பத்தொன்பது வீரர்களும் நடுவர் விசில் ஒலி எழுப்பும்வரை பந்தை துரத்துவதில் தான் குறியாக இருக்கிறார்கள்.

குரோஷியாவின் மேனேஜர் தலிக் !
விளையாட்டைத் தாண்டி இந்த கால்பந்து உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்த நபர், குரோஷியாவின் மேனேஜர் ஸ்லாத்கோ தலிக் (த் கிடையாது). பெரும்பாலும் அணியின் மேனேஜர்கள் என்றால் டக் அவுட்டில் உக்கிரமாக இருப்பார்கள். எதிரணி கோல் அடித்துவிட்டால் குய்யோ, முறையோ என்று கத்துவதும், தங்கள் அணி கோல் அடித்துவிட்டால் ஆவேசமாக கொண்டாடுவதுமாக இருப்பார்கள். ஆனால் நம்ம குரோஷியாவின் மேனேஜரோ செம கூல். இவருடைய அணி கோலடித்தால் கூட, இந்த ஆள் நிஜமாகவே குரோஷியா மேனேஜரா அல்லது எதிரணியின் மேனேஜரா என்று சந்தேகப்படும் அளவிற்கு சாந்தம்.1991ல் யுகோஸ்லாவியாவிடமிருந்து விடுதலை பெற்ற குரோஷியா கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்பது இது ஐந்தாவது முறை. ஒருவேளை குரோஷியா வெற்றி பெற்றிருந்தால் அது வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியாக இருந்திருக்கும். ப்ச். ஆனால் குரோஷியாவும், தலிக்கும் மனங்களை வென்றுவிட்டார்கள். எல்லா மேனேஜர்களும் தலிக்கைப் போல சாந்தமாக இருந்துவிட்டால் நாடு சுபிட்சமாகிவிடும்.

********** 

சில படங்களின் அவுட்லுக்கைப் பார்த்தாலே ரொம்ப கேர்ளிஷ்ஷாக இருப்பதால் பார்க்க வேண்டாம் என்று தவிர்த்துவிடுவேன். உதாரணத்திற்கு, முப்பத்தியாறு வயதினிலே, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்கள். (விதிவிலக்காக மகளிர் மட்டும் ஓரளவுக்கு பிடித்திருந்தது). அந்த வகையில் நடிகையர் திலகம் படத்தின் மீது ஏனோ ஈர்ப்பு ஏற்படவில்லை.

துரதிர்ஷ்டவசமாக குடும்பத்தில் உள்ள மகளிரின் காரணமாக அமேஸான் ப்ரைமில் நடிகையர் திலகம் பார்க்க நேர்ந்தது. பத்து நிமிடங்களுக்குள் நாம் ஒரு தெலுங்கு படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது அப்பட்டமாக தெரிந்துவிட்டது. முதலில் இந்த பை-லிங்குவல், மல்டி-லிங்குவல் படம் எடுக்கும் ஓலர்களுக்கு கோலிவுட்டில் ரெட் கார்டு போட வேண்டும். டப்பிங் படமென்றால் டப்பிங் என்று சொல்லித் தொலையுங்களேன். அது என்ன பை-லிங்குவல். கீர்த்தி சுரேஷ் தானே சாவித்திரி. சமந்தாவை ஏன் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து காண்டாகும் அளவிற்கு சமந்தாவுக்கு போர்ஷன் அதிகம். ஹவ் டூ பிக்கப் கேர்ள்ஸ் என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இத்திரைப்படத்தின் துல்கர் சல்மான் போர்ஷனை ஒரு கட்டாய பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.

மற்றபடி முழுப் படத்தைப் பார்க்காமல் படத்தைப் பற்றி குறை சொல்வது தவறு என்பதால் நிறுத்திக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment