25 March 2010

காக்னிசன்ட் கனவுகள்

வணக்கம் மக்களே...

சென்ற வாரம் நான் கடந்து வந்த விஷயங்களில் சிலவற்றை இந்தப் பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பான் போல இருக்கே...!
வழக்கம்போல ஒரு மாலைப்பொழுதில் சிந்தனைப்பசி அதிகமாகி வலைப்பூக்களை மொயத்துக்கொண்டிருந்தேன். அப்போது "அவிய்ங்க" ராசாவின் வலைப்பூவில் "போடா கிறுக்குப் பயலே" என்ற பெயரில் ஒரு பதிவு. தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நகைச்சுவை பதிவாக இருக்கக்கூடுமென எண்ணினேன். ஆனால் பதிவைப் படித்து முடிக்கும்போது நான் அலுவலகத்தில் இருக்கிறேன் என்பதையும் மறந்து கண்களில் இருந்து கண்ணீர் துளிர்த்தது. பெரும்பாலும் பதிவர்கள் அனைவரும் ஏற்கனவே அந்தப் பதிவை படித்திருப்பீர்கள், சிலிர்த்திருப்பீர்கள். படிக்காத பதிவர்களும், வலைப்பூக்கள் அதிகம் பரிட்சயம் இல்லாத எனது சில நண்பர்களும் கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம். ஹும்ஹூம் கட்டாயம் படித்தே தீரவேண்டும்:
"அவிய்ங்க" ராசா இனிமேல் நீங்க "நம்ம" ராசா.
(இந்தப் பகுதிக்கு ஏன் இந்த உபதலைப்பு கொடுத்தேன் என்ற சூட்சுமம் நண்பர்கள் சிலருக்கு புரிந்திருக்கக்கூடும்)

அடிச்ச போதையெல்லாம் இறங்கிடுச்சு...!
இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ஒரு நெஞ்சை உலுக்கும் செய்தி. "சென்னையில் போலி மது தொழிற்சாலை கண்டுபிடிப்பு". பாட்டில்களுக்கு மத்தியில் முகத்தை மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்த அந்த பாவி என்ஜினியராம். ஒசிக்குடி குடித்தாலும் கவர்ன்மென்ட் சரக்குன்னு தானே நம்பிக்குடித்தோம். சரக்கில் தண்ணீரை கலந்து விற்பனை செய்தீர்கள் பொறுத்துக்கொண்டோம். ஐம்பத்தி ஆறு ரூபாய் சரக்கை எழுபது ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள் சகித்துக்கொண்டோம். இப்போது மொத்தமும் போலிஎன்றால் நாங்கள் எந்த நம்பிக்கையில் குடிப்பது. நம் நாட்டு குடிமகன்களுக்கு செக்யூரிட்டி மிகவும் குறைந்து வருகிறது. போலி மருந்து தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலைஞர் அறிவித்திருக்கிறார். இதுவும் ஒரு மருந்து தானே. இதுபோன்ற சட்டவிரோத செயல் செய்பவர்களை தட்டிக்கேட்காத மைனாரிட்டி தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று புரட்சித்தலைவியாவது ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்.
(ஒருவேளை மது என்றாலே போலி தானோ. நெப்போலியன் மேல சத்தியமா நான் மதுன்னு சொன்னது டாஸ்மாக் சரக்கைதாங்க)

வேலை வாங்கித்தரப்போறாராம்
அதே செய்தித்தாளில் எனது ரத்தம் கொதிக்கச் செய்த மற்றுமொரு செய்தி. "தே.மு.தி.க வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன்." என்று கேப்டன் சொல்லியிருக்கிறார். அட டோனி இல்லைங்க... நம்ம விஜயகாந்த சொன்னேன். லட்சகணக்கில் பணத்தை வாரி இறைத்து இவருடைய கல்லூரியில் படித்துவிட்டு இப்போது தறுதலையாக (பதிவராக) இருப்பவனுக்கு இதைப்படித்ததும் ரத்தம் கொதிக்காமல் என்ன செய்யும். கேப்டன் சார், முதலில் நம்ம கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். அதன்பிறகு எதுகை மோனையாக பேசி தேர்தல் பிரச்சாரம் செஞ்சுக்கலாம்... ஆங்.

காக்னிசன்டில் கலவரம்
பர்சனலா ஒரு விஷயம்... என்ஜினியரிங் படித்துவிட்டு கிடைத்த கால் சென்டர் வேலையிலேயே திருப்தி அடைந்திருந்தேன். திடீரென்று மென்பொருள் துறையில் நுழைய வேண்டுமென்ற ஆசை. அதிலும் பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமாங்க்றதைப் போல காக்னிசன்டில் தான் நுழைய வேண்டுமென ஒரு வெறி. ஏன் அப்படி ஒரு வெறி வந்துச்சுன்னு கூடிய விரைவில் சொல்லுகிறேன்... சொல்லித்தொலைக்கிறேன். எதிர்ப்பார்த்த நேரத்தில் ரிட்டன் டெஸ்ட் ஒன்றினை நடத்தினார்கள்.
ஒருவேளை தேர்வாகிவிட்டால் "அஞ்சாதே" பிரசன்னா ஸ்டைலில் வளர்த்த கூந்தலை தியாகம் செய்ய வேண்டுமே என்ற தயக்கம் ஒரு புறம். கடைசியில் கத்தரிக்கு வேலை வைக்காத வண்ணம் தேர்வு முடிவு வெளியாகி எனது திடீர் காக்னிசன்ட் கனவு கலைந்துப்போனது. "இவனை காக்னிசன்டில் சேர்த்தால் காக்னிசன்டில் கலவரம், சாப்ட்வேர் கம்பெனியில் சில்மிஷம் என்று எதையாவது எழுதித்தொலைப்பான்" என்று சுரேஷும் நிரஞ்சும் மேலிடத்திற்கு ரகசியத்தகவல் அனுப்பிவிட்டார்களோ என்னவோ...? எது எப்படியோ...? இனி எப்போதுமே உங்கள் சேவைக்காக பிரபாகரன்.

தலைக்கு வாழ்த்துக்கள்
அஜித் பற்றிய செய்தி சினிமா பக்கத்தில் வந்த காலமெல்லாம் போய் இப்போது ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் வர ஆரம்பித்தது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. ஏப்ரல் பதினாறாம் தேதி தொடங்கவிருக்கும் F2 சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் கலந்துக்கொள்ளும் மூவரில் ஒருவராக நம்ம தல. தல வெற்றியுடன் திரும்புவதற்கு "philosophy prabhakaran" வலைப்பூ சார்பாக வாழ்த்துக்கள்.

அடுத்தது என்ன...?
நாளைக்கு இந்த நேரம் அங்காடித்தெரு படம் பார்த்துக்கொண்டு இருப்பேன். அஞ்சலியின் சிரிப்பிற்க்காகவே படத்தை பார்க்கப்போகிறேன். நாளை மாலையே அதுபற்றிய பதிவை போட்டுவிடுகிறேன்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN

Post Comment

1 comment:

Unknown said...

post comments about the movie Angadi theru...........