27 January 2013

பிரபா ஒயின்ஷாப் - 28012013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மின்சார ரயில் நிலையங்கள் அருகிலிருக்கும் சிறுசிறு அறைகள், பாழடைந்த வீடுகள் போன்றவற்றை பார்த்திருக்கிறீர்களா ? எனக்கு அவற்றை பார்க்கும்போதெல்லாம் அமானுஷ்ய எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த அறைகளில் யாராவது வசிப்பார்களா ? பீச் ஸ்டேஷன் அருகிலுள்ள ஒரு பாழடைந்த மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மின்விசிறி சுழன்றுக்கொண்டிருக்கின்றது, என்றால் அங்கே யாரோ வசிக்கிறார்கள் தானே ? ரயில்வே துறையில் பணிபுரியும் நண்பர்கள் பாழடைந்த அறைகளுக்குப்பின் இருக்கும் கதையை கூறினால் தன்யனாவேன்.

போலவே, ரயில் பயணத்தின் போது J.K.புதியவன், N.கண்ணையா, SRMU, DMU, மற்றும் தொழிற்சங்கங்களின் ஏய் ரயில்வே நிர்வாகமே, ஓ மத்திய அரசே ரக சுவரெழுத்துகள், சுவரொட்டிகள் கடுப்பை கிளப்பும். ரயில்வே ஊழியர்களுக்காக எழுதப்படும் சுவரெழுத்துகள் எதற்காக பொதுமக்கள் பயணம் செய்யும் பாதையை ஆக்கிரமித்திருக்கின்றன என்று விளங்கவில்லை. சமீபத்தில் ஒருநாள் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்தேன். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிற்சங்கத்தின் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி அது. சம்பவம் இதுதான், ஒரு தொழிலாளி இன்னொரு தொழிலாளியை திட்டியிருக்கிறார். நான்கு சுவர்களுக்குள் நடந்த சம்பவம். போஸ்டரில் அவர் இவரை என்ன சொல்லி திட்டினார் என்று விலாவரியாக விம் போட்டு விளக்கியிருந்தார்கள். எது அவமானம் என்று புரியவில்லை.

*****

புத்தகக்காட்சியில் கோபிநாத் எழுதிய புத்தகம் ஏதாவது வாங்கித்தருமாறு சுகன்யா கேட்டிருந்தாள். எனக்கு புரியவில்லை. அம்மணிக்கு அப்படியொன்றும் வாசிப்பார்வம் கிடையாது. கோபிநாத் பிடிக்கும் என்றாள். ப்ளீஸ் ! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்கன்னு அவரே சொல்லிட்டாரேம்மா என்பது ஒரு சிக் ஜோக் தான் என்றாலும் அந்த புத்தகத்தையே வாங்கினேன். கொஞ்சம் புரட்டிப்பார்த்தேன். தமிழில் வெளிவரும் சுய முன்னேற்ற நூல்களை நான் படிப்பதில்லை. இந்த மேனேஜரியல் ஸ்கில்ஸ் இத்யாதி இத்யாதி எல்லாம் அனுபவத்தால் வருவதே அன்றி புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ள முடியாது என்பது என் கருத்து. இருப்பினும் கிழக்கு வெளியிட்ட ரிச்சர்ட் டெம்ப்ளேரின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றை படித்திருக்கிறேன். கோபிநாத்தின் ப்ளீஸ் சுய முன்னேற்ற நூல் மட்டுமன்றி ஒரு நல்ல ஃபீல் குட் நூலென்றும் சொல்லலாம். ரசித்து வாழ்வது எப்படி ? என்று சில பத்திகள் விவரிக்கிறது. என்ன ஒன்று, அடிக்கடி வீடு திரும்பல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. உதாஸ்: உங்களுக்கு காலை டிபனில் உப்புமாவை பார்த்தால் வெறுப்பு வருமே, உங்களுக்கு மதியம் மூணு மணிக்கு வருகிற தலைவலி. இப்படி ஆயிரக்கணக்கான பொதுபுத்தி மேற்கோள்கள் எரிச்சலூட்டுகின்றன. மற்றபடி, சுகன்யா போன்றவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டிய நூல். அவளுக்கு தேவையான நூலை அவளுக்கே தெரியாமல் தேர்வு செய்திருக்கிறாள்.

*****

விக்கிபீடியா, என்சைக்கிளோபீடியா, அன்சைக்கிளோபீடியா - கேள்விப்பட்டிருப்பீர்கள். சமோசாபீடியா ? தமிழ் உட்பட தெற்காசிய பேச்சுவழக்கு வார்த்தைகளுக்கு விளக்கம் தருகிறது சமோசாபீடியா. டிங்கோல்பி, மாஞ்சா, ங்கொய்யால, அடிங்கோத்தா என்று பல கொச்சை சொற்களுக்கு நகைச்சுவையாக விளக்கம் தருகிறது. மேற்கோள்கள் செம காமெடி. உதாரணத்திற்கு, அல்வா என்ற சொல்லுக்கு அமைதிப்படை படத்தில் சத்யராஜ் கஸ்தூரிக்கு கொடுத்த அல்வா பரபரப்பாக பேசப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.


*****

கருணாவின் காதல் வலி. சமீபத்தில் வெளிவந்திருக்கும் பி-கிரேடு காவியம். பி-கிரேடு என்ற சொல்லுக்கே அவமானம். சென்சார் அதிகாரிகளிடம் அழுது அடம்பிடித்து அம்மா மீது சத்தியம் செய்து ‘ஏ’ சான்றிதழ் வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். படத்தின் இயக்குனர் கம் தயாரிப்பாளர் கம் கதாநாயகனை கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பொலிகாளையோடு ஒப்பிடலாம். காசு கொடுத்த செய்யவேண்டிய சமாச்சாரத்தை, நான்கு பெண்களிடம் ஹீரோயினாக நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி காசி வாங்கி செய்திருக்கிறார். கதைப்படி நான்கு நாயகிகளுள் ஒருவர் நாயகனுடன் தி.மு செக்ஸ் வைத்துக்கொண்டு கர்ப்பமாக இருக்கிறார். அதற்குப்பின் வரும் ஒரு காட்சியில் நாயகன் நாயகியை மம்மம்முக்கு அழைக்க, நாயகி “ச்சீ... அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்...” என்று சிணுங்குகிறார். மற்றொரு காதல்ரசம் சொட்டும் காட்சியில் நாயகனும் நாயகியும் வசனங்களின்றி, ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் என்ற ஹம்மிங்கிலேயே பேசிக்கொள்கிறார்கள். இயக்குனர் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்... ம்ஹூம் விட்டுத்தொலையுங்க. நகைச்சுவைகள் ஒருபுறமிருப்பினும், ஒன்றரை மணிநேர மின்சார செலவு, குறைந்த வாடகை, வழக்கம் போல டிக்கெட் கட்டணம், கேண்டீன், பார்க்கிங் கட்டணங்கள் என்று ஒருவகையில் பி-கிரேடு படங்கள் திரையரங்களுக்கு லாபம் தரக்கூடும்.


*****

நேற்று நீயா நானா பார்த்த விளைவு பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒலிம்பியா பக்கம் இரவு உணவு முடித்துவிட்டு தேமே என்று சென்றுக்கொண்டிருந்தேன். ஒரு ஸ்கூட்டி என்னருகில் வந்து ப்ரேக் அடித்தது. கல்லூரியில் என்னுடன் படித்த தோழி. பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டோம். சில நாட்களுக்குப்பின் ஒரு தொலைபேசி அழைப்பு, மறுபடியும் அவரே. என்னுடைய எண் எவ்வாறு கிடைத்தது என்று தெரியவில்லை. பரிவாக என்னைப் பற்றி என் வேலையைப் பற்றி, திருமணத்தை பற்றியெல்லாம் விசாரித்தார். ஒன்றும் விளங்கவில்லை. என் கல்லூரி தோழிகள் யாருக்கும் என் மீது நன்மதிப்பு கிடையாது. இவர் மட்டும் ஏன் இப்படி சொறிகிறார் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்ததும் மெதுவாக பேச்சை தொடங்கினார். நானும் என் கணவரும் இணைந்து ஒரு பிஸினஸ் செய்கிறோம். நாங்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று ஆரம்பித்தார். பயங்கர கோபம் வந்தது. இருப்பினும் அந்த விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது. அடிக்கடி போன் செய்து இன்னைக்கு மீட்டிங் இருக்கு வர முடியுமா ? என்பார். ஓ தாராளமா வர்றேன்னு சொல்லிவிடுவேன். ஆனால் போகமாட்டேன். சில வாரங்களுக்கு பின்பு அவருக்கு உண்மை தெரிந்துவிட்டது. கடைசியாக கோபத்துடன் ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினார். ரசித்து சிரித்தேன் :)


*****

நேற்று நீர்ப்பறவை படம் பார்த்தேன். வெளியான மறுநாளே பார்த்திருக்க வேண்டியது. தவறான திரையரங்கிற்கு சென்று கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்ற தெலுங்கு குப்பையில் சிக்கிக்கொண்டேன். நீர்ப்பறவையின் கதைக்களன் வரவேற்க வேண்டியது. எனினும், சொல்ல வந்ததை அழுத்தம் திருத்தம் எதுவுமே இல்லாமல் வெகு சாதாரணமாக போகிற போக்கில் சொன்னதுபோல தெரிகிறது. சீனு ராமசாமி கடிவாளம் போடப்பட்ட குதிரையாக முடக்கப்பட்டிருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. வருத்தப்படுவதை விட வேறு என்ன செய்துவிட முடியும் ?

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 comments:

அமுதா கிருஷ்ணா said...

தாம்பரம் ரயில்வே காலனியில் 15 வருடங்கள் இருந்தோம்.இப்போ அங்கே பல வீடுகள் அழிக்கப்பட்டு புதிய ஸ்டேஷன் உருவாக போகிறது.10 வருடங்களாகவே ரிப்பேர் எதுவும் செய்யாமலேயே குடி இருப்பவர்கள் காலி செய்து கொண்டு போக வேண்டும் என்றே ரயில்வே காலனி வீடுகள் திட்டமிட்டே நாசமாக்கி வருகிறார்கள்.

aavee said...

உங்கள் தோழி உங்களைக் கடுப்பேற்றியதும் பதிலுக்கு நீங்க அவங்கள கலாய்த்ததும் சுவாரஸ்யமாக இருந்தது..

arasan said...

சில இடங்களில் மெனக்கெட்டுருந்தால் கோபி புக் நல்லா வந்துருக்கும் என்று நினைக்கிறேன் தலீவா

சீனு said...

பிரபா "ஒயின்ஷாப்" விஷயங்கள் பிடித்துள்ளது.... கோபி புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.. நீயும் நானும் வட்டியும் முதலும் போன்ற தொடர்... விகடனில் படித்திரவிட்டால் புத்தகம் வாங்கி படித்துப் பாருங்கள்... இயல்பாய் இருக்கும்....

வாசிபார்வம் இல்லா சுகன்யாவுக்கு பிரபாகரனை மட்டும் பிடிக்குமா.. பிலாசபி பிரபாகரனையும் பிடிக்குமா

# டவுட்டு

Anonymous said...

ஹலோ...கமல் ஃபேன்...விஸ்வரூபம் ரிலீசாகலேன்னு கவலைப்பட்டிட்டு இருக்கோம், அத்தப் பத்தி எதுவுமே சொல்லலை...ரெண்டு நாளா மண்டை குடைச்சல்.கமல் படம் தியேட்டர்ல பாக்காம இருப்பது வெகு அபூர்வம்...

”தளிர் சுரேஷ்” said...

சுவையான பகிர்வு! கோபிநாத்தின் புத்தகம் நானும் படிக்க நினைத்த புத்தகம்! ரயில்வேஸ்டேஷன் பாழடைந்த வீடுகள் பற்றி சொன்னது அருமை!

Ponmahes said...


சமோசாபீடியா. வுல எங்க ஊரூ கெட்ட வார்த்தைக் கெல்லாம் அர்த்தம் கிடைக்குமா பிரபா ....


தம்பி நீ மட்டுமல்ல மொத்த classசும் இதனால பாதிக்கப் பட்டுருக்கு தெரியுமா ???????????
அந்த பொண்ணுக்கு எதோ வேண்டாத நேரம் போல இல்லனா உன்னலாம் மனுஷனா மதிச்சு அதோட கஷ்டத்த சொல்லிருக்கு பாரு ....
உன் மேல நன்மதிப்பு ஏற்படுற அளவுக்கு நீ என்னத்த கிழிச்சன்னு பக்கத்துல இருந்த(கிளாஸ் ல) பதருகளுக்குத் தான்(என்னயும் சேர்த்து தான் ) வெளிச்சம் ...

//கடைசியாக கோபத்துடன் ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினார். ரசித்து சிரித்தேன் :
என்ன ஏதாவது கெட்ட வார்த்தையில திட்டிடுச்சா த தம்பி ....


கவியாழி said...

இந்த மேனேஜரியல் ஸ்கில்ஸ் இத்யாதி இத்யாதி எல்லாம் அனுபவத்தால் வருவதே அன்றி புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ள முடியாது என்பது என் கருத்து. /// கருத்துச் சொல்ல இதைவிட என்ன தகுதி வேண்டும்

மதுரை அழகு said...

//தமிழில் வெளிவரும் சுய முன்னேற்ற நூல்களை நான் படிப்பதில்லை.//

நல்ல முடிவு!

Philosophy Prabhakaran said...

Chilled Beer, விருமாண்டி ஆங்கிள், கொத்தாளத்தேவன் ஆங்கிள், ஆளவந்தான் ஆங்கிள் என்று பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன... நான் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை...

Philosophy Prabhakaran said...

பொன் மகேஸ், சமோசாபீடியாவில் யார் வேண்டுமானாலும் பயனர் கணக்கு உருவாக்கிக்கொள்ளலாம்... நீங்களும் ஒன்றை உருவாக்கிக்கொண்டு உங்கள் வழக்கு சொற்களை கொடுக்கலாம்...

// தம்பி நீ மட்டுமல்ல மொத்த classசும் இதனால பாதிக்கப் பட்டுருக்கு தெரியுமா ??????????? //

அப்பசரி... இதுவரைக்கும் எத்தனை பேர் தொழிலதிபர் ஆகியிருக்கிறார்கள்... இதுவே தயிர் சாதமாகவோ, பலகாரமாகவோ இருந்திருந்தால் நானும் பிஸினஸில் தொபுக்கடீர் என்று குதித்திருப்பேன்...

// அந்த பொண்ணுக்கு எதோ வேண்டாத நேரம் போல இல்லனா உன்னலாம் மனுஷனா மதிச்சு அதோட கஷ்டத்த சொல்லிருக்கு பாரு .... //

அந்த பொண்ணுக்கு உண்மையில் ரொம்ப நல்ல நேரம்... கடைசி வரைக்கும் நான் ஒரு கெட்டவார்த்தை கூட உதிர்க்கவில்லை...

// உன் மேல நன்மதிப்பு ஏற்படுற அளவுக்கு நீ என்னத்த கிழிச்சன்னு பக்கத்துல இருந்த(கிளாஸ் ல) பதருகளுக்குத் தான்(என்னயும் சேர்த்து தான் ) வெளிச்சம் ... //

அதுசரி... நன்மதிப்பு ஏற்படுறா மாதிரி நடந்துக்கிட்டவங்கல்லாம் என்னத்த கிழிச்சாங்க...

'பரிவை' சே.குமார் said...

ரயில்வே ஸ்டேசன் பாழடைந்த வீடுகள் , கோபிநாத்தின் புத்தகம் என அருமையான தகவல்கள் நிறைந்த பகிர்வு.

ஜேகே said...

//இந்த மேனேஜரியல் ஸ்கில்ஸ் இத்யாதி இத்யாதி எல்லாம் அனுபவத்தால் வருவதே அன்றி புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ள முடியாது என்பது என் கருத்து.//

அதே அதே.. சேம் பீலிங் .. Malcolm Gladwel ஒரு சின்ன எக்செப்ஷன்.