2 February 2013

கடல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நிகழ் வாரத்தில் வெளியாகியிருக்கும் இரண்டு படங்களுமே மீனவ-கிறிஸ்தவ சமுதாயத்தை பற்றியது போல தெரிகிறது. இரண்டிலும் பெரிய ஈர்ப்பு இல்லை. மணிரத்னம் படங்கள் வித்தியாசமாக இருக்கும் என்றாலும் கடல், காதல் சார்ந்த படம் போல. அலுவலக நேரம், திரையரங்க தூரம், டிக்கெட் விலை, திரைப்பட காட்சி நேரம் இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது கடல் சரியாக அமைந்தது. மற்றபடி படத்தின் மீது எனக்கு துளிகூட எதிர்பார்ப்பு கிடையாது.


அன்பு நிராகரிக்கப்பட்ட நாயகன். அவனது ஒருபுறம் கடவுள், மறுபுறம் சாத்தான். எந்த பக்கம் சாய்கிறான் என்பதே கதை. இதற்கிடையே ஒரு தேவதையும் உண்டு.

கெளதம் கார்த்திக் - முதல் பட நடிப்பிற்கு ஓகே. அறச்சீற்ற காட்சிகளில் மிளிர்கிறார். வாரிசு நடிகர்கள் உள்ளே நுழைவது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம், தக்க வைப்பது திறமை சார்ந்தது. கெளதமின் எதிர்காலம் மிகவும் மங்கலாக தெரிகிறது. நாயகனின் சிறுவயது தோற்றத்தில் நடித்த மாஸ்டர் சரண் அசத்துகிறான்.

துளசி - கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் ! என்று சொல்லலாம். அக்கா கார்த்திகா, சந்தியா என பல சுமாரான நடிகைகளின் சாயல் அந்த பிஞ்சு முகத்தில் தெரிகிறது. அடுத்து ஒரு மசாலா குப்பையில் கெட்ட ஆட்டம் போட்டால் பிழைத்துக்கொள்ளலாம்.

கெளதம், துளசி - இருவருக்குமே இது ஒரு மோசமான விசிட்டிங் கார்ட்.

அரவிந்த் சாமியும் அர்ஜுனும் கடலின் பிரதான பாத்திரங்கள். தத்தம் வேடங்களில் பாந்தமாக பொருந்தியிருக்கிறார்கள். ஆரம்ப காட்சிகளில் அர்ஜுன் ரகளையாக நடித்திருக்கிறார். அரவிந்த் சாமி கூடவே வரும் கேரக்டரில் அடடே ஆரண்யகாண்டம் சோமாஸ். பொன்வண்ணன், லக்ஷ்மி மஞ்சு, சிங்கம்புலி என்று நிறைய பேர் இருக்கிறார்கள். எனினும் சிறுசிறு வேடங்களில் தோன்றுபவர்கள் வெகு இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார்கள். “எங்கேயும் எப்போதும்” வினோதினி மீன் விற்கும் காட்சி, பொன்வண்ணனுடைய மனைவி  தோன்றும் இரு காட்சிகள் ரசிக்க வைத்தன.

அரவிந்த்சாமி முதல்முறையாக ஊருக்குள் வரும்போது, “துரை மாதிரி இருக்குறாரு”ன்னு ஒரு கிழவி சொல்வது, “கடலுக்கு இவனை தெரியும். தெரிஞ்சிருக்கும்.” போன்ற வசனங்கள் மணிரத்னத்தனம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் சிரட்டையில் ஊற்றி பரிமாறப்பட்ட சீமைச்சரக்கு ! மகுடி மகுடி பாடலின் துள்ளிசை நம்மை அசைத்துப் பார்க்கிறது. நெஞ்சுக்குள்ளே பாடல் படம் பார்த்ததிலிருந்து நெஞ்சுக்குள்ளே நிற்கிறது. ஏலே கீச்சானில் இசைப்புயலின் குரலுக்காக அத்தனை பேரும் ஆர்ப்பரிக்கிறார்கள். ராஜீவ் மேனனின் கேமராவில் அந்தமான் கடற்கரைகளின் அழகு கூடியிருக்கிறது. மணிரத்னம் ஜெயமோகன் கூட்டணி எனும்போது இந்துத்துவ சொறிதல் எங்கேயாவது இருக்குமென்று சந்தேகப்பட்டேன். அப்படி எதுவும் தெரியவில்லை. 


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு அரவிந்த்சாமியும், ஒரு அர்ஜுனும் இருக்கிறார்கள். ஒன்று கடவுள், மற்றொன்று சாத்தான். கடவுள் பலவீனமானது. சாத்தான் வலிமையானது. சாத்தான் கடவுளை எளிதாக ஆட்கொள்ளுகிறது. அதாவது கடவுள் பதிமூன்று வருடங்கள் பக்குவப்படுத்தி வைத்த மனிதனை கூட சாத்தான் பதிமூன்றே நாட்களில் மாற்றிவிடும் வல்லமை படைத்தது. எனினும், அவற்றையெல்லாம் மீறி கடவுளின் பாதையில் செல்வதுதான் ஒரு மனிதனுடைய சவால். ஒரு மனிதன் என்னதான் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டிருந்தாலும் அவனுக்குள் ஒரே ஒரு துளியாவது தெய்வீக குணம் இருந்தே தீரும். அதை வெளிக்கொணர நமக்கு உதவும் பியாட்ரிஸ் போன்ற தேவதைகளை இறுக்கமாக பற்றிக்கொள்ள வேண்டும். பியாட்ரிஸ் என்னும் தேவதை காதலியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. நமக்கு மிகவும் பிடித்த இசை, விரும்பி எழுதும் வலைப்பூ, அதிகம் மதிக்கும் ஆசிரியர் இப்படி எதுவாக / யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுதான் கடலில் எனக்கு கிடைத்த முத்து.

அருமையான கரு. திறமையான இயக்குனர். பலம் பொருந்திய தொழில்நுட்ப குழு. இவையெல்லாம் இருந்தும்கூட படம் நம்மை அநியாயத்துக்கு வெறுப்பேற்றுகிறது. முதல் காரணம், படத்தின் நீளம் (164 நிமிடங்கள்). இரண்டு மணிநேரத்தில் கச்சிதமாக முடித்திருந்தால் பேசப்பட்டிருக்கலாம். மணிரத்னம் போன்ற ஆட்கள் இன்னமும் இரண்டரை மணிநேர கான்செப்டை பிடித்து தொங்கவேண்டிய அவசியம் இல்லை. இரண்டாவது, மணி சாரின் “கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” கொள்கை. அதிலும் வெற்றி பெறும் அசாத்திய திறமைசாலிகள் உண்டு. ஆனால், மணிரத்னம் இரட்டை குதிரையில் சவாரி செய்ய முயன்று கீழே விழுந்து காயப்பட்டு பரிதாபமூட்டுகிறார். மூன்றாவதாக நான் கருதுவது படத்தின் தன்மை. பொதுவாகவே மணிரத்னம் படங்கள் ஹெவி டோஸாக இருக்கும். கடலிலும் தொடர்ந்திருக்கிறது. சாமான்ய ரசிகர்கள் கடுப்பாகிறார்கள். எளிமையாக சொல்வதென்றால், “மணி சார்... நீங்க டொக்கு ஆயிட்டீங்க...!”


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

Unknown said...

மணி சார்... நீங்க டொக்கு ஆயிட்டீங்க...!
/////////////////////////////
இது ஆரண்ய காண்டம் வசனமாச்சே..!

கடலில் கிடைத்த முத்து ரசிக்கும் (சிந்திக்கும்)படி இருந்தது!

காரிகன் said...

தமிழ் திரையில் இந்து சமூதாயத்தை தாண்டி ஒரு முஸ்லிம் அல்லது கிருஸ்துவ சமூகத்தை பற்றி படம் எடுத்தால் அது பெரும்பான்மையான மக்களை இப்படித்தான் என்ன வைக்கும் என்று படுகிறது. இதே கடலை மணிரத்னம் கிருஸ்துவ பின்புலம் இல்லாமல் எடுத்திருந்தால் நீங்கள் இவ்வாறு விமர்சனம் செய்திருக்க மாட்டீர்கள் என்றே தோன்றுகிறது. காலம் காலமாக நாம் இப்படியேதான் வளர்ந்து வந்திருக்கிறோம்.

Philosophy Prabhakaran said...

காரிகன்... நீங்கள் சொல்வது one of the reasons... கிறிஸ்தவம் மட்டுமல்ல தூத்துக்குடி வழக்காறும் சாமான்ய ரசிகர்களுக்கு எரிச்சல் தருகிறது... ஆனால் அதை மாற்றியிருந்தால் விமர்சனம் வேறு மாதிரி இருந்திருக்கும் என்று சொல்வது சரியல்ல...

ஏன், சமீபத்தில் வெளிவந்த நீர்ப்பறவை படத்தை பெரும்பான்மை ரசிக்கவில்லையா ?

sethu said...

indha padam maniratnathukku oru paadam