15 April 2013

பிரபா ஒயின்ஷாப் - 15042013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

திரையரங்கங்களில் ஒளிபரப்பப்படும் புகையிலை விழிப்புணர்வு செய்திப்படத்தை பற்றி எழுதியிருந்தேன். அது உண்மையில் பார்க்க சகிக்கவில்லை, உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் என்கிற ரீதியில் சில நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். உண்மையில் அப்படி யாரும் மின்னஞ்சல் அனுப்பவில்லை என்றாலும் எழுதிக்கொண்டிருக்கும் பத்தியின் தொடுப்புக்காக அப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. முதலில், சிகரெட் பாக்கெட்டின் மீது புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று அச்சடித்தார்கள். அப்படி போட்டால் மட்டும் புகை பிடிப்பவர்கள் உணர்ந்து நிறுத்திவிடுவார்களா என்று எகத்தாளம் பேசினார்கள். அடுத்தது நெஞ்சாங்கூட்டின் நெகடிவ் படத்தை சிகரெட் அட்டையில் பொறித்தார்கள். அதுவும் எடுபடவில்லை. இப்போது முகேஷ் ஹரானே புகை பிடிப்பவர்களை அதிர வைக்கிறார். நண்பர்கள் குழுவாக திரையரங்கிற்கு வந்திருக்கும் பட்சத்தில் புகை பிடிக்கும் பழக்கமுள்ள நண்பனை மற்றவர்கள் உனக்காக தான்டா போடுறாங்க என்று சொல்லி கிண்டலடிக்கிறார்கள். புகை பிடிப்பவர்களும் கூட மனதளவில் மிரளத்தான் செய்கிறார்கள். அது நல்ல அறிகுறி தானே ! நூற்றில் ஒருவர் கைவிட்டால் கூட நல்ல விஷயம். அதற்காக மற்ற தொண்ணூற்றி ஒன்பது பேரும் அந்த செய்திப்படத்தை சகித்துக்கொள்ளலாம்.

அண்ணா சாலை எல்.ஐ.சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தேவி திரையரங்கம் நோக்கி நடந்துக்கொண்டிருந்த போது, ஒரு மூதாட்டி சாலையை கடப்பதற்காக காத்திருந்தார். அடியேனைக் கண்டதும் முகம் மலர்ந்தார். மறுக்க முடியுமா ? தமிழர்களையும் ஆயா செண்டிமெண்ட்டையும் அவ்வளவு எளிதாக பிரித்துவிட முடியாது. ஒளவையார் காலத்திலிருந்து மயக்கம் என்ன தனுஷ் வரைக்கும் அப்படித்தான். அந்த நேரம் பார்த்து இரண்டு இள வயது பெண்கள் எங்களை கடந்து சென்றார்கள். அந்த சுமார் மூஞ்சிகளை இம்ப்ரஸ் செய்வதற்கு நான் ஆயாவை பயன்படுத்துவதாக அவர்கள் நினைத்து கொள்ளக்கூடும் என்பது அச்சுறுத்தலாக இருந்தது. அதைவிட எனக்கு தனியாக சாலையை கடப்பதில் எப்போதுமே ஒரு மிரட்சி உண்டு. சமயங்களில் வாகன ஒட்டிகளையும் மிரள வைத்துவிடுவேன். கிண்டி தாமரை - ஒலிம்பியா சந்திப்பிற்கு வார நாட்களில் மதியம் ஒரு மணி வாக்கில் வந்தால், நான் யாரிடமாவது சாவுகிராக்கி என்று திட்டு வாங்கும் காட்சியை ரசிக்கலாம். ஆயாவோடு கடக்க இருப்பது அண்ணா சாலை, அதுவும் காலை பதினோரு மணி. கடைசியில் ஆயாவின் துணையோடு பத்திரமாக சாலையை கடந்துவிட்டேன். அந்த ஆயாவிற்கு என்னுடைய நன்றிகள் !

சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தையல் கடைக்கு ஏற்கனவே சிலமுறை சென்றிருக்கிறேன். அங்கு பணிபுரியும் தையற்காரரை எங்கேயோ பார்த்த மாதிரி ஞாபகம் உறுத்திக்கொண்டே இருந்தது. மேஜையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவருடைய விசிட்டிங் கார்டில் தையல் துறையில் குறிப்பாக சினிமா கலைஞர்களுக்கு தைப்பதில் இருபது வருட அனுபவம் உள்ளவர் என்று தப்பும் தவறுமான ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டதும் பொறி தட்டியது. நீங்க சினிமாவுல நடிச்சிருக்கீங்க தானே சட்டென்று கேட்டுவிட்டேன். ஆமாம் நிறைய படத்துல நடிச்சிருக்கேன்... நீ எந்த படத்துல பாத்த’ன்னு கேட்டார். கள்ள பருந்து என்கிற அந்த கேடு கெட்ட படத்தின் பெயரை தயங்கியபடியே சொன்னேன். சிரித்தார். அந்த மாதிரி படங்கள் கருப்பு பணத்தை வெளுப்பதற்காக, வேண்டுமென்றே ஓடக்கூடாது என்கிற நோக்கத்தோடு எடுக்கப்படுகின்றன என்று விவரித்தார். அப்படியும் எங்களை மாதிரி ஆட்கள் பார்க்கிறார்களே என்று சிரித்து வைத்தேன். நீ ஸ்டில்லை பார்த்து ஏமாந்திருப்ப என்றதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. வீராசாமி தொடங்கி லத்திகா, மேதை என்று அடுத்தவாரம் பார்க்கவிருக்கிற திருமதி தமிழ் வரைக்குமான என்னுடைய வரலாற்றைச் சொன்னதும் வெலவெலத்துப் போய்விட்டார். அப்புறம் ஆசுவாசமாகி அந்தமாதிரி படமெல்லாம் நீ நினைக்கிற மாதிரி இல்லை சிஷ்யா... சுத்தி நூறு பேரு பார்த்திட்டு இருப்பாங்க... தப்பான எண்ணம் எதுவும் தோணாது என்று விளக்கினார். நீ கூட சீன் பட ஹீரோ மாதிரி தான் இருக்குற. சான்ஸ் வாங்கித்தர்றேன். நடிக்கிறியா ? என்றதும் கள்ளபருந்தாக மாறி அங்கிருந்து பறந்தேன்.

நான் டைம் மெஷினை கண்டுபிடித்துவிட்டேன் - என்று ஈரானிய விஞ்ஞானி அலி ரசெக்கி அறிவித்திருக்கும் செய்தி எனக்கு கொஞ்சம் ஆர்வத்தீயை கிளப்பத்தான் செய்தது. அதாவது என்னுடைய எண்ணத்தில் டைம் மெஷின் என்பது லிஃப்ட் மாதிரியான ஒரு அறை. அதற்குள் சென்று அமர்ந்துக்கொண்டு பட்டனை தட்டினால் நாம் விரும்பிய வருடத்திற்கு நேரே சென்றுவிடலாம். அதாவது இறந்தகாலத்திற்கு சென்று ஏவாளுக்கு இன்னொரு ஆப்ஷன் கொடுக்கவோ, மன்னர்களிடம் சென்று நீங்கள் ஒரே அம்பில் சிங்கம், மான், கரடி, காட்டுப்பன்றியை கொல்வீர்கள் என்று கப்ஸா விட்டு பரிசில் பெறவோ செய்யலாம். அல்லது எதிர்காலத்திற்கு சென்று ரஜினி ஐஸ்வர்யா ராய் மகளைப் பார்த்ததும் பாடி ஸ்டெடியா இருந்துச்சு; மைண்ட் ஆஃப் ஆயிடுச்சு என்று பேட்டி கொடுப்பதையோ, ஜூன் மாதத்திற்கு மேல் தமிழகத்தில் மின்தடை இருக்காது என்று அப்போதைய முதலமைச்சர் குஷ்பூ அறிக்கை விடுவதையோ கண்டு களிக்கலாம். நாம் பார்த்த சினிமாக்களில் டைம் மெஷின் என்றாலே அப்படித்தானே காட்டுகிறார்கள். ஆனால் ஈரானிய விஞ்ஞானி என்ன சொல்கிறார் என்றால் அவர் உருவாக்கிய மெஷினில் அமர்ந்து ஒரு பட்டனை தட்டினால் அது நம்முடைய எதிர்காலத்தை கிட்டத்தட்ட துல்லியமாக கணித்து ஒரு தாளில் அச்சிட்டு கொடுக்குமாம். இதைக் கேட்டதும் நம்ம கன் பவுடர் ஷண்முகராஜன் என்ன சொல்றாரு தெரியுமா ? - “நீ டோண்ட் வொரி பண்ணிக்காத... நான் சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியக்காரன் கிட்டயே கேட்டுக்குறேன்...”

கிழக்கத்திய கழிவறையில் கக்கா போவது எப்படி ?, லுங்கி கட்டுவது எப்படி ? என்றெல்லாம் யூடியூபில் பார்த்திருக்கிறோம். அந்த மாதிரியெல்லாம் நமக்கு நடைமுறை வாழ்க்கையில் பயன்படாத, ஆனால் தகவல் உள்ளடக்கிய காணொளி - விண்வெளியில் பல் தேய்ப்பது எப்படி ? இவருடைய விண்வெளி சம்பந்தப்பட்ட மற்ற காணொளிகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.


படங்கள்: கூகுள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 comments:

குட்டிபிசாசு said...

பிரபா வரார்! பாட்டிகள் ஜாக்கிரதை!

…புகைப்பிடிப்பதைப் பற்ரி சொன்னிங்க. அப்புறம் சரக்கு பற்றி ஒரு மேட்டரையும் காணோம்.

வவ்வால் said...

பிரபா,

//ஆயாவோடு கடக்க இருப்பது அண்ணா சாலை, அதுவும் காலை பதினோரு மணி. கடைசியில் ஆயாவின் துணையோடு பத்திரமாக சாலையை கடந்துவிட்டேன். அந்த ஆயாவிற்கு என்னுடைய நன்றிகள் !//

அது சரி அந்த ஆயா இப்ப உம்மைத்தான் தேடுதாம்,

கைய புடிச்சு கூப்பிட்டு போகாம காதைப்புடிச்சு கூப்பிட்டு போனீர் போல, அண்ணாசாலை டி-1 போலீஸ் ஸ்டேஷன்ல ,ஆயா காதுல போட்டிருந்த பாம்படத்த களவாடியதா கம்ப்ளையிண்ட் கொடுத்திருக்காம் ஆயா :-))

சினிமால வர்ரதுலாம் நிசமாவே நடக்க ஆரம்ப்பிச்சுடுச்சு :-))

REACHING OUT said...

சினிமா வாய்ப்பு கிடைத்தும் விட்டுவிட்டீர்களே பிரபா..

சீனு said...

//ஆயாவின் துணையோடு பத்திரமாக சாலையை கடந்துவிட்டேன். அந்த ஆயாவிற்கு என்னுடைய நன்றிகள் !// ஹா ஹா ஹா

Unknown said...

பயபுள்ள...சும்மாங்காச்சியும் சொல்லுது அடுத்த படத்திற்கு வாய்ப்பு வாங்கிட்டு வந்திருச்சாம்...! யோவ் நாங்களும் இருக்கோம் கவனிச்சுக்கோ..!

Katz said...

குட் நரேசன், ராவிஷிங்(ravishing) கிராண்ட்மா. பன்டாஸ்டிக் போஸ்ட். பிலீசிங் ரீடிங் எக்ஸ்பீரியன்ஸ்.

கண்டினியு யுவர் எக்சலண்ட் வொர்க்.

(இங்கு மானே தேனே போல, உங்களுக்கு தெரிஞ்ச/பிடித்த இங்கிலீஷ் வார்த்தைகள் இருந்தால் தமிழில் மாற்றி போட்டு கொள்ளலாம்)

-காபுல் சங்கர்

ஜீவன் சுப்பு said...

//நீ கூட சீன் பட ஹீரோ மாதிரி தான் இருக்குற. சான்ஸ் வாங்கித்தர்றேன். நடிக்கிறியா ? என்றதும் கள்ளபருந்தாக மாறி அங்கிருந்து பறந்தேன்.//

ஹா ...ஹா...ஹா ! செம செம செம ....! தையற்கட காரர் கவுண்டருக்கு தாத்தாவா இருப்பாராட்டுக்கு ....! சரியான ஆள்ட்ட சரியான கேள்வியத்தான் கேட்டுருக்கார்யா ...!

Unknown said...

என்னா பாஸ் அருமையான வாய்ப்பு கிடைச்சுருக்கு இப்படி கோட்டை விட்டுட்டு வந்து நிக்கிறிங்க போங்க

Anonymous said...

அண்ணே, அந்த தையக்கடை விலாசம் :)

Ponmahes said...

சரக்கு நல்லா மிக்ஸ் ஆயிருக்கு ........

ரூபக் ராம் said...

பிரபா ஒயின் ஷாப்புக்கு இது என் முதல் வருகை.

பாட்டி(க்கு) உதவியதும், நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - பனி சறுக்கு விளையாட்டு