6 February 2015

என்னை அறிந்தால்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

பரமசிவன் காலத்திலிருந்து அஜித்தின் எல்லா படங்களையும் FDFS பார்த்துவிடும் பரம விசிறி. இந்தமுறை கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டதால் டிக்கெட் கிடைக்கவில்லை. அங்கே, இங்கேயென்று அலைந்து கடைசியில் படம் பார்க்க முடியாது என்று கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்ட நிலையில் ஒரு ஆபத்பாந்தவர் எக்ஸ்ட்ரா டிக்கெட்டோடு வந்தார். அவருக்கு நன்றி கூறி துவங்குகிறேன்.

கதையை பொறுத்தவரையில் ஐ படத்திற்கு எழுதியதையே டிட்டோ போட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இணையத்தில் வெளியான அதே கதை தான். பழைய கதையும் கூட. அதனாலேயே சஸ்பென்ஸ், ட்விஸ்ட் போன்ற பெரிய சுவாரஸ்யங்கள் இல்லை.

சமீப படங்களில் கூலர்ஸ், நடை, பஞ்ச் வசனம் என்றே பார்த்துப் பழகிய அஜித் சற்றே (சற்று தான்) வேறுபட்டிருக்கிறார். இன்னொரு பெரிய ஆறுதல் துணை நடிகர்கள் அஜித்துக்கு முகஸ்துதி போடும் காட்சிகள் வைக்காதது. அஜித் – அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் பது மலர்ச்சியாக இருக்கிறது.

அருண் விஜய்யின் பாத்திர படைப்பில் இன்னொரு டேனியல் பாலாஜியை பார்க்க முடிகிறது. பழைய படங்களில் எல்லாம் வில்லன் நடிகர்கள் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் நான்கைந்து தலைமுறைகளை தோண்டி எடுத்து வசைமொழி பேசுவார்கள். வில்லன் நடிகர்களை பொறுத்தவரையில் வசை தான் பாராட்டு என்று கொள்ளலாம். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களிடம் கேவலமாக திட்டு வாங்கியிருக்கிறார் அருண் விஜய். அஜித்தை மிஞ்சியிருக்கிறார் என்கிற காழ்ப்புணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். வே டூ கோ அருண் விஜய் !

பேரிளம்பெண் என்ற பதத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய இரு கதாநாயகிகள். கெளதம் மேனனின் கேமரா வழியாக பார்க்கும்போது மட்டும் ஒரு சுற்று கூடுதல் அழகியாக தெரிகிறார் த்ரிஷா. அனுஷ்கா அந்தோ பரிதாபம். சிகையலங்காரம் வேறு சகிக்கவில்லை. 

பேபி அனிகா செம க்யூட். பாந்தமாக முகத்தை வைத்திருப்பது ஒருவித அழகு என்றால், சிரிக்கும்போது தெரியும் தெத்துப்பல் அதைவிட அழகு. அனிகாவிடம் அனுஷ்காவை பார்த்துக்கொள்ளுமாறு ஒப்படைக்கும்போது “Of course, அப்பா” என்று ஒரு ரியாக்ஷன் கொடுக்கிறார். அது க்யூட்நெஸ்ஸின் உச்சம்.

ஏறத்தாழ ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை போன்ற வேடத்தில் நடித்திருக்கும் விவேக்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது. சில காட்சிகளில் மட்டும் தலை காட்டினாலும் நாசரின் வேடம் நேர்த்தியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் வரமாட்டாரா என்று ஏங்க வைத்துவிட்டு இறக்கிறார். பார்வதி நாயர் வேடத்தில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்; நடிகைகளுக்கா பஞ்சம்.

திரைக்கதை சூத்திரங்களில் முக்கியமானதாக ‘SHOW, DON’T TELL’ என்ற விதியை சொல்வார்கள். ஆனால் இயக்குநர் ஆங்கிலத்தில் பேசிவிட்டு பின்பு அதையே தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லும் மேஜர் சுந்தர்ராஜன் போல இரண்டையும் செய்கிறார். செய்கிறார் என்றால் செய்துகொண்டே இருக்கிறார். இது சில இடங்களில் ஒரு நாவல் படிப்பது போன்ற உணர்வை தந்தாலும்கூட ஒரு கட்டத்திற்கு மேல் சலித்துவிடுகிறது.

அதாரு உதாரு, மாயா பஸார் பாடல்கள் ரிப்பீட் மோட் வகையறா. வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடும் மின்னல்கள். வடிவேலு, விவேக் பேசிய நகைச்சுவை வசனங்களை சீரியஸான காட்சிகளில் அஜித் பேசுகிறார். அப்படியும் நமக்கு வேடிக்கையாக தோன்றா வகையில் காட்சியாக்கியிருக்கின்றனர்.

அஜித், த்ரிஷா, அனிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. பெண்கள் விரும்பக்கூடும். மற்றவர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் அஜித்துக்கும் அருண் விஜய்க்கும் இடையே நடைபெறும் அந்த சேஸ், நிஜமாகவே நகம் கடிக்க வைக்கும் சிலிர்ப்பான நிமிடங்கள். திரைக்கதைக்காக மட்டும் சொல்லவில்லை. வேறு யாருடைய படமாக இருந்தாலும் எப்படியும் சுபம் தான் போடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஈவு இரக்கமில்லாமல் மாயாவையே சாகடித்த இயக்குநர் என்பதாலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

வழக்கமாக சினிமா ரசிகர்கள் ஏதோ ஒன்று தெறிக்குது, தெறிக்குது என்பார்களே அது இந்த படத்தில் குறைவாகவே தெறித்திருக்கிறது. சரி, critically acclaimed படமாக இருக்குமா என்றால் அதுவும் கிடையாது. படத்தில் வரும் ஒரு வசனத்தின் பாணியிலேயே சொல்வதென்றால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்தப்பக்கம் மாஸ், அந்தப்பக்கம் க்ளாஸ். இரண்டிற்கும் இடையே என்னை அறிந்தால்.

அஜித் தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்திற்குள் இருந்து கொஞ்சூண்டு எட்டிப் பார்த்திருக்கிறார். அவர் அதனை விட்டு முழுமையாக வெளிவர வேண்டும். ஆனால் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை நினைக்கும்போது அவர் மறுபடியும் அதே வட்டத்திற்குள்ளேயே சென்று அடைந்துகொள்வார் என்றே உறுதியாகக் தோன்றுகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

No comments: