3 April 2017

பிரபா ஒயின்ஷாப் – 03042017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

லைஃப் என்றொரு ஸை-ஃபை ஹாரர் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலத்தில். தேவியில் இரவுக்காட்சி பார்த்தோம். தோம் என்பது நண்பர் அஞ்சாசிங்கம். இதுபோன்ற படங்களுக்கு அஞ்சா ஒரு கோனார் நோட்ஸ். மேலும் அவர் விரும்பும் சப்ஜெக்ட் என்பதாலும் தந்திரமாக பேசி நைட்ஷோவுக்கு வரவழைத்தேன். 

கிட்டத்தட்ட The Last Day on Mars. விண்வெளி ஓடத்தில் ஆறு விஞ்ஞானிகள் செவ்வாயில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணிலிருந்து ஒரு ஒற்றை அணு உயிரினத்தை கண்டுபிடிக்கிறார்கள். வளிமண்டலத்தை வெவ்வேறு வகையில் சீரமைத்து ஆராய்ந்து அதற்குகந்த வளிமண்டல சூழலை அமைத்துக் கொடுக்கிறார்கள். அந்த உயிரினத்தின் அணுக்கள் பல்கிப் பெருகுகின்றன. அதற்கு மேல் ஒரு ஸை-ஃபை ஹாரரில் என்ன நடக்கும் என்று விவரிக்கத் தேவையில்லை. ஆனால் பரபரப்பான ஒன்றரை மணிநேரம். சில சமயங்களில் முதுகுத்தண்டை சில்லிட்டது. (முன்பெல்லாம் ஹாரர் பட விமர்சனங்களில் தவறாமல் இடம்பெறும் இந்த க்ளிஷே வார்த்தைக்கு புத்துயிர் தந்த எழுத்தாளருக்கு நன்றி). சில காட்சிகள் ரொம்பவும் கோரம். கோரம் என்றால் ஷோவுக்கு முன்னால் ஜெயஸ்ரீயில் சாப்பிட்ட மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் வெளியே வந்துவிடுமோ என்று அச்சப்பட வைக்கிற கோரம். இத்தனைக்கும் கேனிபல் படங்களில் இதைவிட பன்மடங்கு கோரங்களை பார்த்திருக்கிறேன். Grotesque பார்த்திருக்கிறேன். அகண்டதிரையில் என்பதாலோ என்னவோ ஒரு மாதிரியாகிவிட்டது. பக்கத்தில் உள்ள மனிதர் பாயாசம் சாப்பிடுவதுபோல ஜாலியாக பார்த்துக்கொண்டிருந்தார். பூமி முக்கால் பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. ஆனால் CRV வந்துவிழும்போது மட்டும் ஏன் எங்கேயாவது நடுக்கடலில் போய் விழாமல், மீதமிருக்கும் பூமியிலும் வந்து விழாமல் கடற்கரையில் வந்து விழுகிறது ? க்ளைமேக்ஸ் கொஞ்சம் சர்ப்ரைஸ். ஆனால் இரண்டாம் பாகம் எல்லாம் தாங்காது ஸ்வாமி !

படம் பார்க்க வந்தபோது சிங்கம் சேபியன்ஸ் பற்றி எழுதியிருந்ததை விசாரிக்கிறார். இன்னொரு நண்பர் பின்னூட்டத்தில் ஹோமோ டியூஸ் பரிந்துரைக்கிறார். இதன்மூலம் ஒயின்ஷாப் என்பது கிணற்றில் போட்ட கல் அல்ல என்று தெரிகிறது. குறைந்தது இரண்டு பேர் படிக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆசுவாசமாக இருக்கிறது.

சேபியன்ஸில் முதல் யூனிட், முதல் சேப்டர் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா. இரண்டாவது சாப்டர் மற்ற இனங்களிடமில்லாத சேபியன்ஸின் தனித்தன்மை பற்றி பேசுகிறது. ஒன்று, மொழியறிவு. பெரும்பாலான உயிரினங்கள் தங்கள் இனத்திற்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ள ஏதேனும் வழிமுறைகள் வைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, சிம்பன்ஸி ஒரு குறிப்பிட்ட சப்தத்தை எழுப்பினால் சிங்கம் வருகிறது ஜாக்கிரதை என்று பொருள். அதைக் கேட்டு மற்ற சிம்பன்ஸிகள் உஷாராகிவிடுகின்றன. ஆனால் சேபியன்ஸ் மொழி இன்னும் விசாலமானது. அதன்மூலம் சிங்கம் எங்கே வருகிறது, எவ்வளவு பெரிய சிங்கம், எவ்வளவு வேகமாக வந்துக்கொண்டிருக்கிறது, எப்படி தப்பிக்கலாம் என்று நிறைய தகவல்கள் பரிமாறவும், விவாதிக்கவும் தோதாக இருக்கிறது. மட்டையடி உதாரணம் என்றால் விமர்சக சிம்பன்ஸி ஒரு படம் பார்த்தால் குப்பை என்று மட்டும்தான் சொல்லும். அதுவே சேபியன் என்றால் படத்தில் கதைச்சுருக்கம் என்ன ?, ஹீரோயின் பற்றிய ஜொள்ளு விவரணை, ஒளிப்பதிவு சுமார், எடிட்டிங் சூப்பர், எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் எல்லாம் சொல்லுமாம். சேபியன்ஸின் இன்னொரு தனித்துவம் புனைவுத்திறன். அதன் மூலம் இல்லாத ஒன்றை உருவாக்கி, அதன் மீது நம்பிக்கைகள் வளர்த்து, ஒருமித்த உணர்வெழுச்சி கொள்வது. அதுதான் சேபியன்ஸ் மற்ற மனித இனங்களை வெல்லக் காரணம் என்கிறார் ஆசிரியர். இருபது நியாண்டர்தால்களால் ஒற்றுமையாக இருக்க முடியும். அதிகபட்சம் நூறு. ஆனால் அதற்கு மேல் தாண்டினால் அந்தக் குழுவில் பிணக்குகள் ஏற்படும். ஆனால் சேபியன்கள் ஆயிரக்கணக்கில் கூட ஒற்றுமையாக இருப்பார்கள். இனம், மதம் போன்ற உணர்வுகள் அவர்களை இணைக்கும்.

சேபியன்ஸை துரிதமாக வாசிக்க முடியவில்லை. ஆனால் அதற்கு புத்தகத்தின் தன்மையோ, மொழியோ சத்தியமாக காரணமில்லை. ஒன்று, அது நமக்கு சிந்திப்பதற்கு தரும் விஷயங்கள். பாதி பக்கம் படிப்பதற்குள் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அதைப்பற்றி யோசிக்குமாறு நேரிடுகிறது. இன்னொன்று, புத்தகம் தடியாக இருப்பதால் முதுகுப்பையில் வைத்து எடுத்துச் செல்ல தோதாக இல்லை. பொதுவாக புத்தகங்கள் படிப்பதில் அருவி அணுகுமுறையைத் தான் கையாள்வேன். அதாவது ஒரு புத்தகத்தை முழுமையாக முடித்தபின் அடுத்த புத்தகம். ஆனால் சேபியன்ஸிற்கு அதனை பின்பற்றினால் தேக்கநிலை ஏற்படும். எனவே அவ்வப்போது ஒரு சேப்டர் சேபியன்ஸ். பிரதானமாக மற்ற புத்தகங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

சென்ற வாரம் புத்தகம் படிக்க முடியாததற்கு இன்னொரு காரணம், கண்ணில் ஏற்பட்ட நோய்த்தொற்று. இரவு படுக்கப் போகும்போது சாந்தமாக இருந்த கண்கள் காலையில் விழித்துப் பார்த்தால் வேட்டையாடு விளையாடு ராகவனுடையதைப் போல இருக்கின்றன. கம்ப்யூட்டர் முன்னால் உட்காரக்கூடாது, புத்தகம் படிக்கக்கூடாது, போனை தொடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். டெலிகேட் பொஸிஷனில் சிக்கிக்கொண்டேன். பொதுவாக மருத்துவ விடுப்புக்கு மேலாளரை சமாதானப்படுத்துவது சிரமமான காரியம். ஆனால் கண்ணில் ஏதாவது பிரச்சனை என்றால் பூரண கும்ப மரியாதையுடன் விடுப்பு அளிக்கப்படும். ஒருமுறை கடமை தவறா ஊழியனாய் கண் தொற்றுடன் அலுவலகம் சென்றுவிட்டேன். மேலாளர் என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி, விடுப்பு கொடுத்தார். 

மற்ற காரணங்கள் சொன்னால் நிறைய கேள்வி கேட்பார்கள். பொய்கள் பல்கிப் பெருகும். பள்ளியில் படிக்கும்போது எதற்கெடுத்தாலும் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் தான். மறுநாள் போனால் ஃபீவர் ஒரே நாளில் சரியாகிவிட்டதா என்று நக்கலடிப்பார்கள். அப்போது, கூட ரெண்டு நாள் விடுப்பு எடுத்திருக்கலாமோ என்று தோன்றும். எனக்கெல்லாம் பள்ளியில் மட்டுமில்லாமல் கல்லூரியில் கூட இந்த லீவ் லெட்டர் இம்சைகள் தொடர்ந்தன. நிறைய பொறியியல் கல்லூரிகள் இப்படித்தான். சினிமாக்களில் காட்டுவது போல இல்லை. என் கல்லூரிக் காலத்தில் நான் எப்போது விடுப்பு எடுத்தாலும் குறிப்பிடும் ஒரே காரணம் கோயிங் டூ டெம்பிள்’ தான். தெய்வகாரியம் என்பதால் மறுக்க முடியாது. நக்கலடிக்கவும் முடியாது. தற்போது அலுவலகங்களில் அநேக ஊழியர்கள் பயன்படுத்தும் விடுப்புக் காரணம் ‘ஸ்டொமக் அப்செட்’. பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு கொண்டுவரும்போது பையில் மேலோட்டமாக அழுக்கு பனியன், ஜட்டிகளை வைப்போம். ஜட்டிகளுக்குள் கையை விட்டு நோண்டமாட்டார்கள். அனுபவரீதியாக நிரூபணமான யுக்தி இது. ஸ்டொமக் அப்செட் என்பதும் அப்படித்தான். எந்த மேலாளரும் ஓ ! அப்படியா ? எப்படிப் போச்சு ? என்று கிளறல் கேள்விகள் கேட்க மாட்டார்கள் என்ற யோசனையாக இருக்கலாம். ஆனால் சில மேலாளர்கள் பாதாள சாக்கடை அடியாழம் வரை செல்வதற்கு கூட தயங்குவதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு ஊழியர் விடுப்பு எடுத்துவிட்டு ஸ்டொமக் அப்செட் என்றால் கிளிஷேவாக இருக்குமென்று கருதி டிஸ்ஸண்ட்ரி என்ற புது வார்த்தையைப் போட்டார். மேலாளரிடம் வசமாக சிக்கினார். டிஸ்ஸண்ட்ரி, டயோரியா, லூஸ் மோஷன் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடுகளை நுட்பமாக விளக்கினார். ஒருவருக்கு டிஸ்ஸண்ட்ரி வந்தால் அந்த தெருவே நாறிப்போகும் என்றார். அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும்படி ஆகிவிட்டது. மேலாளரின் வேற்றுத்துறை சார்ந்த அறிவைக் கண்டு தான். அந்த தருணத்தில் மேலாளர் ஒரு கேஸ்ட்ரோ-எண்ட்டராலஜிஸ்ட்டாக மாறுவதை நான் கண்கூடாக பார்த்தேன். 

பொதுவாக உலகில் ஒருவர் மருத்துவம் படித்தால் அவர் மருத்துவர், சிவில் எஞ்சினியரிங் படித்தால் அவர் பில்டிங் காண்டிராக்டர், ஆட்டோமொபைல் படித்தால் அவர் மெக்கானிக், இப்படி ப்ளம்பர், டெய்லர் என ஏராளமான துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆனால் மேனேஜராக இருந்தால் மட்டும் இவர்கள் எல்லோருமாகவும் இருக்கலாம். ஏன்னா அவங்க டிஸைன் அப்படி !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 comments:

அனுஷ்யா said...

/குறைந்தது இரண்டு பேர் படிக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆசுவாசமாக இருக்கிறது/

ஒருவர் என்ற நிலை வந்தால்கூட அந்த ஒருவன் நான்தான். 2011/12'ல் உங்கள் தளத்திற்கு நான் வருவதற்கு முன் நீங்கள் எழுதியதைகூட ரிவர்ஸில் சென்று வாசித்தவன். சில வரிகள் கூட அப்படியே மனப்பாடம்.இதெல்லாம் கேட்டா மம்மூட்டி சொல்வது போல.. தாங்கமாட்டிங்கடா தாங்கமாட்டிங்க...

பாஸ்கி said...

இரண்டு போில், இந்த இரண்டாவது ஆள் நான் என்பதை உறுதியாக சொல்லமுடியும் :) :)

ஜீவன் சுப்பு said...

தாங்கமாட்டிங்கடா / ஹா ஹா.

வித்தியாசமா இருக்கட்டும்னு ஒருமுறை மிக்ரேன் தலவலின்னு போன்ல சொல்லி லீவு கேட்டு சிக்கி சின்னாபின்னாமாகிட்டேன். முன்னாடி வேலைபார்த்த நிறுவன மேலாளர் என்ன மாத்திரை சாப்பிட்ட, எந்த டாக்டர் எங்க இருக்காருன்ற அளவுக்கு கிண்டி கிழங்கெடுத்துருவாப்பிடி. ஒருசில லீவுகளை எப்படி எழுதுறதுன்னு தெரியாம கூகுள் பண்ணுன கொடுமையெல்லாம் உண்டு.

vsr said...

எல்லா விஷயங்களும் TRIAL AND ERROR தான். நிறைய நேரங்களில் தவறாக சொல்லி தப்பித்து அல்லது மாட்டிக்கொண்டு இப்போது முடிந்தவரை உண்மையை சொல்லிவிடுகிறேன். Atleast சமாளிக்கத் தேவை இல்லை பாருங்கள்

அஞ்சா சிங்கம் said...

படித்து முடித்தவுடன் சொல்லவும் ஆட்டைய போடனும்.

suriya said...

Arpudhamana katturai !!!

Philosophy Prabhakaran said...

@மயிலன்

கண் கலங்குது தெய்வமே _/\_

உண்மைதான்... நீங்களும் ஜீவன் சுப்புவும் ரொம்ப நாளா படிக்கிறது மட்டுமில்லாம, எப்பயாவது ஏதாவது டெர்மை ரீ-யூஸ் பண்ணாக்கூட கரெக்டா கண்டுபிடிச்சிடுறீங்க... உங்களுக்கு பயந்தே எழுதும்போது இதேமாதிரி ஏற்கனவே எழுதியிருக்கோமான்னு யோசிக்க வேண்டியதா இருக்கு ;)

Raj said...

I am reading all your blogs since 2010.