5 April 2017

மசினகுடி – சென்றடைதல்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

முந்தைய பகுதி: பந்திப்பூர் வனச்சாலை

மசினகுடி எல்லையைத் தொட்டதும் ஒரு இளைஞர் வேகமாக வந்து எங்கள் வாகனங்களை வழிமறித்தார். அந்த சமயத்தில் அவருடைய உடல்மொழி ஒரு போக்குவரத்து காவலருடையதைப் போல இருந்தது. ஏதோ தகாத செயல் புரிந்துவிட்டோம் போலிருக்கிறது என்று பயந்துக்கொண்டே வாகனத்தை நிறுத்தினால் அண்ணன் காட்டுலாவிற்கு (ஜங்கிள் சஃபாரி) ஆள் சேர்க்கிறார். அப்போதைக்கு அது குறித்து முடிவு எதுவும் எடுக்காததால் அந்த நபரின் அலைபேசி எண்ணை மட்டும் பெற்றுக்கொண்டு ஊருக்குள் நுழைந்தோம். அதற்குள் மழை கொஞ்சமாக பெய்வது போல துவங்கி, முக்கால்வாசி நனைந்திருந்தோம்.

மசினகுடியை சுற்றி ஏராளமான ரெஸார்டுகள் உள்ளன. Jungle, Wild, Forest போன்ற குறிச்சொற்களை தங்களுடைய பெயர்களில் தாங்கி சுமார் ஐம்பது ரெஸார்டுகளாவது இருக்கக்கூடும். அவற்றில் ஒற்றை இரவு வாடகை மூன்றாயிரத்தில் துவங்கி, பத்தாயிரம் வரை இருக்கின்றன. வாங்குகிற பணத்திற்கேற்ப அவற்றில் நீச்சல் குளம், கேம்ப் ஃபயர் போன்ற வசதிகள் கிடைக்கின்றன. இவை தவிர்த்து நேரடியாக காட்டில் கூடாரமடித்து தங்குவதற்கான ஏற்பாடுகளும் கிடைக்கின்றன. இதற்கென காட்டுப்பகுதிக்கு நன்கு அறிமுகமான, சமையல் தெரிந்த உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர். இந்த சேவைக்கு ஒரு நபருக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம் என்று கேள்விபட்டேன். எங்களுடையது பட்ஜெட் ட்ரிப் என்பதால் மசினகுடி ஊர்பகுதியிலேயே அறை எடுப்பதென முடிவெடுத்திருந்தோம். அதற்கென சில தங்குமிடங்களைக் கூட ஏற்கனவே பட்டியலில் குறித்து வைத்திருந்தோம்.

மசினகுடி ஊர் என்று நான் குறிப்பிடுவது இரண்டு சிறிய தெருக்களையும், ஒரு பிரதான சாலையையும் உள்ளடக்கியது. தெருக்கள் மற்றும் சாலையின் நீளம் சுமார் இருநூறு மீட்டர் இருக்கலாம். சுற்றுலாத்தளத்திற்கான அடையாளங்கள் அதிகம் இல்லை. பிரதான சாலையில் டெய்லர் கடை, ஃபோட்டோ ஸ்டூடியோ, மளிகைக் கடை, மருந்துக் கடை, பிராய்லர் கோழிக்கறி கடை என்று சகலமும் இருக்கின்றன. டாஸ்மாக் இருக்கிறது. சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. அங்கே பழங்கள் இருக்கின்றன. பழங்கள் என்றால் உள்ளூர் பழங்கள் அல்ல. நவீன கலப்பின திராட்சைகள், ஆரஞ்சுகள், ஆப்பிள்கள் என நகரத்தில் கிடைக்காத பழங்கள் கூட இங்கே கிடைக்கின்றன. எஞ்சியிருக்கும் சிறிய உணவகங்களும், விடுதிகளும் தான் சுற்றுலா தளத்திற்கான அடையாளங்கள். முதலில் சேவியர் லாட்ஜை பார்த்தோம். அறுநூறு ரூபாய் வாடகை. ஒப்பீட்டளவில் விசாலமான அறை. இரண்டு கட்டில்கள். இருப்பினும் மேஜை, அலமாரி, தொலைகாட்சி ஆகியவை இல்லாதது குறையாக தெரிந்தது. அடுத்தது ஆலப்பத் லாட்ஜ் சென்றோம். அங்கே இருந்த சிப்பந்தி அறை என்றதும் ஒரு முரட்டுத்தனமான கேள்வியைக் கேட்டு எங்களை திகைக்க வைத்தார். ட்ரிங்க்ஸ் சாப்பிடுவீங்களா ? என்பதுதான் அந்த கேள்வி. எங்களுக்கும் அந்த சிப்பந்திக்கும் தனிப்பட்ட உறவுமுறை / நட்பு இல்லையென்றால் கூட முதல் கேள்வியே இத்தனை அதிரடியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஆசுவாசமடைவதற்குள் குடிச்சிட்டு பிரச்சனை பண்ணுவீங்களா ?, போலீஸ் வந்தா நீங்கதான் பாத்துக்கணும் என்று அடுத்தடுத்த அணுகுண்டுகளை போட்டார். குறிப்பாக இறுதியில் அவர் கொடுத்த போலீஸ் எச்சரிக்கை எங்களுக்கு கோபமூட்டியது. இங்கே என்ன பிராத்தலா செய்கிறோம் ? எல்.சி.டி டிவி இருந்தும் கூட அந்த விடுதியை புறக்கணித்தோம். 

கொங்கு லாட்ஜ்
அடுத்தது வகையாக வந்து சிக்கியது கொங்கு லாட்ஜ். கீழ் மற்றும் முதல் தளங்களில் அறைகள். அடித்தளத்தில் மதுக்கூடம். விடுதி உரிமையாளரை / சிப்பந்தியை சந்திப்பதற்கு முன்பாகவே மதுக்கூட பிரஜை ஒருவர் ஆஜராகிவிட்டார். கேம்ப் ஃபயர், ட்ரெக்கிங், சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தருவதாக அரைபோதையில் சொன்னார். எந்த சுற்றுலா தளத்திற்கு சென்றாலும் இதுபோன்ற முகவர்கள் உங்களை அணுகுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். நமக்கு உதவ முன்வருகிறார்களே என்று இவர்களிடம் சிக்கினால் நம்மை நொங்கெடுத்து விடுவார்கள். இவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு நாம் தரவேண்டிய விலை ஒரு கட்டிங். அப்படி ஐம்பது ரூபாயை அந்த நபரிடம் கொடுத்தபிறகு நாங்கள் மசினகுடியில் இருந்து கிளம்பும் வரை அவரை பார்க்கவே முடியவில்லை. 

அறையிலிருந்து இயற்கைக்காட்சி
இதற்குள் விடுதி உரிமையாளர் வந்துவிட்டார். அறை வாடகை நாளொன்றிற்கு எண்ணூறு ரூபாய். சிறிய அறைதான். தொலைக்காட்சி, அலமாரி, மேஜை ஆகியவை இருந்தன. கூடுதல் மெத்தையும், போர்வையும் தருவதாகக் கூறினார். அறையிலிருந்து இயற்கைக்காட்சி சிறப்பாக இருந்தது. உடனடியாக அங்கே குடிபுகுந்துக் கொண்டோம். மதிய உணவை (மோசமான பிரியாணி) முடித்துக்கொண்டு, பயணக்களைப்பில் முரட்டுத் தூக்கம் தூங்கி, மறுநாள் காலையில் தான் எழுந்தோம்.

எழுந்தபோது மிதமான தலைவலி. தூக்கத்திற்கிடையே கடைத்தெருவுக்கு போய் பழங்களும், சிற்றிடை உணவுகளும் வாங்கி வந்து, சீஸனில்லாத மாம்பழ ஜூஸை பருகி, கதைகள் பேசித்தீர்த்ததாக மங்கலாக ஏதேதோ குழப்பமான நினைவுகள் எஞ்சியிருந்தன. ஒரு பழகிய ஊரைப் போல பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று தேநீர் அருந்தியபடி பேச்சு கொடுத்தபோது முந்தைய இரவு அந்த சாலையின் முனை வரை யானை வந்து சென்றதாக சொன்னார்கள்.

அடுத்த பகுதி: மோயாறு பள்ளத்தாக்கு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

விஸ்வநாத் said...

// சிற்றிடை உணவுகளும் //

சிற்றிடை உணவு ???