11 December 2017

பிரபா ஒயின்ஷாப் – 11122017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் ஒயின்ஷாப்பானது கொல்லிமலையில் இணைய தொடர்பை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத பகுதியில் இருந்து மைபர் நெட் எனும் உள்ளூர் சேவையின் மூலம் வெளியாகிறது. நன்றி மைபர் நெட் !

திடீரென வியாழக்கிழமை  மதியம் ”வீக்கென்ட் ஃப்ரீயா ?” என்றொரு இன்பாக்ஸ் கேள்வி. அனுப்பியது ஃபேஸ்புக் பிரபலம் ‘பாடி’ நாகராஜ்.

வியாழன் இரவு தீர்மானித்து வெள்ளி இரவு கிளம்பிவிட்டோம் கொல்லிமலைக்கு ! முதல்முறையாக காரில் நீண்ட பயணம். சுத்தமாக களைப்பே தெரியாதபடி மூன்றே பிரேக்கில் அதிகாலை குமாரமங்கலம் கொண்டு சேர்த்தார் நண்பர் பாடி. அங்கே இன்னொரு நண்பர் வீட்டில் கொஞ்சம் இளைப்பாறல், சுத்தமான சைவ உணவு. நான்கைந்து இளநீரை உள்ளே இறக்கிவிட்டு மதியம் போல கொல்லி ஏறத்துவங்கினோம். இத்துடன் மூன்றாவது முறையாக கொல்லி செல்கிறேன்.

சீக்குப்பாறை நோக்குமுனையிலிருந்து (கோப்பு படம்)
சோளக்காடு பழங்குடியினர் சந்தை, மூலிகைப் பண்ணை, சீக்குப்பாறை வியூ பாயிண்ட், வல்வில் ஓரி சிலை ஆகியவற்றை பார்த்துவிட்டு, ஆளுக்கு ஒரு தட்டு குழி பணியாரத்தை காபந்து பண்ணிவிட்டு ஹோட்டலை சென்றடைந்தோம்.

கடந்த ஒரு வருடத்தில் கொல்லியில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

சீக்குப்பாறை வியூ பாயிண்ட் அருகில் புதிதாக ஒரு ஹோம் மேட் சாக்லேட் ஷாப் முளைத்திருக்கிறது. ஊட்டி, மூணாறு போன்ற இடங்களில் வரிசையாக சாக்லேட் கடைகளை பார்க்க முடியும். கொல்லியில் இதுவே முதல் மற்றும் ஒரே கடை. கடை திறக்கப்பட்டிருக்கிறது என்பதை விட அங்கே கம்ப்யூட்டரைஸ்ட் பில் கிடைக்கிறது, பே.டி.எம் வசதி உள்ளது, அதன் உரிமையாளருக்கு லிண்டா கிரேஸன் சொன்ன சாக்லேட் பற்றிய தத்துவமொன்று தெரிந்திருக்கிறது என்பதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. விரைவில் தமிழ்நாடு முழுக்க பார்சல் விநியோக சேவை செய்யவிருக்கும் அந்த இளம் தொழிலதிபருக்கு எனது வாழ்த்துகள். கடையின் பெயர்: பர்ஃபீ சாக்லேட்ஸ்

கொல்லிமலையில் எல்லோருக்கும் தெரிந்த பிரபல உணவகம் என்றால் அது வசந்தமாளிகை. அங்கே நல்ல உணவு கிடைக்குமா என்பது அடுத்த விஷயம். ஆனால் சென்னைக்கு சரவண பவன் மாதிரி கொல்லிக்கு வசந்தமாளிகை (அசைவமும் கிடைக்கும்). இப்போது புதிதாக நியூ ஸ்டார் கிளாஸிக் எனும் உணவகம் திறக்கப்பட்டிருக்கிறது. அதன் உரிமையாளர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு பத்து வருடங்கள் அமீரகத்தில் அது தொடர்பான பணிபுரிந்துவிட்டு கொல்லி திரும்பி இந்த உணவகத்தை நிறுவியிருக்கிறார். உணவகம் திறந்து இருபது நாட்களே ஆகியிருக்கிறது. கொல்லியில் ரேண்டமாக யாரையாவது நிறுத்தி, சாப்பிட நல்ல ஹோட்டல் என்ன என்றால் யோசிக்காமல் நியூ ஸ்டார் கிளாஸிக்கை கை காட்டுகிறார்கள். உரிமையாளரின் மார்கெட்டிங் வித்தை என்று யூகிக்கிறேன். உணவின் தரம், சுவை அபாரம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கொல்லியை பொறுத்தவரையில் ஒப்பீட்டளவில் நல்ல ஆம்பியன்ஸ் கொண்ட, டீஸண்ட்டான உணவகம்.

மூன்றாவது விஷயம்தான் ஹைலைட் ! கொல்லியில் நல்ல தங்குமிடங்கள் என்றாலே நல்லதம்பி மற்றும் பி.ஏ, ஹாலிடே இன் மட்டும்தான் என்பார்கள். பயணத்தொடர் எழுதியபோது கூட கொல்லியில் ரிசார்ட் என்பதே கிடையாது என்று எழுதியிருந்தேன். அதனை பொய்யாக்கும் வகையில் சில்வர்லைன் ரெட்ரீட் எனும் பகட்டான விடுதியில் தங்கினோம். இது முன்பே இருந்ததா என்று தெரியவில்லை. சோளக்காடு, செம்மேடு போன்ற பிரதான பகுதிகளில் இருந்து சுமார் ஐந்தாறு கி.மீ தொலைவில், மோசமான சாலைகளை கடந்தபிறகு வருகிறது சில்வர்லைன் ரெட்ரீட். ஃபோட்டோஷூட்டுகளுக்கெல்லாம் உகந்த அட்டகாசமான லான் மற்றும் விசாலமான ப்ளே ஏரியாவுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது. பாடாவதி தான் என்றாலும் இதோ இந்த ஒயின்ஷாப்பை தட்டுத்தடுமாறி வெளியிடும் அளவிற்கு வைஃபை கிடைக்கிறது. குளிப்பதற்கு வெந்நீர், படுப்பதற்கு எட்டு இன்ச் தடிமனான மெத்தை என்று வசதியாக இருக்கிறது. என்ன ஒன்று, மலையிலேயே தி பெஸ்ட் என்பதால் கொஞ்சம் ஷோக்கு காட்டுகிறார்கள். இரவு நேரத்தில் நாம் உணவுக்காக வெளியே பயணிக்க முடியாத சமயத்தில் புஃபே டின்னர் முன்னூற்றி இருபது + டாக்ஸஸ் என்று கூறி அலற வைக்கிறார்கள்.

காலையில் நேரே கொல்லியின் ஸ்பெஷல் ஸ்பாட்டான ஆகாய கங்கைக்கு சென்றோம். உச்சகட்ட சீஸனில் ஆவேசமாக கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறது அருவி. அருவிக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை. சுமார் நாற்பதடி தொலைவிலேயே அருவியின் சாரல் த்வம்சம் செய்துக்கொண்டிருந்தது. வழக்கம்போல ஆயிரம் படிக்கட்டுகள் ஏறும்போது தாவு தீர்த்துவிட்டது. அச்சமயம் காஜல் அகர்வால் வெறியேற, விதிமாற, சதிகாரர் கதிமாற என்று பாடுவதாக நினைத்துக்கொண்டு ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்தேன். பின்னர் அறப்பளீஸ்வரரை துரிதமாக ஒரு விசிட் அடித்து முடித்துவிட்டு மாசிலா அருவிக்கு சென்றோம்.

மாசிலா அருவிக்கூட்டம் எனக்கு எப்போதும் ஒவ்வாதது. எட்டுக்கு எட்டு இடத்தில் இருபாலரும் ஈஷியபடி குளித்துக் கொண்டிருப்பார்கள். சென்றமுறை ஆகஸ்ட் மாதம் சென்றபோது நீர்வரத்து குறைவாக இருந்தது. தற்போது சீஸன் என்பதால் தாராளமான நீர்வரத்து காணக்கிடைத்தது. மேலும் இந்த அருவியில் பாடி மஸாஜ் செய்யும் ஆசாமி ஒருவர் புதிதாக தோன்றியிருக்கிறார். விலை இருநூறு. ‘பாடி’ அவரிடம் மஸாஜ் செய்துக்கொண்டார். ‘பாடி’யின் உடலைப்பார்த்து அஜித் மாதிரி இருப்பதாக மஸாஜ் ஆசாமி புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அருவியின் அருகிலுள்ள பூங்காவில் யாருமில்லாததால் அங்கிருக்கும் ஊஞ்சலில் சுமார் பதினைந்து நிமிடங்கள் குழந்தையாகவே மாறி ஆடித்தீர்த்தேன்.

நம்ம அருவியின் எழில் தோற்றம் (கோப்பு படம்)
அடுத்ததாக நம்ம அருவி நோக்கி சென்றோம். நம்ம அருவியின் சிறப்பம்சம் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அந்த சுஹானுபவத்தை மீண்டும் பெறுவதற்காகவே நம்ம அருவியை எதிர்பார்த்து சென்றோம். அங்கே சென்றதும் ரெளடியைப் போல இருந்த ஒரு ஆள் எங்களை வழிமறித்து குளிக்கக்கூடாது, அருவி ஃபுல்லா இருக்கு என்றார். அருவி எப்படி ஃபுல்லாகும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ‘பாடி’ அவரிடம் சற்று குரலை உயர்த்த அண்ணன் உண்மையை கக்கலானார். உள்ளே காவல்துறை கண்காணிப்பாளரும் அவரது குடும்பப்பெண்களும் குளித்துக்கொண்டிருக்க கான்ஸ்டபிள் மாமா அப்பக்கம் யாரும் சென்று மஹாராணிகள் குளிப்பதை பார்த்துவிடாதபடி காவல் காத்துக்கொண்டிருக்கிறார். ஒருவழியாக அம்மாள்கள் குளித்துவிட்டு வந்தபிறகு எங்களை அனுமதித்தார். எங்களுக்கே எங்களுக்காக கிடைத்தது அருவி. ஒருவேளை அரவிந்த்சாமி கஜோலை நம்ம அருவிக்கு அழைத்து வந்திருந்தால் அவருக்கு செட் ஆகியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட ப்ளிஸ்ஃபுல்லான அருவி இது. அதனால்தானோ என்னவோ இதற்கு நம்ம அருவி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது போல மிதமான நீர்வரத்து, நல்ல சுற்றுச்சூழல் இவற்றுடன் அட்டகாசமான ப்ரைவஸி ! கூடவே இம்முறை அருவிக்கு மேலே இயற்கை அமைத்துள்ள இன்ஃபினிட்டி பூல் ஒன்றைக் கண்டுபிடித்தோம். அங்கேயும் சற்று நேரம் நீருடன் அளவளாவினோம்.

பின்னர் கொல்லியின் உட்புற கிராமங்கள் வழியாக ஒரு சுற்று வந்து அறைக்கு திரும்பினோம். கொல்லி டாஸ்மாக்கில் கார்ல்ஸ்பெர்க் பியர் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல். கூலிங்கே தேவைப்படாத குளிர். வாரயிறுதி தரமாக கழிந்தது.

ஒருபுறம் கொல்லி பயணத்தினால் ஏற்பட்ட மனமகிழ்வு என்றால் இன்னொரு புறம் பாடி நாகராஜின் நட்பினால் கிடைத்த மனமகிழ்வு. பயங்கரமான ஒத்துப்போகக்கூடிய டிராவல் பார்ட்னர். அட்டகாசமாக கார் ஓட்டுகிறார். சாவனில் செமத்தியான ப்ளே லிஸ்ட் (நேபாளி – வேடனைப் போல நான் மாறவா உட்பட) தயார் செய்து வைத்திருக்கிறார். இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவின் அண்டர் ரேட்டட் கதாநாயகிகள் என்கிற ஒரு பட்டியலை தயார் செய்தோம். அதில் பெரும்பாலும் எங்கள் ரசனை ஒத்துப்போனது. ஆனால் ஏனோ அவருக்கு பிரணிதா சுபாஷை பிடித்திருக்கிறது.

குறிப்புகள்:
1. வை ஃபை தடைகள் காரணமாக புதிய புகைப்படங்களை பதிவேற்ற முடியவில்லை.
2. மீண்டும் ஒருமுறை பயணக்கட்டுரைகள் வராது. கவலை வேண்டாம். பழைய தொடரை வாசிக்க: கொல்லிமலை பயணக்கட்டுரைகள்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

Raj said...

Next time.. Would like to join you.

Unknown said...

அருமை.இன்னும் நிறைய கட்டுரைகளை எதிர்ப்பார்கிறேன்.👌👌👌

'பரிவை' சே.குமார் said...

அருமையானதொரு பயணம்....

Anonymous said...

அண்டர் ரேட்டட் கதாநாயகிகள் என்கிற ஒரு பட்டியலை தயார் செய்தோம். publish that please