25 December 2017

பிரபா ஒயின்ஷாப் – 25122017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தொடர்ச்சியாக வெளிவரும் ஐம்பதாவது ஒயின்ஷாப் இடுகை இது. எச்சரிக்கை: சுய புராணம். நான், எனது, எனக்கு போன்ற சொற்களை விரும்பாதவர்கள் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள் என்று கமெண்ட் போட்டுவிட்டோ, போடாமலோ ஓடிவிடலாம்.

நான் சொல்லப்போகும் விஷயங்கள் உங்களுக்கு வேடிக்கையாக அல்லது சில்லறைத்தனமாகக் கூட தெரியலாம். என்னளவில் தொடர்ச்சியாக ஐம்பது வாரங்கள் விடாப்பிடியாக ஒயின்ஷாப்பை எழுதி முடித்திருப்பதை ஒரு சாதனையாகவே பார்க்கிறேன். 

ஒயின்ஷாப்பின் கதை :-

முதன்முறையாக ஜனவரி 2011ல் பிரபா ஒயின்ஷாப் என்கிற தலைப்பில் வாராவாரம் எழுதத் துவங்கினேன். (பழைய இடுகைகளை படித்துப் பார்ப்பது சங்கடமூட்டும் விஷயம் என்பதால் இணைப்பு கொடுக்கவில்லை). அது கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் என்ற இரு ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த சமயம். ஜாக்கியின் சாண்ட்வெஜ் அண்ட் நான்வெஜ் புதன் மற்றும் வெள்ளி வெளிவந்துக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். கேபிளின் கொத்து பரோட்டா முறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவரும். இவர்கள் தவிர்த்து அவியல், குவியல், காக்டெயில் என்று இன்னும் ஏராளமான பெயர்களில் நிறைய பேர் கலவை இடுகை எழுதிக் கொண்டிருந்தார்கள். நானும் அப்படி ஒன்றை எழுத ஆசைப்பட்டேன். தலைப்பு என்ன வைக்கலாம் என்று யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தது காக்டெயில் தான். அதனை ஏற்கனவே கும்மாச்சி பயன்படுத்திக் கொண்டிருந்ததால் குவார்ட்டர் அல்லது சரக்கு நிமித்தமாக ஏதாவது வைக்கலாம் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் வடிவேலுவின் ஒயின்ஷாப் காமெடி என் சிந்தனைக்கு எப்படியோ எட்டிவிட்டது. பத்து பொருத்தமும் கொண்ட கச்சிதமான பெயர். அப்படி துவங்கியது தான் ஒயின்ஷாப். சில மாதங்கள் கழித்து அதற்கென ஒரு ரகளையான பேனரை வடிவமைத்துக் கொடுத்தார் நண்பர் சுகுமார் சுவாமிநாதன். தற்போது என் வலைப்பூவில் இருக்கும் ஆளவந்தான் கமல் படம் போட்ட பேனரை வடிவமைத்துக் கொடுத்தும் அவரே. 

வாராவாரம் எழுத வேண்டுமென்றால் கொஞ்சமாவது அதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். எனவே ஞாயிற்றுக்கிழமையில் நேரம் கிடைக்கும்போது எழுதி திங்களன்று வெளியிட வேண்டுமென முடிவு செய்துக்கொண்டேன். இந்த விஷயத்தில் எனது முன்னோடியான கேபிளைப் போலவே ஒவ்வொரு திங்கட்கிழமையும் எழுதுகிறேன் என்று எனக்கு அப்போது ஒரு கர்வம் இருந்தது. கேபிளிடம் எப்போதும் வியக்கும் விஷயம் அவரது கன்ஸிஸ்டன்ஸி. அவர் சினிமாவில் இயக்குநரான பிறகும் கூட விடாமல் கொத்து பரோட்டா எழுதிக் கொண்டிருந்தார். கன்ஸிஸ்டன்ஸியை பொறுத்தவரையில் என்னால் அவருக்கு அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆரம்பத்தில் திட்டம் எல்லாம் பயங்கரமாக போட்டாலும் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் அவசர அவசரமாக எழுதும்படி இருந்தது. என்னுடைய கேஸ் ஹிஸ்டரியை எடுத்துப் பார்த்தால் தெரியும். புத்தாண்டு துவங்கியதும் உத்வேகமாக எழுதத் துவங்குவேன். ஒன்றிரண்டு மாதங்கள் கடந்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக எழுதுவது குறைய ஆரம்பிக்கும். என்ன பெரிய ஒயின்ஷாப் என்கிற சலிப்பு ஏற்படும். சோர்வு வீழ்த்தும். மாதங்கள் செல்லச் செல்ல ஜனவரியில இருந்து ஃப்ரெஷ்ஷா தொடங்குறோம் என்று நினைக்க ஆரம்பித்துவிடுவேன். 

இப்போதும் அந்த சலிப்பு, சோர்வு, புத்தாண்டில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நினைப்பு எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒயின்ஷாப் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கறாராக இருந்திருக்கிறேன். சற்று மிகைப்படுத்தி சொல்வது போல தோன்றினாலும் இதுதான் உண்மை. சில எழுத்தாளர்கள் எல்லாம் தங்கள் புத்தகத்தின் முன்னுரையில் புத்தகம் அதுவே அதனை எழுதிக்கொண்டது என்பார்கள். அப்படி படிக்கும் போதெல்லாம் மனதிற்குள் ஒரு நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொள்வேன். ஆனால் ஒயின்ஷாப் விஷயத்தில் அதனை நானே நேரடியாக உணர்ந்தேன். மேலும் என்னை இணைய நண்பர்கள் யாராவது நேரில் சந்தித்தால் நான் அமுக்குணி மாதிரி இருப்பதை பார்த்துவிட்டு எனக்கும் நான் எழுதுவதற்கும் சம்பந்தமே இல்லை என்பார்கள். அது உண்மைதான். உங்களை நேரில் வந்து சந்திக்கும் அந்த அம்மாஞ்சிக்கும் இதனை எழுதிக் கொண்டிருக்கும் நபரும் ஒரே ஆள் கிடையாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜனவரியில் மசினகுடி போயிருந்தோம். அங்கிருந்து திரும்பி வரும்போது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆகியிருந்தது. பயங்கரமான அயர்ச்சி. ஒயின்ஷாப்பாச்சு மயிராச்சு என்று நேராக போய் படுத்துவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் ஒயின்ஷாப் வெளியாகியிருந்தது. வீட்டில் கேட்டதற்கு இடையில் சுமார் இரண்டு மணிநேரங்கள் நான் படுக்கையில் இல்லை என்று மட்டும் சொன்னார்கள்.

இப்படி ஒரு சம்பவம் மட்டுமல்ல. நான் திங்கட்கிழமையை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதால் லாங் வீக்கென்ட் அல்லது விடுப்பு எடுத்து பயணம் சென்றால் அங்கேயிருந்து எழுத வேண்டியது வரும். ஒருமுறை விளாத்திகுளத்தில் உறவினர் இல்ல காதுகுத்துக்கு போய் அங்கிருந்து எழுதினேன், சமீபத்தில் ஒரு வாரம் கொல்லிமலையில் நள்ளிரவில் கொல்லி பிசாசு போல விழித்துக்கொண்டு ஹோட்டல் ரிசப்ஷன் மோடம் அருகே லேப்டாப்பை எடுத்துக்கொண்டு போய் அமர்ந்து அடித்த கூத்தெல்லாம் மறக்கவே முடியாது. பல சமயங்களில் எதைப் பற்றி எழுதுவது என்று எந்த ஐடியாவும் இருக்காது. டெஸ்க்டாப் முன்பு அமர்ந்துக்கொண்டு இரண்டு, மூன்று மணிநேரங்களை விரயமாக்குவேன். பின்னர் பயங்கரமாக தூக்கம் வந்து படுத்துவிடுவேன். திரும்பவும் அதிகாலை எப்படியோ எழுந்து குறைந்தது அறுநூறு வார்த்தைகளில் ஏதோ ஒன்றை எழுதிவிடுவேன். இதில் ‘எப்படியோ’ என்கிற வார்த்தையில் தான் சூட்சுமம் இருக்கிறது.

வேகமாக ஒரு கிளான்ஸ் ஜனவரியில் இருந்து எழுதிய ஒயின்ஷாப்பை வாசித்துப் பார்த்தேன். வழக்கம் போல தான். ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை ஒப்பீட்டளவில் தரமாக எழுதியிருக்கிறேன். மே, ஜூன், ஜூலையில் தொய்வடைந்து ஆகஸ்டுக்கு பிறகெல்லாம் கிடைத்த ஒரு டாபிக்கை வைத்து தென்னை மரம் – பசு மாடு கதை எழுதியிருக்கிறேன். நிஜமாகவே வாசித்தவர்கள் பாவம்தான். 

இதில் இன்னொரு முக்கியமான விஷயம். சிலர் நான் யாருக்காகவும் எழுதவில்லை எனக்காக மட்டும்தான் எழுதுகிறேன் என்பார்கள். கலைத்தாயை ஓழ் போடுவதற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பார்கள். சுத்த பேத்தல். எப்போதும் ஒரு இரண்டாம் நபரிடம் இருந்து கிடைக்கும் அங்கீகாரம் தரும் போதை அலாதியானது. உண்மையோ, பொய்யோ நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் டோப்படித்தது போன்ற ஒரு கிறக்கம் மூளை நரம்பிற்குள் போய்விட்டு வரும். அதே சமயம் தொடர்ச்சியாக இப்படி எழுதிக் கொண்டிருந்தது வருடம் முழுக்க என்னை உற்சாகமாக வைத்திருந்ததை நானே உணர்ந்தேன். திங்கட்கிழமை காலை கச்சிதமாக ஒயின்ஷாப்பை பப்ளிஷ் செய்துவிட்டு ஆபீஸ் போகும்போது கிடைக்கும் மனநிறைவு அலாதியானது. ஒருவேளை ஒருவர் கூட ஒயின்ஷாப்பை படிக்கவில்லை என்றால் கூட அந்த மனநிறைவுக்காக தொடர்ந்து எழுதியிருப்பேன் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

இருப்பினும் வருடம் முழுக்க என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திய உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஆண்டிலும் இதே போல தொடர்ந்து ஒயின்ஷாப் எழுதுவேன். அதற்கு முன்பு இரண்டு வாரங்கள் இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். மூளையை கொஞ்சம் ஃப்ரெஷ்ஷாக்கிக் கொள்ள இவ்விரு வாரங்களை பயன்படுத்திக்கொள்ள போகிறேன். அடுத்த ஒயின்ஷாப் 15012018 அன்று வெளிவரும்.

என் மீது அன்புள்ளம் கொண்டவர்கள், ஒயின்ஷாப் பகுதியை தொடர்ந்து வாசிப்பவர்கள் ஃபீட்பேக் கொடுத்து என்னையும் என் எழுத்துகளையும் செரிவூட்டலாம். குறிப்பாக சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

ஒரு ஒயின்ஷாப் இடுகை அதிகபட்சம் எத்தனை வார்த்தைகள் இருந்தால் வாசிப்பீர்கள் ?

ஒயின்ஷாப்புக்கு நுழைந்து பாதியில் வாசிக்காமல் திரும்பிப் போனதுண்டா ? ஆமாம் என்றால் ஏன் ?

ஒயின்ஷாப்பில் எழுதிய குறிப்பிட்ட பகுதி ஏதாவது உங்கள் நினைவில் இருக்கிறதா ? எது ஏன் ?

மொக்கையாக எழுதியிருக்கிறான் என்று நினைத்த தருணங்கள் ?

ஒயின்ஷாப்பில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயம் ?

குறிப்பாக ஏதாவது விஷயத்தை பற்றி எழுத வேண்டுமென நினைக்கிறீர்களா ?

ஒயின்ஷாப்பைப் பற்றி பொதுவாக உங்கள் கருத்து என்ன ?

கேள்விகளைத் தாண்டி சொந்தமாக உங்களுக்கு தோன்றும் விஷயத்தை நீங்கள் என்னிடம் எந்த சங்கடமும் இல்லாமல் தெரிவிக்கலாம். இதில் ஏதேனும் தயக்கமாக இருந்தால் சரஹாவில் கூட தெரிவிக்கலாம். இணைப்பு: https://philosophyprabhakaran.sarahah.com/

மீண்டும் புத்தாண்டில் சந்திக்கலாம். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் :)

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் ஒரு அங்கீகாரம் தேவைப் படுகிறது. தேடிச் சோறு நிதம் தின்று சின்னஞ்சிறு கதைகள் பேசும் சாதாரணன் நான் அல்ல என்று உணர்த்துவதற்கான வாய்ப்பை பதிவுலகமும் சமூக வலைத்தளங்கள் அளித்துள்ளன. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டும் வரும் பிரபாகரனுக்கு வாழ்த்துகள்

Anonymous said...

நன்றாக எழுதுகிறீர்கள். கெட்ட வார்த்தைகள் அங்கங்கே நெருடுகிறது. நல்ல நடை.

Anonymous said...

சென்னையின் வரலாறு மற்றும் முத்தையா குறித்து நீங்கள் ஒரு பதிவு எழுதியதாக நினைவு. சென்னை பிடித்தமான நகரம். மில்லர் என்பவர் ஒரு காலத்தில், எக்ஸ்பிரஸ் நாளிதழில் சென்னை வீதிகள் மற்றும் கட்டிடங்கள் பற்றி படத்துடன் கட்டுரைகள் எழுதுவார்.
அவசர கதியில் பதிவுகளை கை பேசியில் படிப்பதால், பதிவு நீளமாக இருந்தால், பாதியோடு நிறுத்தி விடுவது உண்டு.

அது என்ன எண்கள் என்று யோசிப்பதுண்டு. இன்றுதான் கவனித்துப் பார்த்தேன்.

Elangovan said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்

N.H. Narasimma Prasad said...

Congrats. Keep Going...

Anonymous said...

Congratulations bro! I don't find an post is boring. I am a regular visito r to your blog. I recently thought you posting every week but didn't know it is your 50th consecutive week .. keep rocking bro, all the Best!
Happy New Year 2018!

Ponmahes said...

>>ஒயின்ஷாப்பைப் பற்றி பொதுவாக உங்கள் கருத்து என்ன ?

கருத்துத் திணிப்பு இல்லாமல், யாரையும் பற்றி சட்டை செய்யாமல்[உங்கள் நெருங்கியவர்கள் உட்பட ] மனதில் நினைத்த உங்கள் கருத்தை, செய்தியை பேசும் போது காதில் எப்படி கேட்குமோ அதையே அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விடுவதால் படிக்கும் போது அயர்ச்சி தெரிவதில்லை.

நான் எந்த ஒரு பதிவையும் இதுவரை இடையில் படிக்காமல் விட்டுச் சென்றதில்லை. அப்படி சொல்வதை விட, விட்டுச் செல்ல தோன்றியதில்லை என்பது சரியா இருக்கும் ன்னு நெனைக்கிறேன் .

உங்களுடைய பதிவுகள் எல்லாமே எனக்கு பிடித்தவை தான் ...

முக்கியமாக பயணக் கட்டுரைகள், அப்பறம் உங்க நெருங்கிய தோழன் நூர் கான் பற்றி எழுதுனது , அம்மா பற்றி எழுதுனது , பட விமர்சனங்கள் ..எல்லாமே ......

வாழ்த்துகள் ...இந்தத் துறை யில் இன்னும் பல படிகள் ஏற ......

பொன் மகேஷ்வரன் குமார் .

விஸ்வநாத் said...

ஐம்பது வாரமாய் எழுதி
வாராவாரம் எழுதி
எத்தனையோ விடயங்களை பற்றி எழுதி
சுஜாதாவோ நமிதாவோ
செருப்போ சிரிப்போ எல்லாவற்றையும் எழுதி
இன்று எட்டமுடியாத இடத்திற்கு எழுந்துநிற்கும்
எங்கள் அண்ணன்
துப்பாக்கி இல்லாத ப்ரபாகரனுக்கு
வாழ்த்துக்கள் அளித்து
வணங்குகிறோம் - இப்படிக்கு அண்ணனின் டம்மிகள்.

mohan said...

ஒரு ஒயின்ஷாப் இடுகை அதிகபட்சம் எத்தனை வார்த்தைகள் இருந்தால் வாசிப்பீர்கள் ?

வார்த்தைக் கணக்கு எதுவும் இல்லை. சுவாரஸ்யமாக இருந்தால் சரி.

ஒயின்ஷாப்புக்கு நுழைந்து பாதியில் வாசிக்காமல் திரும்பிப் போனதுண்டா ? ஆமாம் என்றால் ஏன்?

அப்படி போனதாக நினைவில்லை.

ஒயின்ஷாப்பில் எழுதிய குறிப்பிட்ட பகுதி ஏதாவது உங்கள் நினைவில் இருக்கிறதா ? எது ஏன் ?

சினிமா or anything for that matter, நான் கவனிக்காததை நீங்கள் கவனித்து எழுதியவை.

மொக்கையாக எழுதியிருக்கிறான் என்று நினைத்த தருணங்கள்?

பயணக்கட்டுரைகள் என்று நினைக்கிறேன்

ஒயின்ஷாப்பில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயம் ?

இன்னும் நிறைய விஷயங்கள் கலவையாக இருந்தால் நன்றாக இருக்கும்

குறிப்பாக ஏதாவது விஷயத்தை பற்றி எழுத வேண்டுமென நினைக்கிறீர்களா ?

இல்லை

ஒயின்ஷாப்பைப் பற்றி பொதுவாக உங்கள் கருத்து என்ன ?

அருமை. Expecting the same consistency.

mohan said...

>உண்மையோ, பொய்யோ நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் டோப்படித்தது போன்ற ஒரு கிறக்கம் மூளை நரம்பிற்குள் போய்விட்டு வரும்.

நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் 😜

ஸ்ரீராம். said...

முகத்திலறைவது போல சொன்னாலும் ஓரிரு அல்லது ஒரு வார்தையைத் தவிர்க்கலாம் என்பது என் யோசனை. முன்பு எப்போதோ உங்கள் பக்கம் வாசித்த நினைவு இருக்கிறது. அடுத்தடுத்த வரிகளையும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வம் வரவைத்தாலே படைப்பாளி முதல் வெற்றி பெற்று விடுகிறான். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். மென்மேலும் உயர வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

//முகத்திலறைவது போல சொன்னாலும் //
முகத்திலறைவது போல உண்மைகளைச் சொன்னாலும் என்று வரவேண்டும்.

Anonymous said...

நீங்க எழுதினா மட்டும் போதும் ஜீ , அது எப்படி இருந்தாலும் ஓகே தான் நாங்க படிக்க ரெடி....