19 March 2018

பிரபா ஒயின்ஷாப் – 19032018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ‘கூகுள் ஃபார் தமிழ்’ நிகழ்வு பற்றி நிறைய தமிழ் வலைப்பதிவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். சனிக்கிழமை இரவு நண்பரிடமிருந்து அழைப்பு கிடைக்கப்பெற்று, ஞாயிறு பதிவு செய்து, திங்கள் மாலையில் தான் நிகழ்வை உறுதி செய்தார்கள். செவ்வாய் காலையில் நிகழ்வு !

இந்நிகழ்வில் கண்டிப்பாக கலந்துக்கொண்டே ஆக வேண்டுமென முடிவு செய்த காரணம், வெட்கத்தை விட்டுச் சொல்வதென்றால் சாப்பாடுதான் ! கண்டிப்பாக நிகழ்வு பெரிய ஸ்டார் ஹோட்டலில் நடைபெறும், மதிய உணவு மற்றும் ஹை டீ இருக்கும் என்று தெரியும். (2011 இண்டி ப்ளாக்கர் மீட் நினைவிருக்கிறதா ?) எதிர்பார்த்தது போலவே இந்நிகழ்வு சென்னை ஹயாத்தில் நடைபெற்றது. ஏராளமான தமிழ் வலைப்பதிவர்களும், ட்விட்டர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்து போனால் மொத்த இருநூற்றி சொச்ச முகங்களில் பத்து பேருக்கு மேலே யாரையும் அடையாளம் தெரியவில்லை. அத்தனை பேரும் ரீடர்ஸ் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அப்பாவியாக. நிகழ்வில் எத்தனை பேர் ஆட்சென்ஸ் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது ஏறக்குறைய முழு அரங்கும் கை தூக்கியபோது தான் இந்நிகழ்வின் வீரியம் புரிந்தது. அடுத்ததாக ஒரு பெண் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு மூன்று லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக சொல்லி இன்னொரு அதிர்ச்சியை கொடுத்தார். மொத்தத்தில் தப்பான இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று கொஞ்ச நேரத்திலேயே புரிந்துவிட்டது. இணையத்தில் தமிழை வாழ வைப்பதே வலைப்பதிவர்கள் மற்றும் ஃபேஸ்புக் எழுத்தாளர்கள் தான் என்றொரு எண்ணம் இருந்தது. அவற்றைத் தாண்டி தனியாக இன்னொரு உலகம் இயங்கிக்கொண்டிருப்பதை தெரிந்துக்கொண்டேன். இந்நிகழ்வில் தெரிந்துகொண்ட விஷயங்களை யோசிக்கும்போது இப்படி தண்டத்துக்கு வலைப்பூவை வைத்து உருட்டிக்கொண்டிருப்பதற்கு பதிலாக பேசாமல் கண்டென்ட் ரைட்டராக மாறி பணம் சம்பாதிக்கலாம் என்கிற யோசனை எட்டிப்பார்க்கிறது.

கூகுள் தமிழ் என்றாலும் மேடையில் பேசிய பெருந்தகைகளில் ஒருவரின் கொச்சைத் தமிழ் தவிர்த்து வேறு யாருக்கும் தமிழே வரவில்லை. கலந்துகொண்டவர்கள் ஆங்கிலம் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்றாலும் தமிழுக்கான நிகழ்வு என்பது தமிழில் நடைபெறுவது தானே பொருத்தம். மற்றபடி சாப்பாடு விஷயத்தில் எதிர்பார்த்ததை விடவே அசத்திவிட்டார்கள். காலையில் ஆறு வகையான ஜூஸ், ஃப்ரூட் சலாதுடன் மற்ற டிபன் வகைகள். மதியம் சூப்பில் துவங்கி, மட்டன், சிக்கன், மீன் என்று கடைசியாக குளோப் ஜாமூன், பான் ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் என்று டெஸர்டுடன் முறையான விருந்து. இடையில் காலை, மாலை இருவேளைகளில் ஹை டீ அதிலே வேறு கோழி வறுவல், சாண்ட்விச் என்று பிரமாதப்படுத்திவிட்டார்கள். இனி அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வு சென்னையில் நடைபெறும் என்று சொன்னது விருந்தின் இறுதியில் கொடுக்கப்பட்ட வெற்றிலை – பாக்கு போல நிறைவாக இருந்தது.

**********

ஐ.டி. அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வொர்க் ஃப்ரம் ஹோம்என்கிற பதம் என்னைப் பொறுத்தவரையில் ஒரு ஆக்ஸிமோரான். வொர்க்’, ‘ஹோம்இரண்டும் தனித்தனி தீவுகள். வீட்டில் வேலை செய்யக்கூடாது என்றில்லை. இங்கே வொர்க் என்பதை அலுவலக வேலை என்கிற அர்த்தத்தில் குறிக்கிறேன். வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருக்கும்போது நாம் மட்டும் தனியறையில் உட்கார்ந்து க்ளையண்டுடன் போனில் இங்க்லீஷில் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது அலுவலக நேரத்தில் ஓய்புக்கு போன் செய்து பக்கத்து சீட்டு நபருக்கு கேட்கும்வகையில் கொஞ்சிக் கொண்டிருப்பதோ கூடா செயல்கள். இரண்டாவது காரியத்தை நான் ஒருபோதும் செய்ததில்லை. ஆனால் முதல் காரியத்தை தவிர்க்கவே முடியாது. ராத்திரி ஒன்றரை மணிக்கு அல்லது பிரம்ம முஹுர்த்தத்தில் வீட்டில் முக்கியமான வேலையில் இருக்கும்போது (தவறாக புரிந்துகொள்ள வேண்டியதில்லை. பெரும்பாலான ஒயின்ஷாப் பதிவுகள் பிரம்மமுஹூர்த்ததில் தான் எழுதப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க) யாராவது கால் செய்து ஸாரி டூ டிஸ்டர்ப் யூஎன்று சம்பிரதாயமாக ஆரம்பிக்கும்போது, ‘த்தா... அதெல்லாம் உன் ஸாரி மயிரெல்லாம் தேவையில்ல. விஷயத்தை மட்டும் சொல்லு...என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வருவதை தவிர்க்க முடிவதில்லை.

என் ஏழு வருட ஐ.டி. வாழ்க்கையின் முதல் நான்கு வருடங்களில் நான் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்ததே இல்லை. துவக்கத்தில் எனக்கு அப்படி ஒரு சலுகையே வழங்கப்படவில்லை என்றாலும் பின்னாளில் அச்சலுகை வழங்கப்பட்ட பிறகும்கூட, வைராக்கியமாக அதனை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறேன். டிசம்பர் 3, 2015 வெள்ளத்தினால் சென்னையே ஸ்தம்பித்துப் போயிருந்தது. பெரும்பாலான அலுவலகங்கள் விடுமுறை அறிவித்துவிட்டனர். இருப்பினும் என் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வராததால் பாதி தூரம் கிளம்பிப் போய் கிண்டியிலிருந்து ஈக்காட்டுத்தாங்கல் வரை முட்டியளவு மழை நீரில் சேதுபதி ஐ.பி.எஸ். க்ளைமாக்ஸில் டிரைனேஜில் நடந்துசெல்லும் குட்டிப்பையன் போல (சாத்து நடை சாத்து.. தும் தும்சிக்கு சிக்கு...!) நடந்து சென்றிருக்கிறேன்.

அத்தனை வருடங்கள் கே.எஸ்.ரவிகுமார் படங்களில் வரும் வேலைக்காரன் போல விசுவாசமாய் (தல ரெஃபரன்ஸ் !) உழைத்துக் கொண்டிருந்தவனுக்கு திடீரென ஒரு தருணத்தில் விசுவாச மீட்டர் சடாரென இறங்கியது. சாச்சுரேஷன் பாயிண்ட் என்பார்கள். ஐ.டி. முதலாளிகள் எல்லாம் நாச்சியார் டீஸரில் ஜோதிகா சொல்லும் வார்த்தையை ஒத்தவர்கள் என்று உணர்ந்துக்கொண்ட தருணம். அதன்பிறகு சகஜமாக வொர்க் ஃப்ரம் ஹோம் எடுப்பது, ஸ்டொமக் அப்செட் என்று ஓலோத்துவிட்டு லீவ் எடுப்பது, எட்டு மணிநேர வேலை என்று கணக்கு வைத்துக்கொண்டு பணிபுரிவது என்று எல்லோரையும் போல என்னை மாற்றிக்கொண்டேன்.

ஒருவர் வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் அவர் வழக்கமாக வேலை பார்க்கும் நேரத்தை ஒப்பிடும்போது இருபது சதவிகித நேரம் மட்டுமே வேலை செய்கிறார் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. மீதமுள்ள எண்பது சதவிகித நேரம் மார்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி வருவது, குழந்தைக்கு ஆய் கழுவி விடுவது, அம்மாவுடன் சேர்ந்து சுமங்கலி / பிரியமானவள் பார்ப்பது, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவது போன்ற உபகாரமான செயல்களில் கழிகிறது.

இவை தவிர்த்து வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனில் நிறைய சலுகைகள் உள்ளன.

- காலை, மாலை இருவேளைகளும் சேர்த்து சுமார் மூன்று மணிநேர பிரயாண நேரத்தை தவிர்க்கலாம். குறிப்பாக வடசென்னையில் வசிக்கும் என் போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய விஷயம். இதனால் காலையில் அவசர அவசரமாக எழுந்துகொள்ள வேண்டியதில்லை. பத்து மணிக்கு அலுவல் என்றால் ஒன்பதரைக்கு எழுந்தால் போதும்.

- வொர்க் லைஃப் பேலன்ஸ். குடும்ப சிக்கல்கள் சீராகும். எங்களை கவனிப்பதே இல்லை என்கிற மனைவி குழந்தைகளின் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கலாம். கூடவே அவ்வப்போது மனைவி போட்டுத்தரும் டீ, மதியம் பிரத்யேகமாய் செய்த மஷ்ரூம் ஃபிரைட் ரைஸ், மாலை வாழைக்காய் பஜ்ஜி என்று நிறைய அனுகூலங்கள் உண்டு.

- ஆர்டரிங் ஃப்ரம் ஆசிப் அல்லது டோனட்ஸ் எனிஒன் ? என்று சக ஊழியர்களிடமிருந்து வரும் மெயிலைப் பார்த்து டெம்டாகி அதற்காக ஒரு முன்னூறு ரூபாய் தண்டம் அழ வேண்டியதில்லை.

- மச்சான், நேத்து தினேஷ் கார்த்திக் அடிச்ச சிக்ஸ் பாத்தியா... ஹய்யோ ஒத்தா பறக்குது என்று தொடங்கி பாம்பு டான்ஸ், கீம்பு டான்ஸ் என்றெல்லாம் வெட்டிப் பேச்சு கேட்க வேண்டியதில்லை. உயரதிகாரிகள் அடிக்கும் சிக் ஜோக்குகளுக்கு சிரிக்க வேண்டியதில்லை.

சரி, வொர்க் ஃப்ரம் ஹோமில் உள்ள கெட்ட விஷயங்கள் -

- மேலே சொன்ன சலுகைகளே சில சமயங்களில் உபத்திரவமாகி விடுவதுண்டு. உதாரணமாக, வீட்டில் குழந்தை இருந்தால் சுத்தம். அது சட்டென கீ-போர்டின் மீது ஏறி அமர்ந்துகொண்டு பட்டன்களை பெயர்த்து எடுக்க முயற்சி செய்யும். முதுகில் ஏறிக்கொண்டு உப்புமூட்டை தூக்கச் சொல்லும்.

- நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில், சிக் ஜோக்ஸ் பரிமாறிக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கு வீட்டில் தனித்த சூழலில் பணிபுரிவது மன உளைச்சலை தரும்.

- ஆபீஸில் இருப்பது போல முறையான டெஸ்க் சேர் பெரும்பாலான வீடுகளில் இருப்பதில்லை. இருந்தாலும் சோபாவில் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்தோ அல்லது கட்டிலில் குப்புற படுத்துக்கொண்டோ வேலை செய்கிறார்கள். இதனால் ஏற்படும் முதுகுவலி மற்றும் மெளஸை ஏடாகூடமான பொஸிஷனில் இருந்து இயக்குவதால் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிவரும். (அடிக்கடி வொர்க் ஃப்ரம் ஹோம் எடுப்பவர்கள் வீட்டிலேயே வசதியாக வொர்க் ஸ்டேஷன் அமைத்துக் கொள்வது நல்லது).

பொதுவாக வெள்ளிக்கிழமையானால் ஊருக்கு கிளம்பிப் போகும் ஆட்கள் அம்மா, அப்பா, அத்தாச்சியை பார்த்த சந்தோஷத்தில் திங்களன்று மீண்டும் நரகத்துக்கு திரும்ப மனமில்லாமல் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான குடும்பஸ்தர்கள் குழந்தைகள், மனைவியுடன் நேரம் செலவிடவே வொர்க் ஃப்ரம் ஹோம் எடுக்கிறார்கள். மற்றபடி, ஒயின்ஷாப் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்பதற்காக எல்லாம் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுப்பது அயோக்கியத்தனம் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

1) // கண்டென்ட் ரைட்டராக மாறி பணம் சம்பாதிக்கலாம் என்கிற யோசனை //

2) // வெற்றிலை – பாக்கு போல நிறைவாக இருந்தது.//

க்கும்...

”தளிர் சுரேஷ்” said...

கூகுள் தமிழ் நிகழ்வில் ஜாக்கி சேகரும் கலந்து கொண்டார் போல் உள்ளதே! தமிழ் மொழிக்கு ஆட்சென்ஸ் கிடைத்துவிட்டது என்ற தகவலும் அறிந்தேன். வொர்க் ப்ரம்ஹோம் சுவாரஸ்யமாக சொல்லியிருந்தீர்கள்! நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எழுத்து நடையில் சுஜாதா டச் ஆங்காங்கே தெரிகிறது. இப்போது நிறைய ப்ளாக்கர்கள் மீண்டும் ப்ளாக் பக்கம் திரும்பி இருக்கிறார்கள். வலைப் பூக்களைப் போலவே முக நூலும் மூன்று ஆண்டுகளுக்குள் சுவாரசியம் இழக்க செய்து விடுகிறது

Ponmahes said...

யாராவது கால் செய்து ‘ஸாரி டூ டிஸ்டர்ப் யூ’ என்று சம்பிரதாயமாக ஆரம்பிக்கும்போது, ‘த்தா... அதெல்லாம் உன் ஸாரி மயிரெல்லாம் தேவையில்ல. விஷயத்தை மட்டும் சொல்லு...’ என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வருவதை தவிர்க்க முடிவதில்லை.


அருமை.....

ஹய்யோ ஒத்தா பறக்குது????பதிவு அருமை வாழ்த்துகள். தம்பி.

lx2jx86hcf said...

All the licensed on-line casinos use a Random Number Generator to determine out} the outcomes of all games, which means your chances of successful usually are not fully up to as} chance. All the net casinos in this piece are 100% legal and licensed within the states in which they operate. It is necessary to verify whether or not on-line casino playing is legal in your state before you enroll and deposit. A frequent cube recreation in real life, there are a number of variations of craps out there at 카지노 사이트 on-line casinos. This means your money is not at all times protected with offshore websites, whereas you'll be 100% assured would possibly be} enjoying in} in a safe surroundings at a legal on-line casino.