2 April 2018

பிரபா ஒயின்ஷாப் – 02042018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நாம் விரும்பியோ விரும்பாமலோ கடந்த வாரத்தில் ஸ்டெர்லைட் என்கிற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம்.

ஸ்டெர்லைட்டைப் பற்றி சுருக்கமாக கொஞ்சம் பார்க்கலாம். ஸ்டெர்லைட் என்பது காப்பர் உற்பத்தி செய்கிற ஆலை. நவீன உலகில் நம்மால் காப்பர் இல்லாமல் இருக்கவே முடியாது. நம் வீடுகளிலும் பயன்படுத்தும் ஒவ்வொரு கேபிள்களிலும் காப்பர் பயன்படுத்தப்படுகிறது. விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் காப்பர் இல்லாமல் இல்லை. உதாரணமாக ஒரு காரில் மட்டும் ஒன்றரை கி.மீ. நீளத்திற்கு காப்பர் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். உலகிலேயே அதிகம் காப்பர் உற்பத்தி செய்யும் நாடு சீனா. சீனாவில் உள்ள ஜியாங்ஷி என்கிற ஆலையில் ஆண்டுதோறும் 900 கிலோ டன் காப்பர் உற்பத்தி செய்கிறது. அதிக காப்பர் உற்பத்தி செய்யும் இருபது நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் பத்து சீனாவில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் குஜராத்தில் அமைந்துள்ள ஆதித்யா பிர்லாவின் ஹிண்டல்கோ வருடந்தோறும் 500 கிலோ டன் உற்பத்தியுடன் முதலிடம் வகிக்கிறது. (உலக அளவில் ஆறாவது). அதற்கு அடுத்த பெரிய ஆலை, ஸ்டெர்லைட். இந்தியாவின் 45 சதவிகித காப்பர் தேவைகளை ஸ்டெர்லைட் பூர்த்தி செய்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கொரியா போன்ற பல உலக நாடுகளிலும் காப்பர் ஆலைகள் இருக்கின்றன. 

ஏன் தமிழகத்தில் காப்பர் ஆலைக்கு எதிராக போராடுகிறார்கள் ? காப்பரை உருக்கும் செயல்முறையின் உபபோருளாக நமக்கு ஸல்ஃபர் டையாக்ஸைடு என்கிற வாயு கிடைக்கிறது. நச்சுத்தன்மை கொண்ட இவ்வாயுவை சுவாசிப்பதால் உடலின் சுவாச அமைப்புக்கு தீங்கு ஏற்படும், சருமம் மற்றும் கண்களுக்கு எரிச்சலைத் தரும். தொடர்ச்சியாக இதனை சுவாசிக்கும்போது அது தலைமுறைகளையும் பாதிக்கும் என்கிறார்கள். ஸல்ஃபர் டையாக்ஸைடு கழிவுகளை வெளியேற்றுவதில் ஆலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு உண்டு. கழிவுகளை முறையாக வெளியேற்றுகிறோம் என்பதற்கான சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். 

சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருநாள் தூத்துக்குடி மக்கள் கண்விழித்தபோது அவர்கள் கண்களிலும், தொண்டையிலும் எரிச்சலை உணர்ந்தனர். அவர்களால் சுவாசிக்க முடியவில்லை. விசாரணையின் முடிவில் ஸ்டெர்லைட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஸல்ஃபர் டையாக்ஸைடு கழிவுகளை வெளியேற்றுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. மார்ச் மாதம் மூடப்பட்ட ஆலை மீண்டும் ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்று திறக்கப்பட்டது. இதே போல ஏற்கனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளன. 

ஸ்டெர்லைட் துவங்கிய காலத்தில் இருந்தே தூத்துக்குடி மக்கள் அதற்கெதிராக அவ்வப்போது போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போது ஸ்டெர்லைட் நிர்வாகம் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஆலையை விரிவாக்க முயல்கிறது. அதனால் மீண்டும் தூத்துக்குடி போராட்டக் களமாக மாறியிருக்கிறது. இப்போது போராட்டத்தில் காட்டும் தீவிரத்தை இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு காட்டியிருந்தால் ஸ்டெர்லைட் தமிழகத்தில் கால் பதித்திருக்க முடியாது. நாம் தாமதித்துவிட்டோம்.

**********

ஒரு வேலையாக செளகார்பேட்டை வரை போயிருந்தேன். சென்னையின் பாரிஸ் கார்னரைத் தாண்டி இந்த இடத்தில் காலடி எடுத்து வைத்தால் வேறொரு மாநிலத்திற்குள் நுழைந்துவிட்டது போலிருக்கிறது. அதற்கு ஒரு காரணம் இங்குள்ள பெண்கள். மற்றொரு காரணம், இங்கு காணப்படும் பரபரப்பு. கால் வைக்கக்கூட இடமில்லாமல் ஆட்கள் நடமாடிக்கொண்டே இருக்கிறார்கள். சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது என்கிற சொலவடை செளகார்பேட்டையில் தான் பிறந்திருக்கும் என்று நினைக்கிறேன். தக்கனூண்டு கேப்பில் மீன்பாடி வண்டியை ஓட்டிச் செல்கின்றனர். 

செளகார்பேட்டை ! புகைப்படம்: பிரதீபா பாண்டியன்
சொல்ல வந்த விஷயம் என்னவென்றால் செளகார்பேட்டையில் சிங்கப்பூர் காம்ப்ளக்ஸ் என்கிற வளாகத்தின் உள்ளே ஒரு மூலையில் இரண்டே பேர் நிற்கக்கூடிய அளவில் ஒரு நபர் கடை வைத்திருக்கிறார். இவர் சின்னச் சின்ன எலக்ட்ரானிக் பொம்மைகளை சரி செய்து தருகிறார். சில வருடங்களுக்கு முன்பு உறவினர் ஒருவருக்கு RC ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுத்து அது இரண்டே நாட்களில் பழுதாகிவிட்டது. அதை ஏற்றுக்கொள்ள மனசில்லாமல் பழுது பார்க்க யாராவது இருக்கிறார்களா என்று இணையத்தில் தேடிய போதுதான் இவரது கடையைப் பற்றி தெரிந்துக்கொண்டேன். வெறும் நாற்பது ரூபாய் வாங்கிக்கொண்டு அந்த ஹெலிகாப்டரை சில நிமிடங்களில் சரி செய்துக் கொடுத்தார். அது மட்டுமல்ல. பேட்டரியில் இயங்கும் சின்னச் சின்ன கார்கள், பொம்மைகள் என்று எதை எடுத்துச் சென்று கொடுத்தாலும் சரி செய்துவிடுகிறார். கடையின் பெயர் SMS Sakthi !

**********

டி.வி.யில் அந்நியன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஷங்கர் படங்கள் எல்லாம் ஒரு மாஜிக் மாதிரி. அப்போது திரையரங்கில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். பிற்பாடு தொலைக்காட்சியில் பார்த்தால் என்னடா பித்தலாட்டம் பண்ணி வச்சிருக்கீங்க என்று தோன்றும். அந்நியனில் விக்ரமின் ஆல்டர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென பிரத்யேக ஆடை, சிகையலங்காரம் என்று வைத்துக்கொள்கிறார்கள். ஒரு ஆல்டர் அடிக்க, இன்னொருவர் பறந்துபோய் விழுகிறார். பக்வாஸ் ! தமிழ் சினிமாக்காரர்களுக்கு கதை கிடைக்கவில்லை என்றால் இப்படி விநோதமாக எதையாவது பிடித்துக் கொள்கிறார்கள். சிவப்பதிகாரம் என்கிற படத்தில் ஹீரோவுக்கு நார்கோலெப்ஸி. திடீரென பொத்து, பொத்தென தூங்கி விழுகிறார். ஏலியன் ஹாண்ட் சிண்ட்ரோமை (தன் கையே தனக்கு ஆப்பு) வைத்துக் கூட ஒரு படம் வந்துவிட்டது. (இப்போது திடீரென சிலர் இந்த ஏலியன் ஹாண்ட் சிண்ட்ரோம் படத்துக்கு திறனாய்வு எழுதுவார்கள் பாருங்கள்).

ஃபாரின் ஆக்சென்ட் சிண்ட்ரோம் வந்தவர்கள் திடீரென தங்கள் தாய்மொழியையே ஃபாரின் அக்சென்டில் பேசுவார்களாம். ஒரு படத்தில் விவேக் NRI போல தமிழ் பேசுவார் நினைவிருக்கிறதா ? இன்னொரு வியாதி இருக்கிறது. தமிழ் சினிமாவில் தங்களுக்கு தெரியாமலே நிறைய இயக்குநர்கள் அதனை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் பெயர் எரோட்டோமேனியா. இதன் தாக்கம் கொண்டவர்கள் தங்களை ஒருவர் தீவிரமாக காதலிப்பதாக எண்ணிக்கொள்வார்களாம். குறிப்பாக, பிரபலங்கள். ஸ்ரீதேவியை நிறைய பேர் காதலித்திருப்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் ஸ்ரீதேவி தன்னை காதலிப்பதாக தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தார். இப்போது கூட அவரை அடைய முடியாத துயரத்தில்தான் ஸ்ரீ தற்கொலை செய்துக்கொண்டார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

கோகுல் said...

நார்கோலெப்ஸி- நான் சிகப்பு மனிதன்?தானே

Unknown said...

அருமை. வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

தாமதத்திற்கு சம்மதம் சரியாக இருக்காது...