4 June 2018

பிரபா ஒயின்ஷாப் – 04062018

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ்மகன் வேங்கை நங்கூரத்தில் பற்ற வைத்த தீயொன்று மெல்ல பரவி ச.ந.கண்ணனின் ராஜராஜ சோழனிடம் அழைத்து வந்திருக்கிறது.

சோழர்களைப் பற்றி நான் வாசித்த முதல் முழுநீள நூல் இதுவாகத்தான் இருக்கும். எப்படி கி.மு., கி.பி. என்று இருக்கிறதோ அதே போல சோழர்கள் வரலாற்றிலும் இருவேறு காலகட்டங்கள் இருக்கின்றன என்பதையே மிகத் தாமதமாக தெரிந்துக் கொண்டிருக்கிறேன். சிபி சக்கரவர்த்தி, மனுநீதி சோழன், கரிகாலன் போன்றவர்கள் சங்க காலச் சோழ மன்னர்கள். ராஜராஜன். ராஜேந்திரன் எல்லாம் இடைக்காலச் (அதாவது கி.பி.) சோழர்கள் (பிற்பாடு சோழ மன்னர் ஒருவருக்கு வாரிசு இல்லாமல் சாளுக்கிய – சோழ கலப்பு வம்சாவழி வந்தவர்கள் சாளுக்கிய சோழர்கள்). கடைச் சங்ககாலத்திற்கு பிறகு சுமார் முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை, தென்னிந்தியாவை களப்பிரர்கள் ஆண்டிருக்கிறார்கள். அத்தோடு கி.பி. 850ல் தான் சோழர்கள் மீண்டும் சீனுக்கு வருகிறார்கள். சோழர்களின் மீள்வருகைக்கு காரணமான மன்னன் - விஜயாலய சோழன். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவரது மகன் முதலாம் ஆதித்தன் பல்லவர்களோடு போரிட்டு தமிழகத்தின் பெரும்பகுதியில் சோழர்கள் ஆட்சியை நிறுவுகிறார். பிற்பாடு தொடர்ந்து வந்த சோழ மன்னர்களுள் சிகரம் என்றால் அது ராஜராஜன்தான். முதல் சில அத்தியாயங்களில் சோழர்களின் சுருக்கமான முன்கதையையும், கடைசி அத்தியாயத்தில் ராஜராஜனுக்குப் பிறகு சோழர்கள் படிப்படியாக வீழ்ந்த கதையையும் சொல்லிவிட்டு இடைப்பட்ட பகுதியில் ராஜராஜனை விரிவாக விவரித்திருக்கிறார் ச.ந.கண்ணன்.

குறிப்பாக ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வரும் முன் நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளை விவரிக்கிறார். சுந்தர சோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வர வேண்டிய ஆதித்த கரிகாலன் அவரது சித்தப்பாவான உத்தம சோழனின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார். (இந்நிகழ்வை கல்கி தனது பொன்னியின் செல்வன் நூலில் மேலோட்டமாக ஆதித்த கரிகாலன் மர்ம சதியால் கொல்லப்பட்டதாக எழுதியிருக்கிறார்). ஆதித்த கரிகாலனின் மரணத்திற்குப் பிறகு உத்தம சோழனின் சுமார் பதினைந்து ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு ராஜராஜன் ஆட்சிக்கு வருகிறார்.

ராஜராஜனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்
ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் தான் சோழர்களின் ராஜ்ஜியம் இலங்கை வரை விரிவடைந்திருக்கிறது. ராஜராஜனுக்கு குறைந்தது பதினைந்து மனைவிகளாவது இருந்திருக்க வேண்டுமென கல்வெட்டுக் குறிப்புகளை வைத்துச் சொல்கிறார்கள். அவற்றில் ஒருவர்தான் உலகமகாதேவி. (சமீபத்தில் திருடுபோய் மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமகாதேவி சிலைகளைப் பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள்). 

களப்பிரர்கள் காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு சோழர்கள் காலத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ராஜராஜன் சைவ சமயத்தை பின்பற்றுபவர் என்றாலும் பிற சமயங்களை மதிக்கவும், வளர்க்கவும் செய்தார். இலங்கையில் போரிட்டு வென்ற ராஜராஜன் அங்கே சைவ ஆலயங்கள் கட்டினாலும் பெளத்தர்களிடையே சைவ சமயத்தைப் பரப்ப சிறு முயற்சி கூட எடுக்கவில்லை. அதே சமயத்தில் ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடை செய்யப்பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இதனை செயல்படுத்த பார்ப்பனர்கள் தேவைப்பட்டார்கள். பார்ப்பனர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. கோவில்களுக்கு அருகே பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் என்கிற பெயரில் நிலம் / குடியிருப்புகள் வழங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கும் வேளாளர் சமூகத்திற்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தொடர்பாக அப்போதே பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ராஜராஜன் / சோழர்கள் வரலாற்றில் கவனிக்கவேண்டிய இரண்டு விஷயங்கள். முதலாவது, போர்கள். தமிழ் மன்னர்களில் நிரந்தர ராணுவம் வைத்துக்கொள்வதின் அவசியத்தை முதலில் உணர்ந்தவர் ராஜராஜன். நாடு தாண்டி தன் எல்லைகளை விரிவுபடுத்த எண்ணிய ராஜராஜனுக்குக் கப்பற்படை பெரிதும் உதவியது. மாலத்தீவு, இலங்கை போன்ற பகுதிகளை சோழர்கள் கைப்பற்றியதற்கு முக்கியக் காரணம் கப்பற்படையே. ஆனால் ராஜராஜன் எந்தவொரு ஒரு போரையும் நாடுபிடிக்கும் ஆசையில் நிகழ்த்தவில்லை என்று கூறுகிறார்கள். ஒருமாதிரியாக சோழர்களின் சாம்ராஜ்யத்தை தக்க வைத்துக்கொள்ளவே போர்களைப் புரிந்திருக்கிறார். இதுகுறித்து நூலாசிரியர் கூறுகையில் – ராஜராஜனின் முத்திரைகளாக இருக்கும் எந்தப் புகழ் பெற்ற போரும் அவை நிகழ்ந்திருக்காவிட்டால் ராஜராஜனின் ஆட்சி மட்டுமல்ல, சோழ சாம்ராஜ்யமே உடனே கவிழ்ந்திருக்கும் என்கிறார். சில போர்கள் உறவுகளை பலப்படுத்தவும், சில போர்கள் உறவுகளை அறுத்தெறியவும், சில போர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், சோழப்பேரரசின் பாதுகாப்புக்காகவும் தொடங்கப்பட்டன. அரச வாழ்க்கை என்பதே ஒரு பந்தயம். நாம் முதலிடம் வர வேண்டுமென்றால் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும். அதைத்தான் ராஜராஜன் செய்தார். மக்கள்நலம், நாட்டு நலன் கருதி, அடைக்கலம் தேடி வந்த சிற்றரசர்களின் பாதுகாப்புக்காகவும், நட்புக்காகவும் முக்கியமாக தடையில்லா கடல் வணிகத்துக்காகவும் தொடங்கப்பட்ட போர்கள் தான் பெரும்பாலானவை.

சோழர்கள் வரலாற்றில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், அவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இருந்த தீராத பகை. எந்த சோழ மன்னர் ஆட்சிக்கு வந்தாலும் பாண்டிய மன்னர்களை ஒழித்துக் கட்டுவதையே தங்கள் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகக் கருதினார்கள். அவர்களின் ஒரு கண், எப்போதும் பாண்டிய மன்னர்கள் மீதுதான் இருந்தது. ஆனாலும், பாண்டியர்களை எவ்வளவுதான் வெட்டி வெட்டி விட்டாலும் அவர்கள் அங்குமிங்கும் முளைவிட்டு, மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். இது பாண்டியர்களால் சோழர்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும்வரை தொடர்ந்த பகைமை. ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு சோழ அரசுக்கு தேய்பிறை தொடங்க ஆரம்பித்தது. இருமுறை போரில் பாண்டியர்களை ஓட ஓட விரட்டிய மூன்றாம் குலோத்துங்க சோழன், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குலசேகரப் பாண்டியனோடு மோத வேண்டிய சூழல் அமைந்தது. குலசேகரனின் படைகள் பேரழிவிற்கு ஆட்பட்டு போரிலிருந்து பின்வாங்கின. குலசேகரன் தன் தம்பியுடன் மதுரையை விட்டே ஓடினார். மூன்றாம் குலோத்துங்கனுக்கு அப்போதும் வெறி அடங்கவில்லை. மதுரையில் உள்ள மாளிகைகளையும், அரண்மனைகளையும் அழித்தார். அத்தோடு நில்லாமல் பாண்டியர்களை அவமானப்படுத்தும் பொருட்டு மதுரையில் கழுதைகளைக் கொண்டு ஏர் உழுது, கதிர் விளையா வரகினை விதைத்தார். தீராப்பகையோடு காத்திருந்த பாண்டியர்கள் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக்குப் பிறகு சோழ நாட்டின்மீது படையெடுத்து உறையூரையும் தஞ்சையையும் தீயிட்டு அழித்தனர். குறிப்பாக, மதுரை எவ்வாறு அழிக்கப்பட்டதோ அதே பாணியில் தஞ்சையும் அழிக்கப்பட்டது. இறுதியாக சாளுக்கிய – சோழ மன்னர்களின் வழித்தோன்றலான மூன்றாம் ராஜராஜனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு சோழ சாம்ராஜ்யம் எழவே இல்லை. சோழர்கள் – பாண்டியர்களின் தீராத பகையை முன்வைத்து செல்வராகவன் அவரது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை எடுத்திருந்தார்.

உடையாளூரில் அமைந்துள்ள ராஜராஜன் நினைவிடம்
ராஜராஜனின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர் தனது கடைசி இரண்டு வருடங்களில் (1012 – 1014) தன் மகன் ராஜேந்திர சோழனுடன் ஆட்சியை பகிர்ந்துக் கொண்டார். பின்னர் கி.பி. 1014ல் காலமானார். அவரது உடல் கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூர் என்கிற கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ராஜேந்திர சோழர் அடக்கம் செய்யப்பட்டுள்ள பிரம்மதேசத்திற்கு ஒரு விசிட் பெண்டிங்கில் உள்ளது. அத்தோடு இப்போது உடையாளூரும் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

ச.ந.கண்ணனின் ராஜராஜ சோழன் அமேஸான் கிண்டிலில் கிடைக்கிறது. விலை ரூ.90. நான் வாங்கிய சமயம் தள்ளுபடியில் ரூ.29 !

**********

ஹாட்ஸ்டாரில் என்னென்ன படங்கள் உள்ளன என்று எக்ஸ்ப்ளோர் செய்துக்கொண்டிருந்தபோது கணேஷ் – வசந்த் என்கிற டெலிஃப்லிம் இருப்பதை கவனித்து பார்க்கலானேன். சுஜாதாவின் இதன் பெயரும் கொலை என்கிற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரை சித்திரம். அதிர்ஷ்டமோ அல்லது துரதிர்ஷ்டமோ நான் இதுவரையில் இதன் பெயரும் கொலை படித்ததில்லை. ஒரு தொலைக்காட்சி நடிகையின் கணவன் மரணமடைகிறார். அதன்பிறகு நடிகையைச் சுற்றி மர்மமான முறையில் பல கொலைகள் நடக்கின்றன. அவற்றின் பழி நடிகையின் மீது விழுகிறது. ஆனால் உண்மையான கொலைக் குற்றவாளி யார் என்பது கிளைமாக்ஸ். இயல்பிலேயே மிகவும் வீக்கான கதை இது. இதைப் போய் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. மேலும் சுஜாதாவின் க்ரைம் நாவல்களைப் பொறுத்தவரையில் அவற்றின் ஸ்பெஷாலிட்டி கதை கிடையாது, வாசிப்பின்பம். அதனை சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ பார்வையாளர்களுக்கு கொடுப்பது பெரும் சிரமம். எவ்வளவு முயன்றாலும் என்ன இருந்தாலும் டெக்ஸ்ட் அளவிற்கு இல்லை என்கிற ஏமாற்றமே மிஞ்சும். எனவே சினிமா, சின்னத்திரை ஆட்கள் இனிமேலாவது ஃபர்னிச்சர் மீது கை வைக்காமல் இருப்பது நல்லது.

கணேஷ் – வசந்த் ! கணேஷாக விஜய் ஆதிராஜ். முன்பொரு சமயம் தூர்தர்ஷனில் கணேஷ் – வசந்த் தொடராக வெளிவந்தபோது அதிலே வசந்தாக நடித்தவர் விஜய் ஆதிராஜ் என்று நினைக்கிறேன். அதனால் அவர் ஓரளவுக்கு கணேஷ் – வசந்த் படித்திருக்கலாம். கூடவே சின்னத்திரை அனுபவமும் உள்ளதால் ஓரளவுக்கு சமாளிக்கிறார். பொதுவாக, கணேஷாக நடிப்பதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அண்டர்ப்ளே செய்தாலே போதும் என்பதால் விஜய் ஆதிராஜ் தப்பிவிடுகிறார். வசந்தாக அமித் குமார். இவர் சக்கரகட்டி படத்தில் சாந்தனுவின் நண்பனாக நடித்திருப்பார் (ராகுல் டிராவிட், லேட் பிக்கப்). வசந்த் என்றால் லூஸு என்றும், பெண்கள் விஷயத்தில் அல்பம் என்றும் யாரோ இவருக்கு தவறாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். இவருக்கு உரிய தண்டனை என்னவென்றால், இவரை ஒரு தனியறையில் பூட்டி கணேஷ் – வசந்த் தொகுதி முழுவதையும் வாசிக்க வைக்க வேண்டும். முழுவதும் வாசித்து முடித்தபின் அவராகவே குற்ற உணர்வு தாளாமல் தற்கொலை செய்து கொள்வார்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

1 comment:

Ponmahes said...

அருமையான தகவல்கள் .....வாழ்த்துகள் ...தம்பி