6 May 2019

பிரபா ஒயின்ஷாப் - 06052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

41 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபா ஒயின்ஷாப் !

இவ்வார ஒயின்ஷாப்பில், தமிழில் வெளியான இரு மெடா-சினிமாக்களைப் பற்றி பார்க்கலாம். மெடா-சினிமா என்றால் சினிமாவைப் பற்றிய சினிமா. இரண்டும் ஒரு வகையில் மாய எதார்த்த படங்கள். 

முதலாவது நாசர் நடிப்பில் வெளியான முகம். பெரும்பான்மை மக்கள் முகம் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள், ஆனால் மறந்திருப்பீர்கள். சற்று நினைவூட்டுகிறேன். முன்பெல்லாம் தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்களை உடனுக்குடன் ஒளிபரப்பும் வழக்கம் கிடையாது. அப்போது சன் தொலைக்காட்சி திடீரென ஒரு புரட்சியை செய்தது. அச்சமயத்தில் திரைக்கு வந்து ஐம்பது, அறுபது நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த சங்கமம் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாக அறிவித்தது. ஒருவேளை இப்போது சங்கமம் திரைப்படம் வெளிவந்து, அதனை அறுபது நாட்கள் கழித்து ஒளிபரப்பினால் பார்ப்பதற்கு ஆளிருக்காது. அப்போதோ தொலைக்காட்சியில் புதிய படம் என்கிற கவர்ச்சியின் காரணமாக மக்கள் சங்கமத்தை பார்த்துத் தீர்த்தார்கள். அடுத்து கொஞ்ச நாள் கழித்து ‘திரைக்கு வந்து சில நாட்களே ஆன’ அடைமொழியுடன் முகம் படத்தை ஒளிபரப்பினார்கள். சங்கமமாவது பரவாயில்லை, முகம் என்று ஒரு படம் திரையரங்கில் வெளியானதே பலருக்கும் தெரியாது. ஆனாலும் புதுப்படம் என்பதால் பார்த்தார்கள். 

முகம் படத்தின் நாயகன் அவனது கோரமான முகத்தின் காரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறான். ஒரு சமயத்தில் அவனுக்கு சினிமா சான்ஸ் கிடைக்கிறது, யூனிட்டில் இருந்து வீட்டு வாசலுக்கு காரெல்லாம் அனுப்புகிறார்கள். ஆனால் படத்தில் அவனுக்கு மிகச்சிறிய வேடம். அது மட்டுமில்லாமல் படம் வெளிவந்தபிறகு அவனது முகத்தை திரையில் பார்க்கும் ரசிகர்கள் கொந்தளித்து ஸ்க்ரீனை எல்லாம் கிழிக்கிறார்கள். இன்னொரு பக்கம் கதாநாயகி ரோஜாவால் உதாசீனப்படுத்தப்படுகிறான். வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் அவனிடம் ஒரு முகமூடி கிடைக்கிறது. அதனை அணிந்து கொண்டதும் அழகான தோற்றம் பெறுகிறான். அதன்பிறகு அவனுக்கு அதுவரையில் கிடைக்காததெல்லாம் கிடைக்கிறது. சினிமாவில் பெரிய ஸ்டார் ஆகிறான். முன்பு அவனை உதாசீனப்படுத்திய ரோஜா இப்போது தர்ணா இருந்து அவனையே திருமணம் செய்துகொள்கிறாள். அவனது முகத்துக்காக திரையைக் கிழித்தவர்கள் இம்முறை திரை முன் ஆரத்தி எடுக்கிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போனாலும் கொஞ்ச நாட்களில் அவன் ஒரு போலியான வாழ்க்கையை வாழ்வதாக உணர்கிறான். பேசாமல் பழைய முகத்திற்கே போய் விடுவதென தீர்மானித்து முகமூடியை கழட்டுகிறான். உடனடியாக அவனது சொந்த வீட்டிலிருந்தே திருடன் என்று வெளியில் துரத்தப்பட்டு, அவனது ரசிகர்களிடமே அடி வாங்குகிறான். பழைய முகத்திற்கு மாற நினைத்த அவனது முடிவை தவறு என்று உணர்கிறான். உலகத்தில் யாரும் யாருடைய நிஜ முகத்தையும் விரும்புவது கிடையாது. எல்லோருக்கும் ஒரு போலி முகம் தேவைப்படுகிறது. (தத்துவார்த்தமாக இருக்கிறது அல்லவா ?) அவன் மீண்டும் முகமூடி அணிந்துகொண்டு தன் போலி வாழ்க்கைக்கு திரும்புவதுடன் படம் நிறைவுறுகிறது. 

இப்படம் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரை மனதில் வைத்து இயக்கப்பட்டது என்று ஒரு காட்சியிலிருந்து புரிந்துகொள்ளலாம். முகமாற்றத்திற்குப் பிறகு பிரபல கதாநாயகனாகும் நாசர், தன்னுடைய படங்களில் தொடர்ந்து ஏழைகள் நல்லவர்களாகவும், பணக்காரர்கள் மோசமானவர்களாகவும் சித்தரிக்கப்படுவதை நினைத்து வருந்துகிறார். இதனால் படம் பார்க்கும் மக்கள் மனதில் பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள் என்ற எண்ணம் தோன்றிவிடும் என்றும். அவர்கள் பணம் சம்பாதிக்கும் ஆசையற்று போய்விடுவார்கள் என்றும் தீவிரமாக சிந்திக்கிறார். அருகிலிருக்கும் எடுபிடி பெரிய ஸ்டாரான பிறகு இவ்வளவெல்லாம் சிந்திக்கக் கூடாது என்று அவரை சமாதானப்படுத்துகிறார். இதுபோன்ற ஒரு கான்வர்சேஷன் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பதாக ஆஃப் த ரெக்கார்ட்ஸ் செய்தி. 

நாம் பார்க்கப்போகும் இரண்டாவது படம் – சீதக்காதி. சீதக்காதியை விலாவரியாக விவரிக்க வேண்டிய அவசியமிருக்காது. ‘அய்யா’ ஆதிமூலம் அபாரமான நாடக நடிகர். ஆனால் சினிமா யுகத்தில் நாடகம் எடுபடவில்லை. மக்கள் நாடகங்களை புறக்கணிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அய்யா ஆதிமூலம் இயற்கை எய்துகிறார். அதன்பிறகு அவர் ஆவியாக வந்து அவரது நாடகக்குழுவில் உள்ள ஒவ்வொருவர் உடலின் வழியாக நடிப்பைத் தொடர்கிறார். ஒருமுறை அய்யா அவரது குழுவில் உள்ள ஒரு இளைஞன் மூலம் நடிப்பதைப் பார்த்து இயக்குநர் ஒருவர் அந்த இளைஞனை சினிமாவில் கதாநாயகனாக்குகிறார். அய்யா இளைஞன் மூலமாக ஆவியாக சினிமாவில் நடிக்கிறார். அய்யாவின் அபார நடிப்பால் அவர் பெரிய ஸ்டாராகிறார். பெரிய ஹீரோ ஆனதும் இளைஞன் அய்யாவின் ஆவியை அவமதிக்கிறான். அதன்பிறகு வெவ்வேறு உடல்கள் மூலமாக அய்யா தொடர்ந்து நடிக்க, மக்களும் அவர்களது நடிப்பிற்கு பின்னாலிருப்பது அய்யாதான் என்பதை உணர்ந்து அதுவரை இளைஞனைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் அதன்பிறகு அய்யாவைக் கொண்டாடத் துவங்குகிறார்கள். பின்னர் திரைத்துறையினர் செய்யும் சீரழிவுகளைக் கண்டு மனம் நொந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்கிறார் அய்யா. அவர் தொலைதூர கிராமத்துப் பள்ளியொன்றின் ஆண்டுவிழாவில் ஒரு சிறுவன் உடல் வழியாக நடித்துக்கொண்டிருப்பதாக படம் நிறைவுறுகிறது. 

இந்த இரண்டு படங்களும் ஏறத்தாழ ஒரே பாணி, ஆனால் இரண்டு எக்ஸ்ட்ரீம் விஷயங்களை முன் வைக்கிறது. முதலாவது படத்தின் படி, சினிமாவுக்கு லட்சணமான முகம் அவசியம், அது மட்டுமிருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிறது. இரண்டாவது படம், முகமெல்லாம் அவசியமே இல்லை. அபார நடிப்பாற்றல் மட்டுமிருந்தால் போதும் மக்கள் ஒரு அருவத்தைக் கூட கொண்டாடுவார்கள் என்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இவை இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள்.

அழகான முகத்திற்கு கிடைக்கும் வெற்றியைக் கூட ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம். அந்தக்கால எம்.ஜி.ஆர் துவங்கி அர்ஜுன் தேவரகொண்டா வரைக்கும் நிறைய உதாரணர்கள் உளர். ஆனால் அவர்கள் முகத்துக்காக மட்டும் வெற்றியடையவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதைவிட நடிப்பாற்றலுக்காக மட்டும் ஒருவர் வெற்றியடைகிறார் என்பது சுத்த பேத்தல். ஒரு பேச்சுக்கு நடிப்பாற்றலை மட்டும் வைத்துதான் சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து முடிவாகிறது என்று வைத்துக்கொள்வோம். இங்குள்ள சில ஸ்டார்களின் நிலைமைகளை நினைத்துப் பாருங்கள். நான் பெயர்களைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்ள விரும்பவில்லை. நீங்களாகவே யூகித்துக்கொள்ளுங்கள்.  

தமிழ் சினிமாவின் கதாநாயக அந்தஸ்துக்கு தேவையானது அழகான முகம் மட்டுமோ, அபார நடிப்பு மட்டுமோ கிடையாது. அது பெப்ஸி, கோக், கே.எப்.ஸி. மாதிரி யாருக்கும் புரியாத ஒரு ரகசிய ஃபார்முலா. இதுவரையில் இங்கே கொண்டாடப்பட்ட நாயகர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு ஒரு அனாலிஸிஸ் செய்தால் அதிலிருந்து ஒரு பேட்டர்னையும் கண்டுபிடிக்க முடியாது. 

ஒருவேளை முக அழகுதான் நாயக அந்தஸ்தை தீர்மானிக்கிறது என்றால் வித்யுத் ஜம்வாலும், நடிப்பாற்றல் தான் தீர்மானிக்கிறது என்றால் குரு சோமசுந்தரமும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்கள். 

என்றும் அன்புடன்,
N.R.பிரபாகரன்

Post Comment

4 comments:

Ponmahes said...

அருமையான அலசல் தம்பி வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் நன்று... உண்மையும் கூட...

ஸ்ரீராம். said...

இரண்டு படங்களுமே பார்த்ததில்லை என்பதால் சுவாரஸ்யமாக படித்துக்கொண்டேன்.

Unknown said...

ரொம்ப அருமை சகோ... நேர்த்தியா வார்த்துடீக . அபாரம், கொஞ்சம் பொடி வைத்தே எழுதுங்க சகோ அப்பதேன் வாசகர் எண்ண விசாலங்கள் விரியும்.. கற்பனையை ஆலாளுக்கு ஒருதிசைல ஓட்ட முடியும்