13 May 2019

பிரபா ஒயின்ஷாப் – 13052019

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சென்ற வாரம் இரண்டு படங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் இரண்டு இடங்களைப் பற்றி பார்க்கலாம். இரண்டும் சென்னையிலிருந்து சுமார் நூறு, நூற்றியைம்பது கி.மீ. தொலைவில் உள்ள இடங்கள். 

முதலாவது பிரம்மதேசம் ! தமிழ்மகன் எழுதிய வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலின் வழியாக பிரம்மதேசம் குறித்த அறிமுகம் ஏற்பட்டது. பல்வேறு காலகட்டத்தில் பயணிக்கும் நாவலில் முதலாம் ராஜேந்திர சோழர் ஒரு பாத்திரமாகவே வருகிறார். ராஜேந்திர சோழரின் கல்லறை திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு அருகேயுள்ள பிரம்மதேசத்தில் அமைந்திருப்பதாக குறிப்பிடுகிறார் தமிழ்மகன்.

தமிழகத்தில் களப்பிரர்கள் காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட பார்ப்பனர்களுக்கு, சோழர்கள் மீண்டு வந்ததும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடை செய்யப்பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப்பட்டது. இதனை செயல்படுத்த பார்ப்பனர்கள் தேவைப்பட்டார்கள். பார்ப்பனர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. கோவில்களுக்கு அருகே பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் என்கிற பெயரில் நிலம் / குடியிருப்புகள் வழங்கப்பட்டன. அப்படியொரு பிரம்மதேயம் தான் மருவி பிரம்மதேசம் என்று ஆகியிருக்கக்கூடும். தமிழகத்தில் வேறு சில பிரம்மதேசங்கள் கூட உள்ளன. குறிப்பாக நெல்லை அம்பாசமுத்திரம் அருகே ஒரு பிரம்மதேசம் உள்ளது. அங்கே புகழ்பெற்ற கோவில் ஒன்றும் உண்டு.

ஒரு நிறைந்த நன்னாளில் பிரம்மதேசத்தை நோக்கி புறப்பட்டோம். பிரம்மதேசம் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வாரநாட்களில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணிக்குள் அங்கே செல்வது உகந்தது. மற்ற நாட்களில் கோவிலின் உள்கட்டமைப்பை பார்க்க முடியாது. சென்னையிலிருந்து திருப்பெரும்புதூர் தாண்டி, ஆற்காடு செல்லும் வழியில் சிறுகரும்பூர் என்கிற சிற்றூர் வருகிறது. அங்கிருந்து இடதுபுறம் ஒடித்து திருப்பி பத்து கி.மீ. உள்ளே சென்றால் பிரம்மதேசம். சொல்லி வைத்தாற்போல அங்கே ராஜேந்திர சோழர் என்று ஆரம்பித்தால் யாருக்கும் அப்படியொரு இடம் இருப்பதாக தெரியவில்லை. கூகுள் மேப்பை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டே பயணமானோம். பிரம்மதேசம் என்கிற அந்த சிறிய கிராமத்தை கடந்து கொஞ்ச தூரம் சென்றபிறகே கோவில் கண்களுக்கு தெரிகிறது.

துரதிர்ஷ்டவசமாக நாங்கள் சென்றது ஞாயிற்றுக்கிழமை. பக்கத்தில் விசாரித்தபோது தொல்லியல் அதிகாரி சில மாதங்களாகவே வருவதில்லை என்றார். நுழைவுவாயிலில் பலமாக பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே சென்றோம். (எப்படி என்று கேட்காதீர்கள். பார்க்க படம்). தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியை இப்படி அத்துமீறி நுழைந்திருக்கிறோம் என்பதால் எங்களுக்கு கொஞ்சம் பதற்றம். ஆனால் அங்கே யாரும் எங்களை சட்டை செய்ததாக தெரியவில்லை. உள்ளே உள்ளூர் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். (சோழர்கள் காலத்தில் கிரிக்கெட் இருந்திருக்குமா ?) கோவிலின் கோபுரத்தின் அருகே சென்றோம். நிறைய சிதைந்த நிலையில், சில இடங்களில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருந்தது மண்டபம். அதிகாரி யாருமில்லாததால் கோவிலின் கர்ப்பக்கிரகம் அல்லது உள்ளறைக்கு சென்று பார்க்க முடியவில்லை. பராமரிப்பில்லாமல் உள்ள பகுதி என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நம்மவர்களுக்கே உரிய ஒரு பழக்கம் மறைவான ஒரு இடம் கிடைத்தால் அங்கே மது அருந்துவது. அப்பழக்கத்திற்கு ராஜேந்திர சோழரும் விலக்கல்ல என்று அங்கிருந்த நீரற்ற கிணற்றில் கிடந்த மதுக்குப்பிகளே சாட்சி. 

கோபுரத்தின் பின்புறம் உள்ள நிலத்தில் பராமரிப்பின்றி ஒரு கல்லறை உள்ளது. ஒருவேளை அது சோழருடைய கல்லறையாக இருக்கலாம்.

தமிழர் வரலாற்றின் மீதோ / தொல்லியல் மீதோ மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தால் நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாத இடம் இது. 

இரண்டாவதாக நாங்கள் சென்ற இடம் ஒரு திரையரங்கம். திரையரங்கில் ஸ்பெஷல் என்னவென்றால் அது டென்ட் கொட்டாய் என்பதுதான். தமிழ்நாட்டின் கடைசி டென்ட் கொட்டா ! இத்திரையரங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரையை நியூஸ் மினிட் இணையதளத்தில் வாசிக்க நேர்ந்தது. 

சோழனைப் பார்க்கச் சென்ற அதே NH48ல் ஆற்காடுக்கும், வேலூருக்கும் இடையே பூட்டுத்தாக்கு என்ற சிற்றூரில் அமைந்துள்ளது கணேஷ் திரையரங்கம் என்கிற இந்த டென்ட் கொட்டாய். கூகுளில் போன் நம்பர் எல்லாம் முறையாக அளிக்கப்பட்டிருந்ததால் முதலில் அலைபேசினோம். கனிவுடன் பேசிய அரங்கின் உரிமையாளர் படம் பார்ப்பதென்றால் மாலை நேரத்திற்கு மேல் வரும்படியும், மற்றபடி அரங்கை பார்ப்பதென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்றும் சொன்னார்.

நாங்கள் பூட்டுத்தாக்கை சென்றடைந்தபோது அங்கே பயங்கரக்கூட்டம். நேரத்தைப் பார்த்தோம். மதியம் பன்னிரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் புரிந்தது. டாஸ்மாக் திறப்பதற்காக காத்திருந்த கூட்டம்தான் அது. இங்கேயும் ஒரு வாயில், இங்கேயும் ஒரு பூட்டு. ஆனால் அத்துமீற முடியவில்லை. உரிமையாளரை அலைபேசியில் கூப்பிட்டோம். இரண்டு நிமிடங்களில் வருவதாகச் சொல்லி, சொன்னபடி வரவும் செய்தார். சும்மா வேடிக்கை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்றில்லாமல் எங்களை நல்ல மரியாதையுடன் நடத்தினார் திரையரங்க உரிமையாளர் கிட்டத்தட்ட பிரஸ் அந்தஸ்து என்று வைத்துக்கொள்ளுங்களேன். 

நாங்கள் போன சமயம் திரையரங்கில் கஜினிகாந்த் ஓடிக்கொண்டிருந்தது. டென்ட் கொட்டாய் என்பதால் பகல், மேட்னி காட்சிகள் திரையிட முடியாது. தினசரி மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணிக் காட்சிகள் மட்டும். மேலே ஆஸ்பெட்டா கூரை, ஒருபுறம் திரை, மறுபுறம் ப்ரொஜெக்ஷன் அறை. பக்கவாட்டில் சுற்றுச்சுவரெல்லாம் கிடையாது. திரைக்கு முன் ஆண்கள், பெண்கள் என்று பிரித்து விடப்பட்ட மண் பகுதி, அதன்பிறகு பென்ச் பகுதி (இங்கும் ஆண்கள் / பெண்கள் தனித்தனி பகுதி). பென்ச் பகுதி சமீபத்தில் புனரமைக்கப்பட்டு மர நாற்காலிகள் அமைத்திருக்கிறார்கள். அதன்பிறகு பர்சனல் ரூம், அதாவது பாக்ஸ். இங்கே பஞ்சு பொதிக்கப்பட்ட நாற்காலிகள் உள்ளன. டிக்கட் விலை தரைக்கு பத்து, பென்ச் இருபது, பாக்ஸ் முப்பது.

உரிமையாளர் கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் பக்கம் என்று நவீன நுட்பங்களை தெரிந்து வைத்திருக்கிறார். நவீன ஒலியமைப்பு செய்து வைத்திருக்கிறார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளை விட இங்குள்ள ஒலியமைப்பு அபாரமாக இருக்கும் என்றார். துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அங்கே இருந்து மாலைக்காட்சி பார்க்கும் அளவிற்கு நேரமில்லை. 

தொடர்ந்து உரிமையாளருடன் பேசுகையில் திரையரங்கை தொடர்ந்து நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும், மற்ற திரையரங்கினர் மத்தியில் நிலவும் அரசியல் குறித்தும் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதனாலேயே பல சமயங்களில் செகண்ட் ரிலீஸ் படங்களையே வெளியிட நேர்வதாகக் குறைப்பட்டுக் கொண்டார். அதே சமயங்களில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், எங்களைப் போல அவ்வப்போது சிலர் விசாரித்து வருவதாகவும் சொன்னார். டாஸ்மாக்கிற்கு நேரெதிரில் திரையரங்கம். அமர்ந்து இளைப்பாற தோதாக மண்தரை. இதனால் உங்களுக்கு நிறைய தொந்தரவுகள் வந்திருக்குமே என்று கேட்டோம். பொதுவாக இங்கு வருபவர்கள் உள்ளூர்க்காரர்கள் தான். அவர்கள் பிரச்சனையெல்லாம் செய்ய மாட்டார்கள். அப்படியே செய்தாலும் போலீஸிடம் தகவல் சொன்னால் போதும் என்றார். 

திரைப்படங்கள் பற்றி பேசும்போது சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கில ஹாரர் படம் அமோக வசூலை அள்ளியதாக சந்தோஷப்பட்டுக்கொண்டார். நான் அந்த ஹாரர் படத்தை பார்த்திருக்கிறேன். இரவுக்காட்சி, அந்த திறந்தவெளி திரையரங்கில் அந்த ஹாரர் படத்தைப் பார்த்தால் பீதி நிச்சயம்.

இன்னொரு நன்னாளில் ராஜேந்திர சோழரின் உள்ளறையையும், பூட்டுத்தாக்கு கணேஷ் திரையரங்கில் இரவுக்காட்சி ஹாரர் திரைப்படத்தையும் பார்க்கும் வாய்ப்பு அமைய வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

7 comments:

Ponmahes said...

ஆர்வமாக இருக்கிறது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.

விமல் ராஜ் said...

ஒருவழியாக ஒயின் ஷாப்பை இரண்டு வாரமாக திறந்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்!

Vadielan R said...

பிரபா ஒயின் ஷாப் ஒனர் அந்த ஹாரர் படம் எதுனு கொஞ்சம் சொன்னால் நாங்களும் பீதி அடைவோமே பார்த்து ப்ளீஸ் ஹெல்ப்

Anonymous said...

@Vadielan R,

"ந்த ஹாரர் படம் எதுனு கொஞ்சம் சொன்னால்"
.
அனிதாவின் ஆசைகள்

ஸ்ரீராம். said...

ராஜேந்திர சோழன் கல்லறை பார்க்க ஆவல். எப்போது திறந்திருக்குமாம்? ஞாயிறு என்பதால் திறக்கவில்லையா? அத்து மீறி நுழைந்ததால் உள்ளே படம் எடுக்கவில்லையா? அல்லது படங்களை வெளியிடவில்லையா?

தியாகராஜன் said...

��I m very very happy to see abt this pramadesam, bcoz one of my native is near that pramadesam, vada ilupai that village name, my native is sathya Vijay nagaram (s.v nagaram) near polur aarani there is too one fort, and u forgot something I thing so abt that chozar war zones there

தியாகராஜன் said...

pramadesam is the one of the chozar route, arakanom thakolam is that war zone