அன்புள்ள வலைப்பூவிற்கு,
செல்வராகவன் படம் என்பதைத் தவிர இரண்டாம் உலகம் பார்க்க வேறேதும்
காரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் ஃபேண்டஸி வகையறா
என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். படத்தின் ட்ரைலர்
அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஆனாலும் முன்கூறிய இரண்டு காரணிகளால் பார்த்தே
ஆகவேண்டிய நிலை.
படத்தின் கதை வழவழ கொழகொழ ரகம். சில இடியாப்ப சிக்கல்களை வாசகர்கள்
நலன் கருதி தவிர்த்துவிட்டு சொல்வதென்றால், உலகம் போலவே ஒரு கிரகம். இரண்டாம்
உலகம் என்று வைத்துக்கொள்வோம். அது காதலில்லா உலகம். அங்கே பெண்கள்
மதிக்கப்படுவதில்லை. காதலில்லா, பெண்களை மதிக்காத உலகம் எப்படி பிழைக்கும்...?
அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற ஒரு வீரன் தேவை. காதல்
தேவை. வீரன் ஆர்யா இருக்கிறார். காதல்...? காதலை கற்றுக்கொடுக்க பூமியிலிருந்து
ஒரு ஆர்யா அங்கே அனுப்பி வைக்கப்படுகிறார். இரண்டாம் உலகம் காப்பாற்றப்படுகிறது.
இவ்வுலகம் மட்டுமல்ல, எவ்வுலகம் ஆனாலும் காதலில்லாமல் இயங்க முடியாது என்ற
கருத்தோடு படம் நிறைவடைகிறது.
உலகம், இரண்டாம் உலகம் குறித்த காட்சிகள் இணையொத்து
காண்பிக்கப்படுகின்றன. உலகத்தில் அனுஷ்கா ஆர்யாவை மணந்துகொள்ள விரும்புகிறார். பின்பு
ஆர்யாவும். சிலகால ஊடலுக்குப் பிறகு இருவரும் காதலிக்க துவங்குகின்றனர். எதிர்பாரா
விபத்தொன்றில் அனுஷ்கா இறந்துவிடுகிறார்.
செல்வராகவனுக்கென்று சில தனிக்கூறுகள் இருக்கின்றன. பெண்களின் காதல்
சார்ந்த உணர்வுகளை செல்வராகவனைப் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட
முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும்
சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக
கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய
படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன...? ஆகியவற்றில்
பார்த்திருக்கலாம். இம்முறை தான் சிறந்து விளங்கும் மேற்கண்ட பரப்பிலேயே
செல்வராகவன் படுமோசமான தோல்வியுற்றிருக்கிறார். ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள்
ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப்
காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை
ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம்
காட்சி அமைத்திருக்கக்கூடும். அனுஷ்கா ஏதோ வந்தா மலை போனா மசுரு என்கிற ரீதியில்
ஆர்யாவை காதலிப்பதாக தோன்றுகிறது.
மற்றொரு உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை விரும்புகிறார். அனுஷ்கா
யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் ஆர்யாவை வெறுக்கிறார்.
இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.
இரண்டாம் உலகத்தில் காதலே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆர்யா மட்டும்
அனுஷ்காவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இ.உலகம் குறித்த காட்சிகள் ஜார்ஜியாவில்
படமாக்கப்பட்டுள்ளன. துணை நடிக / நடிகைகளை எல்லாம் பட்டாளத்தோடு ஜார்ஜியா
அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து,
அவர்கள் தமிழ் பேசுவது போல காட்டியிருக்கிறார்கள். அது என்னவென்றால், ஏதோ பென் ஹர்
காலத்து ஆங்கில படத்தை தமிழில் டப் செய்தது போலிருக்கிறது. போதாத குறைக்கு பிரதான
வேடம் ஒன்றில் அயல்நாட்டு சுமார் மூஞ்சி பெண் நடித்திருக்கிறார். அங்கேயும் ஒரு
மதுக்கூடம் இருக்கிறது. அதிலும் அடிடா, வெட்டுறா ரீதியில் ஒரு காதல் தோல்வி
குத்துப்பாடல் இருக்கிறது. ஃபேண்டஸி படங்களில் இப்படியெல்லாம் கேள்வி
கேட்கக்கூடாது என்றாலும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தவிர, எல்லை மீறல்கள்
இருப்பினும் ரசிக்கின்ற வகையில் இருந்திருக்க வேண்டும்.
ஆர்யாவை பார்க்கும்போது 7G ரவிகிருஷ்ணா நினைவுக்கு வருகிறார்.
அனுஷ்காவை பார்க்கும்போதெல்லாம் ஈ’யென்று இளிக்கிறார். இ.உலகத்து ஆர்யா வாட்ட
சாட்டமாக நியாண்டர்தால் மனிதர் போல இருக்கிறார். அனுஷ்காவின் ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய
பலம். தெலுங்கு டப்பிங்கில் அனுஷ்கா தான் முன்னிலைபடுத்தப் படுகிறார். அனுஷ்கா
அவருடைய கேரியரின் இறுதிப்பகுதியை நெருங்குவதாக அவருடைய தொப்பை ஜோசியம் சொல்கிறது.
சில பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ஹிட் என்றாலும் படத்தோடு
பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை. படத்தில் முக்கியமான காட்சிகள்
வரும்போதெல்லாம் ஒரு இசையை பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். அதை கேட்டதும் ரசிகர்களின்
நரம்பெல்லாம் புடைத்துக்கொள்ளும் என்று நினைத்திருப்பார் போல.
மொத்தத்தில் படத்தில் உருப்படியான விஷயங்கள் என்று பார்த்தால், விஷுவல்
விருந்து என்ற சொல்லக்கூடிய ஆர்யா – சிங்கம் சண்டைக்காட்சி, அனுஷ்கா, காதலில்லாமல்
உலகமில்லை என்கிற கதைக்கரு. அவ்வளவுதான்.
செல்வராகவனின் தீவிர விசிறிகள், அவரது நலம்விரும்பிகள் வேண்டுமானால்
தங்களது மன திருப்திக்காக இரண்டாம் உலகம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு
திரையரங்கில் பார்க்கக்கூடிய அளவிற்கு படம் வொர்த் கிடையாது. பிரச்சனை
என்னவென்றால் இரண்டாம் உலகத்தை ஆதரிக்காத பட்சத்தில் தமிழ் சினிமாவில் மீண்டுமொரு
ஃபேண்டஸி படத்தினை இயக்க யாரும் தைரியமாக முன்வர மாட்டார்கள். ஆமாம், ஒரு மோசமான
ஃபேண்டஸி படத்தினை கொடுத்து தமிழில் ஃபேண்டஸி படங்களுக்கு கனகச்சிதமாக ஒரு
முட்டுக்கட்டையை போட்டுவிட்டார் செல்வராகவன்...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|