12 March 2012

பிரபா ஒயின்ஷாப் – 12032012


அன்புள்ள வலைப்பூவிற்கு,

கேரமை கண்டுபிடித்தவர் யார்...?
“கேக்குறவன் கேனையா இருந்தா கேரம் போர்டை கண்டுபுடிச்சது கே.எஸ்.ரவிகுமாருன்னு சொல்லுவியே...” – இந்த வசனத்தை கேட்டதும் யாருக்கு என்ன ஃபீலிங் வந்ததோ, எனக்கு ஆமால்ல, கேரம் போர்டை கண்டுபிடிச்சது யாருன்னு கேள்வி வந்தது. தேடலில் இறங்கினேன். இன்னார் தான் கண்டுபிடித்தார் என்று கேரம் போர்டு பற்றிய உறுதியான குறிப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், பண்டைய இந்திய அரசர்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும் என்றும், ஆளவந்த மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும் என்றும், இன்னும் சிலர் பிரிட்டிஷ் மக்களின் கைங்கரியம் என்றும் பிட்டு பிட்டாக தகவல் கிடைக்கின்றன. 1935ல் முதன்முதலில் இலங்கையில் சர்வதேச கேரம் போட்டிகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. உலக அளவில் கேரம் போன்ற பல விளையாட்டுகள் (உதாரணம்: பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர்) பரவிக்கிடந்தாலும் கேரம் போர்டு தெற்காசியாவில் மட்டுமே பிரசித்தி பெற்றது.

சம்பிரதாயங்கள் சரியா...?
இத்துப்போன இந்துமத சம்பிரதாயங்களையும், அதை கண்மூடித்தனமாக பின்பற்றும் அறிவிலிகளையும் நினைத்தால் சிரிப்பும், கோபமும் கலந்து வருகிறது. சில சடங்குகள் சின்னப்பசங்க சொப்பு சாமான் விளையாடுவதை விட செம காமெடியாக இருக்கின்றன. இதெல்லாம் எதுக்காக பண்றீங்கன்னு விவரமாக ஒரு கேள்வி கேட்டால், “நீ சின்னப்பைய பேயாம இருக்கணும்...!” என்றோ, “எளந்தாரிப் பயலுவளுக்கு எடக்கு மடக்கா பேசுறதே வேலையா போச்சு...!” என்றோ, அதுவுமில்லை என்றால் “அவங்கப்பா அவரை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சாரு தெரியுமா...? அவரைப் போய் கிண்டலடிக்கிறியே...!” (டேய்... நான் என்ன கேக்குறேன்... நீ என்ன சொல்ற...) என்று சம்பந்தமே இல்லாமல் செண்டிமெண்ட் ஜூஸைப் பிழிந்து நம் வாயை அடக்க முயற்சி செய்கிறார்களே தவிர பதில் மட்டும் வருவதே இல்லை.

கோழிக்கறியில் ஜனாதிபதி...!
நம்மூரில் அடிக்கடி இதய வடிவிலான கேரட், ஏசுநாதர் முக அமைப்பை கொண்ட கத்திரிக்காய் வகையறா விசித்திரங்களை தினத்தந்தி பெட்டிச்செய்திகளில் படித்திருப்பீர்கள். பெரும்பாலும் அவை இதய வடிவிற்கோ, ஏசுநாதர் முகத்திற்கோ சம்பந்தமே இல்லாமல் இருக்கும் என்பது வேறு விஷயம். அதுமாதிரி அமெரிக்காவில் ஒரு பெண் வாங்கிய கோழிக்கறி வறுவல் மறைந்த ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் போலவே இருக்க, அவர் அதை பத்திரமாக வீட்டுக்கு கொண்டுவந்து குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கிறார். சம்பவம் நடந்தது மூன்றாண்டுகளுக்கு முன்பு. அன்றிலிருந்து அதனை வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தவர், சமீபத்தில் அதனை ஆன்லைன் மூலம் ஏலம் விட்டிருக்கிறார். ஏலம் போன தொகை - $8100. ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 4 லட்சம்.

கண்டதும் காதல்...!
அடர் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இளம் பெண்ணொருத்தி “ஹேய்ய்ய்ய்ய்ய்ய்....” என பெருங்குரலெடுத்து ஆரவாரமாக இரு கைகளையும் விரித்து, அண்ணாந்து பார்த்தபடி மழையை ரசித்து நனைத்துக்கொண்டிருக்கிறாள். அப்போது மழையில் ஒரு நாய்க்குட்டி நனைய, இளம்பெண் நாயை கையில் எடுத்துக்கொண்டு, “ஜூஜூஜூஜூஜூ குளிருதாடா... ஓரமா போயிடலாமா டா...” என்று கொஞ்சிக்கொண்டே மெய்மறந்து நடந்து வருகிறாள். ரோட்டோர குழியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் அவள் “சலக்” என்று காலை வைக்க அது “புலக்” என ஒரு இளைஞனின் முகத்தில் போய் படுகிறது. இளைஞன் நிமிர்ந்து பார்க்கிறான். பூம்...! Love at First Sight...! தமிழ் சினிமாவே பார்த்திராத இப்படியொரு அரிய காட்சியை தாங்கி வெளிவந்திருக்கும் ஒலகப்படம் – காதல் பாதை.

ஜொள்ளு:
நெருங்கிவந்து பார்த்தேன்... நீ நெஞ்சழுத்தக்காரி...!
ட்வீட் எடு கொண்டாடு:
நல்ல வேளை எஸ்.ரா கம்பியூட்டர் புக்கெல்லாம் எழுதல..பெரும் இரையை முழுங்கிய சர்பம் போல இருக்கிறது இந்த சீ++ பிரோக்ராம்"

எவ்வளவு டீசண்ட்டா இருக்கவறாலயும் பப்ஸ் சாப்புடும்போது அத மெய்ண்டைன் பண்ண முடியறதில்லை... #யுரேகா!!! 

படிக்கிறப்போ 'எனக்கு ஆள் இருக்கு மச்சி'னு சொன்னா கெத்தா பார்ப்பாய்ங்க..இப்போ பரிதாபமா பார்க்கிறாய்ங்க ! #அடிங்கொய்யால

அறிவான பெண்ணை அழகென்று புகழ்;அழகான பெண்ணை அறிவென்று புகழ்;2ம் இருக்கிற பெண்ணை பத்தி கவலைப்படாதே,அவங்க நம்ம கிட்ட பேசமாட்டாங்க

என் மகன் உறக்கத்தில் சிரிக்கையில் கடவுளிடம் அவன் கனவை எட்டி பார்க்க ஒரு ஜன்னல் கேட்கிறேன்...

பார்த்தேன்...! ரசித்தேன்...!!
புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட நண்பர் சவுக்கத் ராஜா தளத்தில் ரசித்த புகைப்படம். நண்பர் சவுக்கத் ராஜா ஒரு ரியல் லைப் கார்த்திக் சுவாமிநாதன். பறவைகள் மீதான இவருடைய புகைப்படக்கலை பார்ப்பதற்கு ஆரவாரமில்லாமல் எளிதாக இருந்தாலும் அதை அவர் எவ்வளவு சிரமப்பட்டு எடுத்திருப்பார் என்று நினைக்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை.


கத்துக்குட்டிகள் கோப்பை
வருகிற செப்டம்பர் மாதம் இலங்கையில் நடக்க உள்ள T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பத்து அணிகளுடன் சேர்த்து பன்னிரண்டு அணிகள் விளையாட உள்ளன. இப்போது மீதமுள்ள இரண்டு அணிகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு கத்துக்குட்டி அணிகள் கலந்துக்கொள்ளும் Qualifier Cup நாளை ஷார்ஜாவில் துவங்குகிறது. இந்த தொடரில் நாம் ஏற்கனவே அறிந்த கென்யா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுடன் ஓமன், நேபால், உகாண்டா, இத்தாலி உட்பட பதினாறு அணிகள் கலந்துக்கொள்கின்றன. சமபலம் (!) பொருந்திய அணிகள் விளையாடும் போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு கியாரண்டி.

தக்காளி... இதை மட்டும் Mark Zuckerberg பார்த்தா... போடாங் ஒங் ஒங் ஒங் ஒங்...!

திருத்தம் & வருத்தம்
படுவா...! தங்க்ஸ்ன்னு எழுதுறதுக்கு பதிலா ரங்க்ஸ்ன்னு எழுதி வச்சிருக்கேன்... இதெல்லாம் நீ சொல்ல மாட்டியா... எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்னைப் பத்தி என்னடா நினைப்பான்...! செய்யறதையும் செஞ்சிட்டு நயாபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவன் மாதிரி நிக்கிறான் பாரு...!

அறிவிப்பு
உங்கள் அபிமான (!!!) பிரபாகரனின் தத்துபித்துவங்கள் வலைப்பூ டாட் காமாக, அதாவது www.philosophyprabhakaran.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை மாற்றித்தந்து உதவிய தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 March 2012

அரவான் – அந்த பலியாளே நீங்கதான் சார்...!


அன்புள்ள வலைப்பூவிற்கு,

சயின்ஸ்-ஃபிக்ஷன், பீரியட், ஃபேண்டஸி என்று ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும் படங்களின் மீதான ஆர்வம், இயக்குனர் வசந்த பாலனின் மீதுகொண்ட அபார நம்பிக்கை, தங்கத்தமிழச்சி தன்ஷிகா ஆகியவை என்னை அரவான் படத்திற்காக காத்திருக்க வைத்தது. அதுவும் ஒன்றரை ஆண்டுகள். யாருடைய பதிவையோ, ஏன் பதிவின் தலைப்பையோ படித்தால்கூட படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்று இரண்டு நாட்களாக இணையம் பக்கமே வரவில்லை. பல வருடங்கள் கழித்து, (அநேகமாக அமைதிப்படைக்கு பிறகு) நானும் என் தந்தையாரும் ஒன்றாக சினிமா பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

கதை படிக்க விரும்பாதவர்கள் இந்தப்பத்தியை ஸ்கிப் செய்துவிடலாம்
வேம்பூர் என்ற கிராமத்தில் களவுத்தொழில் செய்துவருகிறார்கள் பசுபதி & கோ. அச்சமயம் ராணியின் வைர அட்டிகையை யாரோ வேம்பூரின் பெயரைச் சொல்லி களவாடிவிடுகிறார்கள். பசுபதி தனது சாமர்த்தியத்தால் அந்த களவாணிப்பய ஆதி என்று கண்டுபிடித்தாலும், அவரது களவுத்திறமையை பார்த்து தன்னோடு கூட்டு சேர்த்துக்கொள்கிறார். இருப்பினும் ஆதியின் பர்சனல் விஷயங்கள் பசுபதிக்கும் வேம்பூர் மக்களுக்கும் மர்மமாகவே இருக்கின்றன. வேம்பூர் பசுபதி, சின்னவீரன்பட்டி ஆதி, மாத்தூர் கரிகாலன் என மும்முனை போட்டியாக இரண்டாம் பாதி விரிகிறது. படத்தில் பலியாள் ஹீரோ ஆதிதான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது அந்த பலியாளே ரசிகர்கள் தான் என்று ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். மற்றவை வெண்திரையில்...!

ஆதிக்கு மிருகம், ஈரம் படங்களுக்குப்பின் இது ஒரு குறிப்பிடத்தகுந்த படமாக நிச்சயம் அமையும். பொதுவாக மற்ற மாஸ் ஹீரோக்கள் நான் மூணு மாசமா சாப்பிடல, ஆறு மாசமா பல்லு விளக்கல என்று சீன் போட்டுவிட்டு செய்யும் பல விஷயங்களையும் ஆர்ப்பாட்டமில்லாமல் செய்திருக்கிறார். தங்கத்தமிழச்சி தன்ஷிகாவை இரண்டாம் பாதியில்தான் காட்டவே செய்கிறார்கள். அவரும் இரண்டு கில்மா பாடல்கள், இரண்டு அழுகாச்சி காட்சிகளோடு சரி. (நீ அழுவுறத பாக்குறதுக்கா தாயி நான் தியேட்டருக்கு வந்தேன்). இரண்டாம் நாயகி அர்ச்சனா கவி, ஹீரோவின் வீரத்தை பார்த்து வழியும் வழக்கமான கேரக்டர்தான். பசுபதி படத்திற்கு இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கரிகாலன் – யாருய்யா நீயி...? அந்த சிகையலங்காரம், முறைப்பு, விறைப்பு, தோரணை என நடிப்பில் மேன் ஆஃப் தி மூவி அவர்தான். சிங்கம்புலி சூரமொக்கை. நிஜவாழ்க்கையில் யாரும் முழுநேர காமெடியன்களாக இருப்பதில்லை. திருமுருகன், டி.கே.கலா மற்றும் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. சிறிய வேடங்களில் ரதி நிர்வேதம் புகழ் ஸ்வேதா மேனன், பரத், அஞ்சலி, சமையல் வல்லுநர் தாமு ஆகியோர் தோன்றுகின்றனர்.

படத்தின் வசனத்தில் எளிதான புரிதலுக்காக வட்டார வழக்கை தவிர்த்திருக்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. வசனங்கள் பருத்திவீரன், சுப்ரமணியபுரம் படங்கள் போல தானே இருக்கின்றன. அதிலும் வசனங்களில் மனதில் நச்சென பதியக்கூடியவை எதுவும் இல்லை. இசையை பொறுத்தவரைக்கும் ஓகே ரகம். நிலா... நிலா... மற்றும் உன்ன கொல்ல போறேன்... பாடல்களின் இசையும் அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. இப்படியொரு படத்திற்கு யுவன் இசை அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆரம்பத்தில் பசுபதியை டாப் ஆங்கிளில் காட்டுவதில் இருந்தே ஒளிப்பதிவின் ஆளுமை தொடங்கிவிடுகிறது. ஹீரோ புகை கூண்டு வழியாக இறங்குவது, தன்ஷிகாவுடனான ரொமான்ஸ் பாடல்களை உதாரணம் காட்டலாம். மிருகங்களை வதைக்கக்கூடாதென கருதியோ என்னவோ மாடு சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும்படி இல்லை. அதே போல டைட்டில் போடுவதில் கூட கிராபிக்ஸ் கலைஞர்கள் பெரிய அளவில் சிரத்தை எடுத்ததாக தெரியவில்லை.

வசந்தபாலன் போன்ற தேர்ந்த படைப்பாளிகள் தங்களது ஆசைக்காகவும், மனதிருப்திக்காகவும் இப்படி ஒன்றரை ஆண்டு உழைப்பையும், தயாரிப்பாளரின் பணத்தையும் வீணடிப்பதும், அப்படி அனாயச உழைப்பில் வெளிவரும் படம் வந்த வேகத்தில் முடங்கிப்போவதும் அத்தகைய இயக்குனர்களை எளிதாக திசை திருப்பும் அபாயம் உண்டு. உதாரணத்திற்கு, இயக்குனர் சற்குணம் சண்டித்தனம் செய்யும் ஹீரோ பாத்திரப்படைப்போடு எடுத்த களவாணி ஹிட். கல்வியின் அவசியம் சொல்லி எடுக்கப்பட்ட வாகை சூட வா அட்டர் ஃபிளாப். இனிமேல் அவர் வாகை சூட வா போன்ற படங்களை எடுப்பாரா...? அதனால் அரவான் போன்ற வித்தியாசமான “முயற்சிகளை” அரவணைப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை.

காவல் கோட்டம் படித்துவிட்டு அரவான் பார்ப்பவர்களின் உணர்வுகள் வேறுவிதமாக இருக்கக்கூடும். அதை வாசிக்காமல் படம் பார்ப்பவர்களுக்கு நாவலை படிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுவது உண்மை. ஒருசில விஷயங்களை திரையில் பார்ப்பதைக் காட்டிலும் நாவல்களில் அதுவும் பீரியட் நாவலில் அதன் வர்ணனையை படிப்பதற்கு அட்டகாசமாக இருக்கும். அது போல நிறைய காட்சிகள், உதாரணத்திற்கு முதல் காட்சியில் பசுபதியும் கூட்டாளிகளும் களவாடுவதைப் பற்றிய வர்ணனை எப்படி இருக்குமென நினைக்கும்போதே பேரார்வம் தொற்றிக்கொள்கிறது. புத்தகத்தின் சைஸ்தான் கொஞ்சம் பயம் காட்டுகிறது.

படத்தின் திரைக்கதை மிதவேகமே, இருப்பினும் ம்ம்ம் அப்புறம், ம்ம்ம் அப்புறம் என்று ஆர்வத்தோடு கதை கேட்க வைக்கிறது. என்ன ஒன்று படம் முடிந்தபிறகும் ம்ம்ம் அப்புறம் தொடர்கிறது. படத்தில் ஒரு முடிவு இருந்ததாகவே தோன்றவில்லை. கரெக்ட், இது நாவலின் ஒரு பகுதி மட்டுமே. படம் முடிந்ததும் இதனால் தாங்கள் கூற விரும்புவது என்ன என்று இயக்குனரிடம் கேட்க நினைக்கும் தருவாயில் மரண தண்டனை குறித்த ஸ்லைடு காட்டுகிறார்கள். இதுக்கா பாஸ் இவ்வளவு கஷ்டப்பட்டீங்க...!

தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறையை உலகிற்கு படம் பிடித்து காட்டியமைக்காக அரவானை உலக சினிமாவாக கொண்டாடலாம். அவார்டுகளை வாங்கிக் குவிக்கலாம். ஆனால் ஒரு கமர்ஷியல் படமாக அரவான் ஒரு படுமொக்கையான தோல்விப்படம் என்பதில் ஐயமில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment