15 May 2014

யாமிருக்க பயமே

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சினிமா பார்த்து இரண்டு மாதங்களாகி விட்டது. கடைசியாக பார்த்த படம் தெகிடி. சினிமா பார்க்கலாம் என்று முடிவு செய்தபோது எனக்கு வாய்த்தது கோச்சடையான். டிக்கெட் எடுத்துவிட்டு கொஞ்சம் திகிலோடு காத்திருந்தேன். நல்லவேளையாக அதன் ரிலீஸ் தள்ளிப்போக, பிழைத்துக்கொண்டேன். சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தெய்வாதீனமாக யாமிருக்க பயமே பற்றி நல்லவிதமாக பேசிக்கொண்டார்கள். 

தொலைக்காட்சியில் லேகிய பாணி நிகழ்ச்சி நடத்தியதில் ஒரு தாதாவை ஏமாற்றி மாட்டிக்கொள்கிறார் கிருஷ்ணா. கூடவே அவருடைய காதலி. தாதாவிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசிக்கும்போது கிருஷ்ணாவுக்கு கொள்ளியூர் என்கிற மலை கிராமத்தில் பூர்விக சொத்து இருப்பது தெரிய வருகிறது. தனது காதலியுடன் அங்கே செல்லும் கிருஷ்ணாவுக்கு கருணாகரனும் அவருடைய தங்கை ஓவியாவும் உதவி செய்கிறார்கள். பாழடைந்த பங்களாவாக இருக்கும் பூர்விக சொத்தை செலவு செய்து ரெசார்ட்டாக மாற்றுகிறார். அவருடைய ரெசார்டுக்கு விருந்தினராக வரும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். ஏன் அப்படி இறக்கிறார்கள் ? கிருஷ்ணா மற்றும் சகாக்களுக்கு என்ன ஆயிற்று ? என்பதை காமெடியும் திகிலும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

அதென்ன திகில் + காமெடி வித்தியாசமான காம்போவாக இருக்கிறதே என்று முதலில் யோசித்தேன். படம் பார்த்தபிறகு அதனை உணர்ந்தேன். கிருஷ்ணா பலான மாத்திரை விற்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியுடன் படம் துவங்குகிறது. இதேபோன்ற காட்சியை ஏற்கனவே மிர்ச்சி சிவா நடித்த ஏதோவொரு திரைப்படத்தில் பார்த்த ஞாபகம். நகைச்சுவை என்று சொல்லப்படுகிற காட்சிகளுக்கு சிரிப்பே வரவில்லை. தவிர, இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச சித்தரிப்புகள் வேறு. யாரோ நன்றாக இருப்பதாக கிளப்பிவிட இணையத்தில் எல்லோரும் அதையே வழிமொழிந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன். முதல் மரணம் நிகழும்போது தான் கதை துவங்குகிறது. அதன்பிறகு ஆங்காங்கே தொய்வடைந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். நிறைவடையும்போது ஒரு நல்ல சினிமா பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது.

கிருஷ்ணா தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை நடித்திருக்கிறார் என்பதோடு சரி. ரசிக்கும்படியாக எந்த சிறப்பம்சமும் அவரிடமிருந்து வெளிப்படவில்லை. உதாரணத்திற்கு, இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை எடுத்துக்கொண்டால் விஜய் சேதுபதியின் உடல்மொழிக்காகவே அதனை ரசிக்கலாம். அதுவும் ஹாரர் படம் என்பது ஆளில்லாத கோல் போஸ்ட் இல்லையா ? அடுத்ததாக, ரூபா மஞ்சரி. அம்மையார் நிறைய மேடை நாடகங்களில் நடிப்பார் போல தெரிகிறது. அவ்வளவு செயற்கையாக வசனம் பேசுகிறார். வேறு நடிகையே கிடைக்கவில்லையா டைரக்டர் சார் ?

ஓவியா மட்டும்தான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார். பாந்தமாக ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்த ஓவியா அம்மையார் ஒரேயடியாக அதிரடி கவர்ச்சிக்கு தரையிறங்கிவிட்டார். எப்படி புடவை கட்டுவது ? என்று செளகார்பேட் அம்மாள்களிடம் சிறப்பு வகுப்பு சென்று வந்திருப்பார் போல. ஏன் யாமிருக்க பயமே 3Dயில் தயாரிக்கப்படவில்லை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு. ஒரு காட்சியில் கிருஷ்ணாவின் கனவில் ஓவியா வந்து ஒரு மாதிரியாக கிறக்கமாக நெளிகிறார். யப்பா என்ன ஒரு நளினம் !

நிறைய விஷயங்கள் குறைகளாக தென்படுகின்றன. முதலில், கிட்டத்தட்ட பாதி படத்திற்கு நிறைய மொக்கையான காட்சிகள். ஒருவன் சம்பந்தமே இல்லாமல் கிருஷ்ணா மீது வாந்தி எடுத்துவிட்டு போகிறான். இரண்டாவது, இப்பொழுதெல்லாம் சினிமாவில் லாஜிக் பார்ப்பது என்பதே தெய்வ குற்றமாகிவிட்டது. இருக்கட்டும். ஆனால் குறைந்தபட்சம் கதை வடிவிலாவது ஒரு லாஜிக் இருக்க வேண்டுமல்லவா ? பங்களாவின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரையும் பேய் கொல்கிறது என்றால் கிருஷ்ணாவின் அப்பா என்று சித்தரிக்கப்பட்டிருப்பவர் ஏன் அவ்வாறு கொலையாகவில்லை ? இயக்குநரிடம் சில கேள்விகள் என்று கேட்பவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கக்கூடும். ஒரு காட்சியில் கந்தன், பத்மா தம்பதியர் கொலையுண்டு கிடக்கும்போது கந்தன் மட்டும் ஜாலியாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார். கடைசியாக, பெரிய குறை என்னவென்றால் குடும்பத்துடன் பார்க்கத்தகாத படமாக எடுத்தது. இந்த படத்திற்கு எந்த அறிவாளி யூ / ஏ சான்றிதழ் கொடுத்தது என்று தெரியவில்லை. அதுபோக தினசரிகளில் குடும்பத்தோடு குழந்தைகள் பார்க்க வேண்டிய படம் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். அதைநம்பி சிலர் குடும்பத்தோடு திரையரங்கிற்கு வருகிறார்கள். வேறென்ன, ஓவியாவின் வளைவுகளையும், ரூபாவின் பூரி நகைச்சுவையையும் குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டியது தான்.

எல்லாம் இருந்தும் கடைசி முக்கால் மணிநேரத்தில் நம்மை சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து எல்லா குறைகளையும் மறக்கடித்து விடுகிறார்கள். யாமிருக்க பயமே அட்டகாசமான படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அது எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். பலான சமாச்சாரங்களை தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் காணக்கூடிய பொழுதுபோக்கு படம் என்று சொல்லியிருக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 comments:

aavee said...

பாஸ், ஒருவேளை அந்த பூரி காமெடியெல்லாம் குழந்தைகளுக்கு புரியாது என்று நினைத்திருக்கலாம்.. ஹிஹி..

சீனு said...

//பாஸ், ஒருவேளை அந்த பூரி காமெடியெல்லாம் குழந்தைகளுக்கு புரியாது என்று நினைத்திருக்கலாம்.. ஹிஹி..//

அப்போ ஏன் எனக்கு புரிஞ்சது ஆவி பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா

சீனு said...

முதல் அரைமணி நேரம் மொக்க.. மத்தபடி ரொம்பநாளுக்கு அப்புறம் சிரிச்சி ரசிச்சி பார்த்த படம்

கும்மாச்சி said...

பிரபாவின் விமரசனத்தைப் படித்தால் படத்தை பார்க்கலாம் ரகமாக தெரிகிறது.

”தளிர் சுரேஷ்” said...

பகிர்வுக்கு நன்றி!

வவ்வால் said...

பிரபா,

//அதென்ன திகில் + காமெடி வித்தியாசமான காம்போவாக இருக்கிறதே என்று முதலில் யோசித்தேன்.//

தியேட்டருக்கு போய் படம் பார்ப்பதே இப்போலாம் திகில் + காமெடியான அனுபவமா தானே இருக்கு அவ்வ்!

ஆங்கிலப்படங்களில் இது ரொம்ப சகஜம், வம்பையர் லவ், காமெடினு பலது இருக்கு

தமிழில் கூட அப்போவே அதே கண்கள் படம் திகில் +காமெடினு சக்கைப்போடு போட்டது, அதில் வரும் நாகேஷின் காமெடி டிராக்கை பல படங்களில் பின்னாளில் சுட்டுப்போட்டார்கள் அவ்வ்!

பிரசாந்த் நடித்த ஆணழகன் படம் அப்படியான சுடலே.

# தமிழில் இப்படியான தளத்தில் அதிகம் படங்கள் வருவதில்லை என்பதால் "புதுமை" என்றே சொல்லலாம் ,ஆனால் என்ன காப்பி அடிச்சு செய்துடுறாங்க அவ்வ்!

# சந்திரமுகியில் ரஜினி யாமிருக்க பயமேன் என சொல்லி இண்டர்வெல் போடுவாங்க ,அதை வச்சு பரபரப்பா இருக்குமேனு ,யாமிருக்க பயமேன் என்ற பெயரில் 'பாக்யராஜ்" நடிப்பதாக முன்னர் ஒரு விளம்பரம் பார்த்தேன் ,படம் வந்துச்சா என்னானு தெரியலை, ஆனாலும் அந்த டைட்டில் இன்னும் பதிவில் இருக்கும் என நினைக்கிறேன் ,அதான் "யாமிருக்க பயமே" என வச்சிருக்காங்கனு நினைக்கிறேன் , பாக்யராஜிக்கு தான் இனிமே அவர் படம் வந்தாலும் அடி தான் அவ்வ்!

படத்தோட டைட்டிலுக்கு கதை ஜஸ்டிபை செய்தாலும் ,இன்னொருப்படத்தின் டைட்டில் சாயலை அப்படியே வெளிப்படுத்திவிடுவதால்,இனிமேல் அந்த டைட்டில் எடுபடாது தானே.

#//ரூபாவின் பூரி நகைச்சுவையையும் குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டியது தான்//

ஸ்பாஞ்ச் பூரி தானே அவ்வ்!

//ரூபா மஞ்சரி. அம்மையார் நிறைய மேடை நாடகங்களில் நடிப்பார் போல தெரிகிறது. அவ்வளவு செயற்கையாக வசனம் பேசுகிறார். வேறு நடிகையே கிடைக்கவில்லையா டைரக்டர் சார் ?//

ஏற்கனவே திரு திரு துரு துரு படத்தில கூட நடிச்சிருக்காங்களே, பேய்ப்படம் தானே கொஞ்சம் ஹாரர் எபெக்ட் நேச்சுரலா இருக்கட்டுமேனு போட்டிருக்கலாம் அவ்வ்!

ஜீவன் சுப்பு said...

தியேட்டருக்கு போய் படம் பார்ப்பதே இப்போலாம் திகில் + காமெடியான அனுபவமா தானே இருக்கு அவ்வ்!//

:)))))))))))

unmaiyanavan said...

"//பலான சமாச்சாரங்களை தவிர்த்திருந்தால் //" - அப்புறம் அவுங்க எப்படி கல்லா கட்டுறது???

குட்டிபிசாசு said...

//தமிழில் கூட அப்போவே அதே கண்கள் படம் திகில் +காமெடினு சக்கைப்போடு போட்டது, அதில் வரும் நாகேஷின் காமெடி டிராக்கை பல படங்களில் பின்னாளில் சுட்டுப்போட்டார்கள் அவ்வ்!//

வவ்வால்,

ராஜேஷ் நடித்த ராசாத்தி ரோஜாக்கிளி கூட திகில் காமெடி படம் தான். கவுண்டமணி, செந்தில், மனோரமா மூவரும் வில்லன்கள், காமெடிக்கு சொல்லவா வேணும்.

வவ்வால் said...

குபி,

அப்பாவி ராஜேஷை கொன்னுறுவாங்க, அவரு ஆவியா 'நீலக்கலர்" சாயம் பூசிட்டு வந்து எல்லாரையும் மிரட்டுவாரே அந்தப்படமா, எப்பவோ டிவில பார்த்த நினைவு இருக்கு.

Anonymous said...

//ஸ்பாஞ்ச் பூரி தானே அவ்வ்!///
voval innum chinna pullaiyaa irukkeere :-)

Ponmahes said...

பதிவு அருமை.......வாழ்த்துக்கள்.....

saamaaniyan said...

இன்னும் படம் பார்க்கவில்லை... உங்களின் அருமையான விமர்சனத்தை படித்ததும் பார்க்க ஆவலாக இருக்கிறது !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது முதல் சிறுகதை : முற்பகல் செய்யின்...
http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html

( தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவினை படித்து உங்கள் எண்ணங்களை பின்னூட்டமிடுங்கள். நன்றி ‍)