Showing posts with label horror. Show all posts
Showing posts with label horror. Show all posts

20 December 2014

பிசாசு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

எந்த வகையிலும் சேர்க்க முடியாமல் ஒரு புதுமாதிரியாக வெளிவந்திருக்கிறது பிசாசு. கொஞ்சம் ஹாரர், கொஞ்சம் மர்மம், நிறைய செண்டிமெண்ட் சேர்ந்த கலவை.

பிரயாஹாவின் துர் மரணத்துடன் தான் படம் துவங்குகிறது. அழகுப் பிசாசின் மரணத்தை காணச் சகியாதவர்கள் நியாயசீலர் KSRன் கூற்றுப்படி எழுந்து கிளம்பிவிடுவது உசிதம். மற்றவர்கள் தொடர்க...

சாலை விபத்தொன்றில் உயிருக்கு போராடும் பிரயாஹாவை ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கிறார் நாகா. பலனின்றி பலியாகிறார் பிரயாஹா. நேர்ந்த சம்பவம் காரணமாய் மனதளவில் பாதிக்கப்படுகிறான் நாகா. அது மட்டுமில்லாமல் அவனுடைய வீட்டில் சில அமானுஷ்ய அனுபவங்களுக்கும் ஆளாகிறான். போகப் போக இறந்துபோன பிரயாஹாதான் தனது வீட்டில் வசிக்கிறாள் என்பதை உணர்கிறான் நாகா. அதன்பிறகு விளைவுகளும் காரணங்களும் மீதிக்கதை.

அரொல் கொரெலியின் வயலின் இசை இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. படத்தில் ஒரே பாடல். அதில் இசை, பாடல் வரிகள், பாடகியின் குரல் என்று அத்தனை விஷயங்களும் கச்சிதமாய் பொருந்தியிருக்கின்றன. பாடியிருப்பது பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்தரா, எழுதியிருப்பது தமிழச்சி தங்கபாண்டியன்.

அடுத்தது ராதா ரவியின் அபாரமான நடிப்பு. இறந்துபோன மகளை விகாரமான உருவில் கண்டதும் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு ஹாரர் படம் என்பதையும் மறக்கடித்து கலங்கடிக்கின்றன.

பிரயாஹா பாவம். இப்படியொரு முதல் படம் எந்த நடிகைக்கும் அமையக்கூடாது. நாகாவின் நடிப்பில் மிஷ்கின் டச் அப்பட்டமாக தெரிகிறது. ப்ளாட்டோ, டீக்கடை ஆசாமி, ஆட்டோ ஓட்டுநர், ஆவி அமுதா என்று நிறைய சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் உலவுகின்றன. 

உறுத்தலாக நிறைய காட்சிகள். குறியீடுகளாக இருக்கக்கூடும். எனக்கு புரியவில்லை. உதாரணமாக ஒழுகிக்கொண்டிருக்கும் பச்சைக் குடம், ஊர்ந்து மேயும் பூரான்கள், முறைத்துப் பார்க்கும் மஞ்சள் புடவை அம்மாள். இறுதியாக சிகப்பு / பச்சை நிறங்களை வைத்து கபடி ஆடியிருக்கிறார் மிஷ்கின்.

முதுகுத் தண்டை சில்லிட வைக்கிறது என்பார்களே அதுபோன்ற ஹாரர் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு பிசாசு உகந்ததல்ல. இது தமிழ் சினிமாவின் வழக்கமான டெம்ப்ளேட்டுக்குள் அடங்காத ஹாரர். பிரமாதமான படம் என்று சொல்ல முடியாது. சில காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, சில காட்சிகள் நம்முடைய பொறுமையை கடுமையாக பரிசோதனை செய்கின்றன. ஆமாம், பிசாசு படம் பார்க்க நிறைய பொறுமை அவசியம். கிட்டத்தட்ட எருமையின் அளவிற்கு பொறுமை. அப்புறம் கொஞ்சம் படம் பார்க்கும் ஆர்வம். இவையிரண்டும் இருந்துவிட்டால் ஒரு சுஹானுபவம் கிடைக்கப்பெறும். அவ்வளவுதான்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

8 December 2014

13ம் பக்கம் பார்க்க

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கார்த்திக் சுப்பராஜ் கையில் கிடைத்தால் கட்டி வைத்து உதைக்கவேண்டும். அந்த மனுஷன் ஒரு பீட்ஸா எடுத்தார். உடனே ஆளாளுக்கு பொங்கல், உப்புமா, கெட்டிச்சட்டினி என்று வரிசையாக தூக்கிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். பல பூனைகள் கொள்ளிக்கட்டையை எடுத்து உடலில் கோடுகள் இழுத்துக்கொண்டு மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டிருக்கின்றன. (வில்லா, யாமிருக்க பயமே, ஆ போன்றவை மியாவ் லிஸ்டில் வராது). அந்த லிஸ்டில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் பூனை - 13ம் பக்கம் பார்க்க. பாவம் பூனை, பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

கதையின் கரு ஒரளவுக்கு பரவாயில்லை. ஒரு எழுத்தாளர் ஒரு திகில் கதை எழுதுகிறார். தன்னுடைய வழக்கப்படி முதல் ஆளாக மனைவியிடம் படிக்கக் கொடுக்கிறார். மனைவி மர்கயா. பதிப்பாளர் ஒருவர் கதையின் ரைட்ஸ் வாங்கி பதிமூன்றாயிரம் காப்பி அச்சடிக்கிறார். (அடேங்கப்பா கதாசிரியருக்கு அபார கற்பனை). பதிப்பாளரும், பதிமூன்றாயிரம் காப்பிகளும் தீக்கிரை. ஒரேயொரு காப்பி மட்டும் தப்பிப் பிழைத்து ஒவ்வொரு கையாக மாறுகிறது. அதனை படிப்பவர்கள் எல்லோரும் இறக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், அதன் பதிமூன்றாம் பக்கத்தில் ஒரு துஷ்ட மந்திரம் எழுதப்பட்டுள்ளது. அதனை வாசித்தால் காட்டேரி வந்து ரத்தம் கேட்குமாம். கொடுக்காவிட்டால் படித்த நபரை ஆ போட்டுக் கொள்ளுமாம்.

படம் தொடங்கியதும் நிஜமாகவே பயந்துவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூக்கையும் அதன் கீழுள்ள துவாரங்களையும் க்ளோஸப்பில் காட்டி மிரள வைத்திருக்கிறார் இயக்குநர். அட்லீஸ்ட் கதாநாயகியின் துவாரங்களை காட்டினாலாவது நேசோபிலியாக்கள் ரசிக்கக்கூடும். வையாபுரி, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற மூத்த துணை நடிகர்களின் மூக்கையெல்லாம் க்ளோஸப்பில் காட்டினால் என்னத்துக்கு ஆவது ?

அப்புறம் ப்ரொடக்ஷன் யூனிட்டில் யாரோ ஒரு பெண்மணி ஊட்டி குளுரில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு தொண்டையை செருமிக்கொண்டே இருந்திருக்கிறார். அதையும் தவறுதலாக படத்தின் பின்னணி இசையோடு சேர்த்துவிட்டார்கள். அந்த அம்மாளுக்கு யாராவது விக்ஸ் மாத்திரை வாங்கிக் கொடுத்தால் உத்தமம். அடிக்கடி பேய்கள் வேறு டாக்கிங் டாம் குரலில் பேசி கிச்சு கிச்சு மூட்டுகின்றன. கிராபிக்ஸ் குப்பை.

ஸ்ரீ ப்ரியங்காவுக்கு பாந்தமான முகம். விளக்கி வைத்த குத்துவிளக்கு போல இருக்கிறார். வசனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நன்றாக இருக்கின்றன. உதாரணமாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் கே.ஆர்.விஜயா பேசும் வசனம் ஒன்று. தாஜ் நூர் இசையில் டைட்டில் பாடல் சுமார்.

மொக்கையா படம் எடுங்க, வேணாம்ன்னு சொல்லல. ஆனால் புதுசா ஏதாவது மொக்கை படம் எடுங்க'ன்னு தான் சொல்றேன். எத்தனை காலத்துக்கு தான் ஹாண்டட் ஹவுஸ், நியூலி மேரீட் கப்பிள்ஸ் (மேட்டரும் கிடையாது), மனைவியை பேய் பிடிக்கிறது, விபூதி, ருத்ராட்சம் போன்ற தெய்வ சமாச்சாரங்களை கண்டால் பேய்கள் மிரளுவது, சாமியார் உதவியை நாடுவது, ஆன்மிக உபயத்தில் பேயை விரட்டுவது, கடைசியாக இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுக்கும் வகையில் ஒரு மொக்கை க்ளைமாக்ஸ் வைப்பது (ஆனாலும் இரண்டாம் பாகத்துக்கும் உங்களுக்கு ஒரு ஈனா வானா ப்ரொட்யூசர் கிடைப்பார் என்கிற தன்னம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது) போன்ற ஈய பித்தளை ஹாரர் படங்களை எடுப்பீர்கள் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 May 2014

யாமிருக்க பயமே

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சினிமா பார்த்து இரண்டு மாதங்களாகி விட்டது. கடைசியாக பார்த்த படம் தெகிடி. சினிமா பார்க்கலாம் என்று முடிவு செய்தபோது எனக்கு வாய்த்தது கோச்சடையான். டிக்கெட் எடுத்துவிட்டு கொஞ்சம் திகிலோடு காத்திருந்தேன். நல்லவேளையாக அதன் ரிலீஸ் தள்ளிப்போக, பிழைத்துக்கொண்டேன். சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தெய்வாதீனமாக யாமிருக்க பயமே பற்றி நல்லவிதமாக பேசிக்கொண்டார்கள். 

தொலைக்காட்சியில் லேகிய பாணி நிகழ்ச்சி நடத்தியதில் ஒரு தாதாவை ஏமாற்றி மாட்டிக்கொள்கிறார் கிருஷ்ணா. கூடவே அவருடைய காதலி. தாதாவிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசிக்கும்போது கிருஷ்ணாவுக்கு கொள்ளியூர் என்கிற மலை கிராமத்தில் பூர்விக சொத்து இருப்பது தெரிய வருகிறது. தனது காதலியுடன் அங்கே செல்லும் கிருஷ்ணாவுக்கு கருணாகரனும் அவருடைய தங்கை ஓவியாவும் உதவி செய்கிறார்கள். பாழடைந்த பங்களாவாக இருக்கும் பூர்விக சொத்தை செலவு செய்து ரெசார்ட்டாக மாற்றுகிறார். அவருடைய ரெசார்டுக்கு விருந்தினராக வரும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். ஏன் அப்படி இறக்கிறார்கள் ? கிருஷ்ணா மற்றும் சகாக்களுக்கு என்ன ஆயிற்று ? என்பதை காமெடியும் திகிலும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

அதென்ன திகில் + காமெடி வித்தியாசமான காம்போவாக இருக்கிறதே என்று முதலில் யோசித்தேன். படம் பார்த்தபிறகு அதனை உணர்ந்தேன். கிருஷ்ணா பலான மாத்திரை விற்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியுடன் படம் துவங்குகிறது. இதேபோன்ற காட்சியை ஏற்கனவே மிர்ச்சி சிவா நடித்த ஏதோவொரு திரைப்படத்தில் பார்த்த ஞாபகம். நகைச்சுவை என்று சொல்லப்படுகிற காட்சிகளுக்கு சிரிப்பே வரவில்லை. தவிர, இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச சித்தரிப்புகள் வேறு. யாரோ நன்றாக இருப்பதாக கிளப்பிவிட இணையத்தில் எல்லோரும் அதையே வழிமொழிந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன். முதல் மரணம் நிகழும்போது தான் கதை துவங்குகிறது. அதன்பிறகு ஆங்காங்கே தொய்வடைந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். நிறைவடையும்போது ஒரு நல்ல சினிமா பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது.

கிருஷ்ணா தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை நடித்திருக்கிறார் என்பதோடு சரி. ரசிக்கும்படியாக எந்த சிறப்பம்சமும் அவரிடமிருந்து வெளிப்படவில்லை. உதாரணத்திற்கு, இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை எடுத்துக்கொண்டால் விஜய் சேதுபதியின் உடல்மொழிக்காகவே அதனை ரசிக்கலாம். அதுவும் ஹாரர் படம் என்பது ஆளில்லாத கோல் போஸ்ட் இல்லையா ? அடுத்ததாக, ரூபா மஞ்சரி. அம்மையார் நிறைய மேடை நாடகங்களில் நடிப்பார் போல தெரிகிறது. அவ்வளவு செயற்கையாக வசனம் பேசுகிறார். வேறு நடிகையே கிடைக்கவில்லையா டைரக்டர் சார் ?

ஓவியா மட்டும்தான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார். பாந்தமாக ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்த ஓவியா அம்மையார் ஒரேயடியாக அதிரடி கவர்ச்சிக்கு தரையிறங்கிவிட்டார். எப்படி புடவை கட்டுவது ? என்று செளகார்பேட் அம்மாள்களிடம் சிறப்பு வகுப்பு சென்று வந்திருப்பார் போல. ஏன் யாமிருக்க பயமே 3Dயில் தயாரிக்கப்படவில்லை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது எனக்கு. ஒரு காட்சியில் கிருஷ்ணாவின் கனவில் ஓவியா வந்து ஒரு மாதிரியாக கிறக்கமாக நெளிகிறார். யப்பா என்ன ஒரு நளினம் !

நிறைய விஷயங்கள் குறைகளாக தென்படுகின்றன. முதலில், கிட்டத்தட்ட பாதி படத்திற்கு நிறைய மொக்கையான காட்சிகள். ஒருவன் சம்பந்தமே இல்லாமல் கிருஷ்ணா மீது வாந்தி எடுத்துவிட்டு போகிறான். இரண்டாவது, இப்பொழுதெல்லாம் சினிமாவில் லாஜிக் பார்ப்பது என்பதே தெய்வ குற்றமாகிவிட்டது. இருக்கட்டும். ஆனால் குறைந்தபட்சம் கதை வடிவிலாவது ஒரு லாஜிக் இருக்க வேண்டுமல்லவா ? பங்களாவின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரையும் பேய் கொல்கிறது என்றால் கிருஷ்ணாவின் அப்பா என்று சித்தரிக்கப்பட்டிருப்பவர் ஏன் அவ்வாறு கொலையாகவில்லை ? இயக்குநரிடம் சில கேள்விகள் என்று கேட்பவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கக்கூடும். ஒரு காட்சியில் கந்தன், பத்மா தம்பதியர் கொலையுண்டு கிடக்கும்போது கந்தன் மட்டும் ஜாலியாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார். கடைசியாக, பெரிய குறை என்னவென்றால் குடும்பத்துடன் பார்க்கத்தகாத படமாக எடுத்தது. இந்த படத்திற்கு எந்த அறிவாளி யூ / ஏ சான்றிதழ் கொடுத்தது என்று தெரியவில்லை. அதுபோக தினசரிகளில் குடும்பத்தோடு குழந்தைகள் பார்க்க வேண்டிய படம் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். அதைநம்பி சிலர் குடும்பத்தோடு திரையரங்கிற்கு வருகிறார்கள். வேறென்ன, ஓவியாவின் வளைவுகளையும், ரூபாவின் பூரி நகைச்சுவையையும் குடும்பத்தோடு கண்டுகளிக்க வேண்டியது தான்.

எல்லாம் இருந்தும் கடைசி முக்கால் மணிநேரத்தில் நம்மை சிரிக்க வைத்து, ரசிக்க வைத்து எல்லா குறைகளையும் மறக்கடித்து விடுகிறார்கள். யாமிருக்க பயமே அட்டகாசமான படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. அது எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். பலான சமாச்சாரங்களை தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் காணக்கூடிய பொழுதுபோக்கு படம் என்று சொல்லியிருக்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

15 November 2013

வில்லா

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பீட்ஸா பாகம் 2 என்ற பெயருக்கு பின்னாலிருக்கும் அரசியலை சில மாதங்களுக்கு முன்பாகவே கேபிள் சங்கர் மூலமாக அறிந்துக்கொள்ள முடிந்தது. வில்லா படத்திற்கு பீட்ஸாவின் பெயரை சூட்டுவதை கார்த்திக் & தீபன் இருவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தவொரு நல்ல படைப்பாளியாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் வியாபாரி...? அதுதான் நடந்திருக்கிறது. படத்தின் ட்ரைலரில் “இது சீக்வலா...?” என்று ஒரு கதாபாத்திரம் கேட்க, “இல்ல சார், டோட்டலா வேற கதை” என்று கதாநாயகன் வாயிலாக மிக நேர்மையாக ஒப்புக்கொள்கிறார் இயக்குநர். அப்போதே வில்லாவில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நம்பிக்கை பிறந்துவிட்டது. இருப்பினும், வில்லா பார்க்கப் போகிறவர்கள் இரண்டு விஷயங்களை மிகவும் கவனமாக மனதில் கொள்ள வேண்டும்.

1. பீட்ஸா என்பதை சுத்தமாக மறந்துவிடுங்கள். யாராவது பீட்ஸா என்றால் என்னவென்று கேட்டால் கூட சட்னியும், சாம்பாரும் தொட்டு சாப்பிடக்கூடிய வஸ்து என்று சொல்லுமளவிற்கு மறந்துவிடுங்கள்.

2. எல்லா ஹாரர், ஃபேண்டஸி படங்களுக்கும் பொதுவானது. உங்களுக்கு பகுத்தறிவு என்று ஏதாவது இருந்தால் தயவு செய்து அதனை இரண்டு மணிநேரங்களுக்கு செயலிழக்கச் செய்துவிடுங்கள்.

அசோக் தொழில் நட்டம், தந்தையின் உயரிழப்பு ஆகியவற்றைக் கடந்து பாண்டிச்சேரியில் தந்தையின் பெயரிலிருக்கும் ஒரு வில்லாவிற்கு அதனை விற்கும் நோக்கத்துடன் செல்கிறான். அசோக்குடைய காதலி சஞ்சிதாவிற்கு வில்லா மிகவும் பிடித்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் அசோக் சஞ்சிதாவின் முடிவுடன் சமாதானமாக இருக்கும்போது வில்லாவில் ஒரு ரகசிய அறையை கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் ஓவியங்களில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களும், நடக்க இருக்கிற சம்பவங்களும் காணப்படுகின்றன. அதன்பிறகு நடப்பவற்றை பார்வையாளர்களின் கவனத்திற்கே விட்டுவிடுகிறேன்.

முதலில், ஹாரர் என்றால் என்ன என்பதை கொஞ்சம் கவனித்துவிடலாம். ஹாரர் என்ற சொல்லுக்கு அதீத பயம் என்று பொருள். ஒரு ஹாரர் படம் என்பது பார்வையாளர்களுக்கு பயமூட்டுவதாக அமைய வேண்டும். ஆனால் பொதுவாகவே, வேறு சில ஜானர்களையும் ஹாரர் படங்களோடு சேர்த்துவிடும் பழக்கம் விக்கிபீடியா காலம் தொட்டே இருந்துவருகிறது. இது ஒரு புறமிருக்கட்டும் படத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கள் என்றாலே வேலைக்காரி விநோதமாக சிரிப்பது, வாட்ச்மேன் முறைத்து பார்ப்பது, அப்புறம் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் சொல்வாரே அந்த மாதிரியெல்லாம் நடக்கும். வில்லா அத்தகைய படங்களிலிருந்து சற்று விலகியே பயணிக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தினை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அந்த படம் குறுக்கெழுத்து புதிரை நிரப்புவது போல சுவாரஸ்யமானது என்று நண்பர் ஒருவர் விளக்கினார். வில்லாவும் கிட்டத்தட்ட அதுபோல தான். படத்தின் துவக்கத்திலிருந்தே ஆங்காங்கே நமக்கான ஹிண்ட்ஸ் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. அதனை புரிந்துக்கொள்ளும்போது பரவசமடைகிறோம். கதை மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஆனால் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டே நகர்கிறது. அதுதானே கிக் ! ரகசிய அறையில் உள்ள ஓவியங்களை கதாநாயகன் கண்டுபிடித்ததும் நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. சரியாக இடைவேளைக்கு முன்பு ஒரு அதிரடியை காட்ட வேண்டுமென்பதற்காக கிராபிக்ஸில் பொருட்கள் எல்லாம் விழுவதும், பறப்பதுமாக காட்டுகிறார்கள். அங்குதான் துவங்குகிறது வினை, படத்திற்கு !

தமிழ் சினிமா ஹாரர் படங்களில் இன்னொரு பொதுவான விஷயம் உள்ளது. ஆன்மிகம், அறிவியல் இரண்டையும் பெனஞ்சு அடிச்சு ஆன்மிகமும் அறிவியல் தான் தெரியுமோ ? குனிஞ்சு நிமிந்து கோலம் போட்டா பூர்வாங்க உட்கட்டாசனா என்றெல்லாம் க்ளாஸ் எடுக்க துவங்கிவிடுவார்கள். அதுபோக யாராவது ஒரு சாமியாரை வைத்துக்கொண்டு கபடியெல்லாம் ஆடுவார்கள். சமகாலத்தில் சாமியாரை எல்லாம் காட்டினால் போங்கடா நொன்னைகளா என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் ஃபிரெஞ்சு சூனியக்காரன், witchcraft என்றெல்லாம் பாலிஷ்டாக சொல்லி அங்கிருந்து பில்லி, சூனியம், மாந்திரீகம் என்று படிப்படியாக இறங்கி வருகிறார்கள். அதாவது விடுதலைக்கு முன்பு பாண்டிச்சேரியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நரபலியெல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு கொடூரமான ஃபிரெஞ்சு சூனியக்காரன் கட்டிய வில்லா அது. அதனால் அந்த வீடு முழுக்க நெகடிவ் சக்தி நிறைந்து கிடக்கிறது. நெகடிவ் சக்திகளை அழிக்கும் முயற்சியும் தோல்வியில் முடிகிறது. அதன்பிறகு வருவது கிளைமேக்ஸ்.

ஹீரோ அசோக் செல்வனை பார்த்துவிட்டு நிறைய பேரு யாரு ? என்றே கேட்கிறார்கள். சூது கவ்வும் படத்தில் பொட்டி தட்டுபவராக நடித்தாரே என்று சொல்லி விளக்க வேண்டியிருக்கிறது. அதிகம் நடிக்க வாய்ப்பில்லாத கதாபாத்திரம். உறுத்தலில்லாமல் செய்திருக்கிறார். அவதார் முக நாயகி சஞ்சிதாவை மறுபடி பார்க்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு இதுவே கடைசி படமாக அமையக் கடவது.

ஒரு கதாபாத்திரம் பெரும்பாலும் தனிமையில் இருப்பதாக காட்டும்போது பார்வையாளர்களுக்கு கதை சொல்ல ஒரு மீடியம் தேவைப்படுகிறது. அதற்கு அந்த கதாபாத்திரம் யாரிடமாவது போன் பேசுவது போலவோ, டைரி எழுதுவது போலவோ வைப்பார்கள். அது மாதிரியோ என்னவோ ஒரு ஹீரோ நண்பன் கதாபாத்திரம் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே 7G ரெயின்போ காலணி உட்பட சில படங்களில் நடித்தவர். பெயர் ராஜேஷ் என்று நினைக்கிறேன். படத்தை தன் பங்குக்கு எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்திருக்கிறார். அப்புறம் நாசர், சில குறும்பட முகங்கள், ஒரே ஒரு காட்சிக்காக எஸ்.ஜே.சூர்யா !

இயக்குநர் தீபன் தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு நல்வரவு. சில தகவல்களை மேலோட்டமாக தூவிவிட்டு விருப்பமிருந்தால் நீயே தேடி தெரிந்துக்கொள் என்று பார்வையாளர்களின் கையில் விட்டுவிடுவது இவருடைய சிறப்பம்சம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தை நன்றாகவே கடத்தியிருக்கிறார் அதன் பிறகு தான் தடுமாற்றங்கள் துவங்குகின்றன. குறிப்பாக அடுத்த பாகத்திற்கு எப்படி தொடுப்பு கொடுப்பது என்று யோசித்து யோசித்தே அதனை மட்டும் திறம்படச் செய்துவிட்டு இந்த பாகத்தின் முடிவை கோட்டை விட்டிருக்கிறார். அப்புறம், சஞ்சிதாவின் கேரக்டர் என்ன மாதிரியானது என்று சரிவர சொல்லப்படவில்லை. அவருக்கு அந்த வில்லா மீதும் அதன் மர்மங்கள் மீதும் ஆசையா அல்லது பணத்தாசையா அல்லது உண்மையில் அசோக்கை காதலிக்கிறாரா ? என்று கடைசி வரை புரியவே இல்லை.

இறுதியாக இரண்டு விஷயங்கள். ஒன்று, பொதுவாக, ஹாரர் படங்களில் ஒரு முடிச்சு இருக்கும், பின்பு அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு சிக்கல்கள் துவங்கும், இறுதியில் அந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் அல்லது தீர்க்கப்பட்டது போல தோன்றி அடுத்த பாகத்திற்கான தொடுப்பு வைத்து முடிக்கப்படும். ஆனால், வில்லாவில் இறுதிவரை தீர்வு என்பதே இல்லாமலிருப்பது தான் மிகப்பெரிய பலவீனம். ஒருவேளை அதுதான் மாற்று சிந்தனை என்று இயக்குநர் முடிவெடுத்து விட்டாரோ என்னவோ...? அல்லது விஸ்வரூபம் போல அடுத்த பாகத்தையும் சேர்த்துதான் ஒரு கதையாக பார்க்க முடியுமோ என்னவோ...?

இரண்டு, படத்தின் எந்த காட்சிகளும் பயமூட்டுவதாக இல்லை. முதல் பத்தியில் படம் பார்ப்பதற்கு முன் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வலியுறுத்தினேன் அல்லவா...? அதனோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வில்லா ஒரு ஹாரர் படம் கிடையாது. வேண்டுமென்றால், மிஸ்ட்ரி வகையறாவில் வைக்கலாம். அந்த எண்ணத்தோடு வில்லா’வை பார்த்தால் ரசிக்கலாம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதற்காக வரவேற்கலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 March 2013

நான்காம் பிறை 3D

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சில வாரங்களாகவே தினத்தந்தியின் கடைசி பக்கத்தில் கவன ஈர்ப்பு செய்துவந்த படம். டிராகுலா என்கிற மலையாள படத்தின் டப்பிங் என்று தெரிய வந்தது. அதனாலென்ன, இருக்கட்டுமே. 3Dயில் ஹாரர் படம் என்ற ஒன்றே போதும் நான்காம் பிறையை நாடுவதற்கு. ஆனால் என்னிடம் அதனைத் தாண்டியும் இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று மோனல் கஜ்ஜார், இரண்டாவது ஷ்ரதா தாஸ். யாரு பாஸு இவங்க ரெண்டு பேரு என்று தமிழ் சினிமா ரசிகர்கள் சுலபமாக கேட்டுவிடலாம். தெலுங்கு சினிமா பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கக்கூடும். ஐடில்ப்ரைன், ராகலஹரி கேலரி விரும்பிகளாக இருப்பின் நிச்சயமாக தெரிந்திருக்கும். தேவி பாலாவில் எனது ஆஸ்தான முதல் வரிசை, நடு இருக்கையை முன்பதிவு செய்தேன்.



ஹாரர் படங்களுக்கென்று சில கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நான்காம் பிறையில் சொல்லப்பட்டிருக்கிறது. என்ன ஒன்று, அதற்கு கொஞ்சம் ரூமேனிய சாயம் பூசி சொல்லியிருக்கிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், ரத்த காட்டேரிக்கும் வேம்பயருக்கும் உள்ள வேறுபாடு. ஏதோ ஒரு புகழ்பெற்ற, வாயில் நுழையாத பெயரைக் கொண்ட ஆங்கில நாவலிலிருந்து கதை அதிகாரப்பூர்வமாக திருடப்பட்டுள்ளது.

தன்னுடைய காதல் இளவரசி இறந்த சோகத்தில் ரத்த காட்டேரியாக மாறிய ஒரு இளவரசன் தற்போது ருமேனியாவின் பிரான் கேஸில் எனும் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். ஹனிமூனுக்காக அந்த கோட்டைக்கு செல்லும் நாயகன், ரத்த காட்டேரியை விடுவிக்கிறான். விடுவிக்கப்பட்ட ர.கா நாயகனை கொன்று அவருடைய உடலிலேயே புகுந்து இந்தியாவிற்கு வந்து விடுகிறது. வந்த இடத்தில் இறந்துபோன இளவரசி சாயலில் நாயகி மோனல். இளவரசியை அடைய துடிக்கிறது ரத்த காட்டேரி. அதனை கிறிஸ்தவ, இந்துத்துவ ஆன்மிக சக்திகள் அறிவியலோடு இணைந்து முறியடிப்பதே மீதிக்கதை.



ஷ்ரதா தாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா சான்ஸே இல்லை. முதல் பாதியில் ஆன்மிக சக்தியாகவும், மறுபாதியில் தீய சக்தியாகவும் தோன்றும் ஷ்ரதா நம்முடைய சக்தியை வீணடித்துவிடுவாரோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. ஷ்ரதா ஒற்றைக்காலில் நின்றபடி பூஜை செய்யும் காட்சி - அடடா சர்வநிச்சயமாக ஷ்ரதாவின் முன்னோர்கள் சிற்பக்கலை வல்லுனர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஷ்ரதாவின் சேலை விலகியும் விலகாத சமயங்களில் திரைக்கு பக்கவாட்டில் சென்று பார்க்கலாமா என்ற ஆர்வம் மேலிடுகிறது. வெண்ணிற சேலையில் சிங்கிள் ஃப்ளீட் வைத்து ஷ்ரதா நடந்துவரும்போது இன்னும் நான்கைந்து 3D கண்ணாடிகள் கேட்டு வாங்கி மாட்டிக்கொள்ளலாமா என்றெல்லாம் தோன்றுகிறது. மேடம்... நீங்க எப்போ தமிழுக்கு வர்றீங்க ? ஐயம் வெயிட்டிங்...!

மோனல் கஜ்ஜார் குஜராத் குல்கந்து. பெயரில் மட்டுமல்ல தோற்றத்திலும் கூட சிம்ரன் தங்கையை நினைவூட்டுகிறார். கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் வள்ளுவனின் கூற்றுக்கேற்ப மோனல் நம்மை அதிகம் ஈர்க்கவில்லை என்றாலும் ம்ம்ம் அடிக்கடி குட்டை பாவாடை அணிந்தபடி உறங்கி நம் உறக்கத்தை கெடுக்க முயற்சிக்கிறார். சோனா ஒப்ராயும், ப்ரியா நம்பியாரும் ஸ்டார்ட்டர்ஸ்.

நாயகன் பெயர் சுதிர் சுகுமாரனாம் - படுபாவி அனுபவிச்சி நடிச்சிருக்கான். நீளமான தலைமயிர், ஷார்ப் நோஸ், பெண்களை கண்டாலே அலேக்கா தூக்கிட்டு போயிடுறார். திரையரங்கை விட்டு வெளியில் வந்ததும் ஒரு அட்டை ஜெலுசில் வாங்கி விழுங்கிக்கொண்டேன்.

இந்திய ஹாரர் படங்களில் கண்டிப்பாக சாமியாரும், சயின்டிஸ்டும் இடம்பெறுவார்கள். ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் முட்டிக்கொள்ளும். உச்சக்கட்ட காட்சியில் ஆன்மிகமும் உண்மை, அறிவியலும் உண்மை என்று ஈயம் பூசாத மாதிரி பூசி முடிப்பார்கள். நான்காம் பிறையில் சாமியார் நாசர், சயின்டிஸ்ட் பிரபு. நாசர் சட்டையில்லாமல் வலம் வருவதையெல்லாம் 3Dயில் காட்ட வேண்டுமா டைரக்டர் சார் ? 3D படம் என்பதாலோ என்னவோ பிரபு 3D கண்ணாடி போன்ற ஒன்றை கழுத்தில் கட்டி தொங்கவிட்டிருக்கிறார். கூடவே மெக்சிகன் ஹேட், குறுந்தாடி. சில காட்சிகளில் தோன்றினாலும் பெருந்தச்சன் மிளிர்ந்திருக்கிறார்.

கஞ்சா கருப்பு, மனோ பாலா சம்பந்தப்பட்ட காட்சிகள் தமிழுக்காக இணைக்கப்பட்டது போல. முடியல பாஸ் இணைக்காமலே இருந்திருக்கலாம். டப்பிங் படம் என்பது தெரியாமலிருக்க நிறைய வேலைப்பாடுகள் செய்திருக்கிறார்கள். சில காட்சிகளின் ரீ-ஷூட், பிரபு, நாசர் சொந்தக்குரல், காரில் தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர். இருப்பினும் சில நடிகர்களின் முகத்தில் மலையாலக்களை காட்டி கொடுத்துவிடுகிறது.

அடிக்கடி கிராபிக்ஸில் தோன்றும் ரத்த காட்டேரியின் உடல் மொழி ரசிக்க வைக்கிறது. தூக்கி வைத்து கொஞ்சலாமா என்று கூட தோன்றுகிறது. விஷுவல் எபக்ட்ஸை பொறுத்தவரையில் இந்திய சினிமாக்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. பாரிஜாத பூவே பாடலில், பா.விஜயின் வரிகளில் காமத்துப்பால் பொங்குகிறது. படத்தின் தொடக்கத்திலும் சரி, இறுதியிலும் சரி தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை ?

மொத்தத்தில் சிறப்பு ஒளியமைப்பு, கவர்ச்சி, பகடி என்று எந்த நோக்கத்திற்காக பார்த்தாலும் நான்காம் பிறை முதலுக்கு மோசமில்லாமல் திருப்தியளிக்கிறது. தரமான 3D கண்ணாடிகள் தரும் திரையரங்கை நாடுவது நல்லது.


பார்க்க... ரசிக்க...
ஷ்ரதா தாஸ் I
ஷ்ரதா தாஸ் II
மோனல் கஜ்ஜர்
 
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment