அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஒரு மாதத்திற்கு முன்னால் யாரேனும் என்னிடம் வந்து அருவி பார்க்கும்
எண்ணம் இருக்கிறதா ? என்று கேட்டிருந்தால் நான் ஏன்டா நடுராத்திரில
சுடுகாட்டுக்கு போகப் போறேன் என்றுதான் பதில் சொல்லியிருப்பேன். சில படங்கள்
மீது எனக்கு அப்படி ஒரு பயம் உண்டு. ஒரு ஆறேழு மாதங்களுக்கு முன்பு லென்ஸ் என்றொரு
படம் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இணையத்தில் பரவலாக பாராட்டுகளை பெற்றது.
அப்படத்தின் பேசுபொருள் என்னவென்பது படம் பார்க்கும் முன்பே உ.க.நெ.க.யாக
தெரிந்துவிட்டது. அத்துடன் அந்த படத்தை பார்க்க வேண்டுமென நினைப்பையே குழி தோண்டி
புதைத்துவிட்டேன். வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். நான் செக்ஸ் ஸ்கேன்டல்கள்
(குறிப்பாக செலிப்ரிட்டீஸ்) வந்தால் அதனை பார்க்கும் சராசரி ஆசாமி. சில
விஷயங்களில் ரொம்ப லாஜிக்காக யோசித்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும். ஸ்கேன்டல்கள்
அப்படித்தான். பார்க்கிறோம், ரசிக்கிறோம், முடிந்துவிடுகிறது. லென்ஸ் மாதிரியான
படங்களைப் பார்த்தால் தேவையில்லாத குற்றவுணர்ச்சி ஏற்படும். அது உடலுக்கும்
மனதுக்கும் நல்லதில்லை. மேலும் என்னால் ஒரு பக்கம் ஸ்கேண்டல் பார்த்து கையடித்துவிட்டு, இன்னொருபுறம் இப்படம் சமூகத்திற்கு ஒரு பாடம் என்றெல்லாம் கப்ஸா அடிக்க முடியாது. அதனாலேயே லென்ஸை புறக்கணித்துவிட்டேன்.
அதே மாதிரி இந்த அருவி படமும் சில குற்ற உணர்வுகளை தோற்றுவிக்கக்கூடும்
என்று முன்பே கணித்து வைத்திருந்தேன். படம் வெளியாவதற்கு நெருக்கமான சமயத்தில்
எனது எண்ணத்தை மீறி இரண்டு விஷயங்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டின. ஒன்று
படத்தின் போஸ்டர் வடிவமைப்பு. குறிப்பாக, கதாநாயகியின் கண்கள் மட்டும்
நீர்பரப்பின் மேலே தெரியும் போஸ்டர். போஸ்டர்களை வடிவமைத்தவர் யாராக இருந்தாலும்
அவருக்கு என் அன்பு முத்தங்கள். இரண்டாவது, குக்கோட்டி குன்னாட்டி பாடல். பட
ரிலீஸுக்கு முன்பே பாடல் கேட்பது எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை. நண்பர் பத்மநாபனின்
(சென்ற ஒயின்ஷாப்பில் இவருடைய பெயரை பாடி நாகராஜ் என்று எழுதியதை அவர் அவ்வளவாக
ரசிக்கவில்லை. ஏனென்றால் அவருடைய வீடு இருப்பது கேளம்பாக்கத்தில். மேலும் இப்போதுதான்
ஜிம் போக ஆரம்பித்திருக்கிறார் என்பதால் பாடி அவ்வளவாக டெவலப் ஆகவில்லை) ப்ளே
லிஸ்டில் தான் பாடலைக் கேட்டேன். கேட்ட முதல் முறையே பிடித்துவிட்டது. அவரிடம்
எத்தனை முறை ரிப்பீட் கேட்பது என்று சங்கடப்பட்டு அந்த பயணம் முடியும்வரை
பொறுத்துக்கொண்டேன். அதன்பிறகு அப்பாடலின் சில பகுதிகளை நான் எத்தனை முறை கேட்டேன்
என்று கணக்கே இல்லை. குறிப்பாக பாடலில் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு வரும்
வேதாந்த் பரத்வாஜின் குரல் அபாரம் (ஒரு கண்ணாலே சூரியனே, மறு கண்ணாலே மாமழையே).
அந்த ஆண் குரலோ அல்லது இசையோ அல்லது அந்த வரிகளோ அல்லது அந்த வரிகள் வரும்போது
கர்வமாக தன் மகளை தூக்கிக் கொண்டு வரும் தந்தையின் பிம்பமோ ஏதோ ஒன்று என்னை கண்
கலங்க வைத்துவிட்டது. இப்படத்திற்கு இசையமைத்த வேதாந்த் பரத்வாஜ் – பிந்துமாலினி
தம்பதியர் இதற்கு முன் ஜிங்கிள்ஸ் மட்டும் செய்துக் கொண்டிருந்ததாகவும், இயக்குநர்
அவர்களை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதாகவும்
பத்மநாபன் சொன்னார். அதனாலோ என்னவோ இவர்கள் திரையிசையின் வார்ப்புருவில் (பல்லவி,
சரணம் 1, சரணம் 2) பொருந்தாமல் சுதந்திரமாக இசையமைத்திருக்கிறார்கள். குக்கோட்டி
குன்னாட்டி பாடலை எடுத்துக்கொண்டாலே தனித்தனியாக செய்யப்பட்ட கைவினை அலங்காரப் பொருட்களை
மாலையாக கோர்த்தது போல அத்தனை பிரமாதமாக வந்திருக்கிறது.
சனிக்கிழமை மாலை எஸ்கேப்பில் படம் பார்த்தேன். படத்தின் துவக்கப்
பாடலே நம்முடைய ஃபேவரைட்டான குக்கோட்டி குன்னாட்டி தான் ! சத்யம் / எஸ்கேப்
பாரம்பரியத்தின்படி நிறைய மக்கள் படம் துவங்கி பத்து நிமிடங்களுக்குப் பிறகு வதக்
வதக்கென வந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீங்கள்
ஒரு உன்னத அனுபவத்தை தவற விட்டுவிட்டீர்கள்.
நிற்க. ஸ்பாய்லர்களை வெறுப்பவர்கள் இத்துடன் நிறுத்திக்கொண்டு வேறு
உருப்படியான வேலைகளை பார்க்கலாம். இனிவரும் பத்திகள் ஏற்கனவே படம்
பார்த்தவர்களுக்கும், படம் பார்க்கலாமா வேணாமான்னு அய்யாவுக்கு ஒரு நல்ல சீட்டா
எடுத்துப் போடு என்று கிளி ஜோசியம் கேட்பவர்களுக்கு மட்டும்.
துவக்கப் பாடலில் அருவியின் குழந்தைப் பருவம் காண்பிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அவரது முன்கதை சுருக்கமாக காட்டப்படுகிறது. பள்ளி, கல்லூரி,
பணிபுரியும் படலம். எவ்வளவு சுருக்கமாக எத்தனை விஷயங்களைச் சொல்ல முடியுமோ அத்தனையையும்
கச்சிதமாக சொல்லி விடுகிறார்கள். அதன்பிறகு கதை வேறொரு தளத்திற்கு செல்கிறது.
இத்தனை நாட்கள் பிரஸ் ஷோ பார்த்துப் பார்த்து புகழ்ந்தவர்கள் பார்த்த அதே அருவியைத்
தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும்
நடந்துவிட்டதா என்று சந்தேகிக்கும் அளவிற்கு என்னென்னவோ தமாஷ் செய்கிறார்கள். என்னாங்கடா
என்றுதான் உட்கார்ந்திருந்தேன். இப்படத்தின் கடைசி இருபது நிமிடங்களை
நீக்கிவிட்டால் இது வெகுசுமாரான படம். கடைசியில் குன்ஸாகப் போய் ஒரு ரூட்டைப்
பிடித்து, குழந்தை பிறந்தால் அருவி என்று பெயர் சூட்டுங்கள் என்றெல்லாம்
உளறிக்கொட்டி ஒரு வழியாக படத்தை ஷேப்புக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
மற்ற விஷயங்களை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். இயக்குநரிடம் எனக்கு
ஒரேயொரு கேள்வி. டீசரில் காண்பித்த விஷயங்களுக்கும் படத்திற்கும் ஏதாவது சம்பந்தம்
இருக்கிறதா அய்யா ? (டுஸ்ட் வைக்கிறாராம்). இதிலே ஒரு காட்சியில் விசாரணை அதிகாரி
அருவியிடம் மேல கை வைக்கக்கூடாதுன்னு பார்க்கிறேன் என்று மிரட்டும்
தொனியில் சொல்கிறார். அதற்கு அருவி கை வை பார்ப்போம் என்கிறார். உண்மையைச்
சொல்லுங்கள் டீசரில் சென்சேஷன் கிளப்ப வேண்டும் என்றுதானே இப்படி ஒரு சம்பந்தமே
இல்லாத காட்சியைக் கொண்டு வந்து உள்ளே சொருகினீர்கள் ?
போலவே மசமசவென போகும் திரைக்கதைக்கு ஒரு இடைவேளை ட்விஸ்ட்
தேவைப்படுகிறது. உடனே வைக்கிறார் ஒரு நீளமான வசனம். இப்படத்தின் இயக்குநருக்கு
நிறைய விஷயங்களின் மீது கோபம் இருக்கிறது. பணம் சம்பாதிப்பவர்கள் மீது, குழந்தைகளை
இங்க்லீஷ் மீடியம் ஸ்கூலில் சேர்ப்பவர்கள் மீது, சினிமா ஷாப்பிங் மால் செல்பவர்கள்
மீது, குப்பைப் படம் எடுக்கும் இயக்குநர்களின் மீது, அதனைப் குடும்பத்துடன் சென்று
பார்ப்பவர்கள் மீது, TRP TRP என்று அலையும் மீடியாக்கள் மீது, லக்ஷ்மி
ராமகிருஷ்ணனின் மீது, (ஒருவேளை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கேஸ் போட்டு அவரை
கிண்டலடிக்கும் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டால் மீதியிருக்கும் வெறும்
முப்பத்தைந்து நிமிட படத்தை வைத்து என்ன செய்வீர்கள் ?), நடிகர் விஜய் மீது,
இரண்டரை நிமிடத்தை நிரப்புவதற்காக வாயில் வந்ததை உளறிவிட்டு வீரம் படத்திலிருந்து
பாடலை ஒலிபரப்பும் பண்பலைகளின் மீது, மொத்தமாக நுகர்வு கலாசாரத்தின் மீது,
மருத்துவ வணிகத்தின் மீது இப்படி பட்டியல் நீள்கிறது. கூடவே இலங்கைத் தமிழர்
படுகொலை, மீனவர் பிரச்சனை என்று இஷ்டத்துக்கு வாய் வைக்கிறார். குறிப்பாக 120
ரூபாய்க்கு குப்பைப் படம் என்பதை திரும்பத் திரும்ப சொல்கிறார். பாவம், மனிதர்
மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். மன்னிக்கவும். இதுபோல படம் பார்க்க வந்த
பார்வையாளர்களின் மீதே குற்றம் சாட்டி, நீங்கள்லாம் இப்படி ஒரு வாழ்க்கை
வாழுறதுக்கு பதிலா எயிட்ஸ் வந்து சாகலாம் என்று சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை.
நுகர்வு கலாசாரத்திற்கெதிரான இந்த நீண்ட வசனத்தைப் பார்த்துவிட்டு ‘தெறி
இன்டர்வெல் ப்ளாக்’ என்று சிலாகிப்பவர்கள் தங்கள் நிஜவாழ்க்கையிலும் நுகர்வு
கலாசாரத்திற்கு எதிராக இருந்தால் நான் அகமகிழ்வேன். இயக்குநருக்கு நுகர்வு கலாசாரத்தின்
மீது கோபமென்றால் சினிமாவே நுகர்வு கலாசாரம் தானே. இந்த பிரஸ் மீட், ப்ரோமோ
எல்லாம் வைத்து பாரு, பாரு, பாரு என்று ஏன் தாலியறுக்கிறீர்கள்.
கிட்டத்தட்ட படம் முடிவடையும் தருவாயில் அது என்ன சொல்ல நினைத்ததோ
அந்த திசையை நோக்கி பயணிக்கிறது. ஏறத்தாழ ஒரு ஆவணப்பட தொனியில் சென்று
முடிவடைகிறது. அருவி சென்றடையும் புள்ளியிலிருந்து பார்த்தால் ஒரு நல்ல ஃபீல்
குட் படம். ஆனால் அதனை உணர வேண்டுமென்றால் படத்திற்கு கொடுக்கப்பட்ட சீன், பேசிய
பேச்சுகள், வாய் எல்லாம் மறந்துவிட்டுதான் பார்க்க வேண்டும். மற்றபடி இப்படத்தை
ஏன் பெரும்பாலோனோர் சிலாகிக்கிறார்கள் என்பதற்கு உளவியல் காரணிகளும், இன்னபிற
காரணிகளும் இருக்கின்றன. விழுந்துவிடாதீர்கள்.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
2 comments:
நல்லபடம்ன்னு சொன்னால் ஏனோ நான் பார்ப்பதில்லை...
அருவியும் அந்த லிஸ்டில்தான் இருந்தது...
உங்கள் விமர்சனம் நன்று.
பதிவு அருமை...வாழ்த்துகள் தம்பி....
Post a Comment