Showing posts with label ஒளவையார். Show all posts
Showing posts with label ஒளவையார். Show all posts

25 June 2013

கடையேழு வள்ளல்கள் – அதியமான்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

பண்டைய தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரே முடியுடை வேந்தர்கள். அவர்களைத் தவிர சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் மூவேந்தர்களிடம் பரிசாகப் பெற்ற நாடுகளை ஆண்ட அரசர்களும், அரிய ஆற்றல் கொண்டு தாமே புதிதாக நாடுகோலியோ, வேறு நாட்டைக் கைப்பற்றி ஆண்ட வேந்தர்களும் வீற்றிருந்தார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சேரநாட்டில் அதியை எனும் சிற்றூர் இருந்தது. அவ்வூரை ‘அஞ்சி’ என்பவன் ஆண்டு வந்தான். அவனை எழினி என்றும் கூறுவர். அக்காலத்தில் சேர நாட்டை சூழ்ந்து, சிறு நாடுகள் பல இருந்தன. அவற்றுள் குதிரைமலைக்கு அருகே அமைந்துள்ள தகடூரும் ஒன்று. அச்சமயம் தகடூர் நாட்டை ஆண்டுவந்த சிற்றரசன் இறந்துவிட்டான். உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அமைதியகன்றது. தாமே அரசன் என்று ஆளாளுக்கு பறை சாற்றினர். தகவல் எழினிக்கு சென்றடைந்து, அவன் சேனைகளுடன் தகடூரை அடைந்தான். கலகத்தலைவர்களை அடக்கினான். அடங்காதவர்களைக் கொன்றான். எழினி அந்நாட்டிற்கு முடிமன்னன் ஆனான். எழினி, அதியை என்ற ஊரிலிருந்து வந்திருந்தமையால் தகடூர் மக்கள் அவனை அதியமான் என்று வழங்கினர்.

அதியமான் உடல்நலம், தேகப்பயிற்சியில் ஈடுபாடு கொண்டவன் என்ற செய்தி புறநானூற்றில் பதியப்பட்டுள்ளது. விற்பயிற்சி, வாட்பயிற்சி பயின்றிருந்தான். நல்ல பலசாலியாகவும், வீரனாகவும் விளங்கினான்.

அதியமானின் உடல் வலிமை பற்றி அவ்வையார் பாடியது :-

‘போற்றுமின் மறவீர் ! சாற்றதும் நும்மை
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தான்படு சின்னீர் களிறுஅட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது
இளைமன் என்றிகழின் பெறலரிது ஆடே !

(புறம் – 104)

விளக்கம்: அதியமான் முழவெனப் பருத்த தோள்களை உடையவன். எட்டுத் தேர்களை ஒரே நாளில் செய்ய வல்ல ஒருவர், முப்பது நாட்கள் முயன்று திட்டமிட்டு ஒரு திண்ணிய தேர்க்காலை மட்டும் செய்தால் அது எந்த அளவிற்கு வலிமை கொண்டதாக இருக்குமோ அதுபோன்று உரமும் உருவமும் கொண்டவன். போர் என்றால் காலம், இடம், மாற்றார் வலிமை போன்றவற்றை நன்கு அறிந்து செயல்படும் திறன் பெற்றவன். ஆற்றல் மிகுந்த கடாவால் போகமுடியாத துறையும் உளதோ ? அதுபோல நீ களம் புகுந்தால் எதிர்ப்பாரும் இருக்கிறார்களா ?

எல்லோரிடத்தும் சாலப்பரிவோடு நடந்துக்கொள்ளும் நற்பண்பு அதியமானிடம் இயல்பிலேயே அமைந்திருந்தது. அதனால் அவன் குடிமக்களிடமும் மிக்க அன்புடன் நடந்துக்கொண்டான். அவனுடைய ஆட்சியில் மக்கள் அச்சமற்று களிப்புற்று வாழ்ந்தனர். தன்னிடத்தில் யார் எச்சமயத்தில் வந்து எப்பொருள் கேட்பினும் இல்லை என்றுரையாமல் ஈந்துவந்தான். அவன் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னிடம் வரும் புலவர் பெருமக்களிடம் அளவிலா அன்புடன் அளவளாவி வரைவிலாப் பொருளளிப்பான். அப்புலவர்களும் அவனை பாடி அவனுடைய புகழை நாடெங்கும் பரப்பினர். அதியமான் சிற்றரசனாயினும் அவனுடைய அரசியல் முறையை பேரரசர்களும் கண்டு வியந்தனர். எனினும் நாடெங்கும் பரவியிருந்த அதியமானின் புகழ் அவர்களை பொறாமை கொள்ள வைத்தது.

அவ்வையார் என்ற சரித்திரப்புகழ் வாய்ந்த மூதாட்டியார் அதியமானின் காலத்தில் தான் வாழ்ந்து வந்தார். அவர் அதியமானின் பெருங்குணத்தை அறிந்து, காண விழைந்தார். தகடூரை நோக்கி பயணித்தார். வாகன வசதிகளற்ற காலம். எங்கே செல்வதென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். செல்வந்தர்களிடம் மட்டும் மாட்டுவண்டி இருக்கும். அவ்வையிடம் அது இல்லாததால் நடந்தே தகடூரை சென்றடைந்தார். அதியமான் ஒவ்வொரு வேளை புசிப்பதற்கு முன்பும் தன் மாளிகைக்கு வெளியே வந்து ஏழை எளிய மக்கள் யாராவது பசியோடு இருக்கிறார்களா என்று சுற்றிப்பார்ப்பது வழக்கம். அப்படி ஒருநாள் பார்க்கும்போது அவனுடைய கண்களுக்கு அவ்வையாரின் வருகை தென்பட்டது. அதுதான் அவ்வையாருக்கும் அதியமானுக்கும் நிகழ்ந்த முதல் சந்திப்பு. எவர் தன்னிடம் வரினும் வரவேற்று உபசரிக்கும் உத்தம குணம் வாய்த்த அதியமான், வந்திருப்பது அவ்வையார் என்பதை அறியாமலே, அவருக்கு உணவளித்து, உபசரித்து, உண்ட களைப்பில் உறங்க இடம்கொடுத்துவிட்டு பின் தானும் புசிக்கச் சென்றான். பின்னர், அவ்வையாரை அறிந்துக்கொண்டபின் அவரை அங்கேயே தங்கிவிடும்படி அதியமான் வலியுறுத்தினான். அதியமானின் விருந்தோம்பும் பண்பு அவ்வையை கவர்ந்துவிட்டது. ஆயினும் அதியமானின் பெருங்குணத்தை மென்மேலும் பரப்ப வேண்டும் என்று விரும்பிய அவ்வை, அடிக்கடி வருவதாக கூறிவிட்டு அதியமானிடம் இருந்து புறப்பட்டார்.

கூறியதை போலவே அவ்வையார் பலநாட்கள் பரிவுடன் வந்து அதியமானிடம் தங்கியிருந்தார். அதனைப் பற்றிய புறநானூற்றுப் பாடல் :-

ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விரும்பினன் மாதோ;
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே;
யருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா, வாழ்கவன்றாளே !

(புறம் - 101)

விளக்கம்: அழகிய பூனணிந்த யானையையும் ஒழுங்காயமைந்த தேரையும் உடைய அதியமானிடம் யாம் ஒருநாளன்று, இருநாளன்று, பலநாள் பலரோடு சென்று தங்கினோம். அங்ஙனம் சென்றபோதும் அவன் எம்மை முதல்நாள் கண்டபோது காட்டிய அன்பையே என்றும் காட்டி உபசரித்தான். அதியமானிடம் பரிசில் பெறும் காலம் நீண்டாலும் அது யானை தன் தந்தங்களுக்கிடையே வைத்துள்ள கவளம் போன்று தம் கைக்குரிய தப்பாததாகும். ஆகையால், அதனை உண்ண விரும்பும் நெஞ்சே நீ வருந்த வேண்டாம். அவன் தாள் வாழ்க !

ஒருமுறை மூதறிஞர் ஒருவர் அதியமானை நாடி வந்திருந்தார். அதியமானும் வழக்கம்போல அவர் மனம் மகிழும்படி உபசரித்தார். அதியமானின் உபசரிப்பில் மயங்கிய மூதறிஞர் அவருக்கு குதிரைமலை ரகசியத்தை கூறினார். அதாவது, குதிரைமலையின் மீது பெரிய சரிந்த பிளவு ஒன்று உண்டு. அப்பிளவில் ஒரு நெல்லிமரம் உண்டு. அதில் பல்லாண்டுக்கொருமுறை இரண்டொரு கனிகள் உண்டாகும். அம்மரத்திற்கு அருகில் அத்தனை எளிதாக யாரும் செல்ல முடியாது. அரிய பெரிய முயற்சி எடுத்து அம்மரத்திலிருந்து நெல்லிக்கனியை பறித்து உண்டால் நீண்ட நாட்கள் வாழலாம். நீ தக்கபடி முயன்றால் அதனைப் பெறுவாய் என்று அதியமானிடம் கூறிவிட்டுச் சென்றார். அதியமான் அன்றிலிருந்து அந்த நெல்லிமரத்தை கண்டுபிடிக்க முயன்றான். ஒருநாள் ஆபத்தான பெரும்பிளவை கண்டான். அச்சரிவில் தவறி விழுந்தவன் பாதாளம் புக்கொழிவான். இடையிடையே முட்புதர்கள் கொண்ட அப்பிளவில் சிக்குண்டால் உடல் சல்லடைக்கண்கள் ஆகிவிடும். அப்பிளவில் தன் ஏவலாளரை இயக்கினால் ஆபத்து என்றெண்ணிய அதியமான் தானே பக்குவமாய் இறங்கி மரத்திலிருந்த ஒரே கனியை பறித்துக்கொண்டு தனது மாளிகையை நோக்கி திரும்பினான்.

வழக்கப்படி அன்று அதியமானைக் காண வந்திருந்த அவ்வையார், அதியமானின் வருகைக்காக காத்திருந்தார். அச்சமயம் அங்கே வந்த அதியமான் முகமலர்ந்து இன்சொல் பகர்ந்தான். அவ்வையாருடைய முகவாட்டத்தைக் கண்டான். அவர் பசியினால் களைத்திருக்கிறார் என்று உணர்ந்துக்கொண்டான். உடனே தான் கொண்டுவந்த நெல்லிக்கனியை அவ்வையிடம் கொடுத்து உண்ணும்படி வேண்டினான். அவ்வையாரும் அவ்வண்ணமே உண்டு களைப்பையோட்டினார். கனியின் சுவையை வியந்த அவ்வை அதியமானிடம் அதைப்பற்றி வினவினார். அதியமான் அக்கனியின் வரலாற்றைக் கூறினான். அக்கனியை தான் உண்ணுவதைக் காட்டிலும் அவ்வை உண்டால் அது அவர் உலகிற்கு பல நற்போதனைகளை செய்ய உதவும் என்று உரைத்தான். அதியமானின் மேன்மை கண்டு அவ்வையார் உவகையுற்றார்.

அதுகுறித்து அவ்வையார் பாடிய புறநானூற்றுப் பாடல் :-

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான் !
போரடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும ! நீயே தொன்னிலைப்
பெருமலை விடாகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே

(புறம் - 91)

விளக்கம்: வெற்றி தரும் கூரிய வாளேந்திப் போர்க்களத்தில் பகைவர் இறந்துபட வெட்டி வீழ்த்தி, கழலணிந்த வீரனே ! வீரவளை அணிந்த பெரிய கையினையும் மிகுந்த ஆரவாரத்தைச் செய்யும் முரசினையும் உடைய அதியர்களுக்குத் தலைவனே ! பகைவரை வெல்லும் வீரச்செல்வத்தை விளக்கும் பொன்னால் செய்யப்பட்ட வாகைப்பூ மாலையை சூடிய அஞ்சியே ! தொன்றுதொட்டு புகழப்பட்டு வரும் நன்னிலைமையை உடைய பெரிய மலையின்மேல் உள்ள ஆழ்ந்த பிளவில் வளர்ந்த சிறிய இலைகளையுடைய கரிய நெல்லிமரத்தினது இனிய கனியை, மீண்டும் அத்தகைய கனியைக் பெறுவதற்கு அரிதென்று கருதாமலும், அதனால் பெறும் பெரும்பயனை அரிதென்று கருதாமலும், அதன் பெரும்பயனை எமக்கு முன்னதாகக் கூறாமலும் உன்னுள்ளத்துள் அடக்கிக்கொண்டு எமது சாதலை ஒழிக்க அளித்தாய். ஆதலால் பெருமையோனே, நீ பால்போன்ற வெண்மையான பிறைமதியையும், நெற்றிக்கு அழகாக பொலிவுறும் திருமுடியினையும், நீலமணி போலும் கரிய திருக்கண்டத்தையும் உடைய ஒப்பற்ற பரமசிவனைப் போல நிலைபெறுவாயாக.

அதியமான், அவ்வையாருக்கு அருங்கனியளித்த செய்தி நாடெங்கும் பரவியது. அது மூவேந்தர்களுக்கும் எட்டிற்று. அதனால், அவர்கள் முன்னையினும் மிகுந்த பொறாமையுற்றார்கள். அவர்கள் கூடி அதியமானை ஒழிக்க முடிவுசெய்து, அதற்கேற்ற நேரம் கருதி காத்திருந்தார்கள். குறுநில மன்னர்கள் சிலரும் அதியமானிடம் பொறாமை கொண்டிருந்தார்கள். அவர்களில் கடையேழு வள்ளல்களில் இன்னொருவரான மலையமான் திருமுடிக்காரியும் ஒருவர். காரி, அதியமானுக்கு எதிராக வேற்றரசரிடம் மித்திரபேதம் செய்துவந்தான். அச்செயலை அறிந்த அதியமான் தன் சேனைகளை மலையமாநாட்டுக்கு அனுப்பி பயமுறுத்தி அவன் கொட்டத்தை அடக்கினான். மேலும், காஞ்சிமாபுரியை ஆண்டுவந்த தொண்டைமான் என்கிற வேந்தன் அதியமானிடம் மாற்றெண்ணம் கொண்டு போர்புரியக் கருதினான். அதனை அறிந்த அதியமான் அவ்வையாரை தூது அனுப்பி தொண்டைமானின் பிள்ளைப்புத்தியை போதித்து போக்கும்படி பணித்தான். தொண்டைமானும் அவ்வையாரின் வேண்டுகோளை அங்ஙனமே ஆகுக என்று ஏற்றுக்கொண்டான்.

அடுத்த ஆபத்து இரும்பொறை வடிவத்தில் வந்தது. அப்போது சேரநாட்டை பெருஞ்சேரல் இரும்பொறை என்ற பேரரசன் ஆண்டுவந்தான். அதியமானுக்கு அவ்வை போல இரும்பொறைக்கு அரிசில்கிழார் என்னும் புலவர் பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தை பாடியிருக்கிறார், தம் முரசுக்கட்டிலில் களைத்து உறங்கிக்கொண்டிருந்த மோசிக்கீரனார் எனும் செந்நாப்புலவருக்கு (அப்படி உறங்குபவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி மரண தண்டனை) அருகில் நின்று சாமரம் வீசிய பெருமை இரும்பொறைக்கு உண்டு. இரும்பொறை அக்காலத்தில் சோழனையும் பாண்டியனையும் வென்றவன். மற்றொரு வள்ளலான வல்வில் ஓரியை வென்று கொல்லிமலையைக் கொண்டவன். அவனுடைய ஆட்சி எல்லை தகடூரை நெருங்கிவிடவே அதியமானுக்கு அச்சம் துளிர்விட ஆரம்பித்தது. அதியமான் இரும்பொறையை எதிர்க்க தயாரானான். அப்போது அரிசில்கிழார் அதியமானுடைய நலன்கருதி, இரும்பொறையிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அதியமானிடம் சென்று போரிடாமல் இருப்பதே அவனுக்கும் தகடூர் மக்களுக்கும் நல்லது என்று எடுத்துரைத்தான். அவருடைய அறிவுரையை அதியமான் மறுத்துவிட்டான். அரிசில்கிழார் சென்ற தூது அற்பத்தனமாகி விட்டதால் பெருஞ்சினம் கொண்ட இரும்பொறை தகடூர் மீது போர் தொடுத்தான்.

ஒரு சமயம் அதியமானால் பாதிக்கப்பட்ட மலையமான் திருமுடிக்காரியும் தன் படைகளுடன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் இணைந்துக்கொண்டான். இரு படைகள் இணைந்து போரிட்டதால் அதியமான் படையில் சேதம் அதிகரிக்க ஆரம்பித்தது. முடிவில் அதியமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் வாள் பாய்ந்து வீரமரணம் அடைந்தான். தன்னால் கொலையுண்ட அதியமான் நெடுமானஞ்சிக்கு இறுதியாகச் செய்யும் கடன்களை சேரமானே முன்னின்று செய்தான். உண்மையிலேயே வீரத்திலும் ஈரத்திலும் சிறந்த அதியமானின் மனம் எதிரியே ஆனாலும் அவனது ஏற்றமிகு ஆற்றலைப் போற்றும் மாற்றுக்குறையாப் பண்பாளனான சேரமானின் நெஞ்சில் கழிவிரக்கத்தைச் சுரக்கச் செய்தது போலும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment