அன்புள்ள வலைப்பூவிற்கு,
2007க்கு முன்பு “அங்கவை சங்கவை” பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.
எதிர்மறை விளம்பரம் கொடுத்தேனும் அங்கவை சங்கவையை தமிழர்களுக்கு அடையாளம்
காட்டியமைக்காக இயக்குநர் ஷங்கருக்கு ஒரு நன்றி சொல்லிக்கொள்ளலாம். கடையேழு வள்ளல்களில்
ஒருவரான பாரிவேளின் மகள்கள் தான் – அங்கவை & சங்கவை. அவர்களுடைய பெயர்
அங்கவை – சங்கவை என்பதற்கு சங்கநூல்களில் ஆதாரம் ஏதுமில்லை. எனினும், பிற்கால
வரலாற்று ஆய்வாளர்கள் காரணமாக அங்கவை, சங்கவை என்ற பெயர் நிலைத்துவிட்டது. அங்கவை,
சங்கவை இருவரும் அன்பும், அழகும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்றிருந்தனர். அவ்விருவரும்
இரட்டையராய்ப் பிறந்தனரோ என்று ஐயுறும்படி அங்க அழகில் ஒற்றுமை உடையவர்களாய்
இருந்தனர்.
![]() |
சித்தரிக்கப்பட்ட படம் |
கடையேழு வள்ளல்கள் சீரிஸின் கடந்த பதிவின் இறுதியிலிருந்து சில வரிகள்
:- பாரிவேளை சூழ்ச்சியின் மூலம் கொல்ல முடிவெடுத்த மூவேந்தர்கள் ஒரு பெளர்ணமி நாளில் முதிய புலவர்போல வேடம்
பூண்டனர். ஆளுக்கோர் யாழினைக் கையிலேந்தி பாரியை அணுகினர். பாரி அவர்களை அன்புடன்
வரவேற்று தக்க ஆசனங்களிட்டு அமர்த்தி வழக்கம்போல் நல்லுரை பல புகன்றான். அப்போது
மூவேந்தர்கள் சால அன்புடையவர்கள் போல நடித்து பாரியை மிகவும் புகழ்ந்து பாடி, அவன்
உயிரையே தமக்குப் பரிசிலாகத் தரவேண்டினார்கள். அதனைக் கேட்ட பாரி உள்ளங்கொள்ளா
மகிழ்ச்சிகொண்டு அவர்கள் வயமாகி மரணம் எய்தினான். சிலர் மேற்கூறிய வரிகளில்
மூவேந்தர்கள் வேடமணிந்து சென்றது வரைக்கும் தான் உண்மை என்றும் அவர்கள் பாரியின்
உயிரை பரிசிலாக கேட்காமல் அவன் அசந்த சமயத்தில் கூர்வாளை அவன்மீது பாய்ச்சினார்கள்
என்றும் கூறுகின்றனர். எப்படியோ மூவேந்தர்களின் வஞ்சத்திற்கு பாரி
பலியாகிவிட்டான். பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் தவித்தது.
தங்களுடைய தந்தையின் மரணத்தில் அங்கவையும் சங்கவையும் வேதனையால்
துடித்தனர். அவர்களுடன் ஊர்மக்களும் ஒன்றுகூடி ஓலமிட்டனர். செய்தியறிந்து விரைந்து
வந்த கபிலர் கதறினார். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ ?
தன்னைத் தேற்றிக்கொண்ட கபிலர், பாரிமகளிரை ஆறுதல்படுத்தினர். அத்துடன் நில்லாமல்
பருவம் எய்திய அந்நங்கைகளுக்கு மணம் முடித்துவைக்கும் பொறுப்பையும்
ஏற்றுக்கொண்டார். பறம்புமலையிடம் பிரியா விடைபெற்றுப் புறப்பட்டார் கபிலர்
பாரிமகளிருடன். அன்று, பாரி கொலையுண்ட முன்னாள் போலவே நிலவு ஒளி
வீசிக்கொண்டிருந்தது. பாரிமகளிருக்கு தந்தையின் நினைவு மேலோங்கியது. அப்போது
அவர்கள் பாடிய பாடல் :-
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்வென்றெறி முரசின் வேந்தர்எம்குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !(புறம் – 112)விளக்கம்: மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்த அந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்.
பாரிவேள் முல்லைக்கொடிக்கு
கொழுக்கொம்பாக தேரை கொடுத்தது போல அவ்விரண்டு பெண்கொடிகளுக்கு கொழுக்கொம்பாக
தக்கார் யாரையேனும் கண்டு ஒப்படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தார்
கபிலர். தனக்குத் தெரிந்த கோமான்களையெல்லாம் எண்ணிப்பார்த்தார். கண்மணி போன்ற
பெண்மணிகளுக்கு ஏற்ற பொன்மனச் செம்மல்களாக இருக்க வேண்டுமே ! அதன்படி அவருக்கு
முதலில் நினைவுக்கு வந்தவன் விச்சிமலைக்கு அதிபதியான விச்சிகோன் என்ற சிற்றரசன். கபிலர்
பாரிமகளிருடன் அவனிடம் சென்றார். அவனை முறைப்படி வாழ்த்தி, அங்கவை சங்கவையை
அறிமுகப்படுத்தி அவர்களை மணந்துகொள்ளுமாறு வேண்டினார். எனினும் மூவேந்தர்கள் பாரி
மகளிரை விரும்பிப் போர் செய்ததை அறிந்தவனான விச்சிகோன் அவர்களின் பகைமைக்கு அஞ்சி
மறுத்துவிட்டான்.
அடுத்து யாரை நாடுவது ? ஹொய்சள
வம்சத்தில் பிறந்தவனும் ‘வேள் எவ்வி’ என்ற வள்ளலின் வழி வந்தவனுமாகிய இருங்கோவேள்
என்ற குறுநில மன்னன் இன்னும் மணமாகாதவன் என்று தெரிந்தது. உடனே புறப்பட்டார்.
இருங்கோவேளின் அரண்மனையை அடைந்த கபிலர் பாரியின் சிறப்பைக்கூறி அவரது மகளிரை
மணந்து கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அவனோ, “எங்கோ பிறந்த பெண்களை ஒரு தொடர்பும்
இல்லாத நீர்தர நான் மணந்து கொள்வதா ?” என்று எடுத்தெறிந்து பேசினான். இருங்கோவேளின்
வார்த்தைகள் கபிலருக்கு வலியூட்டியது, அவருக்கு உள்ளம் சலித்துவிட்டது. திருமண
பாரத்தை யாரிடமாவது ஒப்புவித்துவிட அவருடைய தன்மான உணர்வு தவித்தது. யாரிடம்
விடுவது ?
அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அவர்களை
அன்போடு உபசரித்து வந்த அந்தணரான முதியவரிடமே ஒப்படைத்தால் என்ன என்று தோன்றியது.
தனக்குள்ள நெடுநாள் விருப்பமாகிய யாத்திரை இருபெண்களால் தடைபடுவதாகவும், எனவே
அவர்களை அம்முதியவரிடம் விட்டுச்செல்ல விரும்புவதாகவும் நயம்படக் கூறினார். முதியவர்
ஒப்புக்கொண்டார். ஆறுதல் கொண்ட கபிலர் அங்கிருந்து புறப்பட்டு செல்வக்கடுங்கோ
வாழியாதன் என்ற ஈகையிற்சிறந்த சேர மன்னனிடம் பழமரம் நாடும் பறவைபோல்
சென்றடைந்தார். சேரமானுடன் சிலகாலம் தங்கியிருந்த கபிலர் அவனைப்போற்றி
பத்துப்பாடல்களை பாடினார். பின்பு அங்கிருந்து விடைபெற்றபோது பொன்னும் பொருளும்
சில ஊர்களையும் அளித்து வழியனுப்பினான் சேரமன்னன். அவற்றைப் பெற்றுக்கொண்ட கபிலர்
பாரிமகளிரிடம் வந்தார். சேரனிடம் பெற்ற அனைத்தையும் அந்தணரிடம் கொடுத்துவிட்டு
அங்கிருந்து கிளம்பினார். அவருக்கு உலகவாழ்க்கை வெறுத்துப் போனதால் விரதமிருந்து
உயிர்விட முடிவு செய்தார். உயிர் விடும் முன்பு நண்பர் பாரியை நினைத்து கபிலர்
பாடிய கடைசி புறநானூற்றுப் பாடல் :-
இனையை யாதலி னினக்கு மற்றியான்மேயினே னன்மை யானே யாயினும்இம்மை போலக் காட்டி யும்மைஇடையில் காட்சி நின்னோடுஉடனுறைவு ஆக்குக வுயர்ந்த பாலே !(புறம் – 236)விளக்கம்: நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில் நீ நடந்துகொண்டாய். பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும், நீ என்னை வெறுத்தாய் போலும். பெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில், "இங்கே இருந்து வருக" எனக்கூறி என்னைவிட்டுப் பிரிந்து சென்று என்னை வருத்தினாய். ஆகவே, உனக்கு நான் ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும், இப்பிறவிபோல் மறுபிறவிலும் நாம் இடைவிடாமல் சேர்ந்து இருப்பதற்கு வழி செய்யுமாறு உயர்ந்த நல்வினையை வேண்டுகிறேன்.
பாரிவேளைப் பற்றியும் கபிலரைப்
பற்றியும் நன்கு அறிந்திருந்த ஒளவைப் பிராட்டியாருக்கு அச்சமயம் பாரிமகளிர் ஒரு
அந்தணர் பொறுப்பிலிருப்பது தெரியவந்து அங்கு சென்றார். ஒளவையைக் கண்டதும்
அங்கவையும் சங்கவையும் ஆற்றாமையால் அழுது புலம்பினர். தங்களால் கபிலர் பட்ட
இன்னல்களையும் தற்போது தாங்கள் அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் இருப்பதையும்
கூறித்தேம்பினர். அதைக்கேட்ட ஒளவை “கண்மணிகளே ! கலங்காதீர்கள். எல்லாம் வல்லான்
வகுத்தபடிதான் நடைபெறும். கவலைப்பட வேண்டாம். பாரியையும் கபிலரையும் எம்மால்
மீண்டும் கொண்டுவர இயலாது. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற உங்களை நான் நல்லறமாம்
இல்லறத்தில் நிலை நிறுத்துவேன்” என்று அன்பொழுக ஆறுதல் கூறினார். சில நாட்கள்
அவர்களுடன் தங்கியிருந்த ஒளவை, அவ்விரு நங்கைகளுக்கும் மணமகன் தேடி வருவதாக
புறப்பட்டார்.
அந்நாளில் திருக்கோவலூரைத் தலைநகராய்க்
கொண்ட மலாடு என்கிற மலையமான் நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த தெய்வீகன் என்பவன்
மணமாகாதவன், நல்ல பண்பாளன் என்றறிந்த ஒளவையார் அங்கு சென்றார். குறுநில மன்னனான
அவனை வாழ்த்தி தன் எண்ணத்தைக் கூற அவ்வரசனும் பழுதிலாப்புகழ் பாரியின் இரு
பெண்களையும் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டான்.
பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும்
நழுவி வாயில் விழுந்தது போலிருந்தது ஒளவையாருக்கு ! அவரே முன்னின்று சேர, சோழ,
பாண்டியர் உட்பட அனைத்து அரசர்களுக்கும் திருமண ஓலை அனுப்பினார். அவர்கள்
முன்னிலையில் செல்விகள் அங்கவை சங்கவைக்கும் மலாடு நாட்டரசனான மலையமான்
தெய்வீகனுக்கும் சீருற சிறப்புற திருமணம் நடைபெற்றது. பாரியின் பெற்ற கடமை,
கபிலரின் நட்புகொண்ட பொறுப்பு இரண்டும் ஒளவையாரால் நிறைவேற்றப்பட்டது.
முந்தய பதிவுகள்:
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|