Showing posts with label sangavai. Show all posts
Showing posts with label sangavai. Show all posts

18 September 2013

அங்கவை சங்கவை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

2007க்கு முன்பு “அங்கவை சங்கவை” பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. எதிர்மறை விளம்பரம் கொடுத்தேனும் அங்கவை சங்கவையை தமிழர்களுக்கு அடையாளம் காட்டியமைக்காக இயக்குநர் ஷங்கருக்கு ஒரு நன்றி சொல்லிக்கொள்ளலாம். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவேளின் மகள்கள் தான் – அங்கவை & சங்கவை. அவர்களுடைய பெயர் அங்கவை – சங்கவை என்பதற்கு சங்கநூல்களில் ஆதாரம் ஏதுமில்லை. எனினும், பிற்கால வரலாற்று ஆய்வாளர்கள் காரணமாக அங்கவை, சங்கவை என்ற பெயர் நிலைத்துவிட்டது. அங்கவை, சங்கவை இருவரும் அன்பும், அழகும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்றிருந்தனர். அவ்விருவரும் இரட்டையராய்ப் பிறந்தனரோ என்று ஐயுறும்படி அங்க அழகில் ஒற்றுமை உடையவர்களாய் இருந்தனர்.

சித்தரிக்கப்பட்ட படம்
கடையேழு வள்ளல்கள் சீரிஸின் கடந்த பதிவின் இறுதியிலிருந்து சில வரிகள் :- பாரிவேளை சூழ்ச்சியின் மூலம் கொல்ல முடிவெடுத்த மூவேந்தர்கள் ஒரு பெளர்ணமி நாளில் முதிய புலவர்போல வேடம் பூண்டனர். ஆளுக்கோர் யாழினைக் கையிலேந்தி பாரியை அணுகினர். பாரி அவர்களை அன்புடன் வரவேற்று தக்க ஆசனங்களிட்டு அமர்த்தி வழக்கம்போல் நல்லுரை பல புகன்றான். அப்போது மூவேந்தர்கள் சால அன்புடையவர்கள் போல நடித்து பாரியை மிகவும் புகழ்ந்து பாடி, அவன் உயிரையே தமக்குப் பரிசிலாகத் தரவேண்டினார்கள். அதனைக் கேட்ட பாரி உள்ளங்கொள்ளா மகிழ்ச்சிகொண்டு அவர்கள் வயமாகி மரணம் எய்தினான். சிலர் மேற்கூறிய வரிகளில் மூவேந்தர்கள் வேடமணிந்து சென்றது வரைக்கும் தான் உண்மை என்றும் அவர்கள் பாரியின் உயிரை பரிசிலாக கேட்காமல் அவன் அசந்த சமயத்தில் கூர்வாளை அவன்மீது பாய்ச்சினார்கள் என்றும் கூறுகின்றனர். எப்படியோ மூவேந்தர்களின் வஞ்சத்திற்கு பாரி பலியாகிவிட்டான். பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் தவித்தது.

தங்களுடைய தந்தையின் மரணத்தில் அங்கவையும் சங்கவையும் வேதனையால் துடித்தனர். அவர்களுடன் ஊர்மக்களும் ஒன்றுகூடி ஓலமிட்டனர். செய்தியறிந்து விரைந்து வந்த கபிலர் கதறினார். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ ? தன்னைத் தேற்றிக்கொண்ட கபிலர், பாரிமகளிரை ஆறுதல்படுத்தினர். அத்துடன் நில்லாமல் பருவம் எய்திய அந்நங்கைகளுக்கு மணம் முடித்துவைக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். பறம்புமலையிடம் பிரியா விடைபெற்றுப் புறப்பட்டார் கபிலர் பாரிமகளிருடன். அன்று, பாரி கொலையுண்ட முன்னாள் போலவே நிலவு ஒளி வீசிக்கொண்டிருந்தது. பாரிமகளிருக்கு தந்தையின் நினைவு மேலோங்கியது. அப்போது அவர்கள் பாடிய பாடல் :-

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
(புறம் 112)

விளக்கம்: மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்த அந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக்காலத்தின் வெண்மையான நிலவொளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்.

பாரிவேள் முல்லைக்கொடிக்கு கொழுக்கொம்பாக தேரை கொடுத்தது போல அவ்விரண்டு பெண்கொடிகளுக்கு கொழுக்கொம்பாக தக்கார் யாரையேனும் கண்டு ஒப்படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தார் கபிலர். தனக்குத் தெரிந்த கோமான்களையெல்லாம் எண்ணிப்பார்த்தார். கண்மணி போன்ற பெண்மணிகளுக்கு ஏற்ற பொன்மனச் செம்மல்களாக இருக்க வேண்டுமே ! அதன்படி அவருக்கு முதலில் நினைவுக்கு வந்தவன் விச்சிமலைக்கு அதிபதியான விச்சிகோன் என்ற சிற்றரசன். கபிலர் பாரிமகளிருடன் அவனிடம் சென்றார். அவனை முறைப்படி வாழ்த்தி, அங்கவை சங்கவையை அறிமுகப்படுத்தி அவர்களை மணந்துகொள்ளுமாறு வேண்டினார். எனினும் மூவேந்தர்கள் பாரி மகளிரை விரும்பிப் போர் செய்ததை அறிந்தவனான விச்சிகோன் அவர்களின் பகைமைக்கு அஞ்சி மறுத்துவிட்டான்.

அடுத்து யாரை நாடுவது ? ஹொய்சள வம்சத்தில் பிறந்தவனும் ‘வேள் எவ்வி’ என்ற வள்ளலின் வழி வந்தவனுமாகிய இருங்கோவேள் என்ற குறுநில மன்னன் இன்னும் மணமாகாதவன் என்று தெரிந்தது. உடனே புறப்பட்டார். இருங்கோவேளின் அரண்மனையை அடைந்த கபிலர் பாரியின் சிறப்பைக்கூறி அவரது மகளிரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அவனோ, “எங்கோ பிறந்த பெண்களை ஒரு தொடர்பும் இல்லாத நீர்தர நான் மணந்து கொள்வதா ?” என்று எடுத்தெறிந்து பேசினான். இருங்கோவேளின் வார்த்தைகள் கபிலருக்கு வலியூட்டியது, அவருக்கு உள்ளம் சலித்துவிட்டது. திருமண பாரத்தை யாரிடமாவது ஒப்புவித்துவிட அவருடைய தன்மான உணர்வு தவித்தது. யாரிடம் விடுவது ?

அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அவர்களை அன்போடு உபசரித்து வந்த அந்தணரான முதியவரிடமே ஒப்படைத்தால் என்ன என்று தோன்றியது. தனக்குள்ள நெடுநாள் விருப்பமாகிய யாத்திரை இருபெண்களால் தடைபடுவதாகவும், எனவே அவர்களை அம்முதியவரிடம் விட்டுச்செல்ல விரும்புவதாகவும் நயம்படக் கூறினார். முதியவர் ஒப்புக்கொண்டார். ஆறுதல் கொண்ட கபிலர் அங்கிருந்து புறப்பட்டு செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற ஈகையிற்சிறந்த சேர மன்னனிடம் பழமரம் நாடும் பறவைபோல் சென்றடைந்தார். சேரமானுடன் சிலகாலம் தங்கியிருந்த கபிலர் அவனைப்போற்றி பத்துப்பாடல்களை பாடினார். பின்பு அங்கிருந்து விடைபெற்றபோது பொன்னும் பொருளும் சில ஊர்களையும் அளித்து வழியனுப்பினான் சேரமன்னன். அவற்றைப் பெற்றுக்கொண்ட கபிலர் பாரிமகளிரிடம் வந்தார். சேரனிடம் பெற்ற அனைத்தையும் அந்தணரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவருக்கு உலகவாழ்க்கை வெறுத்துப் போனதால் விரதமிருந்து உயிர்விட முடிவு செய்தார். உயிர் விடும் முன்பு நண்பர் பாரியை நினைத்து கபிலர் பாடிய கடைசி புறநானூற்றுப் பாடல் :-

இனையை யாதலி னினக்கு மற்றியான்
மேயினே னன்மை யானே யாயினும்
இம்மை போலக் காட்டி யும்மை
இடையில் காட்சி நின்னோடு
உடனுறைவு ஆக்குக வுயர்ந்த பாலே !
(புறம் 236)

விளக்கம்: நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில் நீ நடந்துகொண்டாய். பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும், நீ என்னை வெறுத்தாய் போலும். பெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில், "இங்கே இருந்து வருக" எனக்கூறி என்னைவிட்டுப் பிரிந்து சென்று என்னை வருத்தினாய். ஆகவே, உனக்கு நான் ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும், இப்பிறவிபோல் மறுபிறவிலும் நாம் இடைவிடாமல் சேர்ந்து இருப்பதற்கு வழி செய்யுமாறு உயர்ந்த நல்வினையை வேண்டுகிறேன்.

பாரிவேளைப் பற்றியும் கபிலரைப் பற்றியும் நன்கு அறிந்திருந்த ஒளவைப் பிராட்டியாருக்கு அச்சமயம் பாரிமகளிர் ஒரு அந்தணர் பொறுப்பிலிருப்பது தெரியவந்து அங்கு சென்றார். ஒளவையைக் கண்டதும் அங்கவையும் சங்கவையும் ஆற்றாமையால் அழுது புலம்பினர். தங்களால் கபிலர் பட்ட இன்னல்களையும் தற்போது தாங்கள் அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் இருப்பதையும் கூறித்தேம்பினர். அதைக்கேட்ட ஒளவை “கண்மணிகளே ! கலங்காதீர்கள். எல்லாம் வல்லான் வகுத்தபடிதான் நடைபெறும். கவலைப்பட வேண்டாம். பாரியையும் கபிலரையும் எம்மால் மீண்டும் கொண்டுவர இயலாது. ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற உங்களை நான் நல்லறமாம் இல்லறத்தில் நிலை நிறுத்துவேன்” என்று அன்பொழுக ஆறுதல் கூறினார். சில நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்த ஒளவை, அவ்விரு நங்கைகளுக்கும் மணமகன் தேடி வருவதாக புறப்பட்டார்.

அந்நாளில் திருக்கோவலூரைத் தலைநகராய்க் கொண்ட மலாடு என்கிற மலையமான் நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த தெய்வீகன் என்பவன் மணமாகாதவன், நல்ல பண்பாளன் என்றறிந்த ஒளவையார் அங்கு சென்றார். குறுநில மன்னனான அவனை வாழ்த்தி தன் எண்ணத்தைக் கூற அவ்வரசனும் பழுதிலாப்புகழ் பாரியின் இரு பெண்களையும் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொண்டான்.

பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலிருந்தது ஒளவையாருக்கு ! அவரே முன்னின்று சேர, சோழ, பாண்டியர் உட்பட அனைத்து அரசர்களுக்கும் திருமண ஓலை அனுப்பினார். அவர்கள் முன்னிலையில் செல்விகள் அங்கவை சங்கவைக்கும் மலாடு நாட்டரசனான மலையமான் தெய்வீகனுக்கும் சீருற சிறப்புற திருமணம் நடைபெற்றது. பாரியின் பெற்ற கடமை, கபிலரின் நட்புகொண்ட பொறுப்பு இரண்டும் ஒளவையாரால் நிறைவேற்றப்பட்டது.

முந்தய பதிவுகள்:


என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

12 August 2013

கடையேழு வள்ளல்கள் – பாரி


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பாரி – கடையேழு வள்ளல்களில் முதன்மையானவர், அதிக புகழ் பெற்றவரும் கூட. ஓரறிவு உயிரான முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்தவர் என்பதே அதற்கு காரணம்.

சிவகங்கை மாவட்டத்தில் சமகாலத்தில் பிரான்மலை என்ற பெயரோடு விளங்கும் குன்றுக்கூட்டம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பறம்புமலை என்று வழங்கப்பட்டது. பறம்புமலை முன்னூறு கிராமங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. சிரிப்பது போன்று சலசலக்கும் அருவிகள், ஓடைகள், கனி நிறை மரங்கள், மலர் நிறை சோலைகள், இசை நிறை பறவைகள், எழில் நிறை காட்சிகள் என பல நல்வளங்களை கொண்டிருந்தது பறம்புமலை. அதனை வேளிர்குல வழிவந்த சிற்றரசர்களே பல்லாண்டுகளாய் ஆண்டுவந்தார்கள். அவர்களுள் பெரும்பான்மையோர் முடியுடை வேந்தர்க்கு அடங்கியும், அவர்களோடு அன்புகொண்டும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிற்றரசர்களின் வழிவந்தவர் தான் பாரி. வேளிர்குலத்தோன்றல் என்பதால் அவரை பாரிவேள் என்றும் வேள்பாரி என்றும் அழைப்பர்.

பாரி அரசனான பின் குடிகளிடத்தில் மிகவும் அன்புடையவனாய் இருந்தான். குடிகளும் அவனைப் பொன்னேபோல் போற்றி வந்தனர். அவனுடைய ஆட்சியில் குடிகள் முன்னையினும் பன்மடங்கு நலமுற்று இன்பம் துய்த்தார்கள். பறம்பு மக்கள் எள்ளளவும் சோம்பலின்றி உழைப்பவர்களாக இருந்தனர். தினை, வரகு, எள், கிழங்கு வகைகள் போன்றவற்றை விளைவித்து அவற்றுடன் மா, பலா, வாழை போன்ற கனிகளையும் கொண்டுசென்று மலையடிவார ஊர்களில் பண்டமாற்று செய்து வாழ்ந்து வந்தனர். பொதுவாகவே, மக்கட்பிறப்பை அடைந்தவர் எல்லோரும் நல்ல உடல்பலம் பெற்றிருக்க வேண்டுமென்பது பாரியின் எண்ணம். ஆகையால், அவன் நாட்டின் ஊர்கள்தோறும் சிலம்புக்கூடங்கள் ஏற்படுத்தியிருந்தான். வாலிபரைச் சிறந்த வித்தைகளைப் பயிலச்செய்தான். பாரியும் அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும்பொருட்டு தேகபலம் கொண்ட மிகச்சிறந்த வீரனாய் இருந்தான். காரணமாக, அவனுடைய படை பலம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

பாரி படை வீரத்தில் மட்டுமின்றி கொடை தீரத்திலும் சிறந்திருந்தான். அவனை நாடிவந்த புலவர்கள், பாணர்கள், கூத்தர்கள், விறலியர்கள் மற்றும் இரவலர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தான். எங்ஙனம் கொடுத்தான் என்றால், கேட்டவர்கள் ‘போதும், போதும்’ என்று சொல்லும்வரையில் கொடுத்தான். கேட்பதற்கு முன்பே கூட முகக்குறிப்பும் அங்கக்குறிப்பும் கண்டுணர்ந்து ஈந்தான். பறம்புநாடு இரவலர்களுக்கு ஒரு பரிசுப்பெட்டகமாக அமைந்திருந்தது. பழமரம் நாடும் பறவைகள் போல கூட்டம் கூட்டமாக வந்த இரவலர்களை பறம்புநாடு வரவேற்றது. அக்காலத்தில் இப்படிப் பரிசில் பெற்றுச்செல்லும் இரவலர்கள் எவரும் சுயநலமிகளாக இல்லை. ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நோக்கோடு தன்போன்ற இரவலர்கள் எதிர்ப்பட்டால் அவர்களிடம் வலியச்சென்று பாரியின் பெருமையை எடுத்துச்சொல்லி அனுப்பி வைப்பார்கள். இதனால் பாரியின் புகழ் பரவியது.

அதியமானுக்கொரு ஒளவையார் போல பாரிவேளுக்கு கபிலர் என்னும் பெரும்புலவர் உயிரினும் மேலான நண்பராய் இருந்துவந்தார். பாரியும் கபிலரும் நட்பான கதையை எழுதுவதென்றால் பல பதிவுகள் தேவைப்படும். சுருக்கமாக சொல்வதென்றால், பாரியின் கொடைப்பண்பை அறிந்த கபிலர் அவனிடம் பொருள்பெற வந்தார். கபிலரின் இணையற்ற புலமையைக் கண்டுவியந்த பாரி அவரை தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார்.

பாரிவேள் அவ்வப்போது தன்நாட்டு மக்களையும் மலைவளங்களையும் காண்பதற்கு சென்றுவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். அதில் அவனுக்கு அளவிலா ஆனந்தம். ஒருமுறை அதுபோல தன்னுடைய தேரை எடுத்துக்கொண்டு சென்றபோது வழியில் ஒரு முல்லைப் பூங்கொடி, கொழுக்கொம்பு இல்லாமல் காற்றால் அலைந்துக்கொண்டிருந்தது. ஆதரவற்ற அனாதைபோல, வாடிச்சோர்ந்து தவிக்கும் ஒரு பரிதாபத்திற்குரிய வறியனைப் போலத் தோன்றிய அக்கொடி பாரியின் கவனத்தை ஈர்த்தது. ஈர்த்ததோடா... உடனே இயங்கவும் செய்தது. தேரைவிட்டு இறங்கி, அதனை முல்லைக்கொடிக்கு அருகில் கொண்டு சென்றான். குதிரைகளை அவிழ்த்து அப்பால் விட்டான். பிறகு தேரின் மீது கொழுக்கொம்பிற்கு அலையும் முல்லைக்கொடியை எடுத்து பாங்குற படரவிட்டான். பின்னர் குதிரைகளுள் ஒன்றின்மீது ஏறிக்கொண்டு ஏனையவை பின்தொடர அரண்மனையை சென்றடைந்தான். ஓரறிவு உயிருக்கும் இரங்கும் அவனது ஒப்பற்ற கொடைத்திறன் நாடெங்கும் பரவியது.

பாரியின் புகழை முடியுடை வேந்தர் மூவரும் அறிந்தார்கள். அறிந்ததும் என்ன செய்தார்கள் ? அவன்மேல் அடங்காத அழுக்காறு கொண்டார்கள். மூவரும் ஒன்றுகூடி தத்தம் சேனைகளை திரட்டி பறம்புமலையைச் சூழ்ந்தார்கள். பாரி, தன் பலத்தையும் எதிரிகளின் பலத்தையும் எண்ணிப் பார்த்தான். போர் செய்வது இயலாத செயலாகப்பட்டது. ஆகையால் தற்காப்புப் பணியில் தன் கவனத்தை செலுத்தினான். மலைமேலுள்ள அரண்களை செப்பம் செய்தான். எதிரிகள் எவ்வழியிலும் நுழைய முடியாதபடி செய்ததோடு அவர்களை மறைந்து தாக்கும் மறைவிடங்களையும் அமைத்தான். பறம்பு மக்களும் உயிரையே பணயம் வைத்து ஒரு மூச்சாக செயல்பட்டனர்.

ஒருநாள் ஆயிற்று. ஒரு வாரம் ஆயிற்று. வாரம் மாதம் ஆனது. மாதம் ஒருமையிலிருந்து பன்மையாயிற்று. மூவேந்தர்களும் பறம்புமலையினுள் நுழைய முடியாமல் விழிபிதுங்கி நின்றனர். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற இறுமாப்புடன் இருந்த மூவேந்தர்களுக்கும் பாரியின் தற்காப்பு சவாலாக அமைந்திருந்தது. ஒருமுறை மலையடிவாரத்திலிருந்த போர் வீரர்களின் கூடாரத்திற்கு ஒரு ஓலை வந்து விழுந்தது. அதனைக் கண்டதும் பாரி சரணடைந்துவிட்டான் என்று அகமகிழ்ந்த மன்னர்கள், அதைப் படித்தபோது ஏமாற்றத்தின் எல்லைக்கு தள்ளப்பட்டார்கள். அது கபிலர் இயற்றிய பாடல்.

“அளிதோ தானே பாரியது பறம்பே !
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரினெல் விளையும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பல மூழ்க்கும்மே;
மூன்றே, கொழுங்கொடிவள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற வோரிபாய்தவின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான்க ணற்றவன் மலையே; வானத்து
மீன்க ணற்றதன் சுனையே; யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்,
தாளிற் கொள்ளலிர், வாளிற் றரலன்;
யானறி குவனது கொள்ளு மாறே,
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
வாடினர் பாடினர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே.”
(புறம் – 109)

விளக்கம்: பாரியினுடைய பறம்புமலை வெல்வது எளிதல்ல. நீங்கள் மூவரும் வெற்றிமுரசு கொட்டி, ஒன்றுகூடி பலநாள் முற்றுகையிட்டாலும் அதனை உங்களால் வெல்ல முடியாது. ஏனெனில், பறம்புமலை அகலத்தாலும் நீளத்தாலும் உயரத்தாலும் வான் போன்றது. வெண்மையான தோற்றம்கொண்ட அருவிகள் பலவாய்ப் பிரிந்து ஓடுவதற்குக் காரணமாயுள்ள நீர் நிரம்பிய சுனைகள் நிறைந்துள்ளன. அதனால், உழவர்கள் உழாமலேயே அந்நாட்டு மக்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை நான்கு :-
        - மலையிடத்து ஓங்கி வளரும் சிறிய இலையை உடைய மூங்கில்களிலிருந்து நெல் விளையும்.
        - மலையடிவாரத்தில் வளரும் பலாமரங்களில் கனித்து வெடித்த பழங்களிலிருந்து இன்சுவை சுளைகள் உதிரும்.
        - நிலத்தின் வெற்றிடங்களில் கொழுந்துவிட்டுத் தழைத்து ஓடும் வள்ளிக்கொடிகள் நிலம் வெடிக்கும்வண்ணம் பருத்த கிழங்குகளை ஊன்றும்.
        - மலையில் பல தேன்கூடுகள் உள்ளன. அழகிய நீலநிறமுடைய பெரிய தேனீக்கள் தேனில் வீழ்ந்து அமிழ்வதால் வழிந்துவரும் தேனும் உண்டு.

ஆகையால், எம் அரசனையும் எம் நாட்டையும் ஒருபோதும் உங்களால் வெல்ல முடியாது. நீங்கள் பறம்புமலையை பெற விரும்புவீர்களானால், வாசனை வீசும் நறுமண மலர்களைச் சூடிய கூந்தல் உடைய உங்கள் அன்புள்ள பெண்கள், வடித்துக் கூர்மையாக்கப்பட்ட நரம்புகளை உடைய யாழை ஏந்திக்கொண்டு இனிய பண்ணோசை ஒலிக்கப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் முன்வர நீங்கள் பின்செல்லல் வேண்டும். அப்போது, பாரி தன்நாட்டையும் மலையையும் ஒருங்கே ஈவான்.

கபிலர் வரைந்த பாடலைக் கண்டதும் அவர்கட்கு இன்னது செய்வதெனத் தெரியவில்லை. மூவரும் கூடி ஆலோசித்தார்கள். பாரியின் குடியை உறவாடிக் கெடுப்பதென முடிவு செய்தார்கள். பாரிக்கு ஆண்மக்கள் இல்லை. அழகிய பெண்கள் இருவர் இருந்தனர். அவர்கட்கு பாரி சூட்டிய பெயர் இன்னதென்று சங்கநூல்களில் குறிப்பு இல்லை. ஆயினும், பிற்காலத்தவர் அவர்களை அங்கவை சங்கவை என்பர். (அங்கவை சங்கவையை பற்றி பிற்பாடு தனி இடுகையில் எழுத முயல்கிறேன்). அன்பும், அறிவும், அழகும், வனப்பும் ஒருங்கே அமையப்பெற்ற மகள்கள் பாரிக்கு உளர் என்பதை மூவேந்தர்கள் அறிந்தார்கள். மூவேந்தர்களும் தனித்தனியே பெண்வேண்டி பாரியிடம் தூது அனுப்பினார்கள். பின் ஒன்று சேர்ந்தும் பெண்களை வேண்டினார்கள். பாரி மறுத்துவிட்டான். காரணம், ஒருவனுக்கே இரண்டு பெண்களையும் கொடுத்துவிட்டால் மற்ற இருவருக்கும் கலக்கமுண்டாகும். அன்றி, ஆளுக்கு ஒருத்தியாக கொடுத்தாலும் மூன்றாமவனுக்கு வருத்தம் வரும். பாரியின் மறுப்பிற்கான காரணத்தை மூவேந்தர்கள் அறிந்திருக்கவில்லை.

மூவேந்தர்களும் பாரியின் மீது சினம்கொண்டு முன்பைவிட அதிகமான சேனைகளை திரட்டினார்கள். இம்முறையும் அவனை வெல்லாமல் திரும்பிவிடின் நம்குடிகளும் நம்மை மதியார்களே என்று ஐயுற்றார்கள். உடனே ஒரு ஒற்றனை அழைத்து, பாரியின் நிலையை அறிந்து வரும்படி கூறி அனுப்பினார்கள். ஒற்றன் பறம்புநாட்டிற்குச் சென்றான். பாரியின் மாளிகையைக் கண்டான். பறம்புமலையின் மேலேறினான். அங்கிருந்த அரணது சிறப்பையும், வலிமையையும் உணர்ந்தான். மலையின் வளங்களை அறிந்தான். மற்றும் அறியவேண்டிய எல்லாவற்றையும் ஆங்காங்கு ஆராய்ந்து தெரிந்துக்கொண்டான். மிக்க வியப்புடன் மூவேந்தர்களிடம் திரும்பினான். பாரியை அவர்களுடைய படைபலத்தால் ஒருபோதும் வெல்ல முடியாது என்ற உண்மையை எடுத்துரைத்தான்.

முற்றுகை முயற்சி முட்டாள்த்தனமானது என்று அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கபிலருடைய புறநானூற்றுப் பாடலின் (மேலே குறிப்பிடப்பட்டுள்ளது) கடைசி நான்கு வரிகள் அவர்களின் நினைவுக்கு வந்தன. ஒரு பெளர்ணமி நாளில் மூவேந்தரும் முதிய புலவர்போல வேடம் பூண்டனர். ஆளுக்கோர் யாழினைக் கையிலேந்தி பாரியை அணுகினர். பாரி அவர்களை அன்புடன் வரவேற்று தக்க ஆசனங்களிட்டு அமர்த்தி வழக்கம்போல் நல்லுரை பல புகன்றான். அப்போது மூவேந்தர்கள் சால அன்புடையவர்கள் போல நடித்து பாரியை மிகவும் புகழ்ந்து பாடி, அவன் உயிரையே தமக்குப் பரிசிலாகத் தரவேண்டினார்கள். அதனைக் கேட்ட பாரி உள்ளங்கொள்ளா மகிழ்ச்சிகொண்டு அவர்கள் வயமாகி மரணம் எய்தினான். சிலர் மேற்கூறிய வரிகளில் மூவேந்தர்கள் வேடமணிந்து சென்றது வரைக்கும் தான் உண்மை என்றும் அவர்கள் பாரியின் உயிரை பரிசிலாக கேட்காமல் அவன் அசந்த சமயத்தில் கூர்வாளை அவன்மீது பாய்ச்சினார்கள் என்றும் கூறுகின்றனர். எப்படியோ மூவேந்தர்களின் வஞ்சத்திற்கு பாரி பலியாகிவிட்டான். பறம்புமலை வரம்பு இல்லா வேதனையில் தவித்தது.

முந்தய பதிவு: அதியமான்

தொடர்புடைய சுட்டி: வள்ளல் பாரி வேள் வரலாறு

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment