Showing posts with label coffee. Show all posts
Showing posts with label coffee. Show all posts

18 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 18112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படித்த புத்தகம் – டாக்டர் பிலோ. இருதயநாத் எழுதிய கேரள ஆதிவாசிகள். படிப்பதற்கு கொஞ்சம் அசுவாரஸ்யமாக இருந்தாலும் ஆதிவாசிகளின் பண்பாடு, சடங்குகள் பற்றி நிறைய தகவல்களை உள்ளடக்கிய புத்தகம். செருமர்கள், மலைப் பணிக்கர்கள், நாயாடிகள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதிவாசிகள் குழுவினரைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இன்னும் நிறைய டீடெயிலிங், சுவையான எழுத்து இருந்திருக்கலாம். எனக்கு என்னவென்றால் புத்தகத்தை விட அதன் ஆசிரியர் இருதயநாத் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. மனிதர் சைக்கிளிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறாராம். சைக்கிளிலேயே இரவு உறங்குவதற்கு தகுந்தபடி ஒரு செட்டப் வைத்திருப்பாராம். ஆசிரியரின் பிற புத்தகங்களையும் படித்து முடித்தபிறகு, அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து பதிவிட வேண்டும். கேரள ஆதிவாசிகள் உள்ளிட்ட ஆசிரியரின் புத்தகங்களை வாங்குவதற்கு.

இப்பொழுது கேரள ஆதிவாசிகள் புத்தகத்திலிருந்து சில வரிகள் :- நாயாடிகளுக்குள் விசித்திரமான ஒரு சுயம்வரம் நடக்கிறது. ஒரு புதிய குடிசை கட்டி அதில் சுயம்வரப் பெண்ணை தனியே வைப்பார்கள். பெண்ணின் தந்தையோ உறவினர்களில் ஒருவனோ குடிசைக்கருகில் அமர்ந்து மேளம் அடித்துப் பாட்டு பாடுவான். மணமாகாத பல வாலிபர்கள் ஆளுக்கு ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே வந்து சேருவார்கள். குடிசையை சுற்றி ஆடிப்பாடுவார்கள். பின்னர் எல்லா வாலிபர்களும் தங்கள் கைக்குச்சியை குடிசை மீது சொருகுவார்கள். குடிசைக்குள்ளே இருக்கும் பெண் தன் குலதெய்வத்தை எண்ணியபடி, குச்சிகளுள் ஒன்றை இழுத்துக்கொள்ளுவாள். குச்சியுடன் குடிசையிலிருந்து வெளியே வருவாள். குச்சி யாருடையதோ அந்த வாலிபனையே அவள் மணந்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு புத்தகமும் படிக்கக் கிடைத்தது. எனினும் அதன் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க அது தனிப்பதிவாக எழுதப்படும். புத்தகத்தின் பெயர் கோவை நேரம் !

உன்னோடு ஒரு நாள் என்றொரு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து, வந்த சுவடே தெரியாமல் ஓடிப்போனது. அண்ணாச்சி கூட அத்திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என்று நினைக்கிறேன். இணையத்தில் பதிவிறக்கக் கிடைத்ததாலும், க்ரைம் த்ரில்லர் என்று சொல்லப்பட்டதாலும் பார்த்தேன். ஒப்பீட்டளவில் நன்றாகவே இருந்தது. ஹீரோ, அவனுடைய மனைவி, நண்பன் மூவர் தான் பிரதான பாத்திரங்கள். ஹீரோவின் மனைவிக்கும் நண்பருக்கும் தொடர்பு. அது ஹீரோவிற்கு தெரிந்துவிடுகிறது. ஒருநாள் நண்பனும் மனைவியும் ஹோட்டல் அறையில் இருக்க, ஹீரோ வலியச் சென்று அவர்களுக்கு எதிர் அறையை பிடித்து லென்ஸ் வழியாக பார்த்துக்கொண்டே காத்திருக்கிறார். எதிர் அறையின் கதவு எப்போது திறந்தாலும் தன்னிடமுள்ள துப்பாக்கியை வைத்து சுட்டுவிட வேண்டுமென்பது திட்டம். மனைவிக்கும் நண்பருக்கும் விஷயம் தெரிந்து... என்ன நடந்தது என்று நேரமிருந்தால் பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும். பதிவிறக்க லிங்க். இயக்குநர் துரை கார்த்திகேயன் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் என்பது துயரம். லோ பட்ஜெட் படம் தான் என்றாலும் அது அவ்வளவாக தெரியாதபடி திறம்பட உழைத்திருக்கிறார்.

நேற்றைய தினமணி கதிரின் புதிய வார்ப்புகள் என்னையும் சக பதிவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ‘சக பதிவர்கள்’ என்ற சொல்லுக்காக யாராவது அடிக்க வந்தாலும் வரலாம். தினமணி அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தோழன் மபா அவர்களுக்கு நன்றிகள். மபாவுக்கு குறும்பு ஜாஸ்தியாக இருக்கும் போலிருக்கிறது. பாராட்டுவது போலவே நன்றாகவே ஊமைக்குத்து விடுகிறார். என்னைப் பற்றி ஃபிளாசபியில் பிஎச்டி வாங்கியவர் போல் எழுதக்கூடியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுபோல, வா.மணிகண்டனை ஜல்லியடிக்காமல் எழுதக்கூடிய மிகச் சிலரில் ஒருவர் என்றும், சுரேஷ் கண்ணனை பிற்போக்குத்தனமான முற்போக்குவாதிகளை ஓட ஓட விரட்டக்கூடிய துணிச்சல்காரர் என்றும் எழுதியிருக்கிறார். நக்கலுய்யா உனக்கு ! இப்படியே இதுபோன்ற அறிமுகங்களிலேயே திருப்தி அடைந்துவிடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். பத்திரிகையில் என்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என்பதை குறுகிய கால லட்சியமாக கொள்கிறேன். புதிய வார்ப்புகள் பகுதியை வாசிக்க.

வில்லா பார்த்தபிறகு அதன் இயக்குநரின் சில குறும்படங்களை தேடி, பார்த்தேன். Coffee பிடித்திருந்தது. காபியின் சிறப்பு என்னவென்றால் பிரதான கதாபாத்திரம் Kopi Luwak பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்று கேட்கிறது. ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. நமக்கு விருப்பமிருந்தால் நாமாகவே தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஒரு விளம்பரம்.

சமீபத்தில் அதீத் ஈர்ப்பை ஏற்படுத்திய பாடல் இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்திலிருந்து. விஜய் சேதுபதியின் உடல்மொழி அட்டகாசம். அப்படியே வடசென்னை வாலிபர்களை பிரதிபலிக்கிறது. கூடவே கானா பாலா குரல், ராஜூ சுந்தரம் நடனம், இடையிடையே வரும் ரைம்ஸ் என்று அத்தனையும் சூப்பர் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

30 September 2013

பிரபா ஒயின்ஷாப் – 30092013


அன்புள்ள வலைப்பூவிற்கு,

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒயின்ஷாப் திறக்கப்படுகிறது. இனி வாராவாரம் திறக்கப்படும் என்று நம்புவோமாக !

555 பார்த்தேன். படம் வெளிவந்த சமயத்தில் சொல்லி வைத்தாற்போல பல வலைப்பதிவர்கள் உண்மையில் அப்படி ஒரு காதலி இருந்தாரா ? இருந்தார் என்றால் ஏன் அந்த உண்மை நாயகனிடம் இருந்து மறைக்கப்படுகிறது ? என்பதை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் என்று எழுதி முடித்திருந்தார்கள். அதுவே படத்தின் மீது ஒரு ஆர்வ குறுகுறுப்பை ஏற்படுத்திவிட்டது. விக்கிபீடியாவை நாடி கதையின் ‘ப்ளாட்’ என்னவென்று தெரிந்திருக்கலாம் எனினும் நான் எழுத்து வடிவமாக தெரிந்துக்கொள்ள விரும்பாமல் காத்திருந்து பார்த்துவிட்டேன். உண்மையாகவே வித்தியாசமான படம். க்ளைமாக்ஸில் வழக்கமான தமிழ் சினிமா போல வரும் பாழடைந்த குடோன் சண்டைக்காட்சியை மட்டும் வேறு மாதிரி செய்திருக்கலாம். கதையை ஏதேனும் உலக சினிமாவிலிருந்து உருவியிருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. பரத் கதைக்கு தேவையே இல்லையென்றாலும் சும்மாக்காட்டி பழநி படிக்கட்டு வளர்த்து காட்டியிருக்கிறார். ஹீரோயின் மிர்த்திகா செதுக்கி வைத்தாற்போல முக அமைப்பு. பிஹைண்ட்வுட்ஸில் பேட்டி பார்த்தேன். கேரள பிறப்பு. ஆனால், சிக்கலில்லாமல் தமிழ் பேசுகிறார். என்ன, சில சமயங்களில் உயர்திணை / அஃறினை குழப்பம் செய்கிறார். 

49O என்பது அரசாங்கத்திற்கும், அனைத்து வேட்பாளர்களுக்கும் காட்டுகிற நடுவிரல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். திருவாளர். ஞாநி போன்றவர்கள் அதனை அப்படித்தான் முன்னிறுத்தினார்கள். ஆனால் அது அப்படியில்லை என்று சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது தேர்தல் கமிஷன். வாக்குச்சீட்டு முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட சின்னத்தின் மீது முத்திரை இருப்பின் அது செல்லாத வாக்கு என்று கணக்கில் கொள்ளப்படும். 49Oவும் செல்லாத வாக்கைப் போலவே கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிகிறது. அதாவது ஒரு தொகுதியில் எல்லா வேட்பாளர்களை விடவும் 49O வாக்குகள் அதிகமிருந்தாலும் கூட எஞ்சியிருக்கும் வாக்குகளில் அதிகம் பெற்றவர் வென்றவராக அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது. எனவே இது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, புரட்சியின் ஆரம்பம் என்றெல்லாம் புளங்காகிதம் அடையத்தேவையில்லை. வேண்டுமென்றால் மாற்றத்தின் ஒரு சிறிய தொடக்கமாக கருதி அதே சிறிய அளவில் அகமகிழ்ந்து கொள்ளலாம்.

தி.பி நான் எனக்காக செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. குறைந்துவிட்டது என்ற வருத்தத்தை விட முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதே ஆறுதலாக இருக்கிறது. அரிதாக எனக்காக கிடைக்கும் நேரத்தை செயலூக்கம் உடையதாக பயன்படுத்த முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன். அதன் ஒரு பகுதியாக என்னுடைய பையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இரண்டு பக்கங்கள் புரட்டுவேன். இப்போது பையிலிருப்பது எப்போதோ கிழக்கு பதிப்பக தள்ளுபடியில் வாங்கிய ராயர் காப்பி கிளப். இணையத்தில் தமிழ் அடியெடுத்து வைத்த புதிதில் யாஹூ குரூப்ஸ் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் ராயர் காப்பி கிளப் என்னும் குழுவில் இரா.முருகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. படிக்கும்போது இதனை பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வாசித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மனம் யோசிக்கிறது. கூடவே நான் என்னுடைய கன்னி கணினியை எப்படியெல்லாம் வீணடித்திருக்கிறேன் என்கிற நினைப்பு தோன்றி கவலையூட்டுகிறது.

2005ம் ஆண்டு எங்கள் வீட்டில் கணினி வாங்கினோம். அப்போது இணைய வசதி கொடுக்கவில்லை. மொத்தமே 40GB கொள்ளளவு தான் ! அதிலும் முழுக்க கேம்ஸ் நிறைந்து கிடக்கும். நாளொன்றில் இருபத்தி இரண்டு மணிநேரம் கேம் விளையாடுவதற்கு செலவிடுவேன். அப்புறம் சில வருடங்களுக்குப் பின் இணைய வசதி கொடுக்கப்பட்டது. இந்தமுறை கேம்ஸின் இடத்தை எது நிரப்பியது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அறைக்குள் யாரேனும் நுழைந்தால் கணினித்திரை உடனடியாக தெரியாதபடி திருப்பி வைத்திருப்பேன். நாளொரு மேனி ! பொழுதொரு வண்ணம் !! புகைப்படங்கள், காணொளிகள், PDF வடிவில் கதை புத்தகங்கள் என்று ஒரு கலெக்ஷனே வைத்திருந்தேன். வைத்திருக்கிறேன். 2009க்கு பின்னர் தான் வலைப்பூ ஆரம்பித்து, பதிவுலக அறிமுகம் எல்லாம். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் இன்னுமொரு இரண்டு வருடங்களுக்கு முன்பாவது நமது இணையச்சேவையை தொடங்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சத்யம் திரையரங்கில் படம் போடுவதற்கு முன்பு காட்டிய விளம்பரங்களினால் தோன்றிய எண்ணங்கள். சென்னையை பொறுத்தவரையில் சத்யம் தான் சிறந்த திரையரங்கம். ஆனால் டிக்கெட் விலையை பொறுத்தவரையில் பெரும்பாலும் அரசு நிர்ணயித்த தொகையையே வாங்குகிறார்கள். சில புறநகர் திரையரங்குகளில் மட்டும் மாஸ் ஹீரோக்கள் படங்கள் வெளிவரும்போது அதிக விலைக்கு டிக்கெட் விற்று போங்காட்டம் ஆடுகிறார்கள். எனவே திரையரங்கை பொறுத்தவரையில் மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சத்யம் திரையரங்கில் படம் பார்ப்பவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்ல. ஆனால் அங்கே காட்டப்படும் விளம்பரங்களை பார்க்கும்போது ஏதோ தமிழகத்தில் பாலும் தேனும் ஓடிக்கொண்டிருப்பது போலவும், நாமெல்லாம் நிறைய பணத்தை கையில் வைத்துக்கொண்டு அதை வைத்து என்ன செய்வதென்று திண்டாடுவது போலவும் இருக்கிறது. தங்கமுங்கறான், வைரமுங்கறான் அய்யா அதுகூட பரவாயில்லை மருத்துவமனைக்கெல்லாம் விளம்பரம் வருகிறது. எப்படி மருத்துவமனை விளம்பரம் பார்த்து ஈர்க்கப்பட்டுவிட்டால் உடனடியாக ஒரு மாரடைப்பை வரவழைத்துக்கொண்டு அங்கே போய் சேர்ந்து விடுவார்களோ என்னவோ ? மேற்படி விளம்பரங்களை பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் புரிகின்றன. ஒன்று, பணம் படைத்தவர்கள் அதனை தங்கம் வாங்கியும், அபார்ட்மெண்ட் வாங்கியும் முதலீடு செய்கிறார்கள். இரண்டு, பணம் அதிகம் சேர்ந்துவிட்டாலே நோய்களும் வந்து சேர்ந்துக்கொள்கின்றன.

இமான் இசை, ஷ்ரேயா கோஷல் குரல், பிந்து மாதவி கண்கள் மூன்றும் ஒன்றுகூடி அடிவயிற்றில் ஒரு பந்தினை உருட்டுகிறது !

பாடலை கேட்டுக்கொண்டே பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன :-
1. ஷ்ரேயா கோஷல் நன்றாக தமிழ் உச்சரிக்க பழகிக்கொண்டார்.
2. பிந்து மாதவியை 'சுமார் மூஞ்சி' என்று எழுதிய கைகளை கருக்கிவிட வேண்டும்.

சின்ன வயதில் நஸ்ஸுக்குட்டி !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment