18 November 2013

பிரபா ஒயின்ஷாப் – 18112013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

படித்த புத்தகம் – டாக்டர் பிலோ. இருதயநாத் எழுதிய கேரள ஆதிவாசிகள். படிப்பதற்கு கொஞ்சம் அசுவாரஸ்யமாக இருந்தாலும் ஆதிவாசிகளின் பண்பாடு, சடங்குகள் பற்றி நிறைய தகவல்களை உள்ளடக்கிய புத்தகம். செருமர்கள், மலைப் பணிக்கர்கள், நாயாடிகள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதிவாசிகள் குழுவினரைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இன்னும் நிறைய டீடெயிலிங், சுவையான எழுத்து இருந்திருக்கலாம். எனக்கு என்னவென்றால் புத்தகத்தை விட அதன் ஆசிரியர் இருதயநாத் பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. மனிதர் சைக்கிளிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறாராம். சைக்கிளிலேயே இரவு உறங்குவதற்கு தகுந்தபடி ஒரு செட்டப் வைத்திருப்பாராம். ஆசிரியரின் பிற புத்தகங்களையும் படித்து முடித்தபிறகு, அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்து பதிவிட வேண்டும். கேரள ஆதிவாசிகள் உள்ளிட்ட ஆசிரியரின் புத்தகங்களை வாங்குவதற்கு.

இப்பொழுது கேரள ஆதிவாசிகள் புத்தகத்திலிருந்து சில வரிகள் :- நாயாடிகளுக்குள் விசித்திரமான ஒரு சுயம்வரம் நடக்கிறது. ஒரு புதிய குடிசை கட்டி அதில் சுயம்வரப் பெண்ணை தனியே வைப்பார்கள். பெண்ணின் தந்தையோ உறவினர்களில் ஒருவனோ குடிசைக்கருகில் அமர்ந்து மேளம் அடித்துப் பாட்டு பாடுவான். மணமாகாத பல வாலிபர்கள் ஆளுக்கு ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு உடனே வந்து சேருவார்கள். குடிசையை சுற்றி ஆடிப்பாடுவார்கள். பின்னர் எல்லா வாலிபர்களும் தங்கள் கைக்குச்சியை குடிசை மீது சொருகுவார்கள். குடிசைக்குள்ளே இருக்கும் பெண் தன் குலதெய்வத்தை எண்ணியபடி, குச்சிகளுள் ஒன்றை இழுத்துக்கொள்ளுவாள். குச்சியுடன் குடிசையிலிருந்து வெளியே வருவாள். குச்சி யாருடையதோ அந்த வாலிபனையே அவள் மணந்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு புத்தகமும் படிக்கக் கிடைத்தது. எனினும் அதன் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க அது தனிப்பதிவாக எழுதப்படும். புத்தகத்தின் பெயர் கோவை நேரம் !

உன்னோடு ஒரு நாள் என்றொரு திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து, வந்த சுவடே தெரியாமல் ஓடிப்போனது. அண்ணாச்சி கூட அத்திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என்று நினைக்கிறேன். இணையத்தில் பதிவிறக்கக் கிடைத்ததாலும், க்ரைம் த்ரில்லர் என்று சொல்லப்பட்டதாலும் பார்த்தேன். ஒப்பீட்டளவில் நன்றாகவே இருந்தது. ஹீரோ, அவனுடைய மனைவி, நண்பன் மூவர் தான் பிரதான பாத்திரங்கள். ஹீரோவின் மனைவிக்கும் நண்பருக்கும் தொடர்பு. அது ஹீரோவிற்கு தெரிந்துவிடுகிறது. ஒருநாள் நண்பனும் மனைவியும் ஹோட்டல் அறையில் இருக்க, ஹீரோ வலியச் சென்று அவர்களுக்கு எதிர் அறையை பிடித்து லென்ஸ் வழியாக பார்த்துக்கொண்டே காத்திருக்கிறார். எதிர் அறையின் கதவு எப்போது திறந்தாலும் தன்னிடமுள்ள துப்பாக்கியை வைத்து சுட்டுவிட வேண்டுமென்பது திட்டம். மனைவிக்கும் நண்பருக்கும் விஷயம் தெரிந்து... என்ன நடந்தது என்று நேரமிருந்தால் பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும். பதிவிறக்க லிங்க். இயக்குநர் துரை கார்த்திகேயன் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் என்பது துயரம். லோ பட்ஜெட் படம் தான் என்றாலும் அது அவ்வளவாக தெரியாதபடி திறம்பட உழைத்திருக்கிறார்.

நேற்றைய தினமணி கதிரின் புதிய வார்ப்புகள் என்னையும் சக பதிவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ‘சக பதிவர்கள்’ என்ற சொல்லுக்காக யாராவது அடிக்க வந்தாலும் வரலாம். தினமணி அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தோழன் மபா அவர்களுக்கு நன்றிகள். மபாவுக்கு குறும்பு ஜாஸ்தியாக இருக்கும் போலிருக்கிறது. பாராட்டுவது போலவே நன்றாகவே ஊமைக்குத்து விடுகிறார். என்னைப் பற்றி ஃபிளாசபியில் பிஎச்டி வாங்கியவர் போல் எழுதக்கூடியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுபோல, வா.மணிகண்டனை ஜல்லியடிக்காமல் எழுதக்கூடிய மிகச் சிலரில் ஒருவர் என்றும், சுரேஷ் கண்ணனை பிற்போக்குத்தனமான முற்போக்குவாதிகளை ஓட ஓட விரட்டக்கூடிய துணிச்சல்காரர் என்றும் எழுதியிருக்கிறார். நக்கலுய்யா உனக்கு ! இப்படியே இதுபோன்ற அறிமுகங்களிலேயே திருப்தி அடைந்துவிடாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். பத்திரிகையில் என்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என்பதை குறுகிய கால லட்சியமாக கொள்கிறேன். புதிய வார்ப்புகள் பகுதியை வாசிக்க.

வில்லா பார்த்தபிறகு அதன் இயக்குநரின் சில குறும்படங்களை தேடி, பார்த்தேன். Coffee பிடித்திருந்தது. காபியின் சிறப்பு என்னவென்றால் பிரதான கதாபாத்திரம் Kopi Luwak பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்று கேட்கிறது. ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. நமக்கு விருப்பமிருந்தால் நாமாகவே தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஒரு விளம்பரம்.

சமீபத்தில் அதீத் ஈர்ப்பை ஏற்படுத்திய பாடல் இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்திலிருந்து. விஜய் சேதுபதியின் உடல்மொழி அட்டகாசம். அப்படியே வடசென்னை வாலிபர்களை பிரதிபலிக்கிறது. கூடவே கானா பாலா குரல், ராஜூ சுந்தரம் நடனம், இடையிடையே வரும் ரைம்ஸ் என்று அத்தனையும் சூப்பர் !

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

14 comments:

Anonymous said...

congrats anna.. ungaludaiya introduction dinamani kathir-la parthen....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பிரபாவின் பார்வை பத்திரிகைகள் திரும்பி இருப்பது நல்ல விஷயம். பத்திரிகையிலும் சிறப்பான தடம் பதிக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

கேரளாவின் வயநாட்டுப் பகுதிகளில் பலகாலம் சுற்றியதில் சில இருளர்கள் போன்ற பழங்குடிகளோடு பரிச்சயம் உண்டு. அதனால் கேரள ஆதிவாசிகள் புத்தகம் நிச்சயம் படிக்கத் தூண்டும். தமிழக ஆதிவாசிகள் குறித்தும் புத்தகங்கள் எழுத முயற்சிக்கலாம். உன்னோடு ஒரு நாள் படம் இணையத்தில் பார்த்தேன். நல்ல படம் தான். ஆல் இன் ஆல் அழகுராஜ போன்றவைகளை விடவும். விஜய் சேதுபதியின் வடசென்னை இளைஞர்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் பாடலும், கானா பாலாவின் குரலும் ஓர்மைகளை ஈர்த்துவிட்டது. சென்னையை பிரிந்து வாடும் சென்னைப் பையன். :/

rajamelaiyur said...

உங்கள் குறுகிய கால லட்சியம் விரைவில் நிறைவேறும். . .

சீனு said...

ஜெமோவின் அறம் புத்தகத்தில் நூறு நாற்காலிகள் என்று கதை உண்டு, கதையின் நாயகன் ஒரு நாயாடி, நாயாடி குடும்ப சூழல்களைப் பற்றி அவரது எழுத்துக்களில் பிரமாதப்படுத்தி இருப்பார்... என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கதையும் கூட...

அவரது தளத்தில் படிக்க

http://www.jeyamohan.in/?p=12714

கேரள ஆதிவாசிகள் புத்தகம் படித்ததால் நேரம் கிடைத்தால் இதையும் படித்துப் பாருங்கள், நீங்கள் படித்த புத்தகத்தின் தொடர்ச்சியாய்க் கூட இருக்க வாய்ப்புள்ளது...

சீனு said...

பத்திரிக்கை அறிமுகத்திற்கும், உங்கள் லட்ச்சியத்திற்கும் வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

பத்திரிகையில் என்னுடைய படைப்பு வெளியாக வேண்டும் என்பதை குறுகிய கால லட்சியமாக கொள்கிறேன்.//

சீக்கிரமே வந்துரும்ய்யா வாழ்த்துக்கள்....

சதீஷ் செல்லதுரை said...

வாழ்த்துகள் பிரபா நண்பா.....

வவ்வால் said...

பிரபா,

தினமணியில வந்ததுக்கு வாழ்த்துக்கள், அடுத்து தினமணிக்கதிர்ல எழுதிட்டா பத்திரிக்கைல எழுத ஆரம்பமாகிடும்...அப்பிடியே லைன பிடிச்சு இலக்கியவாதி ஆகிடனும் !!!

# சமூகம்,வரலாறு சார்ந்துப்படிப்பதுண்டு,இருதயநாத் கட்டுரைகள் சிலது படிச்சிருக்கேன்,புக் படிக்கனும்.

Unknown said...
This comment has been removed by the author.
r.v.saravanan said...

பத்திரிகைகளில் தடம் பதிக்க வாழ்த்துக்கள் பிரபா மேலும் தினமணியில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்

Ponmahes said...

கேரள ஆதிவாசிகள் ....முடிந்தால் அனுப்பி வைக்கவும்.....எண்ணிய செயல்கள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.....


பதிவு மொக்கை....

Unknown said...

கேரள ஆதிவாசிகள் மாப்பிள்ளை குச்சிகளின் நீளம் ஒரே அளவுதானா ?
த ம 2

'பரிவை' சே.குமார் said...

கலக்கலான ஒயின்ஷாப்தான் போங்க...
தினமணி செய்திக்கு வாழ்த்துக்கள்.