Showing posts with label prayaga. Show all posts
Showing posts with label prayaga. Show all posts

20 December 2014

பிசாசு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

எந்த வகையிலும் சேர்க்க முடியாமல் ஒரு புதுமாதிரியாக வெளிவந்திருக்கிறது பிசாசு. கொஞ்சம் ஹாரர், கொஞ்சம் மர்மம், நிறைய செண்டிமெண்ட் சேர்ந்த கலவை.

பிரயாஹாவின் துர் மரணத்துடன் தான் படம் துவங்குகிறது. அழகுப் பிசாசின் மரணத்தை காணச் சகியாதவர்கள் நியாயசீலர் KSRன் கூற்றுப்படி எழுந்து கிளம்பிவிடுவது உசிதம். மற்றவர்கள் தொடர்க...

சாலை விபத்தொன்றில் உயிருக்கு போராடும் பிரயாஹாவை ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கிறார் நாகா. பலனின்றி பலியாகிறார் பிரயாஹா. நேர்ந்த சம்பவம் காரணமாய் மனதளவில் பாதிக்கப்படுகிறான் நாகா. அது மட்டுமில்லாமல் அவனுடைய வீட்டில் சில அமானுஷ்ய அனுபவங்களுக்கும் ஆளாகிறான். போகப் போக இறந்துபோன பிரயாஹாதான் தனது வீட்டில் வசிக்கிறாள் என்பதை உணர்கிறான் நாகா. அதன்பிறகு விளைவுகளும் காரணங்களும் மீதிக்கதை.

அரொல் கொரெலியின் வயலின் இசை இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. படத்தில் ஒரே பாடல். அதில் இசை, பாடல் வரிகள், பாடகியின் குரல் என்று அத்தனை விஷயங்களும் கச்சிதமாய் பொருந்தியிருக்கின்றன. பாடியிருப்பது பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்தரா, எழுதியிருப்பது தமிழச்சி தங்கபாண்டியன்.

அடுத்தது ராதா ரவியின் அபாரமான நடிப்பு. இறந்துபோன மகளை விகாரமான உருவில் கண்டதும் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு ஹாரர் படம் என்பதையும் மறக்கடித்து கலங்கடிக்கின்றன.

பிரயாஹா பாவம். இப்படியொரு முதல் படம் எந்த நடிகைக்கும் அமையக்கூடாது. நாகாவின் நடிப்பில் மிஷ்கின் டச் அப்பட்டமாக தெரிகிறது. ப்ளாட்டோ, டீக்கடை ஆசாமி, ஆட்டோ ஓட்டுநர், ஆவி அமுதா என்று நிறைய சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் உலவுகின்றன. 

உறுத்தலாக நிறைய காட்சிகள். குறியீடுகளாக இருக்கக்கூடும். எனக்கு புரியவில்லை. உதாரணமாக ஒழுகிக்கொண்டிருக்கும் பச்சைக் குடம், ஊர்ந்து மேயும் பூரான்கள், முறைத்துப் பார்க்கும் மஞ்சள் புடவை அம்மாள். இறுதியாக சிகப்பு / பச்சை நிறங்களை வைத்து கபடி ஆடியிருக்கிறார் மிஷ்கின்.

முதுகுத் தண்டை சில்லிட வைக்கிறது என்பார்களே அதுபோன்ற ஹாரர் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு பிசாசு உகந்ததல்ல. இது தமிழ் சினிமாவின் வழக்கமான டெம்ப்ளேட்டுக்குள் அடங்காத ஹாரர். பிரமாதமான படம் என்று சொல்ல முடியாது. சில காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, சில காட்சிகள் நம்முடைய பொறுமையை கடுமையாக பரிசோதனை செய்கின்றன. ஆமாம், பிசாசு படம் பார்க்க நிறைய பொறுமை அவசியம். கிட்டத்தட்ட எருமையின் அளவிற்கு பொறுமை. அப்புறம் கொஞ்சம் படம் பார்க்கும் ஆர்வம். இவையிரண்டும் இருந்துவிட்டால் ஒரு சுஹானுபவம் கிடைக்கப்பெறும். அவ்வளவுதான்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment