Showing posts with label director. Show all posts
Showing posts with label director. Show all posts

16 January 2015

அன்புள்ள வலைப்பூவிற்கு,

-- SPOILER ALERT --

புதுவருட சபதம் போல ஒவ்வொரு முறையும் இனி இயக்குநர் ஷங்கர் படங்களை பார்க்கவே கூடாது என்று நினைக்கும் ஆள் நான். ஆனால் படம் வெளியாவதற்குள் எப்படியும் ஏதாவது ஒரு தனிமம் என்னை காமன் மேன் ஜோதியில் ஐக்கியமாக்கி விடும். படம் பிடிக்கிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். இம்முறை அத்தகைய பிரத்யேக தனிமங்கள் விக்ரமின் தோற்றம் மற்றும் நோய்க்கிருமி சமாச்சாரம்.

இந்த கால்பந்தில் எல்லாம் ‘கோல்’ அடித்தவுடன் எதிரணி ரசிகர்களை பார்த்து ‘சத்தம் போடாதே’ என்று சைகை காட்டுவார்களே, அதுபோல விக்ரம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வாயடைக்க வைத்திருக்கிறார். சில காட்சிகளில் சீனியரை நினைவூட்டுகிறார். உதாரணமாக, எமியிடம் உங்க ஸாரியை நான் ஏத்துக்கிட்டேன். நீங்க போகலாம் என்று சொல்லும்போது எனக்கு அன்பே சிவம் படத்தில் கமல் சந்தான பாரதியிடம் பேசும் காட்சி நினைவுக்கு வந்தது. விக்ரமுடைய அபார நடிப்பையும், உழைப்பையும் போலவே ஒப்பனைக்காரர்களும், ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் ஆட்களும், ஒளிப்பதிவாளரும் போற்றப்பட வேண்டியவர்கள். அத்தனையும் விக்ரமிற்கும் படத்திற்கும் பலம் கூட்டியிருக்கிறது.

உமி நீக்கிய தானியமாய் எமி. எமியின் அந்த உதடுகள்... அடடா எப்படி இத்தனை நாட்கள் கவனிக்காமல் போனேன் ? உயிரூட்டப்பட்ட ஆரஞ்சு சுளைகள். திரையில் எமி தோன்றிய காட்சிகளில் எல்லாம் நான் அந்த சுளைகளை மட்டும்தான் பார்த்தேன். நம்ப முடியவில்லை அல்லவா ? சரி, எமியின் கழுத்துக்கு கீழே காட்டாத காட்சிகளில் என்று படித்துக்கொள்ளுங்கள்.

விளம்பர உலகம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் படத்துக்கு அல்வா மாதிரி ஸ்பான்சர்கள் கிடைத்திருக்கிறார்கள். படச்செலவுக்கு பணமும் ஆச்சு, விளம்பரமும் கிடைத்த மாதிரி ஆச்சு. 

ஷங்கர் இம்முறை சமூக பிரச்சனைகளில் வாயை வைக்காதது என் போன்றவர்களுக்கு பெரிய ஆறுதல். குளிர்பான சர்ச்சை தொடர்பாக ஒரு காட்சி வந்ததும், போச்சுடா பொது மக்கள் ஆவேசமாக கருத்து சொல்லப்போகிறார்கள் என்று பயந்தே போனேன்.

என்னோடு நீ இருந்தால் என்ற பாடல் நெஞ்சே எழு’வையும் (மரியான்) அடியே’வையும் (கடல்) சேர்த்து பிசைந்தாற் போல இருக்கிறது. காலத்திற்கும் நிற்கக்கூடிய பாடல் அது. மற்ற பாடல்கள் பார்த்து ரசிக்கக் கூடியவை.

ஷங்கர் படங்கள் ஒரு மேஜிக் போன்றவை. பது மலர்ச்சியாக பார்க்கும்போது பரவசப்படுத்தும். சில வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்தால் இப்படியா தாழம்பூவை காதில் வாங்கி சொருகிக்கொண்டோம் என்று நமக்கே சங்கடமாக இருக்கும். ஐ’யிலும் அப்படி நிறைய. Influenza நோய்க்கிருமி தாக்கிய ஒருவர் பல சாகசங்கள் புரிகிறார். கதாநாயகியை தூக்கிக்கொண்டு குழாய் வழியாக மாடியிலிருந்து இறங்குகிறார், ஓடும் ரயிலின் மீது தாவி குதித்து சண்டை போடுகிறார். சண்டைக்காட்சிகளில் இயற்பியல் விதிகளை எல்லாம் சர்வசாதாரணமாக மீறுகிறார்கள். Well, இப்பொழுதெல்லாம் சினிமாக்களில் யாரும் தர்க்கம் பார்ப்பதில்லை, பார்த்தால் சக சினிமா ரசிகர்களே உதைக்க வருவார்கள்.

(கிட்டத்தட்ட) கதை என்னவென்று சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் கசிந்துவிட்டது ஐ’க்கு ஒரு மிகப்பெரிய பலவீனமாக போய்விட்டது. ஒருவேளை அப்படி கசியவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்து வரப்போகும் காட்சிகளை யூகிப்பது பெரிய சிரமமில்லை. சுரேஷ் கோபி எமியிடம் ‘என்னை அங்கிள்’ன்னு கூப்பிடாதே’ என்று சொல்லும்போது அந்த எந்தபெத்த சஸ்பென்ஸ் உடைபட்டுவிடுகிறது. 

நீளம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அலுப்பு தட்டவில்லை. வேண்டுமானால், பவர் ஸ்டார், சந்தானம் காட்சிகளை கொஞ்சம் கத்தரிக்கலாம். கிட்டத்தட்ட படம் முடிவுறும் தருவாயில் வரும் சந்தானத்தின் “நல்லா இருந்தேன். நாசமா போயிட்டேன்” காமெடியை எல்லாம் தவிர்த்திருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தும்.

இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வாங்குவதற்காக டெல்லி வரை சென்றார்கள் என்று ஊடகங்களில் தெரிந்துக்கொண்டேன். நல்லவேளையாக கொடுக்கவில்லை. நியாயமாக ‘ஏ’ சான்றிதழ் பெற வேண்டிய படம். கவர்ச்சிக்காக அல்ல. வன்முறை என்று சொல்வதை விட, இத்தனை கோரமான காட்சிகளை எல்லாம் சிறார்கள் பார்த்தால் மனதளவில் பாதிக்கப்படக்கூடும். 

குறைகளை மீறி திரையில் தோன்றும் படத்தில் விரவிக்கிடக்கும் ஒரு செழிப்பான தோற்றம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. பொதுவாக வில்லன்கள் என்றால் அடித்து கை, காலை உடைப்பார்கள், சுடுவார்கள், கொல்வார்கள். அந்தமாதிரி இல்லாமல் நோய்க்கிருமியை செலுத்துவது, பதிலுக்கு கதாநாயகன் வில்லன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விகாரத்தோற்றத்தை ஏற்படுத்தும்படி செய்வது ஒரு அதிர்ச்சியான வசீகரத்தை ஏற்படுத்துகிறது. சில ஸைக்கோ படங்கள் எல்லாம் பார்த்தால் ஒருவித போதை ஏறும் இல்லையா, அதுபோல ஐ ஒரு விலக்கப்பட்ட பரவச உணர்வை ஏற்படுத்துகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 December 2014

பிசாசு

அன்புள்ள வலைப்பூவிற்கு,

எந்த வகையிலும் சேர்க்க முடியாமல் ஒரு புதுமாதிரியாக வெளிவந்திருக்கிறது பிசாசு. கொஞ்சம் ஹாரர், கொஞ்சம் மர்மம், நிறைய செண்டிமெண்ட் சேர்ந்த கலவை.

பிரயாஹாவின் துர் மரணத்துடன் தான் படம் துவங்குகிறது. அழகுப் பிசாசின் மரணத்தை காணச் சகியாதவர்கள் நியாயசீலர் KSRன் கூற்றுப்படி எழுந்து கிளம்பிவிடுவது உசிதம். மற்றவர்கள் தொடர்க...

சாலை விபத்தொன்றில் உயிருக்கு போராடும் பிரயாஹாவை ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கிறார் நாகா. பலனின்றி பலியாகிறார் பிரயாஹா. நேர்ந்த சம்பவம் காரணமாய் மனதளவில் பாதிக்கப்படுகிறான் நாகா. அது மட்டுமில்லாமல் அவனுடைய வீட்டில் சில அமானுஷ்ய அனுபவங்களுக்கும் ஆளாகிறான். போகப் போக இறந்துபோன பிரயாஹாதான் தனது வீட்டில் வசிக்கிறாள் என்பதை உணர்கிறான் நாகா. அதன்பிறகு விளைவுகளும் காரணங்களும் மீதிக்கதை.

அரொல் கொரெலியின் வயலின் இசை இன்னமும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. படத்தில் ஒரே பாடல். அதில் இசை, பாடல் வரிகள், பாடகியின் குரல் என்று அத்தனை விஷயங்களும் கச்சிதமாய் பொருந்தியிருக்கின்றன. பாடியிருப்பது பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்தரா, எழுதியிருப்பது தமிழச்சி தங்கபாண்டியன்.

அடுத்தது ராதா ரவியின் அபாரமான நடிப்பு. இறந்துபோன மகளை விகாரமான உருவில் கண்டதும் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு ஹாரர் படம் என்பதையும் மறக்கடித்து கலங்கடிக்கின்றன.

பிரயாஹா பாவம். இப்படியொரு முதல் படம் எந்த நடிகைக்கும் அமையக்கூடாது. நாகாவின் நடிப்பில் மிஷ்கின் டச் அப்பட்டமாக தெரிகிறது. ப்ளாட்டோ, டீக்கடை ஆசாமி, ஆட்டோ ஓட்டுநர், ஆவி அமுதா என்று நிறைய சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் உலவுகின்றன. 

உறுத்தலாக நிறைய காட்சிகள். குறியீடுகளாக இருக்கக்கூடும். எனக்கு புரியவில்லை. உதாரணமாக ஒழுகிக்கொண்டிருக்கும் பச்சைக் குடம், ஊர்ந்து மேயும் பூரான்கள், முறைத்துப் பார்க்கும் மஞ்சள் புடவை அம்மாள். இறுதியாக சிகப்பு / பச்சை நிறங்களை வைத்து கபடி ஆடியிருக்கிறார் மிஷ்கின்.

முதுகுத் தண்டை சில்லிட வைக்கிறது என்பார்களே அதுபோன்ற ஹாரர் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு பிசாசு உகந்ததல்ல. இது தமிழ் சினிமாவின் வழக்கமான டெம்ப்ளேட்டுக்குள் அடங்காத ஹாரர். பிரமாதமான படம் என்று சொல்ல முடியாது. சில காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, சில காட்சிகள் நம்முடைய பொறுமையை கடுமையாக பரிசோதனை செய்கின்றன. ஆமாம், பிசாசு படம் பார்க்க நிறைய பொறுமை அவசியம். கிட்டத்தட்ட எருமையின் அளவிற்கு பொறுமை. அப்புறம் கொஞ்சம் படம் பார்க்கும் ஆர்வம். இவையிரண்டும் இருந்துவிட்டால் ஒரு சுஹானுபவம் கிடைக்கப்பெறும். அவ்வளவுதான்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 December 2014

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மொக்கையா படம் எடுங்க, வேணாம்ன்னு சொல்லல. ஆனால் புதுசா ஏதாவது மொக்கை படம் எடுங்க'ன்னு எழுதியதற்கு இவ்வளவு சீக்கிரம் எதிர்வினை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அஜய் – ரென்யா காதலித்து மணம் செய்துகொள்கின்றனர். முதலிரவில் ரென்யா அகால மரணம் அடைகிறாள். மனதளவில் பாதிக்கப்பட்ட அஜய் இறந்துபோன ரென்யாவை (ரென்யாவின் ஆவியை) தொடர்புகொள்ள முயற்சிக்கிறான். அந்த முயற்சியில் ரெட் டோர் என்று சொல்லப்படும் ஒரு மர்மக்கதவை திறந்துவிடுகிறான். அதனால் ஏற்படும் சம்பவங்களை வழவழ கொழகொழவென்று சொல்லி படுத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக ஹாரர் படங்களில் அமானுஷ்யம் அல்லது அறிவியல் அல்லது இரண்டையும் இணைத்து கதை சொல்லியிருப்பார்கள். ர இதில் எந்த வகையிலும் சேராது. கொஞ்சம் ஆவி இத்யாதிகள், கொஞ்சம் சைக்காலஜி, கொஞ்சம் க்ரைம் த்ரில்லர், கொஞ்சம் மர்மம் எல்லாம் சேர்த்து குழப்பி அடித்திருக்கிறார்கள். ஹாரர் என்றில்லை, எல்லா மர்மக்கதைகளிலும் கதையின் முடிவில் அல்லது முடிவுக்கு முன்னால் முடிச்சுகளை அவிழ்த்துவிட வேண்டும். ர’வில் அப்படியில்லை. செங்கதவு என்கிறார்கள். அதனை திறந்தால் உலகமே அழியும் அபாயம் இருப்பதாக சொல்கிறார்கள். செங்கதவை வரலாற்றில் ஏற்கனவே இரண்டு முறை திறந்திருப்பதாக சொல்கிறார்கள். Red door cannot be closed என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசி வரை செங்கதவுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை சொல்லவே இல்லை. முடிக்கும்போது வழக்கம் போல அடுத்த பாகத்திற்கு லீடு, ஆமாம் அது ஒன்றுதான் கேடு.

ஒரு சிலர் தவிர, மற்றவர்களின் நடிப்பு படுசெயற்கை. ஹீரோ அஷ்ரப் எதற்கெடுத்தாலும் ரென்யாடா, ரென்யாமா என்று மொக்கை போடுகிறார். தேடிக் கண்டுபிடித்து ஒரு மொக்கை ஹீரோயினை போட்டிருக்கிறார்கள். நல்லவேளையாக அவர் சில நிமிடங்களில் இறந்துவிடுகிறார் என்றாலும் ஹீரோவின் நினைவுகள் வழியாக அடிக்கடி வந்து உயிரெடுக்கிறார்.

படத்தில் உருப்படியான ஒரே காட்சி - ஒரு மின்தடை ஏற்பட்ட இரவில், அஜய் வீட்டில் தனியாக இருக்கும்போது ஒரு உருவம் படியில் ஏறிச்செல்வதை காண்கிறான். டார்ச் லைட் அடித்து பார்க்கிறான். மெஸனைனில் அவனைப் போலவே ஒருவன் நிற்கிறான். அஜய் பதட்டத்துடன் படியேறி அந்த உருவம் நின்ற இடத்திற்கு செல்கிறான். வெறுமையாக இருக்கிறது. அந்த உருவம் நின்ற இடத்தில் நின்று கீழே பார்க்கிறான். இப்பொழுது கீழேயிருந்து அவனைப் போன்ற ஒருவன் அவன் முகத்தில் டார்ச் வெளிச்சம் பாய்ச்சுகிறான்.

முடிவில் ஃபில்மோகிராபி என்று இன்ஸிடியஸ் உட்பட மூன்று ஆங்கில படங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் ட்ரைலரை பார்த்த மாத்திரத்தில் இன்ஸிடியஸ் சாயல் என்று நிறைய பேர் சொன்னது நினைவுக்கு வந்தது. நான் இன்ஸிடியஸ் பார்த்ததில்லை. 

EXPERIMENTAL FANTASY THRILLER என்றார்கள். ஆனால் அதற்கான சோதனை எலிகள் பார்வையாளர்கள் தான் என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். குழந்தைகள் ஏதோ புதிதாக முயற்சி செய்திருக்கிறார்கள் என்கிற ஒரு காரணத்திற்காக வேண்டுமானால் ர'வை ஒருமுறை பொறுத்துக்கொள்ளலாம். மற்றபடி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

25 March 2014

வேலைக்கார நாயி !

அன்புள்ள வலைப்பூவிற்கு,

விகடன் மேடையில் கடந்த நான்கு வாரங்களாக கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நாகேஷ், நடிகர் திலகம் பற்றி, படையப்பாவில் டான்ஸ் ஆடியது பற்றி, ரகுவரனின் ‘ஐ நோ’ ரகசியம் என உண்மையோ பொய்யோ படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. சிலர் ரஜினி – கமலை வைத்து படம் இயக்குவீர்களா...? அப்படி இயக்கினால் படத்தின் ஒன்லைன் என்ன...? என்பது போன்ற ஹைப்போதெட்டிக்கல் கேள்விகளை கேட்டு வைக்கிறார்கள். முத்து படத்தில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் வசனம் வைத்தது பற்றி ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு மட்டும் வசதியாக தப்பித்துக் கொண்டார். இதையெல்லாம் படித்ததும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. முத்தாய்ப்பாக முந்தாநாள் தொலைக்காட்சியில் படையப்பா ஒளிபரப்பியதால் பதிவாகவே எழுதிவிட்டேன்.

பொதுவாக கே.எஸ்.ரவிகுமாரை இந்தமாதிரி படங்கள் மட்டும்தான் இயக்குவார் என்று வகைப்படுத்திவிட முடியாது. ஒட்டுமொத்தமாக அவர் ஒரு நல்ல எண்டர்டெயினர். ஆனால் நாட்டாமை, ஊர் பெரியவர் வகையறா சமாச்சாரங்கள் என்றால் அவருக்கு அல்வா மாதிரி. அது குறித்து ஒரு வாசகர் கேட்டிருக்கும் கேள்விக்கு அவருடைய பதிலை முதலில் பார்த்துவிடலாம்.

'பண்ணையார்’, 'நாட்டாமை’, 'ஜமீன்எல்லாம் எப்போதோ ஒழிந்துவிட்டன. ஆனால், சினிமாவில் மட்டும் ஏன் இன்னமும் விடாமல் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?

'இது எனக்கான கேள்விதான்! நகரத்தைவிட கிராமங்கள் இன்னைக்கு ரொம்ப வேகமா மாறிட்டு வருது. அண்ணனுக்கு மரியாதை கொடுக்கும் தம்பி, பெத்தவங்களைப் பத்திரமாப் பார்த்துக்கும் பிள்ளைகள், விவசாயம், கிராமக் கட்டுப்பாடு... இதெல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழியும் நிலைமையில் இருக்கு.

சென்னைலயே வளர்ந்த எனக்கு முதல்முறையா கிராமத்துல தங்கியிருந்தப்போ, அதெல்லாம் ஆச்சரியமா இருந்தன. அதனாலேயே கிராமங்கள் இப்பவும் எனக்கு இஷ்டம். ஆனா, அந்த விஷயங்கள் இவ்வளவு சீக்கிரம் காலாவதி ஆகும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதான், 'இப்படி எல்லாம் இருந்திருக்காங்கனு இப்போதைய தலைமுறைக்கு ரீ-க்ரியேட் பண்ணிக் காட்டணும்னு நினைச்சேன். அதனாலதான் அந்த மாதிரி படங்கள் எடுக்கிறேன். தவிர சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், காமெடினு மசாலா தூவுறதுக்கும் கிராமத்து சப்ஜெக்ட்லதான் பெரிய ஸ்கோப் இருக்கு!''

சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்கள் அவருடைய அந்த வகை படங்களில் சிறப்பானவை. அஜித்தை வைத்து வரலாறு என்றொரு படம் இயக்கினார். நகர வாழ்க்கையை மையமாக கொண்ட படம்தான். ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தெரியும், வரலாறும் அவருடைய வழக்கமான ஊர் பெரியவர் டெம்ப்ளேட் கதைதான். பணக்கார அஜித், அவருக்கு கீழே நிறைய வேலைக்காரர்கள், இளவயது அஜித்தை சின்ன அய்யா என்று அழைப்பார்கள், இடிச்சபுளி செல்வராஜ் போன்ற ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் பட்டாளம், கிளைமாக்ஸில் ஒரு உயிர் தியாகம். கெட்ட கேட்டுக்கு அஜித் ரசிகர்கள் வரலாறை க்ளாஸ் + மாஸ் என்று கூவிக்கொண்டு இருந்தார்கள். அதைப்பற்றி இன்னொரு நாள் விரிவாக பார்க்கலாம்.

இப்படி கே.எஸ்.ஆரின் பெரும்பாலான படங்களில் தவறாமல் அங்கம் வகிப்பவர்கள் வேலைக்காரர்கள். அதுவும் அதிபயங்கரமான விசுவாசம் கொண்ட வேலைக்காரர்கள். ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டின் உறுப்பினர்களை விட வேலைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். முதலாளிகள் அவ்வப்போது டென்ஷன் ஆகும்போதெல்லாம் வேலைக்காரர்களின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டு தங்களை ஆசுவாசப் படுத்திக்கொள்வார்கள். கன்னத்தில் அறை விடுகிற பழக்கம் நடைமுறை வாழ்க்கையில் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. சினிமாவில் தான் எதற்கெடுத்தாலும் கன்னத்தில் அறைகிறார்கள். அதுவும் காதலை ப்ரொபோஸ் செய்ததற்கெல்லாம் அறைகிறார்கள். அத்தனை சிறிய பிரதேசத்தில் தூரத்தில் இருந்து எப்படி குறி பார்த்து அறைகிறார்கள் என்பதே ஆச்சரியக்குறியாக இருக்கிறது.

பாட்டாளி படத்தில் ஒரு காட்சி. ரம்யா கிருஷ்ணன் ஒரு வேலைக்காரரிடம் மீன்தொட்டியை இடம் மாற்றும் பணியை ஒப்படைப்பார். ஒப்படைக்கும் முன்பே ஒரு அறை விடுவார். தவறு செய்வதற்கு முன்பே அறைந்துவிட்டால் தவறு செய்யமாட்டார் என்று வேறு வியாக்கியானம் பேசுவார். கொஞ்ச நேரத்தில் பணியாளர் மீன் தொட்டியை கீழே போட்டு உடைத்துவிட்டு அதான் ஏற்கனவே அறைஞ்சிட்டீங்களே என்று சொல்வார். அதே ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் காபி டம்ளரை தவறவிட்டதற்காக செளந்தர்யாவை அறைய வருவார். நல்லவேளையாக சூப்பர்ஸ்டார் தடுத்து விடுவார். அவருடைய நிறைய படங்களில் வேலைக்காரர்களை அறையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தவிர, வேலைக்கார நாயி என்ற பதம் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படும். இதுபோன்ற அறைகள், வசனங்கள் பெரும்பாலும் திமிர் பிடித்த கதாபாத்திரம் ஒன்று செய்வதாக காட்டினாலும் எனக்கென்னவோ கொஞ்சம் டூ மச் என்றுதான் தோன்றுகிறது.

நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் எல்லோரும் வேலைக்காரர்களை நன்றாகவே நடத்துகிறார்கள். நிறைய பேர் தங்கள் குடும்ப உறுப்பினரை போல கவனித்துக் கொள்கிறார்கள். அதுவும் கே.எஸ்.ஆர் பார்த்து ரசித்த கிராமங்களில் என்றால் கேட்கவே வேண்டாம், நிச்சயமாக வேலைக்காரர்களை நன்றாக கவனித்து அவர்கள் வீட்டு நல்ல காரியங்களை கூட முன்னின்று நடத்தித் தருகிறார்கள். ஒருவேளை முன்பொரு காலத்தில் வேலைக்காரர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டிருக்கலாம். அவருடைய படங்களில் வரும் பண்ணையார், நாட்டாமை, ஜமீன் போல வேலைக்காரர்களை அறைவதும், நாய் என்று விளிப்பதும் கூட வழக்கொழிந்துவிட்ட செய்கைகள் என்றே கருதுகிறேன்.

ஒருவேளை இன்னமும் யாராவது அப்படி இருந்தால் கூட அதையெல்லாம் சினிமாவில் சரி என்பது போல காட்டுவது முறையல்ல. இனியாவது கே.எஸ்.ஆர் அதுபோன்ற காட்சிகளை தவிர்க்கலாம்.

செய்வீர்களா கே.எஸ்.ரவிகுமார்...? நீங்கள் இதைச் செய்வீர்களா...?

அடுத்து வருவது: மரப்பல்லி

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

10 March 2014

ஆப்ரா கா டாப்ரா !


Post Comment

14 October 2013

பிரபா ஒயின்ஷாப் – 14102013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நய்யாண்டியை முன்வைத்து சில விஷயங்கள்...
நய்யாண்டி படத்திற்கு இணையத்தில் எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்களின் முதல் பத்தியை மட்டும் படித்துப்பார்த்தால் நம்மையறியாமல் ஒரு நமுட்டுச்சிரிப்பு வந்து விடுகிறது. களவாணி ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரம், வாகை சூட வா சமூக சிந்தனையுடன் கூடிய அருமையான திரைப்படம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். உண்மைதான். ஆனால் இப்போது ஏன் அதையெல்லாம் எழுதுகிறார்கள் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை, அடிப்பதற்கு முன்னால் தெளிவாக இருப்பதற்காக நடைபெறும் வழக்கமான சோடா தெளிப்பு சடங்கு தான்.

இயக்குநரின் களவாணி வணிக ரீதியில் வெற்றிப்படம் தான் என்றாலும் அதை நல்ல சினிமா என்று சொல்லிவிட முடியாது. கடைசியில், அதுவும் ஒரு வேலை வெட்டியில்லாத பொறுக்கியின் கதை தான். இறுதிக்காட்சியில் நாயகனுக்கு திடீர் பொறுப்பு வெளக்கெண்ண துளிர் விடுவதால் மட்டுமே அதை நல்ல சினிமாவாக ஏற்றுக்கொள்ள முடியாது. இயக்குநரின் அடுத்த படமான வாகை சூட வா முதல் படத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது. படம் முடிந்ததும் எழுந்து நின்று கை தட்ட வேண்டிய மரியாதைக்குரிய படைப்பு. அதிலும் வணிக ரீதியான வெற்றிக்கு தேவைப்பட்ட நகைச்சுவை காட்சிகள், கதைக்கு தேவையே இல்லாத இனியா போர்ஷனெல்லாம் இருந்தது. ஆனாலும் படம் ஓடவில்லை.

விமல் என்று ஒரு அற்புதமான கலைஞன். ஹீரோயினை ரொமாண்டிக்காக சைகையில் அழைக்க வேண்டிய காட்சியில் கூட, அய்யே பாஸ் மூச்சா போயிட்டாரு என்பது போன்ற ரியாக்சன் கொடுப்பவர். அவர் சற்குணத்தின் படங்களில் மட்டும் நல்ல நடிப்பை வழங்கிவிடுவது ஒரு புதிராக இருக்கிறது. அதைப்பற்றி பிறிதொரு நாளில் பேசுவோம்.

வாகை சூட வா படத்தை நான் வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் பார்த்தேன். திரையரங்கில் அதிகபட்சம் இருபது பேர் இருந்திருக்கக்கூடும். வாகை சூட வா சமூக சிந்தனையுள்ள படம். தேசிய விருது பெற்ற அற்புதமான காவியம் என்றெல்லாம் நய்யாண்டி விமர்சனத்தில் எழுதுபவர்களெல்லாம் அந்த படத்தை விஜய் டிவியிலோ அல்லது டவுன்லோட் செய்தோ தான் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இவர்களெல்லாம் திரையரங்கில் பார்த்திருந்தால் வாகை சூட வா ஏன் தோல்வியடைய வேண்டும் ? அந்த தோல்வி தந்த விரக்தியின் காரணமாகத் தான் சற்குணம் தற்பொழுது கமர்ஷியல் சாக்கடையில் குதித்திருக்கிறார். வாகை சூட வா படத்தை தோல்வியடையச் செய்த சினிமா ரசிகர்களுக்கு நய்யாண்டியை காரணம் காட்டி சற்குணத்தை வசை பாட எந்த தகுதியும் இல்லை !

*********************************************

சனிக்கிழமை மாலை, மணலி அருகே ஒரு அரசாங்க மதுக்கூடம். நானும் சிங்கமும் ஒரு பியரை வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். ஏற்கனவே காலையிலிருந்து நிறைய சர்பத் சாப்பிட்டிருந்ததால் பியரை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்கு எதிரே ஒரு முதியவர் கார்டினல் குவாட்டருடன் வந்து அமர்ந்தார். எனக்கு பொதுவாக இதுபோன்ற அனானி ஆசாமிகளிடம் பேச்சு கொடுப்பதில் ஒரு சுவாரஸ்யம். ஆனாலும் பெரும்பாலும் சிங்கம் சொல்லும் நேரு மாமா, காந்தி தாத்தா, ராஜீவ் காந்தி கொலை, அமெரிக்க உளவுத்துறை, ஐரோப்பிய நாடுகளின் சதி போன்ற கதைகளையே கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அரிதாக எப்பொழுதாவது தனியாளாக மதுக்கூடம் சென்றால் அங்கே ஏற்கனவே ஒத்தையில் இருக்கும் யாருடனாவது சென்று அமர்ந்துக் கொள்வேன். நாமாக பேச்சு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அங்கே சென்று அமர்ந்ததும் அவர்களே புலம்பத் துவங்கிவிடுவார்கள். சரி, எதிரே கார்டினல் முதியவர் அமர்ந்தார் இல்லையா ? பாட்டிலை திறந்தவர் ஒரே மூச்சில் ஒரு கட்டிங்கை காலி செய்தார். பெரியவர் முக சாயலிலும், மதுக்கூட பணியாளரை விரட்டிய விதமும் என்னுடைய செத்துப்போன தாத்தாவை நினைவூட்டியது. செத்துப்போன தாத்தா என்றதும் உங்களுக்கு நகைச்சுவையாக இருந்திருக்கலாம். ஆனால், நான் செண்டிமெண்ட் ஆகிவிட்டேன். முன்னர் குறிப்பிட்டது போல ஏற்கனவே நிறைய சர்பத் சாப்பிட்டிருந்ததால் செண்டிமெண்ட் ஆகியிருக்கலாம். இதில் நகைமுரண் என்னவென்றால் சிங்கம் இருக்கிறாரே, அவர் மதுக்கூடத்தில் எளியவர்கள் யாராவது வந்து சைட் டிஷ் கடன் கேட்டாலே கோபப்படுவார். அவருக்கும் அந்த பெரியவரை பார்த்ததும் அவருடைய தாத்தா ஞாபகம் வந்துவிட்டது. எல்லாம் எம்.சி செய்கிற வேலை. தாத்தா எஞ்சியிருந்த கட்டிங்கையும் ஒரே மடக்கில் குடித்து முடித்துவிட தாத்தாவிற்கு இன்னொரு குவாட்டர் வாங்கிவரும் படி பணித்தார் சிங்கம். இந்தமுறை ஒரு கட்டிங்கை மட்டும் துரிதமாக குடித்துவிட்டு பாட்டிலை இடுப்பில் சொருகிக்கொண்டார் தாத்தா. அவருக்கு வயது 99. குடிப்பதற்கு யாராவது நோபல் பரிசு தருவார்களானால் அதை அந்த தாத்தாவிற்கே தர வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைக்கிறேன். 

*********************************************

அதே சனிக்கிழமை காலை, ஆரூர் மூனா வீட்டிற்கு சென்றோம். மனிதர் தீவிர இலக்கியத்திலிருந்து சரோஜா தேவி புத்தகங்கள் வரை ஒரு பெரிய திரட்டு வைத்திருக்கிறார். இந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக். ஆரூர் மூனாவை ஆரம்பத்திலிருந்து படித்து வருபவன் நான். சும்மா போனேன் வந்தேன் பிரியாணி சாப்பிட்டேன் என்று பொதுவான விஷயங்களை சுமாரான எழுத்துநடையில் எழுதுவார். ஆனால் அவருடைய தளத்தின் பக்கவாட்டில் சே குவேரா படம் இருக்கும். சரி, எல்லோரும் ஃபேஷனுக்காக வைத்துக்கொள்கிறார்களே அப்படியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அவரிடம் அதுபற்றி கேட்கவில்லை. மற்றொரு நாள் அவரை புத்தக சந்தையில் வைத்து பார்த்தபோது கைநிறைய புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். கொஞ்ச நேரம் அவரிடம் பேச்சு கொடுத்ததில் அவர் எவ்வளவு பெரிய வாசிப்பாளர் என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட தமிழின் முக்கியமான புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்திருப்பார் போல. பாவம் புத்தகங்களை அடுக்கி வைக்க இடமில்லாமல் சிரமப்படுகிறாரே என்று அவரிடமிருந்து சில சுஜாதா நாவல்களையும், சில நக்கீரன் பதிப்பக கிசுகிசு ரக புத்தகங்களையும் லவட்டிக்கொண்டு வந்தாயிற்று.

*********************************************

பார்த்த படம்... யா யா !
தன்ஷிகா இருக்கிறாரே என்ற ஒரு நம்பிக்கையில் தான் படம் பார்த்தேன். படுமொக்கை. சிரிப்பே வரவில்லை. ஆனால் சீரியஸ் என்று நினைத்து எடுத்திருக்கும் காட்சியெல்லாம் சிரிப்பு மூட்டுகிறது. ஒரு காட்சியில் தன்ஷிகா “விளையாட்டா நினைச்சேன்... திரும்பிப் பார்த்தா மனசு பூரா அவன்தான் இருக்கான்...” என்று சிவாவுடனான காதலை விவரிக்கிறார். தன்ஷிகாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. காதல் சந்தியா காமெடி சந்தியா ஆகிவிட்டார். முதன்முறையாக சொந்தக்குரலில் பேசி நடித்திருப்பார் போல. அவருடைய குரலில் செம கிக். குரலில் மட்டும்தான். சந்தானம் காமெடியெல்லாம் பெரிதாக எடுபடவில்லை. யாரோ ஒரு நண்பர் விமர்சனத்தில் எழுதியிருந்தது போல, படத்தில் பவர் ஸ்டார் வரும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. 

யா யா படத்தில் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக ஒரு துணை நடிகை நடித்திருக்கிறார். பெயர் ரிதி மங்கள். அவரை இதற்குமுன்பு ஏதோவொரு பி-கிரேடு படத்தில் பார்த்திருக்கிறேன். சும்மா அவரை கூகுள் செய்ய அவர் நடித்த சைலன்ட் வேல்லி (Silent Valley) என்ற மலையாள படத்தைப் பற்றி சில தகவல்கள் கிடைத்தன. ஏதோ லெஸ்பியன் சம்பந்தப்பட்ட சைக்கோ த்ரில்லர் கதை போலிருக்கிறது. இணையத்தில் தரவிறக்க கிடைத்தால் பார்க்க வேண்டும்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 March 2013

பரதேசி

அன்புள்ள வலைப்பூவிற்கு,

இனி இயக்குனர் பாலா படங்களை பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருந்தவர்களில் நானும் ஒருவன். விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவு தான் என்னை திரையரங்கிற்கு நகர்த்திச் சென்றது. எப்போதுமே ஒரு படத்தை வெளிவந்ததும் சுடச்சுட பார்ப்பதற்கும், நான்கைந்து நாட்கள் ஆறப்போட்டு அடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சஸ்பென்ஸோடு படம் பார்க்கும்போது அது ஏற்படுத்தும் தாக்கம், விமர்சனங்களை படித்துவிட்டு பார்க்கும்போது கிடைப்பதில்லை.

பரதேசியைப் பற்றி ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்துவிட்டன. புதிதாக சொல்வதற்கு ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு நான் Grotesque என்கிற படத்தை பார்த்தேன். திரைப்பட வரலாற்றில் அதீத வன்முறை கொண்ட பத்து திரைப்படங்களை பட்டியலிட்டால் Grotesque கண்டிப்பாக இடம்பெறும். முதன்முதலில் அதனை பார்த்தபோது அது பிடித்ததா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் கடுமையான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இன்றளவும் அந்த படம் என்னை அடிக்கடி மன உளைச்சலிலிருந்து விடுவிக்கிறது. உங்கள் முகத்தில் தொடர்ந்து கரியை பூசிக்கொண்டே இருக்கும் இருபெரும் அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்தாலே உங்களுக்கு காறி உமிழ தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். எனினும் உங்களுடைய கோபம் அவரை துளியளவு கூட பாதிக்கப்போவதில்லை. போன்ற சமயங்களில் Grotesque படத்தில் துன்புறுத்தப்படும் மனிதர்களாக அந்த இருபெரும் அரசியல்வாதிகளை நினைத்துக்கொண்டால் ஒருவித மனநிம்மதி கிடைப்பதை உணருவீர்கள். வன்முறை, செக்ஸ் என்று நம்முடைய உணர்ச்சிகளுக்கு கட்டாயம் ஒரு வடிகால் தேவை. இல்லையென்றால் ஒரு கட்டத்தில் அது வெடித்துச் சிதறிவிடும். Noctural emission கேள்விப்பட்டதில்லையா ? அதுபோல பாலாவுடைய ஆழ்மன வன்முறை உணர்வுகளுக்கு அவருடைய படங்கள் வடிகாலாக இருக்கலாம்.

கார்த்திக்கு ஒரு பருத்தி வீரன் கிடைத்தது போல, அதர்வாவிற்கு பரதேசி கிடைத்திருக்கிறது. முதல் படமாக கிடைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதர்வாவின் நடிப்பு ஒன்றும் உறுத்தலாக இல்லையென்றாலும், சாலூர் ராசா என்கிற அந்த வேடத்தில் கச்சிதமாக நடிப்பதற்கு தமிழ் சினிமாவில் அதர்வாவை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வேதிகாவும், தன்ஷிகாவும் நாயகிகள். தன்னுடைய பட நாயகிகளை அவலட்சணமாக காட்சிப்படுத்த முனையும் திருவாளர் பாலாவிற்கு இந்தமுறை தோல்வியே கிடைத்திருக்கிறது. குறிப்பாக தன்ஷிகா, ஒரு பத்து லோடு கரியை இறக்கி தன்ஷியின் முகத்தில் தேய்த்தால் கூட அவர் அழகாகவே இருப்பார். 

கவிஞர் விக்கிரமாதித்யனும், அதர்வாவின் பாட்டியும் மனதைவிட்டு அகல மறுக்கின்றனர். கிராமத்தில் வசிப்பவர்கள், நிச்சயமாக விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் போன்ற ஒருவரையாவது தங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பார்கள். 

ஆமாம், பரதேசியில் பவர்ஸ்டார் நடிப்பதாக இருந்ததே. இப்படிப்பட்ட கதைக்கு எப்படி பவர் பொருந்துவார் என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் வருகிற மருத்துவர் பரிசுத்தம் - அதுதான் பவருக்கு ஒதுக்கப்பட்ட வேடம். இப்போது நடன இயக்குனர் சிவசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அந்த வேடத்தில் மட்டும் பவர் ஸ்டார் நடித்திருந்தால், பரதேசி பஞ்சராகியிருக்கும்.

அவத்த பையா பாடலும் அதன் பெண்குரலும் அநியாயத்திற்கு வசீகரிக்கின்றன. மற்றபடி இசையைக் காட்டிலும் கேமரா அதிக கவன ஈர்ப்பு செய்கிறது. முதல்காட்சியில் சாலூர் கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் செல்வதிலிருந்தே கேமராவின் ஆளுமை துவங்கிவிடுகிறது. 

வழக்கமாக பாலா படங்களில் காணப்படும் சில விஷயங்கள் பரதேசியில் இல்லாதது அதிர்ச்சியான ஆறுதல். போலீஸ், நீதிபதிகளை கிண்டலடிக்கவில்லை; திருநங்கை அல்லது போன்ற கதாபாத்திரங்கள் இல்லை; உச்சக்கட்ட காட்சியில் நாயகன் பொங்கி எழுந்து வன்முறையில் இறங்கவில்லை. இப்படி நிறைய இல்லைகள்.

பரதேசியிலிருந்து இருவேறு தரப்பினரும் புரிந்துக்கொள்ள விஷயங்கள் இருக்கிறது. நமக்கு கீழே பணிபுரிபவர்களை அன்பாக நடத்தவேண்டும், அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம், நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மேல்மட்டத்திற்கு நேர்மையான உழைப்பை தரவேண்டும். அதையெல்லாம் விட முக்கியமாக சுதந்திரத்தின் மேன்மையை சமகால இளைஞர்களுக்கு உணர்த்தியிருக்கிறது பரதேசி.

நமக்கு ஃபீலிங் படமெல்லாம் பிடிக்காது என்பவர்களுக்காக சொல்கிறேன் - பரதேசி ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம். நல்ல நிறுவனத்தில் வேலை செய்து, கைநிறைய ஊதியம் வாங்கினாலும் கூட என்ன வாழ்க்கைடா இது ? என்கிற ரீதியில் புலம்புபவர்கள் பரதேசியை பாருங்கள். உங்களுடைய நிலையை மனமகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள பழகிவிடுவீர்கள்...!

என்னையும் சேர்த்து, பரதேசியின் மீது மட்டரகமான எதிர்பார்ப்பை வைத்திருந்த அனைவருடைய முகத்திலும் கரியை பூசிவிட்டார் பாலா...!

தொடர்புடைய சுட்டி: Grotesque

அடுத்து வருவது: அந்தமான் - போர்ட் ப்ளேர் நகருலா

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment