Showing posts with label seven. Show all posts
Showing posts with label seven. Show all posts

8 June 2013

கடையேழு வள்ளல்கள்



அன்புள்ள வலைப்பூவிற்கு,

சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு என்னுடைய அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. கிட்டத்தட்ட என்னுடைய குருநாதருக்கு எழுதப்படும் வாசகர் கடிதம் போலவே இருந்தது. நெல்லையிலிருந்து செந்தில் என்பவர் அனுப்பியிருந்தார். அவர் என்னுடைய வாசகர் என்றும், கடையேழு வள்ளல்களை பற்றியும் அவர்கள் ஏன் வள்ளல்கள் ஆனார்கள் என்றும் எழுதும்படி பணித்திருந்தார். அதாவது மயிலுக்கு போர்வை தந்த பேகன், அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் மாதிரி ஒவ்வொரு வள்ளலுக்கும் பின் உள்ள வரலாற்று சம்பவத்தை குறித்து கேட்டிருக்கிறார். “அது ஏன்டா என்னைப் பார்த்து அந்த கேள்விய கேட்ட !” என்று செந்திலை பளார் விடும் கவுண்டமணி நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது. வாட் எ கோ-இன்ஸிடென்ஸ், நம்முடைய வாசகர் பெயரும் செந்தில் தான் ! இருப்பினும் என்னையும் நம்பி ஒரு ஜீவன் ஒரு வாசகர் விருப்பத்தை முன் வைத்திருப்பதால் தாமதமானாலும் கூட அதனை முடிந்த வரைக்கும் நிறைவேற்றலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் படித்து இன்புற அன்னார் அனுப்பிய குறுந்தகவல்.

புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பத்துப்பாட்டு, லொட்டு லொசுக்கு போன்ற சங்க இலக்கியங்களில் வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அவர்கள் வாழ்ந்த காலத்தை கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுக்கப்பட்டுள்ளனர். ஆகமொத்தம் இருபத்தியொன்று. ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றிய தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. தவிர, செந்தில்நாதர் கடையேழு வள்ளல்களைப் பற்றி மட்டும் கேட்டிருப்பதால் மற்றவர்களை வசதியாக புறக்கணித்து விடலாம். சிறு குறிப்பாக :-

முதலேழு வள்ளல்கள்: சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்
இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன், சந்தன்

சரி, கடையேழு வள்ளல்கள் ? பாரி, அதியமான், பேகன்.... அப்புறம்... அப்புறம்... ம்ம்ம் புரோட்டா சாப்பிடலாமா ? கடையேழு வள்ளல்கள்: பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன். ஏன் பாரி, அதியமான், பேகன் - மூவரை மட்டும் நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது ? ஏன் கடையேழு வள்ளல்களில் மற்றவர்கள் அவ்வளவு ஃபேமஸ் இல்லை. எனக்குத் தெரிந்த முக்கியமான காரணம், நம்முடைய பாடத்திட்டம். பள்ளிக்கூட கல்வித்தமிழில் பாரி, அதியமான், பேகன் பற்றி படித்திருக்கிறோம். மற்றவர்களை பற்றி அதிகம் படித்ததில்லை. அப்படியே படித்திருந்தாலும் அவை பதினாறு மதிப்பெண் கேள்விகளில் கேட்கப்படுவதில்லை. மறுபுறம், முன்னரே குறிப்பிட்டது போல இவர்கள் மூவருக்கும் இருப்பதைப் போல ஸ்பெஷல் வரலாற்றுச் சம்பவம் மற்றவர்களுக்கு பதியப்படவில்லை / முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அப்படியென்றால் அவர்கள் எதன் அடிப்படையில் வள்ளல்களாக தெரிவு செய்யப்பட்டனர் ? யார் இதையெல்லாம் தெரிவு செய்தார்கள் ? போலவே கோர்வையாக நிறைய கேள்விகள் ஏழத் துவங்கிவிட்டன. இதுகுறித்து சில புத்தகங்கள், இணையத்தரவுகளை படித்து / சேகரித்து வருகிறேன். பெரிய ஆய்வு, ஆராய்ச்சி அளவில் இல்லையென்றாலும் கூட செந்தில் அவர்களுடைய கேள்விக்கு விடை சொல்லும் வகையில் அடுத்த சில வாரங்களுக்கு போதிய இடைவெளியில் கடையேழு வள்ளல்கள் பற்றிய பதிவுகள் தொடராக வெளிவரும் என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிக்குறிப்பு 1: தமிழ் மீதுகொண்ட பற்று காரணமாகவும், வள்ளல்களின் வரலாற்றின் மீதான ஆர்வம் காரணமாகவும் வாசகர் செந்தில் அவர்கள் தன்னுடைய மகனுக்கு பேகன் பெயர் சூட்டியுள்ளார்.

அடிக்குறிப்பு 2: இதுகுறித்த தகவல்களை இணையத்தில் தேடியபோது பதிவுகளைக் காட்டிலும் பின்னூட்டங்களில் நிறைய தகவல்கள் கிடைத்தன. எனவே, இதனை படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளலாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment