Showing posts with label shahrukh. Show all posts
Showing posts with label shahrukh. Show all posts

9 August 2013

“கஞ்சிக்கு செத்த பய” ஷாருக்கான்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் பற்றிய செய்திகள் வரத் துவங்கியதிலிருந்தே குறிப்பாக லுங்கி டான்ஸ் காணொளி வெளியானதிலிருந்து இணையவெளியில் சில நண்பர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது, ஷாருக்கான் தமிழர்களை கிண்டலடிப்பதாகவும் ரஜினியை கிண்டலடிப்பதாகவும் வருத்தப் / கோபப் படுகின்றனர். உண்மைதான். ஓம் சாந்தி ஓம் படத்தில் கூட புலியுடன் கட்டிப்புரண்டு சண்டை போடுவது போல காட்சியமைத்திருப்பார். ரா ஒன் படத்தில் தமிழராக நடித்து நூடுல்ஸையும் தயிரையும் பெனஞ்சு அடித்தார். நிற்க: மேற்கூறிய இரண்டு படங்களையும் நான் பார்த்ததில்லை, வெறும் கேள்வியறிவு தான். ஷாருக் – தமிழர்கள் – ரஜினி என்கிற காம்பினேஷன் சென்னை எக்ஸ்பிரஸில் தூக்கலாக இருந்து, சில தமிழ் நண்பர்கள் இதற்காகவே சென்னை எக்ஸ்பிரஸை புறக்கணிக்க போகிறோம் என்றெல்லாம் சொல்லும்போது என் சார்பாக சில விஷயங்களை எடுத்துரைக்க விரும்புகிறேன்.

1. ஷாருக்கான் ரஜினியை பெருமைப்படுத்தும் வகையில் பாடல் வைப்பதும், கமலஹாசன் ஜாக்கிசானை அழைத்து வந்து இசை வெளியீட்டு விழா நடத்துவதும், ஜாக்கி சான் மல்லிகா ஷெராவத்தை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதும் அவர்களிடையே நிலைக்கொண்டிருக்கும் பாசப்பிணைப்பின் காரணமாக அல்ல. வெறும் வணிக நோக்கமே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் ! சூப்பர்ஸ்டாருக்கு கும்பிடு போட்டால் தான் கோலிவுட்டில் குப்பை கொட்ட முடியும் என்ற சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் ஷாருக். ரா ஒன் படத்தில் ரஜினியை பயன்படுத்தியபோது அதுகுறித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் அக்வாபினா இருக்கா’ன்னு கேட்டா அக்காவை பத்தி தப்பா பேசாதே’ன்னு* பொங்கி எழும் ஆட்கள் உள்ள பதிவுலகில் அது வழக்கம்போல தவறாகவே புரிந்துக்கொள்ளப்பட்டது. என் முகத்தில் பூசியிருக்கும் கரியை துடைத்துக்கொள்ளுமாறு ரஜினி ரசிகர்கள் சிலர் அறிவுறுத்தியிருந்தார்கள். ரா ஒன் வெளிவந்தபோது விழுந்தடித்துக்கொண்டு பார்த்த ரஜினி ரசிகர்கள் முகத்திற்கு அந்த ‘கரி’ எப்படி ட்ரான்ஸ்பர் ஆனது என்று தெரியவில்லை. 
* சொலவடை பிரயோகம் – நன்றி சுரேஷ் கண்ணன்.

2. தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதாவது தன்னையே யாரேனும் கிண்டலடித்தால் கூட ரசித்துச் சிரிக்கிற விசித்திர மனோபாவம் தமிழனுக்கு உண்டு. ஒரு எழுத்தாளர் தொலைக்காட்சியில் தோன்றி கட்டம் போட்ட சட்டை போட்டா கண்டிப்பா தமிழனா தான் இருப்பான் என்று பேசுகிறார். துணிக்கடையில கட்டைப்பை வாங்குவதற்கு மல்லு கட்டுவான், டீக்கடையில் ஓசி பேப்பர் படித்துவிட்டு அறச்சீற்றம் கொள்வான், பொது இடங்களில் சத்தமாக போன் பேசி சுற்றி இருப்பவர்களை மிரள வைப்பான் என்று தமிழர்களை பற்றி யாரென்ன சொன்னாலும் அதை அதிகம் ரசிப்பவன் தமிழனே ! அப்படியிருக்கும்போது ஷாருக்கான் தமிழர்களை கிண்டலடிப்பதையும் போலவே ஏற்றுக்கொண்டு ரசிக்க வேண்டியது தானே ? ஏன் முடியவில்லை, தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்வு குறைந்துவிட்டதா ? அல்லது வெளியாள் ஒருத்தர் கிண்டலடிக்கிறாரே என்ற கோபமா ?

3. நீங்க இப்படி செஞ்சதே இல்லையா சார் ? என்று தமிழ் சினிமாவைப் பார்த்து கேட்க வேண்டும் போல இருக்கிறது. தமிழ் சினிமாவில் மலையாளி என்றாலே ஜாக்கெட், பாவாடை மட்டும் அணியும் டீக்கடை நாயரின் மனைவி. சேட்டு என்றால் குல்லா, குங்குமத்திலகம் வைத்துக்கொண்டு அடகுக்கடை வைத்திருப்பவர். தமிழர்களெல்லாம் நூடுல்ஸுக்கு தயிரை தொட்டுக்கொள்வதில்லை, எல்லா தமிழர்களுடைய பெயரும் அய்யர், அய்யங்கார் என்று முடிவதில்லை என்று சொல்பவர்களே எல்லா சேட்டுகளும் அடகுக்கடை வைத்திருப்பதில்லை. எல்லா சேட்டுகளும் சின்னவீடு சித்திரா வைத்திருப்பதில்லை. அதெல்லாம் நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிகள் என்றால் சென்னை எக்ஸ்பிரஸையும் வெறும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு ரசிக்கலாம்.

3.1. Last but not least, ஷாருக் லுங்கி டான்ஸின் வாயிலாக ரஜினியை கேவலப்படுத்திவிட்டார் என்று  சொல்லிக்கொள்பவர்களுக்கு: சமீபத்தில் குட்டிப்புலி என்றொரு தமிழ்ப்படம் வெளியானது. கண்டிப்பாக பெரும்பாலானவர்கள் அந்த கேவலமான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்தப்படத்தில் ஒரு காட்சி. ஹீரோவுடைய அம்மாவும் அத்தையும் ஹீரோவுக்கு நவநாகரிக உடைகள் வாங்க துணிக்கடைக்கு செல்கிறார்கள். பையனின் இடுப்பளவு அம்மாவுக்கு தெரியவில்லை. கடைக்காரர் ஆள் யாரை மாதிரி இருப்பார் என்று அடையாளம் கேட்கிறார். அதற்கு அம்மாக்காரி கடையிலிருக்கும் ஷாருக்கான் படத்தை காட்டி, “அந்த பையன் மாதிரி” என்கிறார். உடனே பக்கத்திலிருக்கும் அத்தை, “ஏத்தா... நம்ம பையன் எவ்வளவு மொகலட்சணமா இருப்பான்... எவனோ கஞ்சிக்கு செத்த பயலை காட்டிக்கிட்டு இருக்க...”. கவனிக்க: எவனோ கஞ்சிக்கு செத்த பய. அதைக்கேட்ட கடைக்காரர் இன்னொரு கடைப்பையனிடம், “இதை மட்டும் ஷாருக்கான் கேட்டாருன்னு வச்சிக்கோயேன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிருவாருடீயேய்...” என்று ரகசியமாக சொல்கிறார். ஏன் சம்பந்தமே இல்லாமல் இந்தக்காட்சியில் ஷாருக்கை நோண்டியிருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தமிழ் சினிமாக்காரர்கள் வழக்கமாக தங்களுக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துக்கொள்ள ரஜினியையும் அஜித்தையும் தானே பயன்படுத்துவார்கள். ஏன் சசிகுமாரின் முந்தய படத்தில் கூட அவர் ரஜினியின் ரசிகராகத்தானே நடித்திருந்தார். போலவே ரஜினியின் புகைப்படத்தை காட்டி எவனோ கஞ்சிக்கு செத்த பய’ன்னு சொல்லியிருக்கலாம் தானே ?

ஷாருக்கானாவது ரஜினிக்கு ட்ரிப்யூட் என்ற பெயரில் மறைமுகமாக / விவரம் தெரியாமல் ரஜினியை கிண்டலடிக்கிறார். தமிழர்களை பற்றி சரியான புரிதல் இல்லாமல் காட்சிகள் அமைக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் ஷாருக்கானை நேரடியாகவே “கஞ்சிக்கு செத்த பய” என்று சொல்லி கிண்டலெல்லாம் அடிக்காமல் தனிமனித தாக்குதலே நிகழ்த்தியிருக்கிறார்கள்.

கடைசியாக, சென்னை எக்ஸ்பிரஸ் உங்களுக்கு பிடிக்காமல் இருந்து பார்க்காமல் இருப்பது உங்கள் உரிமை. ஆனால், தமிழர் என்ற காரணத்திற்காக புறக்கணிக்கிறேன் என்றெல்லாம் கூறி உங்கள் மொழி துவேஷ கொண்டையை வெளிக்காட்ட வேண்டாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment