Showing posts with label deepika. Show all posts
Showing posts with label deepika. Show all posts

2 December 2013

பிரபா ஒயின்ஷாப் – 02122013

அன்புள்ள வலைப்பூவிற்கு,

சிங்கம் 2 அவ்வப்போது பிட்டு பிட்டாக பார்த்ததை முன்னிட்டு சில வரிகள். இப்பொழுதெல்லாம் முனுக்குன்னா ஏதாவதொரு அமைப்பு கேஸ் போட்டுவிடுகிறார்களே. அதனை தவிர்க்க ஹரி எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டிருக்கிறார் என்று பார்ப்போம். ஒரு வில்லனை இஸ்லாமியராக சித்தரித்ததை சரி கட்டுவதற்காக மன்சூர் அலிகான் கதாபாத்திரம். ஒரு கிறிஸ்தவ தலித் ராஜேந்திரனுக்கு பதிலாக சந்தானம் கதாபாத்திரம். மன்சூர் அலிகானை உருவத்தை முன்னிட்டு ‘காட்டெருமை’ என்று அழைக்கவேண்டிய வசனத்தை வேண்டுமென்றே ‘பைசன்’ என்று மாற்றியிருக்கிறார். இன்னொரு காட்சியில் ‘பொட்டை’ என்று வரவேண்டிய வசனம் ‘பேடி’ என்று மாற்றப்பட்டுள்ளது. நிஜவாழ்க்கையில் யாராவது கோபத்தில் இருக்கும்போது ‘பேடி’ என்று திட்டி பார்த்திருக்கிறீர்களா...? எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தவர்கள் டேனி விஷயத்தில் மட்டும் கவனக்குறைவாக விட்டிருக்கிறார்கள். சூர்யா ஒரு காட்சியில் டேனியை ‘African Animal’ என்று திட்டுகிறார். ஒருவேளை ஆப்பிரிக்கர்கள் தமிழ் படம் பார்த்து கேசெல்லாம் போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ...?

பழைய தமிழ் சினிமாக்களில் மெயின் ஹீரோயின் ஒருவர் இருக்கும்போது இரண்டாவதாக ஒருவர் ஹீரோவை ஒருதலையாக காதலிப்பார். ஹீரோவுடன் ஒரு கனவுப்பாடலில் ‘திறமை’ காட்டுவார். ஹீரோவுக்கு உதவிகள் செய்து, படம் முடியும் தருவாயில் அற்பாயுசில் போய்ச் சேர்ந்துவிடுவார். அந்தமாதிரி ஒரு வேடம் ஹன்சிகாவுக்கு. சித்தப்பாவின் ஐபோன் பாஸ்வேர்ட் பயன்படுத்தி சூர்யாவிற்கு தகவல் கொடுக்கிறார். ஹன்சிகாவுக்கு பாஸ்வேர்ட் தெரிந்துவிட்டது என்ற காரணத்திற்காக குடும்பத்திலேயே அவரை விஷம் வைத்து கொன்றுவிடுகிறார்கள். அடப்பாவிகளா...! ஐபோன் பாஸ்வேர்ட் தெரிஞ்சிடுச்சு’ன்னா மாத்திக்க வேண்டியது தானே. அதுக்கு ஏன்டா ஹன்சிகாவை போட்டீங்க...? பச்ச மண்ணுடா அது...!

மறுபடியும் சுஜாதாவிடமே திரும்பியாயிற்று. முதலில், கொலை அரங்கம். அப்புறம், ஒரு நடுப்பகல் மரணம். இரண்டும் க்ரைம் த்ரில்லர்கள். முதலாவதில் கணேஷ் – வசந்த் வருகிறார்கள். ஒரு சொத்து, நான்கு வாரிசுகள். ஒருவர் மட்டும் சொத்தை முழுமையாக அபகரிக்க முயற்சிக்கிறார். அது யாரென்பதை சஸ்பென்ஸ் கலந்து, எண்பதுகளில் நடைபெற்ற இலங்கைத்தமிழர் போராட்டத்தை லேசாக உரசி சொல்லியிருக்கிறார். கணேஷ் – வசந்தை படிக்கும்போது ‘அந்த’ இரட்டையர்கள் நினைவுக்கு வந்தார்கள். குறிப்பாக வசந்த் கணேஷை ‘பாஸு’ என்று விளிப்பதும், ஃபிகர்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்காக இருப்பதும் பைலட்டை நினைவூட்டியது. உண்மையில் எல்லோருக்குள்ளும் ஒரு கணேஷும் ஒரு வசந்த்தும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொஞ்சம் இண்டலிஜென்ஸ், கொஞ்சம் ஜொள்ளு, கொஞ்சம் பொறுப்பு, கொஞ்சம் விளையாட்டுத்தனம் எல்லாம் கலந்தவன் தானே மனிதன். ஒரு நடுப்பகல் மரணம் அதைவிட சுவாரஸ்யமான கதை. புதுமண ஜோடியொன்று தேனிலவுக்கு செல்கிறது. கணவன் கொல்லப்படுகிறான். வழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு முன்னூறு பக்கங்களில் க்ளைமாக்ஸை எட்டுகிறது. 

க்ரைம் த்ரில்லர் நாவல், க்ரைம் த்ரில்லர் சினிமா என்றெல்லாம் பார்க்கும்போது நாம் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் என்று சலிப்பாக இருக்கிறது. யாரும் நம்மை டாட்டா சுமோவில் அரிவாளோடு துரத்துவதில்லை...? யாரும் நம்மை கடத்திக்கொண்டு போய் அறையில் அடைத்து வைப்பதில்லை...? ஒரு போலீஸ் விசாரனையில்லை. ஒரு கோர்ட், கேஸ் இல்லை. தூங்கி விழிப்பது, சாப்பிடுவது, அலுவலகம் செல்வது. ச்சே என்ன வாழ்க்கை இது...?

6174 நாவலுடன் தொடர்புடைய மிங்குன் ஆலயம்
அலுவலகத்தில் தோழி ஒருவர், அவரிடம் யவன ராணி முதல் பாகம் மட்டும் இல்லையென்று ஆன்லைனில் ஆர்டர் செய்துக்கொண்டிருந்தார். புத்தகத்தின் விலை 210ரூ. 250க்கு மேல் வாங்கினால் இலவச டோர் டெலிவரி. என்ன செய்வது என்று யோசித்தவரிடம் 6174 என்ற நாவலைப் பற்றி நான் கேள்விப்பட்ட அருமை பெருமைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி வாங்க வைத்துவிட்டேன். வேறெதற்கு...? இரவல் வாங்கி படிக்கத்தான். புத்தகம் தற்போது என் கைவசம்...!

இரவல் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் சாட்டில் அறிமுகமானார். பரஸ்பர நலம் விசாரிப்புகள் கடந்து, ‘நீங்க நிறைய புத்தகங்கள் படிப்பீர்களா...?’ என்றொரு கேள்வியை கேட்டார். எனக்கு புரியவில்லை. ‘ஏன் கேட்கிறீர்கள்...?’ என்றேன். ‘இரவல் வாங்கி படிக்கத்தான்...!’ என்று பதிலளித்தார். எனக்கு பக்’கென்று ஆகிவிட்டது. அத்துடன் அவருடனான தொடர்பை நிறுத்திக்கொண்டேன். சென்ற வாரத்தில் ஒருநாள் ராஜ் குமார் என்ற வாசகர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் ‘உங்களிடம் நிறைய புக்ஸ் இருக்கிறதா...?’ என்று கேட்டுவிட்டார். அதே ‘பக்’. அதெல்லாம் இல்லைங்க. ரீடிங்கில் நானொரு பிகினர் என்று சொல்லிவிட்டேன். என்னுடைய புத்தகங்களை நான் இரவல் கொடுப்பதில்லை. கூடாது என்றில்லை. இரவல் வாங்கும் 99.9 சதவிகிதக்காரர்கள் அதனை திருப்பிக்கொடுப்பதில்லை. அதுகூட பிரச்சனையில்லை. கொடுத்து சிலநாள் கழித்து புத்தகத்தை கேட்டால் அதுவா..? அது இங்கதான் எங்கேயோ இருந்துச்சு... தெரியல மச்சான்... என்று அலட்சியமாக பதில் வரும். அட்லீஸ்ட் படிச்சியா...? என்று கேட்டால் எங்க மாப்ள...? வண்டி கழுவுறதுக்கு கூட நேரமில்லை என்று சலித்துக்கொள்வார்கள். அப்புறம் என்ன மா’ன்னாவுக்குடா புக்கை வாங்கின’ன்னு கடுங்கோபம் வரும். இப்படித்தான் சென்ற புத்தகக்காட்சியில் சிங்கம் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்த மூன்று புத்தகங்களை வாங்கினார். அதை இரவல் வாங்கி படித்துவிட வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்குள் அவருடைய நண்பர் யாரோ முந்திவிட்டார். இப்ப புக்கு எங்கடா’ன்னா என் சின்னாத்தாளோட மாமியா பொண்ணு கட்டிக்கிட்ட பையனோட சித்தப்பன் வீட்டுல இருக்குங்குறார். எங்க போய் முட்டிக்கிறது...? புஸ்தகம் வனிதா விருத்தம் பர ஹஸ்தே கதம் கதம்...!

நீ மட்டும் இரவல் வாங்கலாமா...? என்று கேட்கலாம். இரவல் வாங்குவதில் நான் மற்றவர்களிடம் என்ன மாதிரியான டீசன்ஸியை எதிர்பார்க்கிறேனோ அதையே மற்றவர்களிடமும் பின்பற்றுகிறேன். இரவல் வாங்கிய புத்தகத்திற்கு ப்ரையாரிட்டி கொடுத்து படித்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவேன். ஆரூர் மூனா வீட்டிலிருந்து பத்து, பதினைந்து புத்தகங்கள் எடுத்து வந்திருப்பேன். அவற்றில் இன்னும் இரண்டு புத்தகங்கள் மட்டும்தான் பாக்கி. முடித்ததும் வீடு தேடிச்சென்று கொடுத்துவிடுவேன். அதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. திரும்பக் கொடுத்தால் தான் அடுத்த செட்டு புத்தகங்கள் இரவல் கிடைக்கும்.

தீபிகாவுக்காக சில சமயங்களில் யூடியூபில் பார்க்கிற பாடல். அப்படியொரு முறை பார்த்துக் கொண்டிருந்தபோது பாடலின் மீதான ஈர்ப்பிற்கு பாடகியும் ஒரு காரணம் என்று புரிந்தது. கணீரென்ற குரல். யாரென்று கூகுள் செய்தேன். சுநிதி செளஹான். தமிழில் கூட சில பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் எதுவும் ‘டில்லி வாலி’ போல வசீகரிக்கவில்லை.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

9 August 2013

“கஞ்சிக்கு செத்த பய” ஷாருக்கான்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் பற்றிய செய்திகள் வரத் துவங்கியதிலிருந்தே குறிப்பாக லுங்கி டான்ஸ் காணொளி வெளியானதிலிருந்து இணையவெளியில் சில நண்பர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது, ஷாருக்கான் தமிழர்களை கிண்டலடிப்பதாகவும் ரஜினியை கிண்டலடிப்பதாகவும் வருத்தப் / கோபப் படுகின்றனர். உண்மைதான். ஓம் சாந்தி ஓம் படத்தில் கூட புலியுடன் கட்டிப்புரண்டு சண்டை போடுவது போல காட்சியமைத்திருப்பார். ரா ஒன் படத்தில் தமிழராக நடித்து நூடுல்ஸையும் தயிரையும் பெனஞ்சு அடித்தார். நிற்க: மேற்கூறிய இரண்டு படங்களையும் நான் பார்த்ததில்லை, வெறும் கேள்வியறிவு தான். ஷாருக் – தமிழர்கள் – ரஜினி என்கிற காம்பினேஷன் சென்னை எக்ஸ்பிரஸில் தூக்கலாக இருந்து, சில தமிழ் நண்பர்கள் இதற்காகவே சென்னை எக்ஸ்பிரஸை புறக்கணிக்க போகிறோம் என்றெல்லாம் சொல்லும்போது என் சார்பாக சில விஷயங்களை எடுத்துரைக்க விரும்புகிறேன்.

1. ஷாருக்கான் ரஜினியை பெருமைப்படுத்தும் வகையில் பாடல் வைப்பதும், கமலஹாசன் ஜாக்கிசானை அழைத்து வந்து இசை வெளியீட்டு விழா நடத்துவதும், ஜாக்கி சான் மல்லிகா ஷெராவத்தை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதும் அவர்களிடையே நிலைக்கொண்டிருக்கும் பாசப்பிணைப்பின் காரணமாக அல்ல. வெறும் வணிக நோக்கமே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் ! சூப்பர்ஸ்டாருக்கு கும்பிடு போட்டால் தான் கோலிவுட்டில் குப்பை கொட்ட முடியும் என்ற சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் ஷாருக். ரா ஒன் படத்தில் ரஜினியை பயன்படுத்தியபோது அதுகுறித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் அக்வாபினா இருக்கா’ன்னு கேட்டா அக்காவை பத்தி தப்பா பேசாதே’ன்னு* பொங்கி எழும் ஆட்கள் உள்ள பதிவுலகில் அது வழக்கம்போல தவறாகவே புரிந்துக்கொள்ளப்பட்டது. என் முகத்தில் பூசியிருக்கும் கரியை துடைத்துக்கொள்ளுமாறு ரஜினி ரசிகர்கள் சிலர் அறிவுறுத்தியிருந்தார்கள். ரா ஒன் வெளிவந்தபோது விழுந்தடித்துக்கொண்டு பார்த்த ரஜினி ரசிகர்கள் முகத்திற்கு அந்த ‘கரி’ எப்படி ட்ரான்ஸ்பர் ஆனது என்று தெரியவில்லை. 
* சொலவடை பிரயோகம் – நன்றி சுரேஷ் கண்ணன்.

2. தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதாவது தன்னையே யாரேனும் கிண்டலடித்தால் கூட ரசித்துச் சிரிக்கிற விசித்திர மனோபாவம் தமிழனுக்கு உண்டு. ஒரு எழுத்தாளர் தொலைக்காட்சியில் தோன்றி கட்டம் போட்ட சட்டை போட்டா கண்டிப்பா தமிழனா தான் இருப்பான் என்று பேசுகிறார். துணிக்கடையில கட்டைப்பை வாங்குவதற்கு மல்லு கட்டுவான், டீக்கடையில் ஓசி பேப்பர் படித்துவிட்டு அறச்சீற்றம் கொள்வான், பொது இடங்களில் சத்தமாக போன் பேசி சுற்றி இருப்பவர்களை மிரள வைப்பான் என்று தமிழர்களை பற்றி யாரென்ன சொன்னாலும் அதை அதிகம் ரசிப்பவன் தமிழனே ! அப்படியிருக்கும்போது ஷாருக்கான் தமிழர்களை கிண்டலடிப்பதையும் போலவே ஏற்றுக்கொண்டு ரசிக்க வேண்டியது தானே ? ஏன் முடியவில்லை, தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்வு குறைந்துவிட்டதா ? அல்லது வெளியாள் ஒருத்தர் கிண்டலடிக்கிறாரே என்ற கோபமா ?

3. நீங்க இப்படி செஞ்சதே இல்லையா சார் ? என்று தமிழ் சினிமாவைப் பார்த்து கேட்க வேண்டும் போல இருக்கிறது. தமிழ் சினிமாவில் மலையாளி என்றாலே ஜாக்கெட், பாவாடை மட்டும் அணியும் டீக்கடை நாயரின் மனைவி. சேட்டு என்றால் குல்லா, குங்குமத்திலகம் வைத்துக்கொண்டு அடகுக்கடை வைத்திருப்பவர். தமிழர்களெல்லாம் நூடுல்ஸுக்கு தயிரை தொட்டுக்கொள்வதில்லை, எல்லா தமிழர்களுடைய பெயரும் அய்யர், அய்யங்கார் என்று முடிவதில்லை என்று சொல்பவர்களே எல்லா சேட்டுகளும் அடகுக்கடை வைத்திருப்பதில்லை. எல்லா சேட்டுகளும் சின்னவீடு சித்திரா வைத்திருப்பதில்லை. அதெல்லாம் நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிகள் என்றால் சென்னை எக்ஸ்பிரஸையும் வெறும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு ரசிக்கலாம்.

3.1. Last but not least, ஷாருக் லுங்கி டான்ஸின் வாயிலாக ரஜினியை கேவலப்படுத்திவிட்டார் என்று  சொல்லிக்கொள்பவர்களுக்கு: சமீபத்தில் குட்டிப்புலி என்றொரு தமிழ்ப்படம் வெளியானது. கண்டிப்பாக பெரும்பாலானவர்கள் அந்த கேவலமான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்தப்படத்தில் ஒரு காட்சி. ஹீரோவுடைய அம்மாவும் அத்தையும் ஹீரோவுக்கு நவநாகரிக உடைகள் வாங்க துணிக்கடைக்கு செல்கிறார்கள். பையனின் இடுப்பளவு அம்மாவுக்கு தெரியவில்லை. கடைக்காரர் ஆள் யாரை மாதிரி இருப்பார் என்று அடையாளம் கேட்கிறார். அதற்கு அம்மாக்காரி கடையிலிருக்கும் ஷாருக்கான் படத்தை காட்டி, “அந்த பையன் மாதிரி” என்கிறார். உடனே பக்கத்திலிருக்கும் அத்தை, “ஏத்தா... நம்ம பையன் எவ்வளவு மொகலட்சணமா இருப்பான்... எவனோ கஞ்சிக்கு செத்த பயலை காட்டிக்கிட்டு இருக்க...”. கவனிக்க: எவனோ கஞ்சிக்கு செத்த பய. அதைக்கேட்ட கடைக்காரர் இன்னொரு கடைப்பையனிடம், “இதை மட்டும் ஷாருக்கான் கேட்டாருன்னு வச்சிக்கோயேன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிருவாருடீயேய்...” என்று ரகசியமாக சொல்கிறார். ஏன் சம்பந்தமே இல்லாமல் இந்தக்காட்சியில் ஷாருக்கை நோண்டியிருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தமிழ் சினிமாக்காரர்கள் வழக்கமாக தங்களுக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துக்கொள்ள ரஜினியையும் அஜித்தையும் தானே பயன்படுத்துவார்கள். ஏன் சசிகுமாரின் முந்தய படத்தில் கூட அவர் ரஜினியின் ரசிகராகத்தானே நடித்திருந்தார். போலவே ரஜினியின் புகைப்படத்தை காட்டி எவனோ கஞ்சிக்கு செத்த பய’ன்னு சொல்லியிருக்கலாம் தானே ?

ஷாருக்கானாவது ரஜினிக்கு ட்ரிப்யூட் என்ற பெயரில் மறைமுகமாக / விவரம் தெரியாமல் ரஜினியை கிண்டலடிக்கிறார். தமிழர்களை பற்றி சரியான புரிதல் இல்லாமல் காட்சிகள் அமைக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் ஷாருக்கானை நேரடியாகவே “கஞ்சிக்கு செத்த பய” என்று சொல்லி கிண்டலெல்லாம் அடிக்காமல் தனிமனித தாக்குதலே நிகழ்த்தியிருக்கிறார்கள்.

கடைசியாக, சென்னை எக்ஸ்பிரஸ் உங்களுக்கு பிடிக்காமல் இருந்து பார்க்காமல் இருப்பது உங்கள் உரிமை. ஆனால், தமிழர் என்ற காரணத்திற்காக புறக்கணிக்கிறேன் என்றெல்லாம் கூறி உங்கள் மொழி துவேஷ கொண்டையை வெளிக்காட்ட வேண்டாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment