வணக்கம் மக்களே...!
முன் குறிப்பு: ரங்குஸ்கி காட்சியையும் கலாபவன் மணி காட்சியையும் நீக்கிவிட்டார்கள், க்ளைமாக்ஸ் காட்சியின் நீளத்தை குறைத்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றிய டீம் மேனேஜர் ரிச்சர்டை வன்மையாக கண்டிக்கிறேன்...!!! (ஏன் பாஸ் இந்த கொலைவெறி...?)
ஏற்கனவே எந்திரன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து டரியலாகி "எந்திரன் - உணர்ச்சிகள் இல்லை...!" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன்பு அமரர் சுஜாதா அவர்களின் என் இனிய இயந்திரா நாவலை படிக்க நேர்ந்தது. சான்ஸே இல்லை... நாவல் முழுவதையும் ஒரே சிட்டிங்கில் படித்து முடித்தபோது ஏதோ வேற்றுகிரகத்துக்கு போய்வந்தது போல இருந்தது. அப்பேர்பட்ட ஓர் பேரறிஞனின் வசனங்களை முதல்முறை பார்த்தபோது ரசிக சிகாமணிகளின் இரைச்சல்களுக்கு மத்தியில் ரசிக்க முடியவில்லை. எனவே இன்னொரு முறை ஆறு வாரங்கள் கழிந்த பின்னர் ஆரவாரங்கள் இல்லாமல் பார்க்க வேண்டுமென முடிவு செய்திருந்தேன். அதுமட்டுமில்லாமல் "கொளத்தூர் கங்கா, விருகம்பாக்கம் தேவி கருமாரியில் எல்லாம் பார்த்தால் டல்லா இருக்கும்... சத்யம் அல்லது எஸ்கேப் சினிமாஸில் பார்த்தால் நல்லா இருக்கும்..." என்று டீம் மேனேஜர் ரிச்சர்ட் திருவாய் மலர்ந்திருந்தார். ஆனால் நான் சத்தியமாக எஸ்கேப் சினிமாஸில் பார்க்கவில்லை. சென்னை ராயபுரத்தில் "மதுரை சுனாமி" அண்ணன் அழகிரி பினாமி பெயரில் வைத்திருக்கும் ஐட்ரீம் சினிமாஸில் படம் பார்க்க நேர்ந்தது. மூட்டைப்பூச்சி கடியைக் கூட தாங்கிக்கொள்ளலாம் ஆனால் ரசிகர்களின் அலப்பறையை எல்லாம் நிச்சயம் தாங்க முடியாது. எனவே இரவுக்காட்சிக்கு சென்றேன். (அப்படியும் கூட்டம் கும்மியடித்தது வேறு விஷயம்...!).
முதல்முறை ரசிக்க முடியாத இசை, வசனம், Sound Effects, பாடல் காட்சிகளை இந்த முறை ஆற அமர ரசித்தேன். சிட்டி தலையை திருப்பும்போதும், அங்க அசைவுகளின் போதும் கேட்கும் Buzzing Sound முதற்கொண்டு மொத்தத்தையும் ரசித்தேன். இந்தமுறைதான் கவனித்து பார்க்க முடிந்தது. ஐஸ்வர்யா ராய் கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். (எந்த இடத்தில் என்றெல்லாம் கேட்கக் கூடாது...!).
பாடல் காட்சிகள் - வழக்கமாக ஷங்கர் படங்கள் என்றாலே பிரமிப்பாக இருக்கும். இதிலும் அப்படித்தான் என்பதை நேற்றிரவே சன் டி.வியில் பார்த்திருப்பீர்கள். வெள்ளித்திரையில் பார்த்தால் இன்னும் இன்னும் ஆச்சர்யங்கள். காதல் அனுக்கள் பாடலில் காட்டப்பட்ட பாலைவனத்தையும் பாலைவனத்திற்கு நடுவில் ஆங்காங்கே காணப்பட்ட குட்டிக்குட்டி குளங்களையும் வெகுவாக ரசித்தேன். கிளிமாஞ்சாரோ பாடலில் காட்டுவாசிகளின் உடையலங்காரமும் அவர்களின் நடன அமைப்பும் பிடித்திருந்தது. ரோபோடிக் பாடலில் ஐஸின் நடனம் சிலிர்க்க வைத்தது. பக்கத்து சீட் நண்பனிடம் இருந்து பாப்கார்னை ஆட்டையை போடும் ஆட்டத்தில் மும்முரமாக இருந்ததால் இரும்பிலே ஓர் இருதயம் பாடலை மட்டும் சரிவர ரசிக்க முடியவில்லை.
பாடல் வரிகள் - வைரமுத்து, பா. விஜய், மதன் கார்க்கி ஆகிய மூவரும் வடித்திருக்கிறார்கள். ராணுவக் காட்சி கவிதையை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டும் பிரம்மாண்டமல்ல பாடல் வரிகளிலும் தான். கவிப்பேரரசு வைரமுத்துவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் எழுதிய வரிகளில் எனக்குப் பிடித்த சில வரிகள்...
"கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்...
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை..." (புதிய மனிதா...)
"சனா... சனா... ஒரே வினா...?
அழகின் மொத்தம் நீயோ...?" (காதல் அனுக்கள்...)
"வயரெல்லாம் ஓசை... உயிரெல்லாம் ஆசை...
ரோபோவை போ போ வேண்ணாதே..." (அரிமா... அரிமா)
தந்தை ஒருபக்கம் அமர்க்களப்படுத்தினால் மகன் மறுபக்கம் அதகளமாக்குகிறார். வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி "இரும்பிலே ஓர் இருதயம்...." பாடலுக்காக வரலாற்று சிறப்புமிக்க வரிகளை எல்லாம் எழுதியிருக்கிறார். சாம்பிளுக்கு இரண்டு வரிகள்...
"எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா...
ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா..."
மேலும் பா.விஜய் "கிளிமாஞ்சாரோ..." பாடலில்...
"உதட்டையும் உதட்டையும் பூட்டிக்கொண்டு...
ஒரு யுகம் முடிந்து திற அன்பாய்..."
இந்த வரிகளை எல்லாம் ரசித்தபோது எந்திரன் படம் வெளியாவதற்கு முன் ஏன் பாடல்களை கேட்கவில்லை என்று என் மேலேயே கோபம் வருகிறது.
ரஜினி - வசீகரன், சிட்டி, சிட்டி v2.0 என்று மூன்று பாத்திரங்கள் இருந்தாலும் இரண்டாம் வெர்ஷன் சிட்டியே மொத்த சிக்ஸரையும் அடித்துவிடுகிறார். "சிவாஜி" படத்தில் ரஜினி அடிக்கடி கூல்... கூல்... என்று சொல்வார். ஆனால் இந்தப் படத்தில் வசீகரன் ரஜினி கொஞ்சம் கூட கூல் இல்லை. எதற்கெடுத்தாலும் கத்துவது, கோபப்படுவது என்று சராசரி மனிதனாகவே வலம் வருகிறார். சிட்டி கேரக்டர் உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் வசனங்களை ஒப்பிக்கிறது. சிட்டி v2.0 கேரக்டரில் தான் பழைய ரஜினியை பார்க்க முடிந்தது. உதாரணத்துக்கு "ச்சீ... ன்னுறது, சீதா பிராட்டி சீன் போடுறது..." என்று ஆரம்பித்து தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு மூச்சு விடாமல் வசனம் பேசிமுடித்தபோது தியேட்டரில் அப்படி ஒரு அப்ளாஸ். மேலும் பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் வில்லச்சிரிப்பு சிரிப்பதும் "மே... மே..." என்று ஆடு போல மிமிக்ரி செய்வதுமாக கலக்கி இருக்கிறார். ரஜினி ஹீரோயிசத்தை விட நன்றாகவே வில்லத்தனம் செய்கிறார். இனிவரும் படங்களில் ரஜினி இமேஜ் இம்சைகளையெல்லாம் விடுத்து வில்லனாக நடித்தால் அதிகம் ரசிக்கலாம்.
சுஜாதாவுக்காக - என்று தலைப்பில் போட்டுவிட்டு வசனத்தை பற்றி ஒன்றும் எழுதாவில்லை என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சாதாரணமான படங்களுக்கே அசாதாரணமாக வசனம் எழுதுபவர் சுஜாதா. ஆயுத எழுத்து படத்தின் காதல் பற்றிய ஒரு காட்சியில் Androgen, Estrogen, Testosterone என்றெல்லாம் வசனமெழுதி பொளந்து கட்டியிருப்பார். அப்படிப்பட்டவருக்கு எந்திரன் போன்றொரு படத்துக்கு வசனம் எழுதச் சொன்னால் சும்மா விடுவாரா. அவரது கைவண்ணத்தில் எனக்கு பிடித்த சில வசனங்கள்...
1. ஐஸ்: உள்ள உயிரோட இருக்காரா...?
கருணாஸ்: உள்ள வயரோட இருக்கார்...
2. ஐஸ்: Can you please shutdown your stupid system...?
சந்தானம்: Control, Alt, Delete
3. ரஜினி: நான் கொடுத்த 2 பவர் 9, ஐநூத்தி பன்னண்டு முத்தம்...
ஐஸ்: முத்தம் கொடுக்கும்போது கூட கவுன்ட் பண்ணிட்டு இருப்பீங்களா... பீல் பண்ண மாட்டீங்களா... சரியான Matrix மண்டை...
4. டிராபிக் போலீஸ்: அட்ரஸ் சொல்லுய்யா...
ரோபோ: ஐ.பி அட்ரஸ் தான் இருக்கு... 108.11.0.1
5. ட்ராபிக் போலீஸ்: நக்கலா....?
ரோபோ: இல்ல நிக்கல்... போல்டெல்லாம் நிக்கல்ல பண்ணது...
6. விஞ்ஞானி ஒருவர்: சிம்பிளா கேக்குறேன்... 24157817 Fibonacci நம்பரா...?
ரோபோ: ஆமாம், 22வது Fibonacci நம்பர்... பை தி வே அது மந்தவெளி பி.சுப்ரமணியத்தோட போன் நம்பர்...
7. ரோபோ: 98dB... Too loud... Who is that செல்லாத்தா...?
8. சந்தானம்: யேய்... நீ என்ன பெரிய இவனா...?
ரோபோ: இலக்கணம் தப்பு...
9. விஞ்ஞானி ஒருவர்: கடவுள் இருக்காரா இல்லையா...?
ரோபோ: கடவுள்ன்னா யாரு...?
விஞ்ஞானி: நம்மள எல்லாம் படைச்சவர்....
ரோபோ: என்னை படிச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...
10. விஞ்ஞானி போஹ்ரா: ஆபத்து வரும்போது யார முதல்ல காப்பத்துவ...? டாக்டர் ஐன்ஸ்டீனையா...? ஒரு சின்ன குழந்தையா...?
ரோபோ: Hypothetical Question...
இதெல்லாம் சும்மா சாம்பிள்தான். சுஜாதா வரிக்கு வரி கோல் போட்டிருக்கிறார். ஆனால் ஏனோ முதல் பாதியில் மட்டும்தான் இதுபோன்ற சுஜாதா டச் கொண்ட வசனங்கள் அதிகம் வருகிறது. ஒருவேளை அதுவரைக்கும்தான் அவர் எழுதியதோ என்னவோ. வசனங்கள் மட்டுமின்றி காதலிக்கு Freakonomics புத்தகத்தை பரிசாக தருவது, ரோபோவை வைத்து ஆயுத பூஜை செய்வது, ரோபோவுக்கு உணர்ச்சிகளை கற்பிக்க வேண்டி ஆசார கோவையை படிக்க கொடுப்பது என்று திரைக்கதையிலும் ஆங்காங்கே சுஜாதா டச்.
டிஸ்கி: இந்தமுறை பார்த்தபோது இடைவேளைக்குப்பின் காரமாக இருந்தது Lays Chips (Spanish Tomato Flavour).
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
Post Comment